Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
738
Reaction score
4,423
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 11

"சோலைவனத்துக்குள்ள டூரிஸ்ட் இடம் என்னலாம் இருக்கு அண்ணா" என்று ஓட்டுனரிடம் கேட்டாள் தாமரை.

"இங்க அருவியும் கோவிலும் தான் இருக்கு மேடம். பெரிசா சுத்திப் பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல. இங்கே எப்பவுமே சிலுசிலுனு இருக்கக் கிளைமேட்னால சுற்றிலும் காடுகரைனு பார்க்க பிரியப்படுறவங்க தான் பெரும்பாலும் வருவாங்க" என்றார் அவர்‌.

"ஓ சரிண்ணா. கண்ணா நீங்க தங்கியிருக்க ஹோட்டல் வண்டி மூலமா தானே ஆத்மநல்லூருக்கு வந்ததா சொன்னீங்க. அந்த வண்டிலயே சுத்திப் பார்க்கப் போகலாமா? ஆபிஸ் டிராவல்காகக் கொடுத்திருக்க வண்டியை பர்சனல் தேவைக்கு யூஸ் செய்ய வேண்டாம்னு நினைக்கிறேன்" என்றவள் சொன்னதும்,

"ஓஹோ அப்ப ஆபிஸ் நேரத்துல இப்படி ஊரு சுத்தப் போறது மட்டும் சரியா ஆபிசர் மேடம்" நக்கலாய் கேட்டான் அவன்.

அவனின் கேள்வியில் அவனை முறைத்தவளாய், "இதுல ஆபிஸ் வேலையும் இருக்கு. சோலைவனத்துல இருக்கக் கோவில் எல்லாமே என்னோட கன்ட்ரோல்ல தான் வருது. அந்தக் கோவில்களையும் இன்னிக்கு நான் பார்க்கப் போகனும்" என்றாள்.

"அப்ப இந்த வண்டிலேயே போய்டலாமே தாமரை" என்றவன் கேட்டதற்கு, "இல்ல வேண்டாம் கண்ணா! உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியும் தானே. நீங்க வண்டியை மட்டும் கேட்டு வாங்கி, நீங்களே ஓட்டிட்டு வாங்க" என்றவளாய் அவன் தங்கியிருந்த விடுதியிலேயே தங்கள் இருவரையும் இறக்கி விடுமாறு ஓட்டுனரிடம் கூறினாள்.

ஏன் இவள் தன்னுடன் தனித்துச் செல்லத் திட்டமிடுகிறாள் என்ற கேள்வி எழுந்தது அவனுக்கு.

அவளின் திட்டமிடலின் படி அவர்கள் இருவரையும் அந்த வண்டியின் ஓட்டுனர் முருகேசன் சோலைமலை ஹோட்டலில் இறக்கி விட்டார்.

மாதவன் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து ஜீப்பை வாடகைக்கு வாங்கி ஓட்டியவனாய் அவளுடன் பயணித்திருந்தவன், சோலைமலை செக் போஸ்ட்டில் வண்டியை நிறுத்தினான்.

அங்கே வனக்காவலரிடம் பேசி சோலைவனத்திற்குள் அவனை அழைத்துச் செல்வதற்கான அனுமதியை வாங்கினாள் தாமரை.

அந்தச் செக் போஸ்ட் தாண்டி வண்டி உள்ளே செல்லவும் இருவரின் உள்ளத்திலும் உற்சாக ஊற்றுப் பொங்கி வழிந்தது.

நேரம் மதியம் ஒரு மணி ஆகியிருக்க, செந்தாமரைக்கு அழைத்துத் தாங்கள் அங்கே வந்து சாப்பிடுவதாக உரைத்தாள்.

செந்தாமரையிடம் அவள் பேசுவதைக் கேட்டு, "கவர்மெண்ட் வேலைப் பார்த்தா, தங்குறதுக்கு வீட்டையும் கொடுத்து, பொங்கிப் போட வேலையாளையும் கொடுக்கிறாங்களா என்ன?" எனக் கேலியாய்க் கேட்டிருந்தான்.

