6 – நீங்காத பந்தமொன்று

👁️ 1654 Views

அத்தியாயம் – 6

கணவன் இப்படி உடைந்து அழுவான் என்பதை எதிர்பாராமல் திகைத்த மஞ்சரிக்கு தன் வார்த்தைகளும் அவனைக் காயப்படுத்திவிட்டது புரிய, மனம் கலங்கிப் போனாள்.

“தரு…‌ தரு கண்ணா… வேண்டாம் பா. நீங்களே இப்படி உடைஞ்சு போனா நான் தாங்க மாட்டேன்…” என்று தானும் அழுதபடி கணவனின் தலையைப் பற்றித் தூக்க முயன்றாள்.

முதலில் அசையாதவன், அவளின் ‘தரு கண்ணா’வில் தலையை நிமிர்த்தி விழிகள் சிவக்க அவளைப் பார்த்தான்.

அவள் அவனை அப்படி அழைத்தே வருடக் கணக்காகிற்றே!

அவனின் கண் இமைகளில் துளிர்த்து நின்றிருந்த கண்ணீர் துளிகளைக் கையால் துடைத்துவிட்டவள், “நீங்க வேஸ்ட் எல்லாம் இல்லை தரு கண்ணா. உங்களால் முடிஞ்ச எல்லாமே எங்களுக்காகச் செய்றீங்க. ஆனா… என்னையும் நம்ம பாப்பாவையும் யாரோ போல நீங்க விட்டு விலகுவதைத்தான் என்னால் தாங்க முடியலை. எங்களுக்கு உங்களை விட்டா யார் இருக்கா சொல்லுங்க? நீங்களே எங்களைப் பொருட்டா நினைக்கலைனா… இவ்வளவு அவமானத்தையும் பொறுத்துக்கிட்டு ஏன் வாழணும்னு இருக்கு கண்ணா…” என்ற மஞ்சரி இப்போது தான் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

“மஞ்சுக்குட்டி!” என்று துடித்துப் போய் அழைத்தவன், “ஸாரிடி மஞ்சுக்குட்டி. என்னோட செயல் உன்னை இந்தளவு பாதிக்கும்னு நான் எதிர்ப்பார்க்கலை…” என்று வருந்தி மன்னிப்பு கேட்டான்.

“என்னைப் பாதிக்கிறதை கூட விடுங்க. நம்ம பொண்ணைப் பாதிக்குதே என்பதுதான் என்னோட கோபமே! பெத்தவனா நீங்க அவளுக்குச் சம்பாதிச்சுக் கொடுத்தா போதும்னு நினைக்கிறீங்க. அவளுக்கு அப்பாவோட பாசம் கிடைக்க வேண்டாமா? இவ்வளவு நாள் உங்க வேலையில் என்ன சூழ்நிலையோ… நாமும் அவரைத் தொந்தரவு பண்ண கூடாதுன்னு எதுவும் கேட்காமல் பொறுத்துப் போனேன். ஆனால், இவ்வளவு நாளும் அவள் சின்னப் பிள்ளை. உங்க விலகல் அவளுக்குப் பெருசா தெரிந்திருக்காது. ஆனால், இனி அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும். ஸ்கூல் போக ஆரம்பிச்சா… அங்கே மத்த பிள்ளைங்களோட அப்பாவை பார்த்துட்டு, நம்ம அப்பா ஏன் இப்படி இல்லைன்னு அவளுக்கு நினைப்பு வரும். அப்ப, பிள்ளை ஏங்கி போவாளேனு யோசிச்சு யோசிச்சே… இப்ப எல்லாம் எனக்கு ரொம்பப் பயமா இருக்கு…” என்றாள் ஆதங்கமாக.

“மஞ்சு…” என்று தவிப்புடன் அழைத்தவன் அவளின் கையைப் பற்றிக் கொண்டான்.

திரும்பி படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் முகத்தைப் பார்த்தான். அப்படியே மஞ்சரியின் பிரதிபலிப்பு குழந்தையின் முகத்தில் கண்டான்.

