Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
738
Reaction score
4,423
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 8

ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலையைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள்.

கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது மடியினுள் புதைந்து போவதைப் போல் இடையிறுக்கிய அணைப்புடன் உறங்கிக் கொண்டிருப்பதை எப்பொழுதும் போல் இன்று ரசித்துப் பார்க்காமல் வியப்புடன் பார்த்திருந்தாள் அவள்.

அவனின் முகத்தைத் தழுவிய கண்கள் அவனது மேனிக்குள் உலவவும், அவன் மார்பிலிருந்து வீசிய சந்தன சவ்வாது மணத்தை நுகர்ந்தவளுக்கு, முந்தைய நாளின் நிகழ்வுகள் மனத்திற்குள் காட்சிகளாய் விரிய, அதிர்ந்தடங்கியது அவள் தேகம்.

இத்தனை நாள்களாய் தான் கண்டுணர்ந்தவனுக்கும் நேற்று தான் பார்த்தவனுக்கும் எத்தனை வேறுபாடுகள்.

தன்னுடைய சிரசில் பெருமாளின் பொன்மேனி‌ச் சிலையை வைத்திருந்தவனாய், அவரைக் கரங்களில் தொடாமலும் அதே சமயம், கீழேயும் விழ விடாமலும், கால்களைச் சுழற்றியவனாய் அவன் ஆடிய இறையாட்டத்திற்கு இணையாக அவனுடைய தலையில் வீற்றிருந்த பெருமாள் சிலையும் ஆடுவது போல், அவன் ஆடிய ஆட்டத்தை இப்பொழுது நினைக்கும் போதும் புல்லரித்தது அவளுக்கு.

இந்தக் காட்டானிற்குள் இப்படியொரு தெய்வீகத்தன்மையா என நேற்று அவனை வியந்து பார்த்தவளின் உணர்வுகள் இன்னும் வடியாதிருக்க, அணுஅணுவாய் தன்னவனை வியப்புடன் நோக்கியிருந்தன அவளது கண்கள்.

மெல்ல தனது கைகளைத் தூக்கியவளாய் அவனது தலைமுடியைக் கோதியவளின் உள்ளம், 'என்னே பேறு பெற்றேன்! நேற்று இந்த அண்டசாசரத்தைக் காக்கும் எம்பெருமாளைத் தாங்கியிருந்த இச்சிரசை இன்று என் மடியில் தாங்கும் பாக்கியம் கிடைக்க என்னே பேறு பெற்றேன்' என்று எண்ணி உவகைக் கொண்டது.

அவளது ஸ்பரிசத்தில் கண்களைத் திறந்தவனின் விழிகளோ பொன்யொத்த மேனியாளின் அழகு வதனத்தில் படிந்தன. தன்னவளின் முகத்தில் பூரிப்பும் வியப்புமான பார்வையைக் கண்டு புருவத்தை உயர்த்தினான்.

"கண்ணா" என்ற போதே நெஞ்சம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகியது அவளுக்கு.

"என்னாயிற்று கோதை" பதட்டத்துடன் கேட்டவனாய் எழுந்தவன் அமரவும்,

"நான் காதலிக்கும் கண்ணனின் மற்றொரு பரிமாணத்தை நேற்று கண்டப்பின் உள்ளம் நெகிழ்ந்து கிடக்கிறது கண்ணா! ஏன் இத்தனை நாள்களாய் என்னிடம் இதனைக் கூறவில்லை கண்ணா! உங்களுடன் இன்பமாய்ப் பொழுதை கழித்து விட்டுப் போகலாம் என்று எண்ணித் தான் இந்த கொடை விழாவிற்கு வந்தேன். ஆனால் இங்கு வேறொரு கண்ணனைக் கண்டப்பின்...." எனும் போதே அவளின் தொண்டை அடைத்துக் கண்கள் குளம் கட்டிக் கொள்ள,

குரலைச் செருமியவளாய், "உம்மை மணம் புரியும் தகுதி எனக்கு இருக்கிறதாயென ஐயம் கொள்கிறது உள்ளம் கண்ணா" என்றாள்.

"இந்த வனத்திற்கும், இங்குள்ள அனைத்து ஊர் மக்களுக்கும் காவல்காரக் கருப்பண்ணனாக இருக்கும் என்னைக் கண்ணனாக ஏற்றுக் கொண்ட உன்னை விட, வேறு யாருக்கு என்னை மணம் செய்து கொள்ளும் தகுதி இருந்து விட முடியும் கோதை" ஆதூரமாய் உரைத்தவனாய் எழுந்து நின்றவன் கைகளில் அவளை ஏந்திக் கொள்ள, அவனின் எதிர்பாரா இச்செயலில் நொடியில் பதறிப் பின் அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டவளின் நெற்றியில் முட்டியவனாய் நடந்தவனின் மார்பில் தலைச்சாய்த்து கிறங்கிக் கிடந்தவளை ஐந்து நிமிட நடைக்குப் பிறகு இறக்கி விட்டதும், நின்றிருந்த இடத்தைப் பார்த்து விழிகளை விரித்தாள்.

