Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 367
- Reaction score
- 564
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
செவ்வாய் ,வியாழன் இரண்டு நாட்கள் EP வரும் நண்பர்களே!
அத்தியாயம் 2
“பாட்டி நான் போயிட்டு வரேன்…..” பாட்டியிடம் சொல்லிக் கொண்டு வேலைக்கு கிளம்பினாள் அன்னக்கொடி.பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாள் அவள்.அவளுடன் தோழி மீனாவும் தங்கி இருக்கிறாள். அவர்கள் வீட்டுக்கு மேல் பகுதியில் கேசவன் தங்கி இருக்கிறான்.மூவரும் ஒரே கம்பெனியில் தான் வேலை பார்க்கிறார்கள்.
அன்னக்கொடி,மீனா,கேசவன் மூவரும் பள்ளி ,கல்லூரி எல்லாம் ஒன்றாக படித்தவர்கள்.மூவரின் பெற்றோரும் சேலத்தில் ஒரே தெருவில் தான் குடியிருக்கிறார்கள்.அதனால் பாட்டியின் வீட்டில் இவர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் தங்கி இருக்கிறார்கள்.
மூவரின் பெற்றோரும் பிள்ளைகளை அடிக்கடி வந்து பார்த்து போவார்கள்.லீவு கிடைத்தால் கேசவனும் மீனாவும் ஊருக்கு கிளம்பி விடுவார்கள். அன்னக்கொடி மட்டும் பாட்டியுடன் இங்கேயே தங்கிவிடுவாள்.பெற்றவர்கள் வந்து அவளைப் பார்த்துச் செல்வார்கள்.
அவர்கள் தங்கி இருக்கும் வீடு பாட்டியின் பரம்பரை சொத்து.மூவரும் சேர்ந்து ஒன்றாக நடந்தபடி அலுவலகம் கிளம்பினார்கள்.பதினைந்து நிமிட நடை தூரத்தில் தான் அவர்கள் அலுவலகம் அமைந்திருக்கிறது.சில சமயம் ஆட்டோவிலும் போய் கொள்வார்கள்.
சமயங்களில் அன்னக்கொடி ஸ்கூட்டியில் பெண்கள் இருவரும் போக கேசவன் ஆட்டோவில் போவதும் உண்டு. கேசவன் கார் வைத்திருக்கிறான்.விடுமுறை நாட்களில் அதில் தான் எல்லோரும் சேர்ந்து ஊரை சுற்றி வருவார்கள்.
“நாளைக்கு காலைல கோயிலுக்கு போயிட்டு தான் ஆபீஸ் வரணும்….” என்றாள் அன்னக்கொடி.
“ஆமா அன்னம் நாளைக்கு நம்ம ஹீரோ சாருக்கு பர்த்டே இல்ல….”என்று சிரித்தபடி சொன்னாள் மீனா.
“அவன் ஒண்ணும் ஹீரோ இல்ல. ஆனா உன் பிறந்தநாளுக்கு நான் சாமி கிட்ட வேண்டிப்பேன் என்று அவனுக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன். அது மாதிரி அவனும் ,என்னோட பிறந்தநாளுக்கு வேண்டிக்கிறதா எனக்கு சொல்லியிருந்தான்.அவன் என்னை எல்லாம் மறத்து பல வருஷம் ஆகியிருக்கும்.ஆனா நான் சத்தியம் பண்ணி சொன்ன வார்த்தையை காப்பாத்தணும் தானே….? என்று சொன்ன அன்னக்கொடியை வியப்புடன் பார்த்தார்கள் நண்பர்கள் இருவரும்.
‘இது என்ன வகையான அன்பு? என்று தான் ஆச்சரியத்துடன் நினைத்தான் கேசவன்.
“ஆமா நம்ம வரதராஜன் அண்ணனுக்கு இப்ப எத்தனை வயது?என்றாள் மீனா.
“நாளைக்கு அவனுக்கு இருப்பத்தி எட்டு வயது……”என்று சொன்ன அன்னக்கொடியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
“அப்போ இனி நம்ம அண்ணனுக்கு அடுத்து கல்யாணம் தானே?விடாமல் சொன்னான் கேசவன்.
“ஆமா அது தான் அவங்க மாமா மகள் சுமதி இருக்கா தானே.அவங்க அண்ணி சுகந்தியோட தங்கை தானே அவ.அவளை தான் வரதனுக்கு கட்டிவைக்கிறதா பேச்சு….” என்று சொன்னாள் அன்னக்கொடி.
