👁️ 222 Views
அத்தியாயம் – 12.2
சசிதரனை பார்த்துவிட்டு வந்த வாசன், சசிதரனுக்குக் காலில் பலத்த அடி என்றும், அதற்காக அறுவைசிகிச்சை செய்திருப்பதாகவும், பின்னந்தலையிலும் அடிபட்டதால் ஒரு நாள் முழுவதும் கண்விழிக்காமல் இருந்திருக்கிறான் என்றும் சொல்ல, மஞ்சரி துடித்துப் போனாள்.
நெஞ்சம் துடித்துக் கதறி அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. வகுப்பில் அது முடியாமல், திணறி கொண்டிருந்தாள்.
வகுப்பில் அனைவருக்கும் விஷயம் தெரிய, அன்றைய கல்லூரி நேரம் முடிந்ததும், சசிதரனை பார்க்க செல்லலாம் எனச் சில மாணவர்கள் பேசிக்கொள்ள, சில மாணவிகளும் வருவதாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தியாகவே மஞ்சரியும் அவனைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது.
அவர்கள் சென்ற போது, காலிலும் தலையிலும் கட்டுடன் படுத்திருந்தான் சசிதரன். கை முகம் எல்லாம் ஆங்காங்கே சிராய்ப்பு வேறு இருக்க, அவனை அப்படிப் பார்த்து வெடித்து வரத் துடித்த அழுகையை அடக்க முடியாமல் போராடினாள் மஞ்சரி.
அவளைத் தவிப்புடன் பார்த்த சசிதரன் கண்களால் தைரியம் சொல்ல முயன்றான்.
மஞ்சரியின் கையைத் திவ்யா ஆறுதலாகப் பிடித்துக் கொண்டு, சசிதரனுடன் இருந்த அவனின் அன்னையிடம் என்ன நடந்தது என்று விசாரித்தாள்.
“எவனோ கார் காரன் கட்டுபாடு இல்லாம வந்து மோதியிருக்கான்மா. காலில் நல்ல அடி. ஹெல்மெட் போடாததால் பின்னந்தலையிலும் அடி. ஒரு நாள் முழுவதும் கண் திறக்கவே இல்லை. நாங்க எல்லாம் பயந்து போனோம். எந்தச் சாமி புண்ணியமோ என் புள்ள கண்ணைத் திறந்துட்டான். பின் மண்டையில் ஆறு தையல் போட்டுருக்காங்க. காலிலும் ஆப்ரேஷன் பண்ணிருக்கு…” என்று கவலையுடன் சொன்னார் வனஜா.
மற்ற மாணவர்கள் எல்லாம் அவரிடமும் சசிதரனிடமும் ஆதரவாகப் பேச, அவளுக்கே ஒருவர் ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தாள் மஞ்சரி.
வலியின் பிரதிபலிப்பை முகத்தில் காட்டியபடி படுத்துக்கிடந்த சசிதரனின் முகத்தைத் தொட்டு வருடி, ஆறுதல் சொல்ல அவளின் உள்ளம் துடித்தது. ஆனால், அனைவரின் முன்பும் எதுவும் செய்ய முடியாத நிலை அவளைக் கட்டிப் போட்டது.
‘அழாதே!’ என்பது போல அவளுக்கு ஜாடை மட்டும் காட்டினான் சசிதரன்.
“எங்களுக்கு விஷயம் முன்பே தெரியாதுங்க ஆன்ட்டி. இல்லைனா முன்னயே பார்க்க வந்திருப்போம்…” என ஒரு மாணவன் சொல்ல,
“யாருக்கும் தகவல் சொல்லும் மனநிலையிலும் நாங்க இல்லையே… என்ன செய்ய? சசி போனும் கீழே விழுந்ததில் ஸ்கிரீன் எல்லாம் உடைஞ்சிருச்சு. இன்னைக்குத்தான் அவன் போன் சிம்மை வேற போனுக்குப் போட்டோம். சரியா இன்னைக்குனு பார்த்து இவன் பிரண்ட் போன் பண்ணவும் விஷயத்தைச் சொன்னோம்…” என்றார் வனஜா.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டபடி நின்றிருந்தாள் மஞ்சரி. அந்த நேரம் சசிதரனின் தந்தை குணாளன் அங்கே வந்துவிட, அவரிடம் சில நொடிகள் பேசிவிட்டு மாணவர்கள் கிளம்ப, அங்கிருந்து செல்லவே மனமில்லாமல் சென்றாள் மஞ்சரி.
