👁️ 311 Views
அத்தியாயம் – 7
கண்ணாடியின் முன் நின்று தன் அடங்காத தலைமுடியை ஒரு சிலுப்பு சிலுப்பி முடியை படிய வைக்க முயன்று கொண்டிருந்தான் சசிதரன்.
அது அடங்காமல் திமிறிக் கொண்டு விறைத்து நின்றது.
‘ம்ப்ச்’ என்று சலித்துக் கொண்டான் அவன்.
“தலையில் கொஞ்சம் எண்ணெய் வச்சுதான் சீவேன்டா…” என்று சத்தம் போட்டார் அவனின் அன்னை வனஜா.
“போங்கம்மா… தலையில் எண்ணெய் வச்சா மூஞ்சி எல்லாம் எண்ணெய் வழியுற மாதிரி இருக்கும்…” என்றவன், தலையை ஒரு குலுக்குக் குலுக்கி தலைமுடியை அலைபாயவிட்டான்.
“பாரு பரட்டை தலை மாதிரி இருக்கு…” என்று வனஜா அலுத்துக்கொள்ள,
“அண்ணாவுக்கு இந்த ஹேர் ஸ்டைல் தான்மா நல்லா இருக்கு…” என்று தமையனுக்கு ஆதரவு கொடி தூக்கினாள் அவனின் தங்கை கீதா.
“எனக்கு எப்படா ஸ்கூல் முடிச்சுட்டு அண்ணனை போலக் காலேஜ் போவோம்னு இருக்கு. எங்க ஸ்கூலில் எல்லாம் இப்படித் தலையைச் சிலுப்பிக்கிட்டு போனா, ஃபைன் போட்டுருவாங்க. ஆனா அண்ணாவை பாருங்க… எப்படி அவர் இஷ்டம்போல இருக்கார்னு…” என்று ஆதங்கப் பெருமூச்சு விட்டான் தம்பி ரவிசங்கர்.
தம்பியை கெத்தாகப் பார்த்துவிட்டு, “அம்மா, சாப்பாடு கொடுங்க. எனக்குக் காலேஜுக்கு நேரமாகுது…” என்று பரபரத்தான் சசிதரன்.
“ஸ்கூல் படிக்கிற நாங்களே இன்னும் கிளம்பலை. உனக்கு அதுக்குள்ள என்ன அவசரம் ணா? நாங்க முதலில் சாப்பிட்டுக்கிறோம்…” என்று போட்டிக்கு வந்தான் ரவிசங்கர்.
“டேய், நான் பஸ் பிடிச்சு போக நேரமாகிரும். நான் கிளம்பின பிறகு நீங்க சாப்பிட்டு கிளம்புங்க…” என்றான் சசிதரன்.
“நாங்களும்தான் ஆட்டோவில் போகணும்…” என்று அவனின் தம்பியும் தங்கையும் சொல்ல, பதிலுக்குச் சசிதரனும் பேச, உடன் பிறந்தவர்களுக்குள் நிகழும் கலாட்டா அங்கே ஜோராக நடக்க ஆரம்பித்தது.
அவர்களைச் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தார் வனஜா.
சசிதரன் பொறியியல் கல்லூரியில் கணினி பிரிவில் பிஇ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த நேரமது. ரவிசங்கரும், கீதாவும் பள்ளிப் படிப்பை படித்துக் கொண்டிருந்தனர்.
வீட்டில் மூன்று பேரும் இருந்தால் வீடே கலகலத்துவிடும். அவ்வப்போது தான் வீட்டிற்கு மூத்தவன் என்ற கெத்தை காட்டுவான் சசிதரன். அதனால் அண்ணன் தம்பிக்குள் அடிக்கடி முட்டிக் கொள்ளும். சில நேரம் மூத்த அண்ணனுக்கும், இளைய அண்ணனுக்கும் மாறி மாறி ஆதரவு கரம் நீட்டி அவர்களின் சண்டையில் தானும் பங்கு கொள்வாள் கீதா.
அவர்களை வனஜாவால் அடக்கவே முடியாது. ஆனால், குணாளனிடம் அவர்களின் சேட்டை எல்லாம் நீர்த்து போய்விடும். அவர் வந்து நின்று ஒரு பார்வை பார்த்தாலே கப்சிப்பென்று அடங்கிவிடுவார்கள்.