அவனின் கேள்வியில் சிரித்தவளாய், "இந்தம்மா நான் தங்கியிருக்கக் கவர்மெண்ட் வீட்டுக்குப் பக்கத்து வீடு! அவங்களே விருப்பப்பட்டு மூனு வேளையும் சமைச்சுத் தரதா சொன்னாங்க. நானும் சரினு ஒத்துக்கிட்டேன். கண்டிப்பாக அவங்க சமைக்கிறதுக்குக் காசு கொடுத்துடுவேன். இப்ப எதுவும் சொன்னா அவங்க மறுத்துடுவாங்களோனு தான் சொல்லாம இருக்கேன். நீங்களும் அப்படியே இருந்துக்கோங்க" என்றாள்.

இருவருமாய் அவளது அரசு இல்லத்தை அடைந்து உள்ளே செல்லவும், வாசலில் இவர்களுக்காக உணவுப்பையுடன் காத்திருந்தார் செந்தாமரை.

"யாருமா இந்தத் தம்பி" மாதவனைப் பார்த்து அவர் கேட்க,

"ஃப்ரண்ட் மா" என்றவள், "சாப்பாட்டு பையைக் கொடுங்கமா! நாங்களே சாப்பிட்டுக்குறோம்" என்றவளாய் அவரை அனுப்பி வைத்தாள்.

வீட்டிற்குள் நுழைந்த மாதவன் சுற்றி முற்றிப் பார்த்தவனாய், "பரவாயில்ல கவர்மெண்ட் குவார்ட்ஸ்னாலும் சுத்தமா அழகா பராமரிச்சு வச்சிருக்காங்களே" என்று ஆச்சரியமாகக் கூறினான்.

அவனை உணவு மேஜையில் அமர வைத்துச் சாப்பாட்டைப் பரிமாறினாள்.

"நீயும் உட்காரு தாமரை! ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடுவோம்" என்றவன் சொன்னதற்கு மறுத்தவளாய்,

"இல்ல! உங்களுக்குப் பரிமாறி எத்தனை வருஷமாச்சு! நானே செய்றேன் கண்ணா! நீங்க வயிறார சாப்பிடுங்க" என்றாள்.

'வருஷமாச்சா!' என்றெண்ணியவனாய், "இன்னிக்குத் தானே முதல் முறையா எனக்குப் பரிமாறுற தாமரை?" எனக் கேட்டான்.

ஆமா என்றவளாய் அவன் முகத்தை அவள் பார்க்க, "அப்புறம் ஏன் பரிமாறி பல வருஷமாச்சுனு சொன்ன?" எனக் கேட்டான்.

தான் அவ்வாறு கூறியதே அவளுக்கு நினைவில் இல்லாமல் போக, "அப்படியா சொன்னேன்" என்று விழிகள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டாள்.

'நிஜமாவே அவ சொன்னது அவளுக்கு ஞாபகம் இல்லையா! அந்தச் சாமியார் எங்க ரெண்டு பேரையும் ஒன்னா இந்த ஊருக்குப் போகச் சொன்னதுல ஏதோ பெரிய விஷயம் ஒளிஞ்சிருக்குப் போலயே! இவ இங்க வந்ததுலருந்தே அவ அவளா இருக்க மாதிரி இல்லையே! நானுமே அந்தப் பஸ் ஸ்டாண்ட்ல இறங்கின போது மனசுக்குள்ள ஒரு மாதிரி நெகிழ்ச்சியா உணர்ந்தேனே! எங்க ரெண்டு பேருக்கும் இடையில இங்க என்ன நடக்குது?' முதல் முறையாகச் சரியான பாதையில் சிந்திக்கத் தொடங்கினான் மாதவன்.

