10 – காதலின் ரீங்காரம்

👁️ 1244 Views

“அப்படி ஒரு வீடியோ இருக்கச் சான்ஸே கிடையாது. அதுவும் அவுத்துப் போட்டு வீடியோவில் காட்டினோமா? ச்சை, கேட்கவே அருவருப்பா இருக்கு. எப்படி எல்லாம் அசிங்கமா கதை கட்ட தோன்றியிருக்கு உங்களுக்கு எல்லாம்? நானும் விக்ரமும் காதலிக்க ஆரம்பிச்ச நாளில் இருந்து, லிப் கிஸ் கூடப் பண்ணியது கிடையாது. ஒரு நாலைந்து தடவை கன்னத்தில் வேணுமானால் கிஸ் பண்ணியிருப்போம். நாங்க பார்த்துப் பேசிக்கிறது எல்லாம் பெரும்பாலும் ஆபிஸ்லதான். இல்லைனா, காஃபி ஷாப்பில். அதுவும் கையைப் பிடிச்சுட்டே பேசுவோம். கைகோர்த்து நடந்திருக்கோம். அதை மீறி ஒரு நாள் கூட என்னோட விக்ரம் என்கிட்ட அத்துமீறியது இல்லை…” என்று கர்வத்துடனே சொன்னாள்.

கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டோம் என அவள் சொன்னதும், மயூரனின் முகம் மாறியது. கசப்பான மருந்தை விழுங்கியது போலத் தொண்டையை அடைத்தது. அதே நேரம் அத்துமீறவில்லை என்று அவள் சொன்னதும், ஒரு பக்கம் நிம்மதி கொண்ட அதே நேரத்தில், அப்புறம் எப்படி வீடியோ? இவள் சொல்வதை வைத்து பார்த்தால்… என்று அவன் குழம்பிப் போயிருந்த நேரத்தில், மதுமதி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, அதைக் கவனிக்க ஆரம்பித்தான்.

“வீடியோ காலில் பேசினாலும் ஸ்வீட் நத்திங்ஸ் பேச்சுக்கள் இருக்குமே தவிர, ரொம்ப அந்தரங்கமா எல்லாம் நாங்க பேசியதில்லை. அப்படியிருக்கும் போது அவுத்துப் போட்டுக் காட்டினேனாம். என் அப்பனுக்குப் புத்தி ஏன் இப்படிப் போச்சு? பெத்த பொண்ணைப் பத்தி இப்படி ஒரு அசிங்கமான கதையைச் சொல்ல அந்த மனுஷனுக்கு எப்படி மனசு வந்துச்சு? அவரோட ஜாதி வெறிக்கு என்ன வேணுமானாலும் சொல்வாரா?” என்று ஆதங்கமாகக் கேட்டாள்.

மதுமதி சொன்னதைக் கேட்க கேட்க, மயூரனுக்குப் பெரும் குழப்பம் சூழ்ந்தது. அப்படியெனில், அவளின் காணொளி விக்ரமின் மடிக்கணினியில் இல்லையா? அல்லது, மதுமதி சொன்னது போல் எல்லாமே கட்டுக்கதையா?

ஜெயராமனும், செல்வராஜும் சேர்ந்து சொன்ன பொய்யா அது? அந்தரங்க வீடியோ எல்லாம் நான் பார்க்க கேட்க மாட்டேன் என்று நினைத்து, அப்படிச் சொன்னார்களா? அப்படியானாலும், அப்படி என்னிடம் கதை சொல்வதால் என்னவாகிவிடப் போகிறது? அதிலும் அன்றைய ஜெயராமனின் நடுக்கம்! மதுவின் வீடியோ எல்லாம் இல்லை எனத் தன்னிடம் பதற்றமாக உளறியது. அதற்கு என்ன அர்த்தம்?

பொய் சொன்னது ஜெயராமனா? அல்லது மது பொய் சொல்கிறாளா? தங்கள் காதலை புனிதம் எனக் காட்ட, உண்மையை மறைக்கிறாளா? என்று யோசித்தபடி மதுமதியையே கூர்ந்து பார்த்தான்.

அவளோ தன் தந்தையை, செல்வராஜை, மயூரனை என மாறி மாறி ஏதேதோ திட்டிக் கொண்டிருந்தாள்.

“என் விக்ரம் அப்படி ஆள்மாறாட்டம் செய்து பொண்ணுங்ககிட்ட தப்பா நடக்கிறவரா இருந்தால், என்கிட்டயும் தானே அப்படி நடந்திருக்கணும்? அப்படி எல்லாம் என்கிட்ட அவர் நடந்து கொண்டதில்லையே? அப்புறம் எப்படி அவர் மத்த பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்திருப்பார்?” என்று அவள் பாட்டிற்குப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் கட்டுக்கதை. அந்தச் செல்வராஜ் அரசியல்வாதி கையாள் தானே… அந்த ஆள் நினைச்சா எத்தனை போலி ஆதாரங்களையும் உருவாக்க முடியும். எத்தனை போலியான வீடியோக்களையும் ரெடி செய்ய முடியும். பத்துப் பொண்ணுங்களைக் கூடக் கூட்டிட்டு வந்து பொய் சாட்சி சொல்ல வைக்க முடியும். போலி போலீஸ் கம்பளைண்ட் ரெடி செய்வதா கஷ்டம்? எதையோ அவங்களா ரெடி பண்ணிட்டு வந்து, என் விக்ரமோட கேரக்டரையே அசிங்கப்படுத்துறாங்க. பாவிகள்!” என்று மயூரனை முறைத்துக் கொண்டே, தானாகப் பேசினாள்.