அந்த அடர்வனத்தின் நடுவில் கோனை கொண்டையுடன் உயர்ந்த பிரமாண்டச் சிலையாய் பெரிய மீசையுடன் கையில் அரிவாள் வைத்துக் கொண்டு ஆஜானுபாகுவான தோற்றத்தில் அமர்ந்திருந்த கருப்பண்ணசாமி சிலையின் முன்னே நின்றிருந்தனர் இருவரும்.

"இங்கே எதற்காக?" என்றவள் கேள்வியாய் அவனைப் பார்க்க,

"காதலியின் ஐயத்தைப் போக்குவது காதலனின் கடமையல்லவா கோதை" என்றவனாய் முன்னே நடந்தவனைப் புரியாத பார்வைப் பார்த்தாள் அவள்.

முந்தைய நாள் விழாவில் கருப்பண்ணசாமியின் கழுத்தில் சூடப்பட்ட மாலைகள் அப்படியே இருக்க, அதிலிருந்து இரண்டை எடுத்து வந்தவனை, அதிர்ந்த பார்வையுடன் பார்த்தவளாய், "என்ன செய்யப் போகிறீர் கண்ணா?" எனக் கேட்டாள்.

ஒரு மாலையை அவளின் கரத்தினில் கொடுத்தவனாய், "கந்தர்வ மணம்" கன்னத்தில் குழி விழச் சிரித்தவாறு கூறியவனின் கன்னக்குழியில் நின்ற தனது ரசனைப் பார்வையை அதிர்வுடன் அவனது கண்களில் பதித்தாள்.

(கந்தர்வ திருமணம் என்பது சடங்குகள், சாட்சிகள், குடும்ப பங்கேற்பு இல்லாமல், இரண்டு நபர்களிடையே ஒருமித்த ஏற்பின் அடிப்படையில் நடைபெறும் திருமணம்)

காதலுடன் கண்ணொடு கண்ணினை நோக்கியவனாய் முன்னேறியவன், "இப்பிறவி மட்டுமல்ல இனி நான் இப்பூமியில் எடுக்கும் அத்தனை பிறவியிலும் நீ மட்டுமே எனது மணவாட்டியாகும் வரம் வேண்டும் கோதை! அவ்வரத்தை தந்தருளுவாயா உன் கண்ணனுக்கு?" எனக் கேட்டவனாய் மாலையைக் கையில் ஏந்தி அவன் நிற்க,

மிகுதியான காதலில் மயங்கிய மனத்தின் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தவளாய், தானே அவனது கழுத்தில் தாவிச் சென்று மாலை அணிவித்து அவன் கேட்ட வரத்தை மனமுவந்து அளித்திருந்தாள் கோதை.

அவளுக்கேற்ற அளவுக்குத் தலையைக் குனிந்து மாலையை வாங்கியவன் நிமிர்ந்து அவளது கழுத்திலும் மாலை அணிவித்துக் கந்தர்வ மணம் புரிந்த அடுத்த நொடி அவளது கன்னத்தில் தனது மீசை முடி உராய அழுத்தமாய் முத்தத்தைப் பதிக்க,

இங்கே பேருந்து பயணத்தின் உறக்கத்தில் இக்காட்சிகளைக் கனவில் கண்டிருந்த தாமரையோ 'ஆஆஆஆ குத்துதே' வாய்க்குள் முனகியவாறு மீசையின் உராய்வை உணர்ந்தவளாய் எழுந்தமர்ந்தாள்.

கன்னத்தைத் தேய்த்தவாறு எழுந்தமர்ந்தவளின் உடலணுக்கள் அம்முத்தத்தின் தித்திப்பை உணர்வாய் உள்வாங்கி அவளுள் பேரலையாய் உணர்வலைகளை உருவாக்கியிருந்தன.

அன்னிச்சையாய் அவளின் கைகள் தனது கழுத்தை வருடி மாலையைத் தேடின.

'அய்யோ என்னதிது நிஜமாவே அந்தாளைக் கல்யாணம் செஞ்சா மாதிரி, முத்தம் கொடுத்தா மாதிரி ஃபீல் ஆகுது' அதிர்வுடன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே,

"சோலைவனம் வரப் போகுது! இது தான் லாஸ்ட் ஸ்டாப்" சத்தமாய் உரைத்திருந்தார் நடத்துனர்.

தான் இறங்க வேண்டிய இடம் வந்ததை உணர்ந்து தற்காலிகமாகத் தனது நினைவினிலிருந்து வெளி வந்தவளாய் பயணப்பொதியை எழுந்து எடுத்தாள்.

