10.1 – நீங்காத பந்தமொன்று

👁️ 130 Views

அத்தியாயம் – 10.1

“சசி… எங்க இருக்கீங்க? சசி…” என்று அழைத்துக் கொண்டே நள்ளிரவு நேரத்தில் பதறியபடி தேடி வந்தாள் மஞ்சரி.

“மஞ்சு… என் மஞ்சுக்குட்டி… வந்துட்டியாடி? நான் இங்கே இருக்கேன், வா…” என்று சசிதரன் அழைக்க, குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள்.

அப்போது பளிச்சென்று ஒரு மின்னல் வெட்ட, அவ்வெளிச்சத்தில் சசிதரன் நின்றிருந்த இடத்தைக் கண்டவளுக்குக் குலை நடுங்கிப் போனது.

மலைச்சரிவின் நுனியில் நின்று போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தான் அவன்.

“சசி…” என்று கத்தியபடி அருகில் சென்றவள், “வாங்க… இந்தப் பக்கம் வாங்க. விழுந்துடாதீங்க…” என்று அவனைக் கையை நீட்டி அழைத்தாள்.

“நான் வர மாட்டேன். நான் ஏன் வரணும்? நீ தானேடி என்னை விட்டு தள்ளித் தள்ளிப் போன? நீதான் என் பக்கத்தில் வரணும். வாடி இங்க…” என்று அவன் கைகள் இரண்டையும் விரித்து அழைக்க, போதையின் வீரியத்தில் அவனின் கால்கள் வலுவில்லாமல் நடுங்க, நிதானம் இழந்து பின்னால் அப்படியே சாயப் போனான்.‌

“சசி…” என்று கத்திய மஞ்சரி வேகமாக அவனை நெருங்கி நீட்டியிருந்த அவனின் கையைப் பிடித்துத் தன் பக்கம் பலம் கொண்டு இழுத்தாள்.

தள்ளாடியபடி அவளின் மேல் வந்து மோதினான் சசிதரன்.

“வாங்க… இந்தப் பக்கம் வாங்க போயிடலாம்…” என்று படபடத்த நெஞ்சத்தோடு மஞ்சரி அவனை அழைக்க,

“வரமாட்டேன்டி.‌ நான் ஏன்டி வரணும்? இப்ப மட்டும் நீ எதுக்குடி இங்கே வந்த? ‌என்னை திரும்பி கூடப் பார்க்காம போனயேடி. இப்ப மட்டும் என்னவாம்? நான் செத்தா சாகட்டும்னு விட வேண்டியது தானே?” என்று கோபத்துடன் கேட்டான்.

“ஐயோ… குடிச்சுட்டு வந்து என்ன இது ஆர்ப்பாட்டம் சசி? நீங்க முதலில் இந்தப் பக்கம் வாங்க. இந்த இடத்தில் நிற்காதீங்க. நாம பேசலாம். எல்லாம் பேசலாம்…” என்று வற்புறுத்தி மஞ்சரி அழைக்க,

“ஏன் நிக்கக் கூடாது? நான் இங்கதான் நிற்பேன். உனக்கு என் கூட நிக்கப் பிடிக்கலைன்னா போயிடு. நானும் இப்படியே போயிடுறேன்…” என்றவன் அவளின் பிடியை உதறிவிட்டு மீண்டும் மலைச்சரிவின் பக்கம் சென்றான்.

“சசி… சசி… வேணாம்… இங்கே வாங்க…” என்று மீண்டும் அவனைத் தன் பக்கம் போராடி இழுத்து வந்தாள்.

“இப்ப எதுக்குடி என்னை நீ சசி சொல்ற? தரு கண்ணா… தரு கண்ணான்னு கொஞ்சுவியே… அதெல்லாம் என்னாச்சு? அப்ப என்னைக் கழட்டி விட முடிவு பண்ணிட்ட. அதான் தரு கண்ணான்னு சொல்லாம சசின்னு சொல்ற, அப்படித்தானே?” என்று குதர்க்கமாகக் கேட்டான்.

“ஐயோ… எல்லாமே ஏன் தப்புத் தப்பா புரிந்து வைச்சிருக்கீங்க? நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை ச… தரு…” அவனுக்குப் புரிய வைக்க முடியாமல் தவித்தாள்.

“பொய் சொல்லாதேடி!” என்று அவன் கத்த, அதே நேரம் இடியொன்று முழங்கியது.

வானம் மப்பும் மந்தாரமாக எப்போது வேண்டுமானாலும் மழை பொழிவது போல்தான் இருந்தது. இடியும் மின்னலும் தங்கள் வேலையைக் கச்சிதமாகக் காட்டிக் கொண்டிருந்தன.

