👁️ 1783 Views
“அண்ணி எப்படி இருக்காங்கன்னு கேட்டீங்களா அண்ணே?” செல்வராஜ் ஜெயராமனிடம் விசாரிக்க,
“அவளையும் போய்ப் பார்க்கணும் செல்வா. நான் போய்ப் பார்த்துட்டு வரட்டுமா?” என்ற ஜெயராமன் மயூரனை பார்த்து தயங்கினார்.
“மாப்பிள்ளை கூட நான் உட்கார்ந்திருக்கேன். நீங்க போயிட்டு வாங்க…” என்றார் செல்வராஜ்.
கண்களை மட்டும் திறந்து பார்த்த மயூரன், “அத்தைக்கு என்னாச்சு? அவங்க இங்கே காணோமே, எங்கே அவங்க?” என்று கேட்டான்.
“பொண்ணு சீரியஸா இருக்காள்னு அழுது அழுது மயக்கம் போட்டுட்டா மாப்பிள்ளை. அவளை ஒரு ரூமில் தங்க வச்சிருக்கோம். கண் முழிச்சிட்டாளா தெரியலை. நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன் மாப்பிள்ளை…” என்று சொல்லிவிட்டு கிளம்பியவர் எதிரே வந்தவர்களைப் பார்த்து அப்படியே நின்றார்.
அவர் பார்வை சென்ற திசையில் மயூரனும் பார்க்க, தளர்ந்த நடையுடன் தங்கை ராதாவின் கைத்தாங்கலில் மெல்ல வந்து கொண்டிருந்தார் திலகா, மதுமதியின் அன்னை.
“ஏன் அதுக்குள்ள இங்க வந்துட்ட? கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே?” என்று ஜெயராமன் மனைவியைக் கடிந்துகொள்ள,
“எனக்கு ஒன்னும் இல்லைங்க. நம்ம பொண்ணு இப்ப எப்படி இருக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கலக்கத்துடன் கேட்டார் திலகா.
“இரத்தம் ஏத்தியிருக்காங்க. சரியாகிடும் தான் சொல்லியிருக்காங்க. நீ அவளை நினைச்சு கவலைப்பட்டு உன் உடம்புக்கும் இழுத்து விட்டுக்காதே. மது நல்லபடியா பொழைச்சு வந்துடுவா…” என்றார்
‘கடவுளே!’ என்று முணுமுணுத்த திலகா கையை உயர்த்திக் கும்பிடு போட்டவர், சில நொடிகளுக்குப் பிறகே அங்கிருந்த மயூரனை பார்த்தார்.
அவனைப் பார்த்ததும் அவர் கண்ணில் திடுக்கிடல் வந்து போனது.
“மாப்பிள்ளை… நீங்க… நீங்க… எப்ப வந்தீங்க?” என்று தடுமாற்றுத்துடன் கேட்டவர், அவன் பதில் சொல்லும் முன், திரும்பி கணவரை பயப்பார்வை பார்த்தார்.
அவரின் பார்வையைக் கவனித்துக் கொண்டே, “இப்பதான்!” என்று மட்டும் முனகினான் மயூரன்.
“அது… மாப்பிள்ளை… மது… வந்து… ஏதோ அவசரப்பட்டு… ” திணறியபடி அவர் ஏதோ சொல்ல முயல,
“நான் மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிட்டேன் அண்ணி. வீட்டு வேலை பழகச் சொன்னதுக்குப் போய் இந்தப் பொண்ணு கோவிச்சுக்கிட்டு இப்படிப் பண்ணிட்டாளேன்னு மாப்பிள்ளைக்கிட்ட இப்பதான் சொல்லிட்டு இருந்தேன். நீங்க உட்காருங்க. திரும்ப மயக்கம் போட்டு விழுந்துடாதீங்க. என்ன ராதா பார்த்துட்டு இருக்க? அவங்களை உட்கார வை!” என்று வேகமாக இடையிட்டு சொன்னார் செல்வராஜ்.
ராதாவும் திலகாவை ஒரு நாற்காலியில் அமர வைத்தார்.
அவர்களை ஆழமாக அவதானித்தபடி அமர்ந்திருந்த மயூரனுக்கு, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தன்னிடம் ஏதோ ஒரு பெரிய உண்மையை மறைக்கிறார்கள் என்பது நன்றாகவே புரிந்தது.
மதுமதி தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி ஒரு புறம் என்றால், அவனோடு இணையப்போகும் அந்தக் குடும்பம் அவனிடமே உண்மையைச் சொல்லத் தயங்குவது அவனுள் ஒரு கசப்பை உண்டாக்கியது. அப்படி என்ன உண்மையை மறைக்கிறார்களோ என்ற எண்ணம் அவனது இதயத்தை இன்னும் அழுத்தமாக அரிக்கத் தொடங்கியது.
ஒருவருக்கொருவர் பேச பயந்து அமைதியையே கடைப்பிடித்தனர்.