அவன் உண்ணாது ஏதோ சிந்தனையில் இருப்பதைப் பார்த்து, "என்ன கண்ணா! சாப்பிடாம கனா கண்டுட்டு இருக்கீங்க?" அவனின் தோளில் அவள் தட்ட,

"தாமரை இன்னிக்கு நான் உன் கூட ஊரு சுத்திப் பார்க்க வரதுக்கு நீ எனக்கு ஒரு பிராமிஸ் செஞ்சி தரனுமே" எனக் கேட்டான்.

"என்ன பிராமிஸ்?" ஆர்வத்துடன் அவள் கேட்க,

"இன்னிக்கு என் கூட இருக்கிற நேரம் முழுக்க, நீ உன் மனசுல நினைக்கிற உணருற எல்லாத்தையும் மறைக்காம என்கிட்ட சொல்லனும்! சொல்லுவனு பிராமிஸ் பண்ணு" என்றவனாய் உண்டு கொண்டிருந்த கரத்தினையே அப்படியே நீட்டினான்.

அவளின் நடவடிக்கையில் அவனுள் லேசாகப் பயம் உண்டாகியிருந்தது. அந்தச் சாமியார் கூறியது போல், இருவரும் ஒன்றாக இந்த ஊருக்குள் நுழைந்து உலவும் போது ஏதோ பெரியதாகச் சம்பவம் நடக்குமோ என்று ஆழ்மனம் அவனுக்கு உணர்த்தியதில் அவளின் மன உணர்வுகளை அறிந்து கொண்டே சென்றால், பின்னால் எதுவும் பிரச்சினை வந்தாலும் தீர்வு காண வசதியாக இருக்கும் என்பதால் அவ்வாறு சத்தியம் செய்யச் சொல்லிக் கேட்டிருந்தான் மாதவன்.

"இன்னிக்கு நீங்க என்ன சொன்னாலும் கேட்குற மனநிலையில் நான் இருக்கும் போது, இந்தச் சத்தியத்தைச் செய்ய மாட்டேனா என்ன?" என்றவளாய் அவன் சோறுண்டக் கரத்தினிலேயே தனது கரத்தைப் பிணைத்து, "இன்னிக்கு என் மனசுல தோணுற எல்லாத்தையும் நான் வெளிப்படையாக உங்ககிட்ட சொல்லுவேன்னு சத்தியம் செய்றேன்" என்று வாக்குக் கொடுத்தாள்.

"சரி நீயும் உட்காரு சாப்பிடு" அவளையும் அருகில் அமரச் சொல்லி உண்ண வைத்தவனாய் தானும் உண்டான்.

மதிய வேளையிலும் குளிர் உடலை வாட்டியெடிக்க, "இந்த ஊரு இவ்வளோ குளிரும்னு தெரியாமப் போச்சு. ஸ்வெட்டர் எடுக்காம வந்துட்டேன்" என்று புலம்பியவனாய் சில்லென்ற நீரில் கைகளைக் கழுவ, தன்னுடைய ஸ்வெட்டர் ஒன்றை அவனுக்குக் கொண்டு வந்து கொடுத்தாள் தாமரை.

"உனக்கு?" என்றவன் கேட்டதற்கு, தான் அணிந்திருந்த ஸ்வெட்டரைக் காண்பித்து, "நான் தான் போட்டிருக்கேனே! நான் ரெண்டு எடுத்துட்டு வந்தேன். நீங்க போட்டுக்கோங்க" எனக் கொடுத்தாள்.

அவள் கொடுத்த ஸ்வெட்டரை அணிந்தவனுக்கு அதில் பொத்தான் போட முடியாதளவுக்கு இறுக்கமாக இருந்தது. ஆயினும் அவளின் உடலைத் தழுவிய ஸ்வெட்டரை தான் அணிந்திருக்கிறோம் என்பதே உள்ளுக்குள் ஒருவித பரவசத்தை அளித்தது அவனுக்கு.

இருவரும் உண்டு முடித்ததும் அங்கிருந்து வண்டியில் கிளம்ப, "இப்ப எங்கே போகலாம் தாமரை?" எனக் கேட்டான்.