இப்படி ஆற அமர இருந்து குழந்தையின் முகத்தைக் கூட நீ சரியாகப் பார்க்கவில்லை என்று அவனின் மனமே குற்றம் சாட்டியது. உண்மைதான்! ஆனால்… என்று நினைத்தவனுக்குப் பெருமூச்சு வந்தது.

“நீங்களே நம்ம பிள்ளையை ஒரு பொருட்டா கூட நினைக்கலைனா உங்க வீட்டில் உள்ளவங்க எப்படி நினைப்பாங்க? இந்த வீட்டில் அவளை‌ யாருமே கண்டுக்கிறது இல்லை. இந்த வீட்டுக்கு முதல் வாரிசு அவள். வாரிசா பார்க்கலைனாலும் பரவாயில்லை. ஒரு சின்னக் குழந்தையா கூட நினைக்கிறது. என்னைப் பேசுற மாதிரியே இப்ப எல்லாம் மாமா அவளையும் பேசுறார். அதெல்லாம் கேட்கும் போது…” என்றவள் குலுங்கி அழ,

“என்ன சொல்ற?” என்று அதிர்ந்தவன், எழுந்து நின்று, “இதை ஏன் நீ எங்கிட்ட சொல்லலை?” என்று அவளின் தோளைப் பற்றிக் கோபத்துடன் உலுக்கி கேட்டான்.

“சொல்றதுக்கு நீங்க எங்கே வாய்ப்பு‌ கொடுத்தீங்க?” என்று அவளும் பதிலுக்குக் கோபப்பட, தளர்ந்து போனான் சசிதரன். தன் தவறின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவது போலிருக்க, தன் கையாலாகாதத்தனத்தால் நெஞ்சை அடைப்பது போலிருந்தது.

மீண்டும் கட்டிலில் தளர்ந்து அமர்ந்துவிட்டான் சசிதரன்.

அன்னை, தந்தையின் பேச்சுக்குக் குரலில் அவர்களின் மகள் தியா விழித்துக் கொண்டு சிணுங்க ஆரம்பிக்க, தன்னைச் சமாளித்துக் கொண்ட சசிதரன் தான், “பாப்பா, வாடா…” என்று மகளைத் தூக்கிக் கொண்டான்.

என்றுமில்லாமல் தகப்பன் தன்னைத் தூக்கவும், மிரண்டு தான் அழுதாள் தியா.‌

உடனே சசிதரனின் முகம் மாற, வேகமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சமாளித்த மஞ்சரி, “பாப்பா… அப்பா டா… அப்பாதான் உன்னைத் தூக்கியிருக்காங்க. அழக்கூடாது…” என்று மகளைத் தூக்காமலே சமாதானம் செய்தாள்.

ஆனால், இன்னும் உறக்கக் கலக்கத்தில் இருந்த தியா அன்னை சொன்னதைக் கண்டுகொள்ளாமல் தந்தையிடமிருந்து திமிறிக் கொண்டு அன்னையிடம் போக முயன்றாள்.

தான் எதை இழந்திருக்கிறோம் எனப் புரிய, சசிதரனுக்கு அடிவாங்கியது போல இருந்தது.

“ரொம்ப அழறா… தூக்கி சமாதானம் செய் மஞ்சு. நான் அப்புறம் அவளைத் தூக்கிக்கிறேன்…” என்று சோர்ந்து போன குரலில் சொன்னவன் மகளை மனைவியிடம் கொடுத்துவிட்டான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“பாப்பா என்னடா? அப்பா தானே தூக்கினாங்க. ஏன் அழற?” என்று மகளைச் சமாதானம் செய்தபடியே மஞ்சரி கேட்க, அன்னையின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தேம்பிய தியா… தூக்க கலக்கம் சற்றுத் தெளிந்ததும், தன்னையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்த தந்தையை ஓரக் கண்ணால் பார்த்து, “ம்மா… அப்பா…” என்று வெட்கத்துடன் சொன்னாள் பிள்ளை.

மகளின் வெட்கத்தைப் பார்த்து லேசாகச் சிரித்தான் சசிதரன்.