அவள் பேச பேச இப்போது மயூரனுக்கே ஜெயராமன், செல்வராஜ் மீது சந்தேகம் வந்தது. மதுமதி சந்தேகப்படுவது போல் ஜாதிவெறிக்கு விக்ரமை கொன்றுவிட்டு, அவனைக் கெட்டவனாக உருவகப்படுத்த தன்னிடம் கதை சொல்லியிருப்பார்களோ? எனச் சந்தேகம் கொண்டான்.

தான் இன்னும் தீவிரமாக விசாரித்திருக்க வேண்டுமோ? என்ற சிந்தனையில் அவன் இருந்த போது, “என்ன இன்னும் என்ன கதை சொல்லலாம்னு யோசிக்கிறயா?” என்று கோபமாகக் கேட்டாள் மதுமதி.

மயூரன் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அவனுக்கே இப்போது தெளிவில்லாத விஷயத்தைப் பேசி என்ன ஆகப் போகிறது? என்ற அமைதி அவனிடம்.

ஆனால், கெட்டதிலும் நல்லது போல் மதுமதி அப்படி எல்லாம் இல்லை என்ற ஆசுவாசம் வந்தது. அவளின் காதலில் கண்ணியம் மீறவில்லை என்பதைக் கேட்க மனம் நிம்மதியடைந்தது.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“நீ என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. ஏன்னா என் விக்ரம் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். அவர் அதிர்ந்து கூடப் பேச மாட்டார். யாருக்கும் கெட்டது கூட நினைச்சதில்லை. அது மட்டுமா? அவர் எவ்வளவு நல்லது பண்ணியிருக்கார் தெரியுமா? அவருக்கு ரொம்ப இரக்க சுபாவம். யாரும் உதவி கேட்டால் முடியாதுனு சொன்னதே கிடையாது. இன்னும் இன்னும் அவர் பத்தி சொல்லிட்டே போகலாம். அப்படிப்பட்டவரை போய்க் கொன்னு… அதுவும் என்னால் அவர் செத்தார்னு நினைக்கும் போது… நான் ஏன் இன்னும் இந்தப் பூமியில் வாழுறேன்னு இருக்கு…” என்ற மதுமதி தரையில் அமர்ந்து உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அவளின் அழுகையைப் பார்த்து மயூரனின் மனமும் கலங்க, எழுந்து அவளின் அருகில் சென்றவன், கால்களைக் கட்டிக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்து அழுது கொண்டிருந்தவளின் தலையில் கைவைத்து வருடிவிட்டான்.

பட்டென்று நிமிர்ந்து அவனின் கையைத் தட்டிவிட்டாள் மதுமதி.

“என்னைத் தொடாதே! என்னைத் தொடுவதற்கு உனக்கு எந்த அருகதையும் கிடையாது. கொலைக்காரப் பாவி… ஏன்டா என் விக்ரமை கொன்னீங்க?” என்று ஆத்திரமும் ஆதங்கமுமாகக் கேட்டாள்.

அவளின் எதிரே மண்டியிட்டு அமர்ந்தவன், “நான் அவனைக் கொல்லலைடி தங்கப்பொண்ணு. உன் மீது எனக்குக் காதல்தான். உன்னை அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறளவுக்கு உன்மேல் எனக்குப் பொசசிவ்னஸ் இருக்குத்தான். ஆனால், விக்ரம்தான் உன் மனதில் இருக்கான்னு தெரிந்த பிறகும் அவனைக் கொன்னு உன்னை அபகரிச்சுக்கணும்னு நினைக்கிறளவு நான் கொடூரமானவன் இல்லைடி. நீ அவன் கூட வாழணும்னு தான் நினைச்சேன். ஆனால், இப்படி ஆகும்னு நானே எதிர்பார்க்கலைடி…” என்றான் மென்மையாக.

“இதை என்னை நம்பச் சொல்றீயா?” என்று வெடுக்கென்று கேட்டாள்.

“நீ நம்பலைனாலும் இதுதான் நிஜம்!”

“அப்ப நீ என் விக்ரமை கொல்லலையா?” சந்தேகம் தீராமலே கேட்டாள்.

“ம்கூம்!” என்றவன் மறுப்பாகத் தலையை அசைத்தான்.

அப்படியும் அவனைச் சந்தேகத்துடன் தான் பார்த்தாள் மதுமதி.

அவளுக்குத் தன்னை எப்படிப் புரியவைப்பது என இப்போது மயூரனுக்கும் தெரியவில்லை.

முதலில் என்ன நடந்தது என, தான் விசாரித்தறிய வேண்டும் என்று தனக்குள் அப்போதே தீர்மானமாக முடிவு செய்துகொண்டான் மயூரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com