Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
738
Reaction score
4,423
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 14

விடியற்காலையில் வீட்டின் பால்கனியில் தேநீரைக் குடித்தவாறு தீவிர சிந்தனையில் ஆட்பட்டிருந்தவளாய் அமர்ந்திருந்தாள் தாமரை.

காலை அப்பாட்டைக் கேட்டுக் கண் விழித்ததும் தனது இல்லத்தில் தான் இருப்பதாக நினைத்து, "அம்மா" என்று கோபத்துடன் அழைத்தாள். தாயிடமிருந்து பதில் வராது போகவும், சோலைவனத்தில் தான் இருப்பதை உணர்ந்தாள்.

'இங்கே எப்படி இந்தப் பாட்டுக் கேட்டுச்சு' என்றெண்ணியவளாய் எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தனது கைப்பேசியைப் பார்க்க, அதில் விழிப்பூட்டியாய் (அலாரமாய்) இப்பாடல் ஒலித்திருப்பதை அப்பொழுது தான் பார்த்தாள்.

"காலைல நீ எழுப்பாம எப்படி நான் எழுந்திருக்கப் போறேனோ" என்று தாயிடம் தான் சோகத்துடன் புலம்பியதற்கு, தாய்ச் செய்து வைத்திருக்கும் வேலையை எண்ணிக் கோபத்துடன் சிரிப்பும் வந்தது அவளுக்கு.

'இந்தப் பாட்டைக் கேட்டா தான் நான் அடிச்சிப் பிடிச்சி எழுந்திருப்பேன்னு என்ன வேலை செஞ்சி வச்சிருக்காங்க இந்த அம்மா' என்று மனத்தோடு தாயை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

காலை கடன்களை முடித்துத் தேநீரைப் போட்டுக் கொண்டு சில்லென்ற காலை வேளையை ரசித்தவளாய் அமர்ந்தவளின் மூளைக்குள் அக்கனவே மறுஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

பிறந்து வளர்ந்து நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை இக்கனவைக் கண்டிருப்பாள். எவரிடமும் இந்நாள் வரை இக்கனவைப் பற்றிக் கூறியதில்லை. ஏனோ கூறத் தோன்றியதில்லை அவளுக்கு. அவள் திடுக்கிட்டு கத்தியவாறு எழுந்த போதெல்லாம் அவளின் அம்மா அவளைப் பூசாரியிடம் அழைத்துச் சென்று விபூதி அடித்த போதும் கூட இக்கனவைப் பற்றிக் கூறியதில்லை. இதற்கு முன்பு என்றைக்குமே அக்கனவில் உருவத்தைக் கண்டதேயில்லை. இன்று அந்த உருவத்தைக் கண்டு குழம்பிப் போய் அமர்ந்திருக்கிறாள் தாமரை.

"இந்தக் கனவுக்கான அர்த்தம் என்ன? இந்தக் கனவு என்கிட்ட எதையோ சொல்ல வருதோ?" தனது வாழ்நாளில் முதல் முறையாக அக்கனவிற்கான பொருளை அறிந்து கொள்ள முயன்றாள் தாமரை.

அந்நேரம் அருகிலிருந்த செந்தாமரையின் இல்லத்தில் இருந்து கடிகார மணி ஒலிக்கும் சத்தமும், அதைத் தொடர்ந்து கீழ்கண்ட வாசகமும் கேட்டது அவளுக்கு.

"இப்பிறவிக்கான காரணத்தை உணர்ந்து, அதை நிறைவேற்றும் மார்க்கத்தில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டால் வாழ்வில் துன்பமென்பதே இருக்காது"

இவ்வாறாக அவரது இல்லத்தில் இருக்கும் கடிகாரம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஏதேனும் வாசகத்தைக் கூறியவாறு மணி அடிக்கும்.

இப்பொழுது கேட்ட இவ்வாசகத்தை மனத்திற்குள் மீண்டும் மீண்டுமாய்ச் சொல்லிப் பார்த்தவளுக்கு ஏதோ புரிவது போல் தோன்ற, "அப்ப நான் இந்தப் பிறவி எடுத்ததுக்கான காரணம் இந்தச் சிலையைக் காப்பாத்துறது தானா? அதனால தான் இஞ்சினியரிங் படிச்ச நான் சம்பந்தமே இல்லாம இந்த வேலைக்கு வந்து சேர்ந்தேனா? ஆனா அது எந்தச் சிலை? எங்கே இருக்கு? ஏன் அந்தச் சிலையை யார்கிட்டேயும் தர மாட்டேன்னு சொல்றேன்? இந்தக் கனவுப்படி பார்த்தா மாதவன் நல்லவரா கெட்டவரானு சந்தேகம் வருதே!" நினைக்கும் போதே நெஞ்சுக்குள் சுளீரென வலித்தது.