மற்றவர்கள் அறியாமல் அழுதவளுக்கு ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் திவ்யா.
மறுநாள் வருத்தத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தாள் மஞ்சரி.
அப்போது, “அச்சோ பாவம்! உன் லவ்வருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சாமே? அப்படியா?” என்று அவளின் பின்னால் மெல்லிய குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மஞ்சரி.
உதட்டை வளைத்து நக்கலாகச் சிரித்தபடி நின்றிருந்தான் ஜீவன். அவனின் நெற்றியிலும், வலது முழங்கையிலும் ஒரு பேண்டேஜ் இருந்தது. சசி அடித்ததாலோ என்று நினைத்தாள் மஞ்சரி.
அவனின் முகத்தைப் பார்க்க விருப்பமற்று மஞ்சரி நகர, “ச்சே… கொஞ்சம் மிஸ் ஆகிட்டான். இன்னும் கொஞ்சம் போர்சா அடிச்சுத் தூக்கியிருந்தால், ஹாஸ்பிட்டல் பெட்டில் படுத்திருப்பதுக்குப் பதில், மார்ச்சுவரியில் கிடந்துருப்பான். கொஞ்சம் சொதப்பிட்டேன்…” என்ற ஜீவனின் கூற்றில், அதிர்ந்து அவனைப் பார்த்தவள், “என்ன? நீ… நீயா? நீயா என்னோட தருவை ஆக்ஸிடெண்ட் செய்தது?” என்று குரல் நடுங்க கேட்டாள்.

தோளை அலட்சியமாகக் குலுக்கியவனின் உதட்டில் வன்ம புன்னகை நெளிந்தது.
‘சசியை ஆக்ஸிடெண்ட் செய்த காரில் நம்பர் பிளேட் கூட இல்லையாம். அடிச்சவனும் நிக்காம பறந்துட்டான். எவன் என் பிள்ளையை இப்படி அடிச்சுப் போட்டானோ தெரியலை’ என்று முதல்நாள் வனஜா சொன்னது, மஞ்சரியின் காதுக்குள் ஒலித்தது.
“ராஸ்கல், என்னையே அடிச்சு… என் மொபைலை புடுங்கிட்டு போய்ட்டான். போனால் போகுதுன்னு முதல்முறை விட்டால், என்னைத் திரும்பத் திரும்ப அடிப்பானா? நான் என்ன சொங்கிப் பயன்னு நினைச்சானா அந்தச் சசி? இன்னொரு முறை என் பக்கம் வந்தான்… அவன் உயிருக்கு உத்திரவாதமில்லைன்னு சொல்லி வை!” என்று மிரட்டலுடன் சொல்லிவிட்டுச் சென்றான் ஜீவன்.
அவன் இந்தளவுக்கு இறங்குவான் என மஞ்சரி நினைக்கவே இல்லை. கூடவே தன்னிடம் சசிதரன் சொன்ன பொய் வேறு நினைவில் வந்தது. ஜீவனிடம் யார் அடித்தது எனக் காட்டிக்கொள்ளாமல் தானே அடித்ததாகச் சசிதரன் சொன்னான். தன்னிடம் அதைச் சொன்னால் பயந்துவிடுவோம் என்று சொல்லாமல் மறைத்துவிட்டான் எனப் புரிந்தது.