இப்போதும் அவர்களின் சத்தம் கேட்டு அவர் கூடத்தில் வந்து நிற்க, சட்டென்று அமைதியாகிவிட்டனர்.
வனஜா மளமளவென்று பிள்ளைகளுக்கு உணவை வைக்க, முதல் ஆளாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்தான் சசிதரன்.
“அப்பா…” என்று அவரின் முன் சென்று நின்றான்.
தினமும் அவனின் செலவுக்குப் பணம் கொடுத்துவிடுவது அவரின் வழக்கம்.
இன்றும் கொடுத்தவர், “செமஸ்டருக்குப் பணம் கட்டணும் சொன்னியே… என்னைக்கு லாஸ்ட் டேட் சசி?” என்று மகனிடம் விசாரித்தார்.
“இன்னும் மூனு நாளுக்குள் கட்டணும்பா…” என்றான்.
“சரி, நாளைக்குத் தர்றேன். போய்க் கட்டிடு…”
“சரிங்கப்பா. போயிட்டு வர்றேன்பா…” என்று பதவிசாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
வழக்கமாகக் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் ஏறியவன் பார்வை வேகமாக அலசியது. தான் தேடியதை கண்டுவிட்ட உற்சாகத்தில் அவனின் கண்கள் ஒளிர்ந்தன. அவனின் அதரங்கள் விரிந்தன.
காலில் ஒரு உற்சாகத் துள்ளலும் எழும்ப, முன்னோக்கி நகர்ந்தான்.
கடைசி இருக்கைக்கு இரண்டு இருக்கை முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவளின் பின்னால் இருந்த இருக்கை காலியாக இருக்க அதில் சென்று அமர்ந்தான்.
அவனுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவள் மஞ்சரி. அவன் படிக்கும் அதே கல்லூரியில் அதே பிரிவில், அதே வகுப்பில் படிப்பவள்.
அவனைக் கண்டதும் அவளின் முகமும் பூரித்துப் போயிருந்தது. லேசாகத் திரும்பி பின்னால் அமர்ந்திருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் அவள்.

அவளின் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் குப்பென்று அவனின் நாசியைத் தாக்க, “ஹா…” என்று மூச்சை இழுத்துவிட்டு சுவாசித்தவன், “வாசனை ஆளையே தூக்குதே!” என்று சற்று முன்னே வந்து முணுமுணுத்தான் சசிதரன். வெட்கத்துடன் சிரித்தாள் மஞ்சரி.
தன்னைப் பார்த்து வெட்கப்படும் பெண்ணைப் பார்த்துக் கர்வமாய்ச் சிரித்தான் சசிதரன்.
இருவரும் வெளிப்படையாக இல்லாமல் கண்களாலேயே பேசிக் கொண்டனர். கடந்த ஆறு மாதமாகவே அவர்களுக்குள் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது.
இருவருக்குமிடையே ஒருவித ஈர்ப்பு இருந்தது. அவன் கண்ணால் சேதி சொல்வதும், முணுமுணுப்பாய் ஏதாவது சொல்லிவிட்டு நகர்வதும், அவள் அதை ஏற்றுக்கொள்வது போல் வெட்கப்படுவதும் வழக்கமாகியிருந்தது. அதுவும் இருவரும் ஒரே பேருந்தில் தான் கல்லூரிக்குச் செல்வார்கள் என்பதால், பயணத்திலும் அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது.
ஆனால் இன்னும் வெளிப்படையாக அவர்கள் தங்கள் மனத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
பேருந்து அவர்களின் கல்லூரி நிறுத்தத்தில் நிற்க, மஞ்சரி இறங்கி முன்னால் செல்ல, சிறு இடைவெளி விட்டு அவளைப் பின் தொடர்ந்தான் சசிதரன்.
“டேய் மாப்ள, என்னடா கண்டுக்காம போற?” என்று கல்லூரிக்குள் இருந்த ஒரு மரத்தடியில் நின்றிருந்த அவனின் நண்பர்கள் அழைக்க, “இதோ வர்றேன்டா…” என்றவன், மஞ்சரியை பார்த்தான். அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள் அவள்.