அவள் பேச்சைக் கேட்டு கொண்டிருந்த கேசவனும் மீனாவும் ஒருவரை ஒருவர் ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள் .
மூவரும் கல்லூரியின் இறுதி வருடத்தில் தான் பெங்களூரில் இருக்கும் கல்லூரிக்கு ஒன்றாக வந்து சேர்ந்து கொண்டார்கள். கல்லூரியில் ஐடி (information Technology) இளநிலை படிப்பு முடித்ததும் வேலையில் சேர்ந்து விட்டார்கள். அப்படியே வார இறுதி நாட்களில் முதுகலை படிப்பில் சேர்ந்து அதையும் முடித்தார்கள்.
மூவருக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலைகள் கிடைத்தது .வேறு வேறு பிரிவுகளில்
தான் மூவருக்கும் வேலை. கிடைத்த வேலையை மகிழ்ச்சியோடு செய்து வருகிறார்கள். மீனாவும் ,கேசவனும் தான் அன்னக்கொடிக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள்.
மீனா மற்றும் கேசவனிம் சொற்ப வாடகை தான் வாங்குகிறார் பாட்டி.அதுவும் அவர்கள் கட்டாயப்படுத்தி தான் பாட்டியின் அக்கவுண்டில் போடுகிறார்கள்.இருவரும் சிறுவயதிலிருந்து பேத்தி அன்னக்கொடி க்கு ஆதரவாக இருப்பதால் நிம்மதியோடு இருக்கிறார் வைதேகி பாட்டி.
மீனாவுக்கு மாமன் மகன் சுதனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.மாப்பிள்ளை ஸ்வீடனில் இருக்கிறான். திருமணத்தை கொஞ்சம் தள்ளி போட்டிருக்கிறார்கள்.கேசவனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.மூவருக்கும் வயது இருபத்தி நான்கு.
அடுத்த நாள் காலையில் வேலைக்கு கிளம்பும் முன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு போய் வரதராஜன் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு வந்து விட்டாள் அன்னக்கொடி.
பக்கத்துக்கு ரூமில் மீனா தயாராவது தெரிந்தது அவளுக்கு..தன் அறைக்குள் நுழைந்து கொண்டு போனை கையில் எடுத்தாள் அன்னம்.
தன்னை அறியாமல் வரதன் பிளஸ் கொடி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நோக்கி போனது அவள் கை.
அந்த பக்கத்தில் வரதராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிந்து போய் இருந்தன. எல்லோருக்கும் முன் முதலாவதாக சுமதி வாழ்த்துச் சொல்லி இருக்க அதற்கு அவளுக்கு நன்றி தெரிவித்திருந்தான் ராஜன்.
வெள்ளையும் கருப்பும் கலந்த புது சட்டையும் , காக்கி பேண்ட்டும் அவனை அத்தனை கம்பீரமாக காட்டியது. ஒரு காதில் சிறிய தோடு பிரெஞ்ச் பியர்ட் ,கட்டுமஸ்தான உடல் என்று அப்போது தான் அப்லோட் செய்திருந்த அந்த படத்தில் அத்தனை வசீகரமாக இருந்தான் அவன்.
‘பெரிய மன்மதன் என்று தான் நினைப்பெல்லாம் போடா….’ என்று அவனை பார்த்து திட்டிக் கொண்டிருந்தாள் அன்னக்கொடி.
“அன்னம் வா சாப்பிடலாம்….” என்று அழைத்தாள் மீனா.
சட்டென்று ஃபோனை கட்டிலில் போட்டு விட்டு கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொண்டாள் அன்னக்கொடி. கலங்கியிருந்த கண்களை துடைத்து விட்டு சிரமப்பட்டு புன்னகையை முகத்தில் வர வைத்துக் கொண்டாள்.
முகம் இப்போது கொஞ்சம் சரியாக இருப்பதை போல் காட்டியது கண்ணாடி.இது போதும் .எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை என்ற திருப்தியோடு கதவை திறந்து வெளியே வந்தாள்.
மீனாவும் பாட்டியும் தன் முகத்தை கூர்ந்து பார்ப்பதை சரியாக கண்டு கொண்டாள் அவள்.
எதுவும் பேசாமல் சாப்பாட்டு மேசையில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அதே நேரம் கேசவனும் காலை உணவிற்கு வந்து சேர்ந்தான்.
எல்லோருக்கும் சாப்பாடு பாட்டி வீட்டில் தான்.காலையில் சமையலுக்கு வரும் பெண் இரண்டு நேரத்துக்கும் சமைத்து வைத்துவிட்டு போய்விடுவார். வேலையில் இருந்து வந்ததும் அன்னக்கொடியும் மீனாவும் பாட்டியுடன் சேர்ந்து இரவு உணவை செய்து கொள்வார்கள்.