"டிரைவர் அண்ணா இங்கிருந்து ரெண்டு கிலோமீட்டர் தொலைவுல ஒரு அருவியும் சிவன் கோவிலும் இருக்கிறதா சொன்னாங்க. அங்கே இருந்து கொஞ்ச தூரம் போனா பிரகலாதப் பெருமாள் கோவில் வரும்னு சொன்னாங்க. இன்னிக்கு இந்த இடத்துக்குலாம் போய்ட்டு வந்துடலாம்" என்றாள்.

சுற்றிலும் மரம் செடிக் கொடிகளுக்கிடையில் சடசடவெனப் பாறையில் இருந்து விழுந்து கொண்டிருந்தது சாம்பல் அருவி.

சாம்பல் அருவியின் அருகே வண்டியை நிறுத்தியவன், "என்ன ஆளே இல்லாம வெறிச்சோடி இருக்கு! இங்கே என்னமோ அறுபது குடும்பம்கிட்ட இருக்காங்கனு சொன்னாங்க" என்றவனாய் இறங்க,

"அந்தப் பிரகலாதப் பெருமாள் கோவில் தாண்டி மலை மேல போனா தான் அவங்க தங்கியிருக்க இடம் வரும்னு டிரைவர் அண்ணா சொன்னாங்க" என்றவாறு அவளும் இறங்க, இருவருமே அருவியை நோக்கி நடந்தனர்.

அந்த அருவியின் சில்லென்ற நீரில் கால்களைப் பதித்தவளாய் அங்கிருந்த பாறையில் அவள் அமர, சற்றுத் தள்ளி அமர்ந்தான் அவன்.

இருவரும் தத்தமது நினைவுகளில் உழன்றவர்களாய் இயற்கையின் பேரழகை ரசித்துக் கொண்டிருந்த போது, "நீங்க எங்க வீட்டுக்கு வந்த போதே, என்னைப் பொண்ணுப் பார்க்கிற ஐடியால தான் வந்தீங்களா கண்ணா" எனக் கேட்டாள்.

'இது எப்படி இவளுக்குத் தெரியும்' என்பது போல் அவன் அவளைப் பார்த்திருக்க,

"அம்மா சொன்னாங்க. நான் உங்களைத் தனியா பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு வந்ததுல அம்மாவுக்கு வருத்தம். அப்ப தான் அம்மா சொன்னாங்க. அம்மாவோட காலேஜ் ஃப்ரண்ட்டோட பையன் நீங்கனு சொன்னாங்க. உங்க அம்மாவும் எங்க அம்மாவும் பேசித் தான் உங்களை எங்க வீட்டுல தங்க வச்சதுனு எல்லாத்தையும் சொன்னாங்க. உண்மையைச் சொல்லும்னா அம்மா இப்படிச் சொன்ன பிறகு தான் உங்க மேல நல்ல அபிப்ராயம் வந்துச்சு எனக்கு. என்ன தான் என் மனசு உங்ககூட ஊர் சுத்த துடிச்சாலும், இப்படி நான் உங்க கூட வரதுக்குக் காரணம் அம்மா சொன்ன அந்த விஷயம் தான்" என்று நிறுத்தினாள்.

"ஏன் தாமரை! என்னைப் பார்த்தா எந்த ஆங்கிள்லயும் (angle) நல்லவனா தெரியலையா?" என்று சிரித்தவாறு அவன் கேட்க,

"இல்ல கண்ணா! பார்க்க நல்லா இருக்கப் பையன்னு தான் எனக்குக் கல்யாணம் செஞ்சி வச்சாங்க. அதுல நான் வாங்கின அடி பெரிசு. அதுலருந்து பார்க்க நல்லவன்னு தெரியுற பசங்க மேலலாம் எனக்கு நம்பிக்கையே இல்லாம போச்சு" என்றாள்.