அந்த அமைதியை கலைத்தது கைப்பேசி ஒலி.
தன் அலைபேசிக்கு வந்த அழைப்பை அவசரமாக ஏற்றுப் பேசினார் ராதா.
“சொல்லு. நாங்க ஹாஸ்பிடலில் தான் இருக்கோம். அப்படியா? சரி, ஆட்டோ பிடிச்சு பார்த்து வா…” என்று சுருக்கமாகப் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
“யார் ராதா?” என்று செல்வராஜ் மனைவியிடம் கேட்க,
“ஓவியாங்க. காலையில் அவளுக்குத் தகவல் சொல்லியிருந்தேன். கிளம்பி, நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கிட்டாளாம். நாம எங்க இருக்கோம்னு கேட்டாள். ஹாஸ்பிடலில் இருக்கோம்னு சொன்னதும், நேரா இங்கே வர்றதா சொன்னாள்…” என்றார் ராதா.
ஓவியா, செல்வராஜ் ராதாவின் மகள். சென்னையில் ஒரு கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை மயூரன் அறிந்திருந்தான்.
சென்னையில் இருக்கும் அவளுக்குக் கூடக் காலையிலேயே தகவல் தெரிவிக்கப்பட்டு அவள் சென்னையிலிருந்து கிளம்பி இப்போது இங்கே வந்து சேர்ந்துவிட்டாள்.
ஆனால், இதே ஊரில் இருக்கும் அவனுக்குத் தகவல் சொல்லப்படவில்லை… என்ற எண்ணம் மீண்டும் அவனுக்குள் முள்ளாய்க் குத்தியது.
அவன் மணம் முடிக்கப்போகும் பெண் தற்கொலைக்கு முயன்றதைச் சொல்ல அவளது பெற்றோருக்குச் சங்கடமாக இருந்திருக்கலாம் என்று ஒருபுறம் மனம் சமாதானம் சொன்னாலும், அவனுக்கும் அவளுக்குமான பந்தம் எப்போதோ நிச்சயிக்கப்பட்டுவிட்டதே! அந்நியமாகப் பார்க்கப்பட வேண்டியவனா நான்? என்று ஆதங்கமாக நினைத்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் அங்கே வந்த ஓவியா பெரியவர்களிடம் மதுமதியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.
தன்னை அவள் அனுதாபமாகப் பார்ப்பது போலத் தெரிந்தது அவனுக்கு.

எதையும் சட்டை செய்யவில்லை அவன்.
சிறிது நேரத்தில் அமைச்சரை பார்க்க போக வேண்டும் என்று கிளம்பிய செல்வராஜ் கையோடு மகளையும் அழைத்துச் சென்றுவிட்டார்.
நேரம் சென்று கொண்டே இருக்க, மயூரன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை என்றதும், அருகில் வந்த ஜெயராமன், “மாப்பிள்ளை, டாக்டர் இப்ப எதுவும் சொல்ற மாதிரி தெரியலை. நீங்க வேணா வீட்டுக்குப் போயிட்டு வாங்களேன்...” என்றார் மெல்ல.
“இல்லை, இங்கே இருக்கிறேன்…” என்றவன் இடத்தை விட்டு அசையவில்லை. அன்று இரவு முழுவதும் அங்கே தான் இருந்தான்.
மறுநாள் அவர்களிடம் பேசிய மருத்துவர், மதுமதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், இனி பயப்பட ஒன்றும் இல்லை என்றும் சொல்லிவிட, அனைவருக்கும் அப்போதுதான் நிம்மதியானது.
மதுமதியை மாலை அறைக்கு மாற்றிய பிறகு பார்க்கலாம் என்று மருத்துவர் சொல்லிவிட, அதன் பிறகே வீட்டிற்குக் கிளம்பிச் சென்ற மயூரன், மீண்டும் மாலையில் மதுமதியைப் பார்க்க வந்தான்.
அவன் வந்தபோது உள்ளே அறைக்குள் யாரோ பேசிக்கொண்டிருக்க அவர்கள் வெளியே வந்தபின் செல்லலாம் என வாசலில் நின்றுவிட்டான்.
“நீ எதுக்கு இங்கே வந்த? உன் அப்பனால் தான் நான் இப்படி வந்து கிடக்கேன். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டு ஆப்பிள் வாங்கிட்டு நலம் விசாரிக்க வந்தீங்களோ? நீயும் உன் குடும்பமும் ஒழுங்கா இங்கிருந்து போயிடுங்க. உன் அப்பாவால் என் வாழ்க்கை போச்சு.