“மழை வர்ற மாதிரி இருக்கு தரு. அதுவும் இந்த நைட் நேரத்தில் நாம தனியா இங்க நிக்க வேணாம். யாராவது பார்த்தா பிரச்சினையாகிடும். இங்கிருந்து போகலாம், வாங்க. எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்…” என்றாள் மஞ்சரி.

“மழை வரட்டும். யாராவது வரட்டும். அதைப் பத்தி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. நீ ஏன்டி என்னைக் கண்டுக்காம‌ போன? அதுக்குப் பதில் சொல்லுடி முதலில்…” என்று நாக்கை மடித்துக் கடித்தபடி கோபமாக‌ கேட்டான்.

“ஹய்யோ… உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பேன்…” என்று அரற்றினாள் மஞ்சரி.

ஜீவன் பற்றித் தெரிந்தால் நிதானத்தில் இருந்தாலே இவனைக் கட்டுப்படுத்த முடியாது எனும் போது, இப்போது போதையில் இருக்கும் போது அவனைப் பற்றிச் சொல்லி, இவன் நிதானம் இல்லாமல் இப்போதே எல்லாரின் முன்பும் ஏதாவது கலாட்டா செய்துவிட்டால் என்ன செய்வது எனப் பயந்தாள்.

“புரியாம போறளவுக்கு நான் என்ன முட்டாளாடி?” என்று அவளின் தோளை பிடித்து உலுக்கினான்.

“நான் எப்போ அப்படிச் சொன்னேன்? இப்ப நீங்க நிதானத்திலேயே இல்லை. நான் என்ன பேசினாலும் உங்களுக்குத் தப்பாத்தான் தெரியும். நாம காலையில் பேசலாம். அப்போ எல்லாம் சொல்றேன்…”

“அப்போ ஏதோ காரணமாத்தான் என்னை விட்டு தள்ளி போற? அந்தக் காரணம் என்ன? நான் சொன்ன மாதிரி என்னைக் கழட்டிவிடும் காரணம் தானே?” அவனாக ஒன்றை நினைத்துக் கேட்க, அவளுக்கு, ‘ஐயோ’ என்று இருந்தது.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை தரு. நான் ஏன் அப்படித் தள்ளிப் போனேனா… அதுக்குக் காரணம் அந்த ஜீ…” படீர் என்று அவர்களின் அருகிலேயே இடி விழுவது போலச் சத்தம் கேட்க, சட்டென்று பேச்சை நிறுத்தி பயந்து நடுங்கி தன் காதுகளை கைகளால் பொத்திக் கொண்டாள் மஞ்சரி.

சசிதரனுக்கு அவள் ஜீவன் என்று ஆரம்பித்தது கேட்கவில்லை. அவனும் இடி சத்தத்தில் நொடி பொழுது மிரண்டுதான் போனான். அதைவிட, மஞ்சரி நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவன், அவளை வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டு, “பயப்படாதேடி! பயப்படாதே!” என்று அவன் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, படபடவெனப் பொழிய ஆரம்பித்தது மழை.

அதில் சுதாரித்த மஞ்சரி, அவனை விட்டு விலக, “எங்கேடி போற? இங்கே வா?” என்று அவளின் தோளை சுற்றி கையை அணைவாகப் போட்டு சற்றுமுன் குடிக்கச் சென்ற குடில் பக்கம் அவளை அழைத்துப் போனான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அங்கே மின்மினி பூச்சி போல் சின்னதாக ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

“ரூமுக்கு இந்தப் பக்கம் போகணும் தரு. இங்கே வாங்க…” என்று அவள் ஹோம்ஸ்டேவை நோக்கி அழைத்ததெல்லாம் அவனின் காதிலேயே ஏறவில்லை.

தள்ளாடியபடியே அவளைத் தன் இஷ்டத்திற்குத்தான் இழுத்துச் சென்றான்.

“தரு… தரு… என்னை விடுங்க…” என்று தன் தோளில் கிடந்த அவனின் கையை எடுக்க அவள் முயல, இன்னும் இறுக்கமாகத்தான் பிடித்தான் அவன். அவனின் முரட்டுப்பிடியிலிருந்து அவளால் தன்னை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை.

