13.1 – நீங்காத பந்தமொன்று

👁️ 138 Views

அத்தியாயம் – 13.1

“பாவி! பாவி! இப்படி எங்க மானத்தை வாங்கவாடி உன்னைப் பெத்து வளர்த்து ஆளாக்கினோம்? எங்க பொண்ணுங்களை அடக்கம் ஒடுக்கமா அருமை பெருமையா வளர்த்துட்டு இருக்கோம்னு சந்தோஷப்பட்டுட்டு இருந்தோமே… அப்படி இல்லைன்னு எங்க மூஞ்சில கரியை பூசி நிரூபிச்சுட்டியேடி. நீயெல்லாம் எங்க பொண்ணா?” என்று முகம் சிவக்க ஆதங்கமும் ஆங்காரமுமாகக் கத்திக்கொண்டிருந்தார் மஞ்சரியின் அன்னை லலிதா.

தலை குனிந்து அமர்ந்திருந்த மஞ்சரியின் கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் இறங்கியது.

தரையில் மடிந்து அமர்ந்து அழுது கொண்டிருந்த மகளை வெறுப்புடன் பார்த்தார் நாற்காலியில் அமர்ந்திருந்த சுப்ரமணியன். ஒரு பெரிய பாத்திரக்கடையில் மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

நம்ப முடியாத திகைப்புடன் தமக்கையைத் தள்ளி நின்று பார்த்திருந்தாள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தங்கை மீரா.

“கருமம் பிடிச்சவளே! இப்படி வயித்தில் வாங்கிட்டு வரவாடி உன்னைக் காலேஜுக்கு அனுப்பினோம்? எவன் கூடவோ படுத்து எழுந்து வந்துட்டு எப்படிடி பச்சைப்பிள்ளை போல முகத்தை வச்சுக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள சுத்தி வந்த? படுபாவி!” என்று ஆத்திரத்துடன் கேட்டு அவளின் முதுகிலேயே பளீரென்று அடித்தார் லலிதா.

அனைத்து அடிகளையும் கண்ணீர் கசிய அமைதியாக வாங்கிக் கொண்டாள் மஞ்சரி.

அவளுக்குள்ளேயே போட்டு அழுத்திக் கொண்டிருந்த பாரம்தான். ஆனால், தான் செய்த தவறினால் குற்றவுணர்வில் தவித்தவளுக்குப் பிள்ளை உருவாகிவிட்டால்? என்ற நினைவே வராமல் போனது. கூடவே, அவளுக்கு எப்போதும் மாதவிலக்கு சீரான முறையில் வருவதில்லை. இரண்டு மாதங்கள்… சில சமயங்களில் மூன்று மாதங்கள் கூட அவளுக்கு மாதவிடாய் தள்ளிப் போவதுண்டு. அப்படியிருக்க, இப்போது நாள்கள் தள்ளிப் போனதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தனக்கு மாதாந்திர பிரச்சினை இருப்பதால், ஒரு முறைக்கே பிள்ளை எல்லாம் சாத்தியமில்லை என்று நினைத்துவிட்டாள் போலும். ஆனால், அவர்களின் பிள்ளை அந்தத் தடையையும் மீறி, அவளின் வயிற்றில் துளிர்த்திருந்தது.

சில மணி நேரங்களுக்கு முன் அவள் நினைக்கத் தவறிய பிள்ளை, அவளின் வயிற்றில் இருப்பது உறுதியாகியிருந்தது.

செமஸ்டர் முடிந்து, அதன்பின் வந்த ஒரு மாத விடுமுறையும் முடிந்து, அன்றுதான் இறுதியாண்டுக்கான கல்லூரி திறப்பதாக இருந்தது.

கல்லூரிக்கு செல்வதற்காக, எழுந்து குளிக்கச் சென்ற மஞ்சரி கதவை பூட்டுவதற்கு முன் கையில் இருந்த மாற்றுத்துணியைச் சற்று மேலே இருந்த கம்பியில் எக்கி போட்டுக் கொண்டிருந்தபோது, கண்கள் இருட்டிக் கொண்டு வர, குளியலறைக்குள்ளே மயக்கம் போட்டு விழுந்திருந்தாள்.