சசிதரன் நண்பர்களின் அருகில் சென்றான்.
“ஒரே லுக்குத்தான்! ஒரே சைட்டுதான்! என்ன மாப்ள கலக்குற போல?” என்று அவனின் நண்பனான வாசன் சசிதரனை கேலி செய்ய,
“டேய், சும்மா இருடா!” என்று வெட்க முறுவலை மறைக்கப் போராடியபடி அதட்டினான்.
“ஆமா, இன்னும் எவ்வளவு நாளுடா இரண்டு பேரும் இப்படிக் கண்ணாலேயே பேசிட்டு இருக்கப் போறீங்க? சொல்லி வளர்க்கும் காதலே இப்ப எல்லாம் புட்டுக்கிதுடா. சொல்லாம வளர்க்கும் காதலுக்கு மட்டும் எப்படி ஆயுசு இருக்கும்? வேகமாகப் பிக்கப் பண்ற வழியைப் பாருடா. இல்லைனா வேற எவனாவது உள்ளே புகுந்து பிக்கப் பண்ணிட்டு போயிட போறான்…” என்று நண்பன் ஒருவன் அறிவுரை சொல்ல,
“சும்மா பூச்சாண்டி காட்டாதீங்கடா. என்னோட மஞ்சு அப்படி எல்லாம் ஆள் மாத்துறவ கிடையாது. அவளும் என்னை உண்மையா லவ் பண்றா…” என்று லயித்துக் கூறினான்.
“உன்கிட்ட அந்தப் பொண்ணு அப்படிச் சொல்லுச்சா என்ன?” என்று இன்னொரு நண்பன் கேட்க,
“நாங்க இரண்டு பேருமே இன்னும் நேரடியா எதுவும் பேசிக்கலைடா. ஆனாலும் என் மஞ்சுவை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்!” என்று உறுதியுடன் சொன்னான் சசிதரன்.
“இவனோட நம்பிக்கையைப் பார்த்து எனக்குப் புல்லரிச்சு போச்சுடா…” போலியாகத் தன் உடலை சிலிர்த்துக் கொண்டு கேலி செய்தான் ஒரு நண்பன்.
“அவன் காதலை எப்ப சொல்லணும்னு அவனே முடிவு பண்ணட்டும்டா. விடுங்கடா…” என்றான் வாசன்.
“இவனோட லவ்வை அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டா… இவனும் நிம்மதியா இருக்கலாம்லடா?” என்றான் இன்னொரு நண்பன்.
ஆளுக்கு ஒன்று சொல்ல, சசிதரனோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.
ஆனால், அவனின் மனத்திலோ, விரைவில் தன் காதலை மஞ்சரியிடம் சொல்ல வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.
வகுப்பிலும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும், கண்களினாலே காதல் பேசுவதையும் தொடர்ந்தனர்.
ஒருநாள் கல்லூரி முடிந்து கிளம்பும் போதே வானம் இருட்டி கொண்டு வந்தது. மாணவிகள் எல்லாம் தங்கள் துப்பட்டாவால் தலையை மூடியபடி பேருந்து நிறுத்தத்தை நோக்கி விரைந்தனர். அவர்களுடன் மஞ்சரியும் விரைந்தாள்.
மாணவர்கள் எல்லாம் பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடுவதும், கட்டிடத்தின் கீழ் ஆங்காங்கே ஒதுங்கி நிற்பதுமாக இருந்தனர்.
அவர்களைப் போல் சசிதரனும் ஒரு கட்டிடத்தின் கீழ் ஒதுங்கி நின்றிருந்தான்.
அவனைக் கண்டு விட்டு, தன் நடையை மெதுவாக்கிய மஞ்சரி, பின் சட்டென்று விரைய ஆரம்பித்தாள்.
அவள் செல்வதைச் சசிதரனும் காணவே செய்தான்.
தானும் அவளுடன் செல்லலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த போதே ஒரு கட்டிடத்தின் பின் இருந்து ஒரு கை நீளுவதும், அந்தக் கை மஞ்சரியை மட்டும் இழுத்து சென்றதையும் கண்டவன் அதிர்ந்து போனான்.
©nandhavanamnovels.com