மாதவனை அவ்வாறு தவறாக நினைப்பதே மனத்தை வருந்தியது அவளுக்கு. ஆயினும் கனவில் சிலையைப் பாதுகாக்க முயற்சிக்கும் தனது செயலைப் பார்த்தவளுக்கு, அவனை நல்லவனாய் நினைக்கத் தோன்றவில்லை.

அதிலும் நேற்றைய நிகழ்விற்குப் பிறகு மாதவனை எதிர்கொள்ளும் துணிவு இல்லை அவளுக்கு. ஏற்கனவே அவனை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்கின்ற பெரும் குழப்பத்தோடு உறங்கியவளுக்கு வந்திருந்த இக்கனவு, அவனுடனான திருமணத்தின் மீதான பயத்தை மேலும் அதிகரித்திருந்தது.

'மொத திருமணம் மாதிரி, கல்யாணத்துக்குப் பிறகு இவரு கெட்டவருனு தெரிஞ்சா என் வாழ்க்கையே நரகமாகிடுமே! வேண்டாம் இனி என் வாழ்க்கைல கல்யாணமே வேண்டாம்‌. இவரை விட்டு நான் ஒதுங்கி இருக்கிறது தான் சரியா இருக்கும். அவரை மொதல்ல இந்த ஊரை விட்டுப் போகச் சொல்லனும். இனி என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லனும்' என்று முடிவெடுத்தவளாய் அமர்ந்திருந்தவளின் சிந்தையைக் கலைத்தது வீட்டின் அழைப்பு மணி.

வீட்டின் கதவைத் திறந்தவளாய் செந்தாமரை அங்கு நிற்பதைக் கண்டு, "என்னம்மா சீக்கிரம் வந்துட்டீங்க?" ஏழரை எனக் காண்பித்த நேரத்தைப் பார்த்தவாறு கேட்டாள்.

"என்னது சீக்கிரமா? உனக்கு முன்னாடி இருந்த ஆபிசர் தம்பி எட்டு மணிக்குலாம் இங்கிருந்து கிளம்பிடுவாரு கண்ணு. நீயும் அப்படிக் கிளம்பிடுவியோனு தான் ஓடோடி வந்தேன்" என்றார்.

"குளிச்சிட்டேன்மா. சாப்பிட்டு கிளம்ப வேண்டியது தான்" என்றவளாய் உள்ளே சென்றவளிடம்,

"என்ன கண்ணு! முகம் சோர்ந்து கிடக்கு! நேத்து அந்தத் தம்பி கூட வரும் போது உன் முகம் அவ்ளோ ஜொலிச்சுதே! நான் கூட நீ கட்டிக்கப் போறவரு போலனு நினைச்சேன்! இன்னிக்கு என்னாச்சு? எங்க அந்தத் தம்பி?" எனக் கேட்டவராய் மேஜையில் சாப்பாட்டுக் கூடையை வைத்தார்.

'இப்ப தான் அவரை மறக்கனும்னு முடிவெடுத்தேன். அதுக்குள்ள இந்தம்மா இஷ்டத்துக்குப் பேசுறாங்களே' என்றெண்ணியவளாய்,

"மன்னிக்கனும். இதுலாம் என் பர்சனல் விஷயங்கள். அதுல யாரு தலையிட்டாலும் எனக்குப் பிடிக்காதுமா" வெடுக்கெனக் கூறியவளாய் அறைக்குள் சென்றிருந்தாள்.

'நான் என்ன கேட்டுட்டேன்னு இந்தப் பொண்ணு இப்படிப் பேசிட்டுப் போகுது' வாய்க்குள் முனகியவாறு அவளுக்குச் சாப்பாட்டை எடுத்து வைத்தார் செந்தாமரை.

செந்தாமரையிடம் அப்படிப் பேசியது அவளின் மனத்தை வருத்த, அவரை இலகுவாக்கும் பொருட்டுப் பேசிக் கொண்டே உண்டாள் தாமரை.

"நேத்து நீங்க அய்யனார் கோவில் இங்கே எங்கேயோ இருக்குனு சொன்னீங்களேமா, ஆனா அந்தக் கோவில் என்னோட லிஸ்ட்ல வரலை. சோலைவனத்துல அந்தக் கோவில் எங்கே இருக்கு?" எனக் கேட்டாள்.

