👁️ 1263 Views
அத்தியாயம் – 13
“இவ என்னங்க இப்படி வெறிபிடிச்ச மாதிரி கத்துறா? கல்யாணத்துக்கு முன்னாடியும் இப்படித்தான் ஆடினா. அதையும், இதையும் சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணி வச்சோம். கட்டிக்கிட்டவனை மனசார ஏத்துக்கிட்டு, கல்யாண வாழ்க்கையை வாழ்வதை விட்டுவிட்டு… செத்து போனவனையே ‘என் விக்ரம்’னு சொல்லி கத்திட்டே இருக்கா.
புருஷன்னு ஒருத்தன் வந்த பிறகு… இன்னும் இன்னொருத்தன் பெயரை சொல்லலாமா? அந்தப் புத்தி கூட நம்ம பொண்ணுக்கு இல்லையே… நீங்களும் ஏன்ங்க அவளை ஆட விட்டு பார்த்துட்டு இருக்கீங்க? நம்ம அமைதியான பொண்ணு எங்கங்க போனா? இவ ஏன் இப்படி மாறிப் போனா?” என்று மகள் கத்துவதைத் தாங்க முடியாமல், கணவரிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார் திலகா.
ஜெயராமன் அப்போதும் எதுவும் பேசவில்லை.
“என்ன, புருஷன் வந்ததும் அவனே என் பதிபக்தின்னு வாழணுமா? இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை? என் மனநிலை தெரிந்தும், கட்டாயப்படுத்தி ஒருத்தனுக்குக் கட்டி வச்சுட்டு நீங்க வாழுன்னு சொன்னால் நான் அவன்கூட வாழ்ந்திடணுமா?” என்று அதற்கும் அன்னையிடம் தீயாகக் காய்ந்தாள்.
“சும்மா ஏன்டி வெறி பிடிச்ச மாதிரி கத்திகிட்டே இருக்க? கல்யாணமான மறுநாளே அப்படித்தான் எங்களை, மாப்பிள்ளையை எல்லாம் சொந்தக்காரங்க முன்னாடி அவமானப்படுத்தின. இப்ப உன் அப்பாவை மரியாதை இல்லாம பேசி கொலைகாரன்னு சொல்ற. நாங்க உனக்கு நல்லது தான் நினைப்போம்னு உனக்கு ஏன் தோன மாட்டேங்குது? நாங்க உனக்கு ஏதோ கெட்டது பண்ணிட்டது போலக் குதிக்கிற?
காதல்னா வீட்டில் எதிர்ப்பு வருவது சகஜம் தான். அப்படி இருந்தும் உன் அப்பா அவரோட வீம்பை எல்லாம் தூக்கி போட்டுட்டு உனக்காக இறங்கி வந்து அவனுக்கே உன்னைக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு நினைச்சார். ஆனால், உன் போதாத நேரம் அவன் ஆக்ஸிடென்டில் போய்ச் சேர்ந்துட்டான். அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? அடுத்து உனக்கு என்னன்னு தானே யோசிப்போம். அதான் உனக்குப் பேசி வச்சவருக்கே கல்யாணம் பண்ணி வச்சோம்.
அது எதையும் புரிஞ்சுக்கக் கூட முயற்சி பண்ணாம, பைத்தியக்காரி மாதிரி நடந்துக்கிற மது. நீ செய்றது, பேசுறது எதுவும் சரி கிடையாது. பிடிச்ச வாழ்க்கை அமையலைனா கிடைச்ச வாழ்க்கையை ஏத்துக்கிறது தான் புத்திசாலித்தனம். பைத்தியக்காரியா இல்லாம, புத்திசாலியா வாழப் பாரு…” என்று திலகா அதட்டலும், அறிவுரையுமாகச் சொல்ல,
“எனக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து புத்திசாலியா இருப்பதற்குப் பதில், நான் பைத்தியக்காரியா இருந்துட்டு போறேன்மா…” என்று மதுமதி அதற்கும் கத்த,
“பைத்தியக்காரி… பைத்தியக்காரி… சொல்வதைக் கொஞ்சமாவது புரிஞ்சுக்கிறியா? அப்படி என்னடி பொட்டப் பிள்ளைக்கு இவ்வளவு ஆங்காரம்?” என்று திலகா கோபத்துடன் கேட்க,
“இது ஆங்காரம் இல்லையம்மா… இது என் விக்ரமோட உயிர் போனதுக்கு நான் கேட்கிற நியாயம். ஒரு உயிரை உன் புருஷன் அநியாயமா கொன்னுருக்கார். அதை என்ன ஏதுன்னு கேட்க மாட்டேங்கிற. ஆனா, எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்ட. நீங்க இப்படி எல்லாம் பேசும்போது எல்லாரும் சேர்ந்து திட்டம் போட்டு என் விக்ரமை கொன்னுட்டீங்களோன்னு எனக்குச் சந்தேகத்தைத் தருது.