அதே பொழுதில் சோலைவனத்தின் பேருந்து நிலையத்தில் இறங்கியிருந்தான் மாதவன்.

ஆத்மநல்லூர் இருக்கும் இடமெல்லாம் அறிந்திருக்கவில்லை மாதவன். தாமரை சோலைவனத்திற்குச் செல்லும் பேருந்தில் பயணிப்பதாக அவளின் தாய் மூலம் செய்தி அறிந்து கொண்டு அங்கே செல்லும் பேருந்தில் ஏறியிருந்தான்.

மலை மீது பேருந்து பயணிக்கும் போதே, குளிர் உடலுக்குள் ஊடுருவி அவனை நடுங்க வைத்திருந்தது.

'அய்யோ இப்படி சில்லுனு இருக்க ஹில் ஸ்டேஷன்னு தெரியாம போச்சே! ஸ்வெட்டர் எதுவும் எடுக்காம வந்துட்டோமே' என்று புலம்பியவனாய் இரண்டு சட்டைகள் அணிந்து அதன் மீது ஓவர்கோட் அணிந்து தான் குளிரில் நடுங்கும் உடலைக் காப்பாற்றினான்.

அந்தப் பேருந்தில் இருந்து இறங்கி கீழே சோலைவனத்தில் கால்களை வைத்த நொடி அவனது உடலெல்லாம் புல்லரித்து, உள்ளம் நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் பெருகி நின்றது.

தனக்கு மிகவும் பரிச்சயமான இடமாய், தான் அதீத மகிழ்வுடன் வாழ்ந்த இடமாய் இவ்விடத்தில் காலடி வைத்ததும் மனத்திற்குள் இனபுரியா இன்பத்தை உணர்ந்தான் மாதவன்.

தான் ஏன் இவ்வாறு உணர்கிறோம் என்று புரியாது மனம் இட்ட கட்டளைக்கு அவனின் கால்கள் பின் சென்று அவனை அங்கிருந்து நடத்திச் சென்றது.

அவனை மீறி மனம் போன போக்கில் அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்றவனை, அங்கிருந்த செக் போஸ்ட் தான் தடுத்து நிறுத்தியது.

அந்த இடத்தினில் இருந்து உள்ளே செல்ல, வன அதிகாரியின் அனுமதிக் கடிதம் வேண்டுமெனக் கூறி அவனைத் தடுத்திருந்தார் அங்கிருந்த வனக்காவலர்.

அங்கிருந்து முன்னேறிச் செல்ல மனம் தூண்டிய போதும் வேறு வழியின்றித் திரும்பி நடந்தவன், தனக்கு எதிர் வந்த மூவுருளியில் தாமரை அமர்ந்து பயணித்திருப்பதைக் கண்டு அப்படியே நின்றான்.

'அய்யோ தாமரைக்குக் காவலா இருக்கத் தானே நான் வந்தேன். அதை மறந்துட்டு இஷ்டத்துக்குச் சுத்திட்டு இருக்கேனே! அவ பஸ்ஸூம் வந்துடுச்சு போலயே' என்றெண்ணியவனாய் அந்த மூவுருளியின் பின்னே அவனின் பார்வை தொடர, அந்தச் செக் போஸ்ட்டில் அவள் ஏதோ கடிதத்தைக் காண்பித்ததும் அந்தச் செக் போஸ்ட்டைத் தாண்டிச் சென்றிருந்தது அந்த மூவுருளி.

'என்னடா இது! என்னை உள்ளே விட மாட்டேன்னு சொன்னாங்க. இப்ப அவளை உடனே உள்ளே விட்டுட்டாங்க' என்றவன் நினைக்கும் போதே,

'அவ அரசாங்க அதிகாரிடா' என்று மூளை அதற்குப் பதிலுரைத்திருந்தது.

'ஆமா அதுவும் சரி தான். ஆனா நான் இப்ப எப்படி உள்ளே போறது. எனக்கு எந்த ஃபாரஸ்ட் ஆபிசரையும் தெரியாதே' என்று மனத்திற்குள்ளேயே பேசிக் கொண்டவனாய் வந்த பாதை வழியே திரும்பி நடந்தவன் வழியில் தென்பட்ட தங்கும் விடுதியில் போய் நின்றான்.

அங்குத் தான் தங்குவதற்காக விசாரித்தவன், அந்த இடத்தைப் பற்றியும் அந்தச் செக் போஸ்ட்டைத் தாண்டி உள்ளே செல்வது பற்றியும் விசாரித்தான்.

