👁️ 943 Views
மதுமதி குளித்துவிட்டு கிளம்பி வந்ததும், மகள் இன்றாவது தங்களுடன் சாப்பிடுவாளா என்ற எதிர்பார்ப்புடன் வேகமாக சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைத்தார் திலகா.
ஆனால், அவளோ கண்டு கொள்ளாமல், வாசலை நோக்கி நடக்க அவளை ஏமாற்றத்துடன் பார்த்தார் அன்னை.
“கல்யாண நாளுக்கு நான் நேத்தே அவளை வெளியில் கூட்டிட்டு போக பிளான் பண்ணியிருந்தேன் அத்தை. நேத்து முடியாமல் போயிடுச்சு. இன்னைக்கு நாங்க ஜோடியா வெளியில் போய் சாப்பிட்டுக்கிறோம். நீங்களும் மாமாவும் சாப்பிட்டிருங்க…” என்று மயூரன்தான் அவரைச் சமாதானப்படுத்தி விட்டு அவளுடன் சென்றான்.
வீட்டின் வெளியே வந்ததும் மதுமதி அவனுடன் செல்லாமல் அங்கிருந்து நகர, அதற்கு விடாதவன், “சும்மா பிகு பண்ணாம வாடி தங்க பொண்ணு. ஆட்டோவுக்கு கொடுக்குற காசை எனக்கு கொடுத்துடு. ஏற்கெனவே என் வீட்டில் சாப்பிடுவதற்கு நீ காசு கொடுக்கிறவள் தானே…” என்று இடக்காக சொல்லி அவளை அழைத்தான்.
“பைக் டாக்ஸியில் போறதா நினைச்சுக்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டே, தன் கைப்பையில் இருந்து அப்போதே வாடகை வண்டிக்கு செலவாகும் பணத்தை எடுத்து அவன் கையில் திணித்தாள் மதுமதி.
அந்த பணத்தைப் பார்த்து மனைவி அறியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டான் மயூரன்.
அவள் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்த சிறிது நாள்களிலேயே அலுவலகத்திலிருந்து முன் பணம் வாங்கி வந்து அவனின் வீட்டில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பணத்தை கொடுக்க ஆரம்பித்திருந்தாள் மதுமதி.
மயூரன் மறுக்க, அதற்கு வேறு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் வந்திருந்தது.
அதனால் மதுமதி வீட்டில் சாப்பிடுவதை நிறுத்த, அவ்விஷயத்தில் மட்டும் அவளுக்காக சற்று இறங்கி வந்தான் மயூரன்.
“நம்ம வீட்டு செலவை நாம ரெண்டு பேரும் சேர்ந்து பகிர்ந்து செய்வதாக நான் எடுத்துக்கிறேன்…” என்று சொல்லி அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டான்.
அதன் பிறகுதான் அவனின் வீட்டில் உணவை உண்டாள் மதுமதி.
அவள் அப்படி பிடிவாதம் பிடிப்பதாலேயே ‘எங்கே அவள் தன்னை விட்டு பிரிய முடிவெடுத்ததிலும் பிடிவாதமாக இருந்து விடுவாளோ’ என்று பயந்து மயூரன் அவள் திட்டுவதையும் பொருட்படுத்தாமல் பொறுத்துப் போய்க் கொண்டிருந்தான்.
மனைவியை பைக்கில் அழைத்து சென்ற மயூரன், இடையில் வந்த ஒரு கோவில் முன் வண்டியை நிறுத்தினான்.

“இங்க எதுக்கு நிறுத்துற? பைக் டாக்ஸினா நான் போக வேண்டிய இடத்துக்கு நேரா கொண்டு போய் நிறுத்துவது தான் உன் வேலை…” என்று அவள் கோபமாக சொல்ல,
“நேத்து நம்ம கல்யாண நாளுக்கு கோயிலுக்கு போகணும்னு ஆசைப்பட்டேன். நீ எல்லாத்தையும் கெடுத்துட்ட. இன்னைக்காவது போயிட்டு வருவோம், வா…” என்று மயூரன் அழைக்க, அவள் வரமுடியாது என்க, அவளின் கையை வலுவாக பிடித்தவன், “எல்லாத்துக்கும் பிடிவாதம் பிடிக்காம வாடி!” என்று சற்று கட்டாயத்துடன்தான் உள்ளே அழைத்துச் சென்றான்.