அவ்வப்போது கேசவனும் கூட சேர்ந்து வேலைகளை பகிர்ந்து கொள்வான். இரவு உணவை முடித்துவிட்டு மேலே இருக்கும் வீட்டுக்கு போய் விடுவான் கேசவன்.பெண்கள் மூவருக்கும் கேசவன் தான் உதவியாக இருக்கிறான்.
அதேநேரம் சேலத்தில் தன் வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வரதராஜனுக்கு புரை ஏறியது.
“பார்த்து சாப்பிட மாட்டியா ராஜன்.பிறந்த நாள் அதுவுமா லொக்கு லொக்கு ன்னு இருமிட்டு கிடக்க…..”என்று சொல்லியபடி கப்பில் தண்ணீரை எடுத்து மகனிடம் கொடுத்தார் தந்தை.
“யாரோ உன்னை நினைக்கிறாங்க போல…..” சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பியின் முகத்தை பார்த்துக்கொண்டே சொன்னான் அண்ணன்.
ஆப்பத்தை பிய்த்து கொண்டிருந்த வரதராஜனின் கைகள் ஒரு நொடி தடுமாறுவதை கண்டுகொண்டார் தந்தை.
‘ஒரு வேளை அப்லோட் பண்ண போட்டோவை பார்த்து திட்டுவாளா இருக்கும் ….’ என்று தனக்குத்தானே பேசிக் கொண்டான் ராஜன்.
“எம்புள்ளையை நினைக்கிறவங்க எல்லாம் இங்க தான் இருக்கோம்.வேற யாரு நினைக்க போறாங்க….? ஏதோ சாப்பாடு புரை ஏறிடுச்சு.அதுக்குன்னு தேவையில்லாத பேச்சு பேசாத பெரியவனே ….” சொல்லியபடி காபியுடன் வந்தார் அன்னை நவநீதம்.
அவரைக் கண்டதும் யாரும் எதுவும் பேசாமல் சாப்பாட்டில் கவனமாக இருப்பது போல காட்டிக் கொண்டார்கள்.
மகனை நர்சரி பள்ளிக்கு கிளம்பி கொண்டு தயாராக வந்தாள் சுகந்தி.
“குமரா ரெடியா கிளம்பலாமா….? என்று மகனுடன் கிளம்பினான் தியாகு.
“சித்தாக்கு ஹேப்பி பர்த்டே சொல்லு குமரா….”என்றாள் சுகந்தி.
“ஆப்பி பர்த்டே சித்தா….”என்று மழலை குரலில் வந்தது குமரனின் வாழ்த்து.
“தேங்க்ஸ் டா குட்டி….”என்று சின்னவனின் கைகளை பிடித்து முத்தமிட்டான் ராஜன்.
வீட்டில் எல்லோரும் காலையிலேயே ராஜனுக்கு வாழ்த்து சொல்லி விட்டார்கள் .அதி காலையில் கோவிலுக்கு போய்விட்டு வந்து தான் காலை உணவை முடித்திருந்தான் அவன்.
“போன் போட்டு சுமதிய கிளம்பி வர சொல்லு சுகந்தி. இன்னைக்கு மதியம் நம்ம கூட சாப்பிட வர சொல்லு….” என்று மருமகளிடம் சொன்னார் நவநீதம்.
“இல்ல அத்தை ….அவளுக்கு இன்னைக்கு லீவு இல்ல.வேலைக்கு கிளம்பியிருப்பா….” என்று உடனே மறுத்து பதில் சொன்னாள் சுகந்தி.
சுமதி சேலத்தில் இருக்கும் அரசாங்க வங்கியில் வேலை பார்க்கிறாள்.
ஊருக்கு வந்ததிலிருந்து வரதராஜன் எதிலும் ஒட்டாமல் இருப்பதை பார்த்து ஒரு முடிவுக்கு வந்து விட்டாள் சுகந்தி. மாமியார் மட்டும் தான் சுமதியை இந்த வீட்டு சின்ன மருமகளாக்கும் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று சரியாக கண்டு கொண்டாள் அவள். என்னதான் இருந்தாலும் மனதுக்கு பிடித்தவனோடு தான் தங்கையின் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணம் மட்டும் தான் அவளுக்கு.
தொடரும் ............
Last edited:
Previous thread
Next thread





