"இதுலாம் ஃபாரஸ்ட் ஏரியானாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டும் கூட! அதனால காலைல ஆறுலருந்து சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் தான் உள்ளே போக அனுமதி உண்டு‌. ஆன்லைன்ல இந்த ஏரியாக்குனு கவர்மெண்ட் சைட் இருக்கு‌. நீங்க அதுல உங்க டீடெய்ல்ஸ் போட்டீங்கனா உங்க ஐடி ஃப்ருப்லாம் வெரிஃபை செஞ்சி ஒரு லெட்டர் அதுலயே வந்துடும். அந்த லெட்டர்ல நீங்க எத்தனை மணிலிருந்து எத்தனை மணி வரைக்கும் உள்ளே போய்ட்டு வரலாம்ன்ற டைமிங்கும் இருக்கும். அதுக்கேத்த மாதிரி பிளான் செஞ்சி போய்ட்டு வரலாம். எங்க ஹோட்டல்ல இருந்து நாங்க ஜீப் வண்டி அரேஞ்ச் செஞ்சி தரோம். அதுக்கு நீங்க பணம் கட்டி நாள் முழுக்க அந்த வண்டிலேயே உள்ளே சுத்திப் பார்த்துக்கலாம். ஜீப் வேண்டாம்னா ஆட்டோ இருக்கு. கவர்மெண்ட் பஸ் ஒரு நாளைக்கு மூனு நேரம் உள்ளே போய்ட்டு வரும். அதுலயும் போகலாம்"

"அப்ப அந்தக் கவர்மெண்ட் பஸ்ஸூக்குள்ள இருக்க அத்தனை பேரையும் செக் பண்ணுவாங்களா?" என்றவன் கேட்டதற்கு,

"ஆமா சார். உள்ளே ரெண்டு கிராமம் இருக்கு சார். அறுபது குடும்பம்கிட்ட இருக்காங்க. அந்த மக்களுக்குலாம் அடையாள அட்டை இருக்கும். அதனால அவங்க எப்பனாலும் வந்துட்டுப் போகலாம். இங்கே ஜீப் ஆட்டோ ஓட்டுற எல்லாரும் அந்தக் கிராம மக்கள் தான்" என்றார் அவர்.

"நான் பத்து நாள் இங்கே இருக்கலாம்னு முடிவு செஞ்சி வந்தேன். ஆனா பத்து நாளுக்கும் தினமுமா பர்மிஷன் லெட்டர் வாங்கனும்" தினமும் உள்ளே செல்வது எப்படியென அறிந்து கொள்ள இவ்வாறு கேட்டிருந்தான் மாதவன்‌.

"ஆமா சார். பத்து நாளுக்குலாம் தெரியாத ஆளுங்களுக்குப் பர்மிஷன் தர மாட்டாங்க. பத்து நாளுக்கு உங்களுக்கு அப்படி என்ன இங்கே வேலைனு கேட்பாங்க. ஆமா என்ன வேலையா வந்திருக்கீங்க?" எனக் கேட்டார் அந்த விடுதியின் வரவேற்பாளர்.

சட்டென அவர் அவ்வாறு கேட்டதும் என்ன பதில் சொல்லவெனத் தெரியாது விழித்தவனாய் பின் சுதாரித்து, "எங்க குல தெய்வத்தை ரொம்ப நாளா தேடிட்டு இருந்தோம். இங்க தான் இருக்குனு ஒரு சாமியார் சொன்னாரு. அதான் வந்தேன்! எங்க சாமி இப்ப எங்க எப்படி இருக்குனு தேடிக் கண்டுபிடிக்கிற வரை தினமும் உள்ள போய்ட்டு வர மாதிரி இருக்கும். அதான் பத்து நாளுக்குப் பர்மிஷன் வாங்கி வச்சிக்கலாமேனு கேட்டேன்" என்றவன் சொன்னதும்,

"ஓ சாமி பேரைச் சொல்லுங்க! நான் இங்கே பத்து வருஷமா வேலைச் செய்றேன்" எனக் கேட்டார்.

'இப்ப என்ன சொல்லிச் சமாளிக்கிறது' என்று சிந்தித்தவனின் வாயில் தானாக, "கருப்பண்ணசாமி" என்ற சொல் வந்திருந்தது‌.

"அப்படி எதுவும் கருப்பண்ணசாமி கோவில் இங்கே இல்லையே" என்றவர் யோசனையுடன் சொல்ல,

"அதான் சார். உள்ளே போய்த் தேடிப் பார்க்கனும்னு சொன்னேன்" என்றவனாய் தனது அறையின் சாவியை வாங்கிக் கொண்டான்.

எப்படியோ வாய்க்கு வந்ததை உரைத்துச் சமாளித்து விட்டதாய் நினைத்து அவன் தனக்குள்ளேயே சிரித்துக் கொள்ள,

அவன் தன்னையறியாது உண்மையையே உரைத்திருப்பதை அறியாமல் தனக்குள் சிரிப்பதை எண்ணி சிரித்துக் கொண்டார் மாதவப்பெருமாள்.
 

Latest threads

Top Bottom