‘ஏன் தரு இப்படி? எதையும் நிதானமாவே கையாள தெரியாதா உங்களுக்கு? இப்படி நடக்கக் கூடாதுன்னு தானே… ஜீவன் பற்றி மறைக்க நினைச்சேன். இப்ப எங்கெங்கோ சுத்தி கடைசி அந்த ஜீவன் உங்களைக் கொல்ல நினைக்கிற அளவுக்குப் போயிருச்சே… ஐயோ! இவன்தான் காரணம்னு தெரிந்தால் அதுக்குப் பிறகும் நீங்க அமைதியா இருப்பிங்களா? இல்லை, திரும்ப அவனை அடிக்கணும்னு கிளம்பிடுவீங்களான்னு தெரியலையே…’ என்று தனக்குள்ளே மிரண்டு புலம்பினாள் மஞ்சரி.
அதன்பின் அவளால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. சசிதரனின் கைப்பேசி உடைந்துவிட்டதால், போன் மூலமாக அவனின் நலத்தை அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. நேரில் சென்றும் பார்க்க முடியாது. செமஸ்டர் விடுமுறை வேறு விட்டுவிட, அவளால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அதைவிட, இன்னும் ஒரு வாரத்தில் செமஸ்டர் வரவிருந்தது. அதை எழுத சசிதரன் வருவானா? காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் வர முடியாமல் போகுமோ என்று ஏதேதோ நினைத்து கலங்கிப் போயிருந்தாள்.
அவள் பயந்தது போலவே அவனின் கால் வலி அதிகமாக இருந்ததால் பரீட்சை எழுத வர முடியாமல் போனது. கல்லூரியில் அவ்விஷயத்தைச் சொல்லி, நான்காம் வருடம் படிக்கும் போது விட்ட தேர்வையும் சேர்த்து எழுத அனுமதி வாங்கியிருந்தான் சசிதரன்.
அவன் பரீட்சை எழுத வர முடியாமல் போனதால், அப்போதும் மஞ்சரியால் அவனைப் பார்க்க முடியவில்லை.
ஒன்றிரண்டு முறை கைப்பேசியில் அழைத்து அவளிடம் பேசினான். அவன் இப்போது வீட்டில் ஓய்வில் இருந்ததால், அவனைக் கவனித்துக் கொண்டு அவனின் அன்னை கூடவே இருந்ததால் மஞ்சரியிடம் சரியாகப் பேசிக்கொள்ளவும் முடியவில்லை. அவனிடம் நலம் விசாரிக்க மட்டுமே அவளாலும் முடிந்தது. செமஸ்டர் முடிந்த நேரத்தில் தான் சசிதரன் அவளுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி தொடர்பு கொண்டான்.
“இந்த அப்பாவுக்கு எனக்கு இப்பத்தான் மஞ்சுக்குட்டி போன் வாங்கிக் கொடுக்க மனசு வந்துச்சு. ஹாஸ்பிட்டல் செலவு நிறைய வந்திருச்சுன்னு போன் வாங்கிக் கொடுக்காம இழுத்தடிச்சுட்டார். அம்மா போனில் சிம்மை போட்டு உன்கிட்ட என்னால் சரியா கூடப் பேச முடியலை. இப்ப புதுப் போன் கைக்கு வந்ததும் தான் நிம்மதியா இருக்கு. இனி நாம தினமும் பேசலாம். எக்ஸாம் எல்லாம் எப்படிச் செய்திருக்க? அரியர் வைக்காம பாஸ் பண்ணிடுவியா?” என்று அவன் அனுப்பி வைத்ததைப் பார்த்துவிட்டு அவனுக்குப் பதில் அனுப்பியவள், அவனின் உடல்நலத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாள்.
“மரணவலிடி. கால்வலி ஒரு பக்கம்னா… பின் தலையில் அடிபட்டதால் அது வேற வலி. நேராவும் படுக்க முடியலை. இப்பதான் தலைக்காயம் ஆறிட்டு வருது. இந்தக் கால்தான் சரியாக இன்னும் ஒரு மாசம் ஆகும் போல. ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கக் கஷ்டமா இருக்குடி மஞ்சுக்குட்டி. என்னை இப்படி உட்கார வச்ச அந்த ஜீவனை…” என்று ஆத்திரத்துடனே அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“என்ன ஜீவன்தான் இப்படிச் செய்தான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று அதிர்ந்து கேட்டிருந்தாள் மஞ்சரி.