என் விக்ரம் இப்ப எங்க இருக்கான்னே தெரியலை. எல்லாரும் சேர்ந்து என் விக்ரமை எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்களே. என் விக்ரம் இல்லாம என்னால் வாழ முடியாது. எனக்கு என் விக்ரம் வேணும். அவனைக் கூட்டிட்டு வாங்க. அவன் இல்லைனா நான் செத்து போவேன். என் விக்ரமை கூட்டிட்டு வாங்க… போங்க… எல்லாரும் இங்கிருந்து போங்க…” என்று உள்ளிருந்து மதுமதியின் கதறலுடன் கூடிய சத்தம் வெளியே வரை கேட்க, தான் கேட்டதை நம்ப முடியாமல் உறைந்து நின்றான் மயூரன்.

என்ன சொல்கிறாள் இவள்? விக்ரமா? யாரது? அவனுக்காகத்தான் சாகத் துணிந்தாளா? என்ற கேள்வி அவனுக்குள் ஓட, உடலோ கேட்ட விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் தள்ளாடியது.
சுவரைப் பிடித்தபடி அங்கிருந்து மெல்ல நகர்ந்தவன், நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தான்.
அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் வேறு ஒருவனை விரும்புகிறாள். அவனுக்காகத் தன்னையே சாகடித்துக் கொள்ளத் துணிந்துவிட்டாள். இது மட்டுமே அவனின் மூளைக்குள் விடாமல் ரயில் வண்டி போலத் தடதடவெனச் சத்தம் எழுப்பியபடி ஓடிக்கொண்டிருந்தது.
சில நொடிகளில் அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள் ஓவியா. அவளின் அப்பாவால் தானே தன் வாழ்க்கை போனதாக மதுமதி சொன்னாள்? அப்படி என்ன செய்தார் அவர்? நேற்று கூட மதுமதியின் தற்கொலை முடிவிற்கான காரணத்தைத் தன்னிடம் மாற்றிச் சொன்னவர் அவர் தானே? என்று நினைத்தவன் கண்கள் ஓவியாவையே பின்தொடர்ந்தன.
அவளோ அதிர்ந்த முகத்துடனும், தளர்ந்த நடையுடனும் சுற்றம் மறந்து அங்கிருந்து சென்று கொண்டிருந்தாள்.
“மாப்பிள்ளை, நீங்க எப்ப வந்தீங்க?” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.
கையைப் பிசைந்து கொண்டு தவிப்புடன் நின்றிருந்தார் திலகா.
உள்ளே மகள் பேசியதை கேட்டுவிட்டானோ? என்ற எண்ணம் அவரின் மனத்தில் ஓடுவதாகத்தான் அவனுக்குத் தோன்றியது.
அவரிடம் ஒன்றும் காட்டிக் கொள்ளாதவன், “இப்பதான் வந்தேன் அத்தை. மதி எப்படி இருக்கா?” என்று கேட்டபடி எழுந்தான்.
“இப்ப நல்லா இருக்காள் மாப்பிள்ளை. வாங்க, உள்ளே வந்து பாருங்க…” என்று அவனை அழைத்துப் போனார்.
சற்றுமுன் தான் கோபமாகக் கத்தியிருந்த மதுமதி, மீண்டும் யார் உள்ளே வருவது என்பதுபோல் வெடுக்கென்று திரும்பி பார்த்தவள், அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
தன் மீது அப்பட்டமான வெறுப்பைப் பிரதிபலித்தவளைக் கண்டு எழுந்த வலியைத் தனக்குள் மறைத்துக் கொண்டு, “எப்படி இருக்க மதி?” என்று விசாரித்தான்.
அவள் பதில் சொல்லாமல் வாயை இறுக மூடியிருக்க, “மாப்பிள்ளை கேட்கிறார் தானே? பதில் சொல்லுடி…” என்று அதட்டினார் திலகா.
“யார் மாப்பிள்ளை? இந்தாளா? இந்தாளு எல்லாம் மாப்பிள்ளை கிடையாது. நம்ம வீட்டு மாப்பிள்ளைனா அது, என்னோட விக்ரம் மட்டும்தான்!” என்று மதுமதி கோபமாகக் கத்த,
“ஏய்… வாயை மூடுடி!” என்று திலகா அதிர்ந்து மகளை அதட்ட, அவளை வெறித்துப் பார்த்தபடி உணர்வுகளற்று நின்றிருந்தான் மயூரன்.

*****
பின்குறிப்பு:-ஓவியா உதிரா நேசம் கதையின் நாயகி. அக்கதையின் நாயகன் யுகேந்திரன். மதுமதியின் இந்தத் தற்கொலை முடிவுதான் யுகேந்திரன் ஓவியா வாழ்க்கையிலும் புயலை கிளப்பும். இது மட்டுமே இரண்டு கதைக்கும் உள்ள கனெக்ஷன். மீதி எல்லாம் இந்தக் கதையில் (காதலின் ரீங்காரம்) மயூரன் மதுமதியின் வாழ்வும் அவர்களின் உணர்வு போராட்டமும் மட்டுமே வரும். யுகேந்திரன், ஓவியா எப்பவாவது மட்டுமே வருவார்கள்
©nandhavanamnovels.com