"அப்படி என்ன தான் நடந்துச்சு உன் வாழ்க்கைல தாமரை? ஏன் அதுக்குப் பிறகு நீ கல்யாணமே செஞ்சிக்கலை! இன்னும் நீ உன்னோட எக்ஸ் ஹஸ்பெண்ட்டை நினைச்சிக்கிட்டு இருக்கியா?" என்றவன் கேட்டதற்கு அத்தனை கோபத்துடன் அவனை முறைத்திருந்தாள் தாமரை.

அவளின் கோப முகம் கண்டு இவனின் முகம் சுருங்கிப் போக, "சாரி உன்னோட பர்சனல்ல மூக்கை நுழைக்கிறேன்னு நினைச்சா சாரி" என்றான்.

"அதுக்கு நான் கோபப்படலை! இன்னும் நான் அவரை நினைச்சிக்கிட்டு இருக்கேனானு கேட்டீங்களே! அதுக்குத் தான் கோபப்பட்டேன்" என்றவள் சொன்னதும்,

"பிரிஞ்சவனைச் சேர காத்திருக்க மாதிரி ஒரு பாதிக் கதவு நீயடி பாட்டைக் காலர் டியூனா நீ வச்சிருக்கிறதைக் கேட்டதும் அப்படித் தோணிடுச்சு சாரி" என்றான்.

"அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அதனால ரிங்டோனா வச்சிருக்கேன். ஆமா நீங்க என்னைப் பொண்ணு பார்க்க வரதுக்கு முன்னாடி என்னோட வாழ்க்கைல என்ன நடந்துச்சுனு தெரிஞ்சிக்காமலா வந்தீங்க? என் அம்மா உங்கம்மாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டதா சொன்னாங்களே" என்றவள் கேள்வியாய் அவனைப் பார்க்க,

"அம்மா எனக்காக இரண்டாம் தாரமா பொண்ணு பார்க்கிறேன்னு சொன்னப்பவே அந்தப் பொண்ணோட முதல் கல்யாணத்துல என்ன நடந்துச்சுனு நானே அந்தப் பொண்ணுக்கிட்ட நேரடியாகப் பேசித் தெரிஞ்சிக்கிறேன். நீங்கப் பார்க்கிற பொண்ணோட நம்பரை மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்கனு சொல்லிட்டேன். இது வரைக்கும் பத்து பொண்ணுங்ககிட்ட பேசிருப்பேன்" என்றான்.

"ஏன் அப்படி?" வியப்புடன் அவனைக் கேட்டிருந்தாள்.

"ஒருத்தரோட வாழ்க்கைல நெகட்டிவா நடந்த நிகழ்வைப் பத்தி வெளில தெரிய வர்ற நியூஸ் எல்லாமே ரூமர்ஸ்ஸா தான் இருக்கும் தாமரை. இப்படி ஆச்சாம் அப்படி ஆச்சாம்னு மாத்தி மாத்தி பேசி, அது நம்ம காதுக்கு வரும் போது பாதி உண்மை கூட அதுல இருக்காது. உண்மைலேயே என்ன நடந்துச்சுனு அந்த நிகழ்வுனால பாதிக்கப்பட்டவங்ககிட்ட பேசினா தான் தெரியும். அந்தப் பொண்ணுக்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி, காதுல கேள்விப்பட்ட நியூஸ் மட்டும் வச்சி, நானே எந்த முன்முடிவுக்கு வந்துடக் கூடாதுன்ற எண்ணத்துனால தான் அம்மாக்கிட்ட அப்படிச் சொன்னேன்" என்றவன் சொன்னதைக் கேட்டு, அவன் மீது பெருத்த மரியாதை உண்டானது அவளுக்கு.

"நிஜமாவே நீங்க கிரேட் கண்ணா" அவனை மனதாரப் பாராட்டியவளாய் தனது முன்திருமண வாழ்வைப் பற்றிக் கூறலானாள் தாமரை.
 

Latest threads

Top Bottom