உங்க ஜாதி வெறிக்கு ஒரு நல்ல மனுஷனை இல்லாம பண்ணிட்டு, அந்தப் பாவத்தைச் சுமந்துகிட்டு உங்களுக்கு எப்படிம்மா நிம்மதியா தூக்கம் வருது? ஒரு உயிரை கொல்றது உங்களுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா போயிருச்சுல? இரக்கமில்லாத கொலைகார பாவிகளா…” என்று கண்கள் கலங்க குற்றம் சாட்டினாள்.
“போதும் நிறுத்துடி! நானும் பார்த்துட்டே இருக்கேன். சும்மா கொலைகாரங்கனே சொல்லிட்டு இருக்க…” என்று அதட்டினார்.
“அப்படித்தான் சொல்வேன்… நீங்க எல்லாம் கொலைகார பாவிங்கதான். என் விக்ரமோட ஆத்மா உங்களை எல்லாம் சும்மா விடாது…” மதுமதி தொண்டை நரம்புகள் வெடிக்க ஆங்காரமாகக் கத்த,
“வாயை மூடுடி பைத்தியக்காரி!” என்று கத்தியபடி, திலகா ஆவேசமாக மகளை அடிக்கக் கையை ஓங்கினார்.
சட்டென்று மதுமதியின் கையைப் பற்றித் தன் பக்கம் இழுத்தான் அவ்வளவு நேரமும் தன் வரவை காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்த மயூரன்.
திலகாவின் ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் நின்றது.

“என்ன செய்றீங்க அத்தை?” என்று கடுமையுடன் கேட்டான் மயூரன்.
“மாப்பிள்ளை… அது…” என்று தயங்கிக் கொண்டே கையைக் கீழே இறக்கினார்.
மயூரனை கண்டதும் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த ஜெயராமன் எழுந்து நின்றார். அவரைக் கூர்மையுடன் அவனின் கண்கள் துளைத்தன. அவன் அப்போதே வந்துவிட்டான். என்ன நடக்கிறது, மாமனார் என்ன பேச போகிறார் என்று கேட்கவே காத்திருந்தான். ஆனால், அவர் வாயை திறக்கவே இல்லை. அவரின் இந்த ஆழ்ந்த அமைதி அவனுக்குப் பெரும் உறுத்தலாக இருந்தது. இந்த மனிதரின் அமைதிக்குப் பின் என்ன ஒளித்து வைத்திருகிறார்? என்ற கேள்வி அவனின் சந்தேகத்தை வலுக்க வைத்தது.
இத்தனை ஆர்ப்பாட்டம் நடந்துக்கொண்டிருக்கும் போதும், தான் வந்த பிறகும் கூட அப்படியே இருந்தவரை பார்த்து எரிச்சல் மண்ட, தலையை ஆதங்கமாக அசைத்துவிட்டு மீண்டும் மாமியாரின் புறம் திரும்பியவன், “வார்த்தைக்கு வார்த்தை அவளைப் பைத்தியக்காரின்னு சொல்றீங்க. என்ன அத்தை இதெல்லாம்? பெத்த பொண்ணை இப்படியா பேசுவீங்க?” என்று கடிந்து கொண்டான்.
“அது மாப்பிள்ளை… அவதான் சும்மா ஏதேதோ பேசிட்டு…”
“அவ பேசத்தான் செய்வா. நாம எல்லாம் சேர்ந்து அவளுக்குக் கொடுத்த நெருக்கடிக்கு அவ அப்படித்தான் கத்துவா. அவ மனநிலையில் நான் இருந்திருந்தால், எல்லோரையும் தூக்கிப் போட்டுப் பந்தாடியிருப்பேன். அவ பேசுறதோட நிறுத்திட்டாள்னு சந்தோஷப்படுங்க…” என்றான்.