“அந்த நாய்தான்! நல்லா பார்த்தேன்…”
“அப்புறம் ஏன் அவனைப் பத்தி நீங்க கம்பளைண்ட் கொடுக்கலை தரு?”
“அந்த நாயை எல்லாம் என் கையாலேயே அடிச்சுக் கொல்லணும்…” என்று இவன் பல்லை கடிக்க,
“நீங்க திருந்தவே மாட்டிங்க, அப்படித்தானே? நீங்க அவன் மேல் கை வைக்கப் போய்த்தான் அவன் உங்களைக் கொல்றளவுக்குத் துணிஞ்சிட்டான். ஏன் தரு இப்படிப் பண்ணீங்க? இதில் என்கிட்ட பொய் வேற?” என ஆதங்கமாகக் கேட்டாள்.
“ம்ப்ச்… உண்மையைச் சொன்னா அன்னைக்கே ஒப்பாரி வச்சிருப்ப. அதான் மறைச்சேன். சரி, அதை விடு! உனக்கும் ஜீவன்தான் என்னை ஆக்ஸிடெண்ட் பண்ணான்னு தெரிந்தது போல் பேசுற. உனக்கு எப்படித் தெரியும்?”
“அவன்தான் சொன்னான்…”
“அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும். என் கால் சரியாகட்டும். அவனை வச்சுக்கிறேன். நான் போட்டுப் பொளக்குறதில் நம்ம பக்கம் வரவே இனி அவன் யோசிக்கணும்…” என்று சசிதரன் சீற,
“போதும் தரு! நீங்க ஒன்னு செய்ய… அவன் திருப்பிச் செய்யன்னு பதிலுக்குப் பதில்னு இது நிக்காம போயிட்டே இருக்கும். இதோட நிறுத்திக்கோங்க. அதுதான் நமக்கு நல்லது…” என்றாள் மஞ்சரி.
“என் காலையும், மண்டையையும் உடைச்சு படுக்க வச்சிருக்கான்டி. அவனைச் சும்மா விடணுமா நான்? விட மாட்டேன்டி! விடவே மாட்டேன்!” என்று அவன் சூளுரைக்க,
“நீங்க திருந்தவே மாட்டீங்களா?” என்று கோபப்பட்ட மஞ்சரி, அவனைத் தொடர்ந்து திட்ட ஆரம்பிக்க, “போதும் நிறுத்துடி! ரொம்ப நாள் கழிச்சு உங்கிட்ட பேசணும்னு ஆசையா மெசேஜ் பண்ணினா…இப்பவும் கண்டவனுக்குப் பயந்து என்னைத் திட்டுற. உன்கிட்ட பேச வந்த என்னை… ச்சை… போடி…” என்றவனே முதல் ஆளாக ஆப்லைன் போய்விட்டான். அதன்பின் கோபத்தில் அவளிடம் அவன் பேசவே இல்லை.
தான் சொன்னதைக் கேட்க மாட்டேன் என்கிறானே. இவனின் இந்த நிதானமின்மை சிக்கலை இழுத்து வைக்கும் என்று சொன்னால் புரிந்து கொள்ளவில்லையே… என்ற கோபத்தில் மஞ்சரியும் அவனிடம் பேச முயற்சி செய்யவில்லை.
கல்லூரி விடுமுறையும் விட்டுவிட, பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. இருவரும் ஊடல் கொண்டு, விலகி இருந்தனர்.
இந்த நிலையில்தான், அவர்கள் மீண்டும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை வர, அச்சூழ்நிலையோ அசாதாரணமாகிப் போனது.
காரணம்! அவளின் கருவில் துளிர்விட்டிருந்த சின்னஞ்சிறிய உயிர்!
©nandhavanamnovels.com