அவளின் தங்கை மீரா பார்த்துக் கத்தியதும், பெற்றவர்கள் அலறி அடித்துக்கொண்டு அருகில் இருந்த இருபத்து நான்கு மணிநேரம் இயங்கும் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கேதான் அவள் கர்ப்பமான விஷயம் உறுதியானது.

விஷயம் அறிந்து அதிர்ந்து போனது அவளின் பெற்றவர்கள் மட்டுமல்ல, மஞ்சரியும்தான்!

அவளால் பெற்றவர்கள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. வீட்டிற்கு வந்ததிலிருந்து இதோ, அவளின் அன்னை அவளை அடித்தும் திட்டியும் தன் ஆதங்கத்தைக் காட்டிக்கொண்டிருக்க, அவளின் தந்தையோ மகளைப் பார்த்து வெறுத்துப் போனார்.

“சொல்லுடி, யார் அவன்? எங்க… எவன்கிட்ட போய் இப்படி நாசமாகி வந்து நிக்கிற?” என்று லலிதா மகளிடம் கேட்க, மஞ்சரி அழுது கொண்டே தான் காதலிக்கும் விஷயத்தையும் சசிதரன் பற்றியும் சொன்னாள்.

“லலிதா, அவளைக் கிளம்பச் சொல்லு! அவன் வீட்டுக்கு போகணும்…” என அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சுப்ரமணியன் சொல்ல,

“அப்பா சொன்னது கேட்டதுதானே? எழுந்திருடி!” என்று மகளின் கையைப் பிடித்து இழுத்தவர், “நீ வீட்டில் இரு! நாங்க போயிட்டு வந்துடுறோம்…” என்று இளைய மகளிடம் சொல்லிவிட்டு, மஞ்சரியை அழைத்துக் கொண்டு சசிதரனின் வீட்டிற்குக் கிளம்பிவிட்டனர்.

விடுமுறையில் சசிதரனின் உடல்நிலை சற்றுத் தேறியிருந்தது. கால் இன்னும் முழுதாகச் சரியாகவில்லை என்றாலும், லேசாக விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தான்.

“கால் முழுசா சரியாகுறவரை ஆட்டோவிலேயே காலேஜுக்கு போயிட்டு வந்துடு சசி. நடக்கும் போதும், ஏறி இறங்கும் போதும் கவனமா இரு. திரும்ப அடிபட்டுடாம பார்த்துக்கோ…” என்று குணாளன் சொல்ல,

“சரிப்பா…” என்று அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே அவருடன் சேர்ந்து சோஃபாவில் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்தான் சசிதரன். அவனின் தம்பி ரவிசங்கரும், கீதாவும் தரையில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு வனஜா பரிமாறிக்கொண்டிருந்தார்.

ரவிசங்கர் தனது கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருக்க, கீதா இன்னும் பள்ளிப்படிப்பில் இருந்தாள்.

“இன்னும் கொஞ்சம் வச்சுக்கோ சசி…” என்று வனஜா மகனுக்கு இரண்டு இட்லியை சேர்த்து வைத்துக் கொண்டிருந்த நேரம்தான் மஞ்சரியுடன் அவளின் பெற்றோர் வந்து கதவை தட்டினர்.

ரவிசங்கர் சென்று கதவை திறக்க, “யாரு… இவனா… இவனா அந்தப் பையன்?” என்று கோபமாக மகளிடம் கேட்டபடி உள்ளே நுழைந்தார் சுப்ரமணியன்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“இல்லைப்பா. இது சசியோட தம்பி…” என்று மஞ்சரி கதறலுடன் சொல்ல, அவரின் கோபத்தையும், மஞ்சரியின் கதறலையும் பார்த்து மிரண்டு விழித்தான் ரவிசங்கர்.

“யார் ரவி?” என்று சத்தம் கேட்டு குணாளன் விசாரிக்க, வேகமாக உள்ளே வந்த சுப்ரமணியன், “நீதான் அந்தத் தறுதலையைப் பெத்த அப்பனா? ஏன்யா எங்க பிள்ளையைப் படிக்க அனுப்பினா, உன் பையன் அவளைக் கர்ப்பமாக்கி அனுப்புவானா. ச்சீ… த்தூ… என்னய்யா பிள்ளை வளர்த்து வச்சிருக்க?” வீட்டில் அடக்கி வைத்திருந்த மொத்த கோபத்தையும் இங்கே வந்து இறக்கியிருந்தார்.