“கேளுடி, இப்பவும் மாப்பிள்ளை உனக்காகப் பேசுறார். இப்படிப்பட்டவர் கூடத்தான் வாழ மாட்டேன்னு குதிச்சுட்டு இருக்க. ஒரு நல்லவர் கையில் தான் நாங்க உன்னைப் பிடிச்சுக் கொடுத்திருக்கோம். அதைப் புரிஞ்சுக்கிட்டு உன் வாழ்க்கையை வாழப் பாரு…” என்று திலகா மகளுக்குச் சாந்தமாக அறிவுரை கூற, அதுவும் கூட மதுமதியின் கோபத்தைக் கிளறியது.
மயூரனின் பிடியில் சிக்கியிருந்த தன் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள் மதுமதி.
“என்ன எனக்குச் சப்போர்ட் செய்ற மாதிரி பேசி சிம்பதி கிரியேட் பண்றீயா? உன்னை நான் ஒன்னும் எனக்கு ஆதரவா பேசுன்னு கூப்பிடலை. என் அம்மா என்னைப் பேசுறாங்க. உனக்கென்ன வந்துச்சு?” என்று எடுத்தெறிந்து பேசினாள்.
“ஏய்… மாப்பிள்ளை உனக்காகப் பேசினா அவரையே நீ பேசுவீயா?” என்று திலகா மீண்டும் மகளை அதட்ட,
“இந்தாளை நீங்கதான் மெச்சிக்கணும். இந்தாள் ஆதாயம் இல்லாமல் எதுவும் செய்றதில்லை. எனக்கு ஆதரவா பேசினா அப்படியே இந்தாள் பக்கம் நான் உருகி கரைஞ்சிடுவேன்னு நினைப்பு. அது ஒருநாளும் நடக்காதுன்னு அங்க சொல்லி புரிய வைங்க…” என்றாள் வெடுக்கென்று.
“எப்படிப் பேசுறாள் பாருங்க மாப்பிள்ளை. இவளை அடிக்காம கொஞ்ச சொல்றீங்களா? இவ புத்தி மழுங்கிப் போச்சு. நாம எடுத்துச் சொல்ற நல்லது எல்லாம் அவளுக்குப் புரிய மாட்டேங்குது. இவ ஏதாவது தத்துபித்துன்னு உளறினா அதைப் பெருசா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை…” என்றார் நயமாக.
“என் மதுவை பற்றி நீங்க சொல்லவே தேவையில்லை அத்தை…” என்றான்.
“ஓஹோ! என்னைப் பற்றி உனக்கு நல்லா தெரியுமோ?” என்று நக்கலாகக் கேட்டவள், “ஆமா, நான் இங்கே வந்திருப்பது உனக்கு எப்படித் தெரியும்? நீ எப்படி இந்த நேரம் இங்கே வந்த?” என்று யோசனையுடன் கேட்டாள்.
“நான் வேற ஒரு விஷயமா வந்தேன். நீ இங்க வந்திருப்பது தெரிஞ்சு வரலை…”
“அப்படி என்ன வேறொரு விஷயம்?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
இப்போது மயூரனால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் அறிந்தவரை, விக்ரம் பற்றி அவனுக்குச் சொல்லப்பட்ட எதுவும் திலகாவிற்குத் தெரியாது. விக்ரம் விபத்தில் இறந்துவிட்டான் என்று மட்டுமே அவர் அறிந்தது. அப்படியிருக்க, விக்ரமின் பொருட்களைக் கேட்க வந்ததை அவரின் முன் காட்டிக்கொள்ள முடியவில்லை.
மதுமதியிடம் அந்தப் பொருட்களைச் பற்றிச் சொல்லிவிட்டாலும், அனைத்து உண்மைகளையும் தான் முழுதாக அறிந்துகொள்ளாமல் அவளிடம் இனி அதைப் பற்றிப் பேசுவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தான். அதனால் அவளிடமும் தான் வந்த காரணத்தைச் சொல்ல முடியாமல், வேறு என்ன சொல்லலாம் என ஒரு நொடி தடுமாறினான்.
அதுவே மதுமதியின் சந்தேகத்தை வலுக்க வைத்தது.
©nandhavanamnovels.com