"பக்கத்துல சாம்பல் அருவி இருக்குல கண்ணு. அதைத் தாண்டி ஒரு சிவன் கோவில் வரும். அதையும் தாண்டி காட்டுக்குள்ள பெரிய சிலையா இருப்பாருமா இந்த ஊரு காவல் தெய்வம் அய்யனாரு" என்றவர் சொன்னதும்,

'என்னது அய்யனாரா? ஆனா அவர் கருப்பண்ணசாமி தானே! என் மனசு அந்தச் சிலையைப் பார்த்ததும் கருப்பண்ணசாமினு தான் சொல்லுச்சு.
நேத்து மாதவன் கூட, அங்கே போகுற வரைக்கும் அய்யனாருனு தானே சொல்லிட்டு இருந்தாரு. அப்படீன்னா கருப்பண்ணசாமி சிலையும் அய்யனார் சிலையும் பார்க்கிறதுக்கு ஓரளவுக்கு ஒரே மாதிரி இருக்கிறதால கருப்பண்ணசாமி சிலையை இவங்க அய்யனாருனு சொல்லிக் கும்பிட்டுட்டு இருக்காங்களா? எந்தக் காலத்துலருந்து இவரை அய்யனாரா வணங்க ஆரம்பிச்சாங்கனு தெரியலையே' என்று சிந்தித்தவளாய் சாப்பிட்டவள் நேரமாவதைப் பார்த்து அவசரமாகச் சாப்பிட்டு விட்டு கிளம்பினாள்.

புடவைக் கட்டியபடி கண்ணாடியில் தன்னைப் பார்த்திருந்தவளின் செவியில் யாரோ தன்னை அழைப்பது போல் கேட்கவும், வெளியே வந்து பார்த்தாள்.

வயது முதிர்ந்த காவி உடையுடுத்திய சடாமுடி சாமியார் ஒருவர் வாசலில் நிற்பதைக் கண்டு அவரருகில் சென்று பார்த்தவளுக்கு, அவரை எங்கேயோ முன்பே பார்த்த உணர்வு.

இவளைப் பார்த்ததும், "வணக்கம்மா! நீங்க தானே புதுசா வந்திருக்கக் கோவில் ஆபிசர்" எனக் கேட்டார்.

'என்னடா இது இவரையும் எங்கேயோ பார்த்த‌ மாதிரி இருக்கு! விட்டா இந்த ஊருல உள்ள அத்தனை பேரையும் முன்னாடியே பார்த்த மாதிரியே தோணும் போல எனக்கு' என்று யோசித்தவளாய் நின்றவள் அவரின் பேச்சில் களைந்தவளாய், "வணக்கம்! ஆமா சொல்லுங்க ஐயா" என்றாள்.

"உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்மா" என்றவர் சொன்னதும் நேரத்தைப் பார்த்தவள், "சரி உள்ளே வாங்க" என்றவளாய் முகப்பறையில் அமரப் பணித்தாள்.

செந்தாமரை அம்மா உணவுப்பையை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அவர் குடிக்க நீர் அளித்தவளாய் அமர்ந்தவள், "சொல்லுங்க ஐயா" என்றாள்.

"இந்தச் சோலைவனம் மலைல ஒரு பெருமாள் கோவில் இருக்கு மா! பிரகலாதப் பெருமாள் கோவில். அந்தக் கோவில் சிதலமடைஞ்ச நிலைல இருக்கு. அங்கே சாமிக்கு எந்தச் சாங்கியங்களும் சரியா நடக்கிறது இல்லை. கோவிலுக்கு மக்களும் அவ்ளோவா வரது இல்லங்கிறனால கவர்மெண்ட்டும் இந்தக் கோவிலைப் பராமரிக்கப் பணம் தரது இல்லை. இது வரைக்கும் வந்த எல்லா ஆபிசர்ஸ்கிட்டயும் இந்தப் பிரச்சினைப் பத்தி சொல்லிருக்கேன். ஆனா யாரும் அதுக்கு ஆக்ஷனே எடுக்கலை‌மா. அவருக்குச் செய்ய வேண்டியதை செய்யாம போன எந்த ஆபிசரையும் என்னோட பெருமாள் சும்மா விடலைமா!" என்றவர் சொன்னதும்,

'என்னடா இவரு! நீங்களும் எதுவும் செய்யாம போய்ட்டா உங்களுக்கும் ஏதாவது நடக்கும்னு சபிக்கிற மாதிரியே பேசுறாரு' என்றெண்ணியவளாய் அவர் பேசுவதைக் கேட்டிருந்தவள், "நான் இன்னிக்கு அந்தக் கோவிலுக்கு வந்து பார்க்கிறேன் ஐயா! ஆமா நீங்க யாரு? உங்களுக்கும் அந்தக் கோவிலுக்கும் என்ன தொடர்பு?" எனக் கேட்டாள்.