முதலில் யாரோ வீட்டிற்குள் வந்து கத்தவும் புரியாமல் அதிர்ந்து நின்றிருந்த குணாளன், அருகில் தடுமாறி எழுந்து நின்றிருந்த மகன் அந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ந்து, “மஞ்சு… நீ எங்கே இங்கே?” என்று கேட்கவும், வெடுக்கென்று அவனின் புறம் திரும்பி பார்த்தார்.

“என்ன? என்ன பேசுறீங்க நீங்க? யாருங்க நீங்க?” என்று வனஜா அதட்டலாகக் கேட்க,

“யாரா? உங்க பையனால் வயித்தில் பிள்ளையைச் சுமந்துட்டு நிக்கும் இதோ… இவளை பெத்தவங்க…” என்று லலிதா முன்னே வந்து கத்த, அவர் சொன்னதைக் கேட்டு, அதிர்ந்து போனான் சசிதரன்.

கூடவே அவனின் பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும் நம்ப முடியாத திகைப்பில் இருக்க, சசிதரனோ அதிர்வு மாறாமல் மஞ்சரியைப் பார்த்தான்.

அவள் கண்ணீருடன் மேலும் கீழும் தலையை அசைக்க,

“யாரை பத்தி என்ன பேசுறீங்க? எங்க பையன் எல்லாம் அப்படிக் கிடையாது…” வனஜா தான் முதலில் சுதாரித்துப் பேசினார்.

“என்ன? அப்படிக் கிடையாதா? ஏய்… சொல்லுடி அவங்க மகன் பண்ண காரியத்தை…” என்று லலிதா மகளை விரட்ட, மஞ்சரியோ சசிதரனை பார்த்து கதறினாள்.

அவளால் பேச கூட முடியவில்லை. என்ன சொல்வாள்? வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு!

“அழுதா என்னடி அர்த்தம்? வாயைத் திறந்து பேசுடி…” என்று லலிதா மகளின் முதுகிலேயே அடிக்க,

“அவளை அடிக்காதீங்க…” என்று சசிதரன் கத்த,

“டேய் சசி… என்னடா? என்ன இதெல்லாம்?” என்று வனஜா கோபமாகக் கேட்க,

“ஏய், வனஜா…” என்று சத்தமிட்ட குணாளன், மகனை கூர்மையாகப் பார்த்து, “அவங்க சொன்னது உண்மையா சசி?” என்று கடுமையுடன் கேட்டார்.

“ப்பா…” என்று அவன்‌ தயக்கத்துடன் அழைத்ததிலேயே உண்மைதான் என உறுதியாகிவிட்ட, “ச்சீ, நாயே…” என்று நாக்கை மடித்துக் கடித்துக்கொண்டு ஆத்திரத்துடன் தன் எச்சில் கையால் மகனின் கன்னத்தில் பளார் என அறைவிட்டிருந்தார்.

இன்னும் திடம் வந்திருக்காத அவனின் கால்கள் தள்ளாடி அப்படியே பின்னால் சோஃபாவில் சரிந்து விழுந்தான்.

“ஐயோ! சசி…” என்று மஞ்சரி பதறி வர, மகளின் கையை இறுக பற்றியிருந்தார் லலிதா.

விழுந்த சசிதரனின் உடல் பதற்றத்திலும், வளர்ந்த பின் தன் மீது கை வைத்திராத தந்தை கை வைத்த அதிர்ச்சியிலும் நடுங்கியது.‌

அவனால் மீண்டும் எழ‌ முடியாமல் போக, அவனை யாரும் தூக்கிவிடக் கூட முன் வரவில்லை. அவனின் தம்பி தங்கை இன்னும் அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் இருந்தனர்.

மகன் எழ முடியாமல் திணறுவதைப் பார்த்து மனம் கேளாமல் வனஜா தூக்கிவிடச் செல்ல, “ஏய், தள்ளிப் போடி…” என்று மனைவியை விலக்கி நிறுத்திய குணாளன், “கீதா… நீ ஸ்கூலுக்குக் கிளம்பு. டேய், நீயும் காலேஜூக்கு கிளம்பு…” என்று இளைய மகனையும், மகளையும் அதட்டினார்.

அவர்கள் அண்ணனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு இருவரும் நகர்ந்து சென்றனர்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com