“ஆமாடா பாப்பா, அப்பாதான். நீ அப்பாகிட்ட இரு. அம்மா உனக்குப் பால் ஆத்தி கொண்டு வர்றேன்…” என்றபடி கணவனின் புறம் மகளை நீட்டியவள், “இவளைக் கொஞ்ச நேரம் பார்த்துக்குவீங்க தானே?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

“சும்மா சுருக்கு சுருக்குன்னு குத்தாதேடி. வலிக்குது!” என்றான் முகம் சுருங்க.‌

அவனை ஒரு பார்வை பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல், மகளை அவனின் கையில் கொடுத்துவிட்டு அறையிருந்து வெளியேறினாள்.

சிறிது நேரத்தில் மகளுக்கு அவள் பாலை எடுத்துக் கொண்டு வந்த போது, தந்தையின் மடியில் அமர்ந்திருந்த தியா, அவனின் மீசையைத் தடவி பார்த்து இழுப்பதும், அவனின் நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தை தொட்டு பார்த்து விளையாடுவதுமாக இருந்ததைக் கண்டபடி வந்தாள் மஞ்சரி.‌

இப்படி ஒரு தருணம் மகளுக்கு இன்றே கிடைக்கும் என மஞ்சரி எதிர்பார்க்கவே இல்லை. அவளின் முகம் தன்னிச்சையாக மலர்ந்து போயிற்று!

அவள்‌ பேசியதற்குக் கோபம் கொண்டு கணவன் இன்னும் முறுக்கிக் கொண்டு செல்வானோ என்றுதான் எதிர்பார்த்தாள். ஆனால், அவளின் பேச்சிற்குப் பலன் உடனே கிடைக்கும் என்பது எதிர்பாராதது தான்.

தான் முன்பே கணவனிடம் பேசியிருக்க வேண்டுமோ? என்று தன்னையே நொந்து கொண்டாள்.

“பாப்பா, வா… பால் குடிக்கலாம்…” என்றபடி மகளைத் தூக்கிக்கொண்டு கட்டிலில் அமர்ந்த மஞ்சரி, அவளை மடியில் அமர வைத்து டம்ளரில் இருந்த பாலை சிறிது சிறிதாகப் பருக வைத்தாள்.

சசிதரன் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, “உங்க நெத்தியில் இருக்கும் குங்குமத்தை எல்லாம் அழிஞ்சு விட்டுட்டா பாருங்க. சரி பண்ணிக்கோங்க…” என்றாள் மஞ்சரி.

எழுந்து சென்று கண்ணாடியில் தன் முகம் பார்த்து நெற்றியில் இழுத்திருந்த குங்குமத்தை சரி செய்து தீற்றாக அளவாக மீண்டும் வைத்துக்கொண்டான்.

அவனையே கவனித்துப் பார்த்தாள் மஞ்சரி.‌

அவளுக்கு அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதில் எப்போதும் அலாதி பிரியம்!

அவனை உருக உருக காதலிப்பவள் அல்லவா அவள்!

அவள் மட்டும் என்ன? அவனும் கூடத்தான் அவளை அதீதமாகக் காதலித்தான். அவனின் காதலை அவளால் இறந்தகாலத்தில் தான் யோசிக்க முடிந்தது. இப்போதும் அந்தக் காதல் தன் மீது இருக்கிறதா என்ற கேள்வி அவளுள் இருந்தது.

அவள் பேசியதும் தவிக்கின்றான் தான். வருத்தப்படுகிறான் தான். ஆனால், அது காதலினாலா என்பது கேள்விக்குறியே!

என்னவோ அவனுக்கும் அவளுக்கும் இடையே பெரிய திரையே விழுந்துவிட்டது போல் இருந்தது. அது இன்னும் முழுதாக விலகவில்லை என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது. தங்களுக்கிடையே முன்பிருந்த அதே அளவு காதல் மீண்டும் மலருமா? விடையறியா கேள்விக்கு விடையறிய காத்திருந்தாள் பாவை.

மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் அவளின் கண்கள் கணவனை விட்டு இம்மியும் அகலவில்லை.

ஜன்னல் வழியாக வந்த காலை நேர வெளிச்சம் அவன் பக்கம் நன்றாகவே விழ, அவளுக்கு இன்னும் வசதியாகப் போனது.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com