"நான் இந்த மலைல வாழுறவன்மா! சரிமா அப்ப நான் கிளம்புறேன்" என்றவாறு அவர் எழுந்து கொள்ள,

"ஐயா இதுக்கு முன்னாடி என்னை நீங்க எங்கேயாவது பார்த்திருக்கீங்களா?" எனக் கேட்டாள்.

அவளுக்கு முதுகுக் காண்பித்தவராய் வாசலை நோக்கி நடந்தவர், "ரெண்டு பேரும் ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழ பிறவி எடுத்தவங்க. நீங்க சேர்ந்து செய்ய வேண்டிய காரியம் உங்களுக்காகக் காத்திருக்கு! ஆத்மநல்லூருக்கு வந்தவங்க இன்னும் உங்க காரியத்தைச் செய்யாம இருக்கீங்களே" என்று கூறியவாறு அவளைத் திரும்பிப் பார்த்து தெய்வீகமாகப் புன்னகைத்தார்.

அவர் யாரென அறிந்த நொடி உள்ளம் திடுக்கிட அதிர்ந்து நின்று விட்டாள் தாமரை.

'சென்னைல மாதவனையும் என்னையும் கோவில்ல பார்த்து பேசின சடாமுடி சாமியார் இவர் தானே' ஒரு நொடி கழித்து அதிர்வில் இருந்து விலகியவளாய் பார்க்க, அந்தச் சடாமுடி சாமியார் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

நெஞ்சம் வேகமாகத் துடிக்க, அப்படியே நாற்காலியில் பொத்தென அமர்ந்து விட்டாள் தாமரை.

"என்ன நடக்குது இங்கே? யாரு இவரு? ஏன் என்னை பின்தொடர்ந்து வர்றாரு?" என்று யோசித்தவளாய் அமர்ந்திருந்தவளின் சிந்தையைக் கலைத்தது வாசலில் கேட்ட அரசு வாகனத்தின் ஹார்ன் ஒலி.

தன்னை அழைத்துச் செல்ல ஓட்டுனர் முருகேசன் வந்துவிட்டதை உணர்ந்து எழுந்தவள் வீட்டைப் பூட்டிவிட்டு வண்டியில் ஏறினாள்.

வண்டி ஆத்மநல்லூரை நோக்கிச் செல்ல, தன்னிடம் இருந்த கோப்புகளில் பிரகலாதப் பெருமாள் கோவிலின் சொத்துகளைப் பற்றி வாசித்தவாறு வந்தவளாய், "அண்ணா மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டு, அப்படியே பிரகலாதப் பெருமாள் கோவிலுக்குப் போகலாம்" என்றவள்,

இன்று ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவிலில் இருக்கும் அசையும் சொத்துக்களைப் பார்வையிட வேண்டுமெனத் திட்டமிட்டவளாய் பயணித்தாள்.

மாதவப்பெருமாளுக்குக் கோலாகலமாகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்க, மக்கள் கூட்டம் அலைமோதியது.

மூலஸ்தானத்திற்குச் சென்று பெருமாளை வணங்கியவளாய் அலுவலக அறைக்குச் சென்றவள், தர்மகர்த்தாவை அழைத்து அசையும் சொத்துகளைத் தன்னிடம் காண்பிக்கக் கூறினாள்.

அவளின் கோப்பினில் பட்டியலிடப்பட்டிருந்த சாமியின் நகைகளை ஒவ்வொன்றாய் பார்த்துக் குறித்துக் கொண்டு வந்தவள், 'எல்லாமே சரியாத் தானே இருக்கு' என்றெண்ணியவளாய் சிலைகளைக் கணக்கிடத் தொடங்கினாள்.

உற்சவர் சிலைகள் எல்லாம் தனியறையான கஜானா அறையில் வைக்கப்பட்டிருக்க, அங்கே சென்று ஒவ்வொன்றாய் பார்வையிட்டவளாய் வந்தவள், மாதவப் பெருமாளின் உற்சவச்சிலையைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றாள்.

'இது தானே நான் பல வருஷங்களா என் கனவுல பார்க்கிற சிலை. இப்படித் தானே அந்தச் சிலையும் இருந்துச்சு. எம் மாதவனைத் தர மாட்டேன்னு நான் சொன்னதுக்கான அர்த்தம், இந்தப் பெருமாளோட பேரே மாதவப்பெருமாள் அப்படிங்கிறனால தானா' அதிர்ந்தவளாய் அச்சிலையைப் பார்த்திருந்தாள் தாமரை.
 

Latest threads

Top Bottom