கோபத்தில் இருந்தவள், சாமி கும்பிடாமல் நிற்க, மயூரனோ மனமுருகி கடவுளை தொழுதான்.
“கடவுளே! என் மனைவியை காயப்படுத்துவது என்னோட நோக்கமில்லை. ஆனா, நான் செய்யும் சில விஷயங்களால் அவளும் கஷ்டப்படுறா. ஆனா… எனக்கு வேற வழி தெரியலையே. முட்டி மோதி எப்படியோ இந்த ஒரு வருஷத்தை கடந்து வந்துட்டோம். இனி எங்க வாழ்க்கை எப்படி போகும்னு எனக்குத் தெரியலை. அவள் கூட போராட இதே வலு எனக்கு எப்பவும் இருக்குமான்னும் தெரியலை.
அவ மனசு சாந்தமானா எல்லாமே மாறிடும். அதுக்கு நீதான் மனசு வைக்கணும் கடவுளே… அம்மா அப்பா என்னை விட்டு போனபிறகு எனக்கு இது வேணும் அது வேணும்னு உன்கிட்ட நான் எதுவும் கேட்டதே இல்லை. இப்ப கேட்கிறேன். என் மனைவியோட மனம் அமைதியடையவும், அவள் என் கூட நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கை வாழவும் நீதான் துணை புரியணும்…” என்று வேண்டியவன் மேலும் சில விஷயங்களை சொல்லி வேண்டுதல் வைத்தான்.
அவனின் அனைத்து வேண்டுதலும் கேட்கப்பட்டதா என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்!
மயூரன் தன் மனப்பாரத்தை கடவுளின் முன் சமர்பித்துவிட்டு கண்களை திறக்க, “தீவிர வேண்டுதல் போல?” என்று கேலியாக கேட்டாள் மதுமதி.
“ஆமாம். என் பொண்டாட்டிக்கு நல்ல புத்தி கொடு. அவள் செய்யுற கிறுக்குத்தனங்களை எல்லாம் நிறுத்த வைன்னு வேண்டிக்கிட்டேன்…” என்றான் மயூரன்.
“யூ… யூ…” என்று அவள் கோபமாக ஏதோ சொல்ல வர,
“அதுக்கு முன்னாடி இரண்டு வார்த்தை விட்டுட்ட… “ஐ லவ்… சொன்னா போதும்! முழுமை அடைஞ்சிடும்…” என்று சொல்லி அவன் தன் அதரங்கள் விரிய சிரிக்க,
“உன் அந்த அல்பத்தனமான ஆசையைத் தூக்கி குப்பையில் போடுடா பம்பரக்கட்ட மண்டையா…” என்று தலையை சிலுப்பிக் கொண்டு சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்.
அவளுடன் இணைந்து நடந்து, அவளை அழைத்துச் சென்று, ஒரு உணவகத்தில் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு, அவளை அலுவலகத்தில் விட்டுவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றான் மயூரன்.
அடுத்து வந்த நாள்களும் போராட்டமும், வாக்குவாதமும், பிடிவாதமுமாகத்தான் அவர்களின் வாழ்க்கை சென்றது.
மேலும், மூன்று மாதங்கள் சென்றிருந்த நிலையில் அந்நிகழ்வு அவர்களின் வாழ்வில் நடந்தேறியிருந்தது.
அன்று காலை மயூரன் தனது பைக் ஷோரூமுக்குள் நுழைந்த நிமிடம், அவனின் மனைவி மதுமதியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
ஏதோ யோசனையுடன் தனது அலுவலக அறைக்குள் நுழைந்தவன் அவளின் அழைப்பை கண்டதும், ஏற்று அவன் பேச ஆரம்பிக்கும் முன், அந்தப் பக்கமிருந்து சூறாவளியாக தன் நாவை சுழற்றிப் பேச ஆரம்பித்திருந்தாள் மதுமதி.
“எருமை… எருமை… நேத்து என்னை என்னடா பண்ணின?” என்று உச்சத்தில் ஏறிய ஆக்ரோஷத்துடன் கேட்டாள் மதுமதி.
ஒரு நொடி கண்களை இறுக மூடித் திறந்தான் மயூரன். அவனின் உதடுகளில் இப்போது ஒரு மென்புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது.
“என்ன பண்ணினேன்னு அதுக்குள்ள என் தங்கப் பொண்ணுக்கு மறந்து போச்சா? தப்பாச்சே! இன்னைக்கு நைட் வந்து என்ன பண்ணினேன்னு ஞாபகப்படுத்துறேன்…” என்று உதட்டை மடித்துக் கடித்து, கண்களில் மயக்கத்துடன் சொன்னவனுக்கு இரவு நடந்தது இன்னும் இனிமையாய் மனத்தில் உலாப் போக, உல்லாச புன்னகை மிதந்தது அவனின் உதடுகளில்.
“செருப்பு பிஞ்சிடும்!” என்று அந்தப் பக்கமிருந்து ஆத்திரமிகுதியில் கத்தியவளின் வார்த்தையில் இருந்த உக்கிரம் கூட அவனின் மனநிலையை மாற்றவில்லை.
“சரிடி தங்கம், வரும் போது ஒரு புதுச் செருப்பும் வாங்கிட்டு வர்றேன்…” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
“உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமா இல்லை?”
“அதை நீயே பத்திரமா வச்சுக்கோ தங்கப் பொண்ணே… எனக்கெதுக்கு அது?” என்று தன் அடர்ந்த புருவத்தை ஏற்றி இறக்கிக் கேட்டான்.
“பம்பரக்கட்ட மண்டையா… நீ மட்டும் நேரில் என் கையில் சிக்கின… அந்தப் பஞ்சுமிட்டாய் தலையைப் பிடிச்சு ஆஞ்சிடுவேன் ஆஞ்சி…” என்று பற்களைக் கடித்தாள் பாவை.
“எப்படி? நேத்து நைட் என் பிடரி முடிக்குள்ள கைவிட்டு, என்னை உனக்கு நெருக்கமா இழுத்து ஆஞ்சியே ஆஞ்சு அப்படியா?” என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்டான்.

அந்தப் பக்கம் பெரும் அமைதி சூழ்ந்தது.
“என்னடி தங்கம் பேச மாட்டிங்கிற? மாமா உன் பெர்பாமன்ஸில் அப்படியே மயங்கிட்டேன் தெரியுமா? இன்னும் அதிலிருந்து எழவே இல்லை…” என்றான் மயக்கம் தீராமல்.
“நீ… நீ… நீதான் என்னை ஏதோ பண்ணிட்ட. நான் ஒன்னும் அப்படி… அப்படி இல்லை. நான் பலவீனமா இருந்த நேரத்தை நீ பயன்படுத்திக்கிட்ட. ராஸ்கல்!” என்றவளின் பற்கள் நறநறத்தது அவனுக்குக் கேட்டது.
ஒரு நொடி அவன் முகம் மாறி, பின் இயல்பானது.
“சரி, அப்படியே வச்சுக்கோ…” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
“மனுஷனாடா நீயெல்லாம்?”
“மனுஷனா மிருகமான்னு நீ நேத்து நைட் பார்க்கலையா?” என்று கண்ணைச் சிமிட்டிக் கேட்டான்.
“டேய்..!”
“புருஷனை மரியாதையா கூப்பிடு தங்கப் பொண்ணே…”
“புருஷனா? நீயா? நீ என்னைக்கும் என் புருஷனா ஆகிட முடியாது…”
“நேத்து நைட் நடந்ததை மறந்துட்டு பேசுற தங்கம்…”
“கூடப் படுத்துட்டா புருஷனாகிடலாம்னு நினைச்சியோ?” என்றவள், இன்னொரு வார்த்தையையும் சேர்ந்து சொல்லிவிட்டு அவள் நக்கலாகச் சிரிக்க, அவனது இதழ்களில் இருந்த உல்லாசப் புன்னகை உறைந்து போனது.
“இப்ப பேசேன்டா பம்பரக்கட்ட மண்டையா. வாய் அடைச்சுக்கிச்சோ?” என அவனைச் சீண்டினாள்.
“என்னை அசிங்கப்படுத்துறதா நினைச்சுக்கிட்டு உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காதே தங்கப்பொண்ணு…” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன், அழைப்பை துண்டித்துவிட்டான்.
அதுவரை இலகுவாக காட்டிக் கொண்டிருந்த அவனின் உடல் இறுக ஆரம்பித்தது.
முகத்தில் ஒருவித தீவிரம் வந்து அமர்ந்துகொள்ள, யோசனையுடன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டே தன் இருக்கையில் தளர்ந்து அமர்ந்தான் மயூரன்.
©nandhavanamnovels.com