அவளுடன் குடிலுக்குள் நுழைந்தவன், “இப்பவும் என்னை விட்டு போறதிலேயே குறியா இருக்கலடி நீ?” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

“அப்படி இல்லைன்னு உங்களுக்கு எத்தனை முறைதான் சொல்வது? சொன்னாலும் புரிந்துகொள்ளும் நிலையில் நீங்க இல்லை. இப்ப எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு வந்தீங்க? பெரிய மழையா வர்றதுக்குள்ள ரூமுக்குப் போகலாம் தரு…” என்று அங்கிருந்து செல்ல பரபரத்தாள்.

“எனக்கு இப்ப ஒரு பதில் தெரியாம நான் எங்கேயும் வர மாட்டேன்…” என்று பிடிவாதம் பிடித்தான்.

“இந்த நைட் நேரத்தில் நீங்க இப்படி ஆர்ப்பாட்டம் செய்வது சரி இல்லை தரு. சொன்னா கேளுங்க. இங்கிருந்து போகலாம்…” என்று நயமாக அழைத்துப் பார்த்தாள்.

போதையிலும் கோபத்திலும் சிவந்திருந்த விழிகளை உருட்டி அவளைப் பார்த்தவன், “போடி! போ… இங்கிருந்து போ. நான் அப்படியே மொத்தமா போயிடுறேன்…” என்று குடிலை விட்டு வெளியே செல்ல போனவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.

“இப்படி எல்லாம் செய்யாதீங்க தரு.‌..” என்றாள் கலங்கியபடி.

அவளின் கலங்கிய கண்களைப் பார்த்தவன் அவளின் பிடியில் இருந்த தன் கையை வெடுக்கென்று பறித்துக் கொண்ட சசிதரன், தள்ளி சென்று சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டவன் தலையைக் குனிந்து தரையையே வெறித்தான்.

சில நொடிகள் கடந்து சென்ற பின்னும் அவன் எதுவும் பேசவில்லை.

மஞ்சரியோ உள்ளேயும் இருக்க முடியாமல், அவனை மட்டும் விட்டு வெளியேவும் செல்ல முடியாமல் இருதலைக்கொள்ளி எரும்பாகத் தவித்துக் கொண்டிருந்தாள்.

இங்கிருந்து போகலாம் என்று அவனிடம் சொல்லவும் இப்போது பயமாக இருந்தது. மீண்டும் மலை சரிவின் பக்கம் ஓடி விடுவானோ என்று அமைதியாக இருந்தாள்.

“ஆமா… இன்னைக்கு அந்த ஜீவன் உங்கிட்ட வந்து என்ன பேசினான்? எதுக்குப் பேசினான்? அவன் ஏன்டி உன்கிட்ட பேசணும்?” என்று கேட்டு அந்த அமைதியை கலைத்து அவனே பேச ஆரம்பித்தான்.‌

“அது… அவன்…” என்று அவள் பதில் சொல்லும் முன்,

“என்ன தைரியம் இருந்தா அவன் உன்கிட்ட வந்து பேசுவான்? நம்ம வழியில் குறுக்கே வராம இருக்கானேன்னு போனா போகுதுன்னு அவனை இத்தனை நாளும் சும்மா விட்டுருந்தால்‌..‌. அவன் உன்கிட்டயே பேச வருவானா? அவனைச் சும்மா விடமாட்டேன்…” என்று ஆவேசமாக எழுந்து வெளியே செல்ல போனான்.

“ஐயோ! என்ன பண்றீங்க? போகாதீங்க இருங்க…” என்று அவனைப் பிடித்து அவள்தான் நிறுத்த வேண்டியதாயிற்று.

“என்னை விடுடி. என் மஞ்சுக்குட்டிடி நீ. உன்கிட்ட அவன் எப்படிப் பேசலாம்? அவனை… இன்னைக்கு…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவளின் பிடியிலிருந்து திமிறினான்.

அவனுள் நன்றாகக் கலந்துவிட்டிருந்த போதை அவனை மொத்தமாக நிதானமிழக்க வைத்திருந்தது. தான் செய்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம் இன்னதென்று புரியாமலே நடந்து கொண்டிருந்தான்.

அவன் இப்படியே வெளியே சென்று சண்டையிட்டால் நடக்கப் போகும் விபரீதத்தை நினைத்து நடுங்கினாள் மஞ்சரி.

இவன் குடித்திருப்பதே பிரச்சினையாகும். அதோடு இவன் ஜீவனிடம் சண்டையிட்டு, அவன் தங்கள் புகைப்படத்தை அனைவரின் முன்பும் காட்டி… என அடுத்தடுத்து என்னவெல்லாம் நடக்கும் எனப் புரிந்ததால், அங்கிருந்து சென்று விடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்த மஞ்சரிக்கு கூட இப்பொழுது அவனை இங்கேயே பிடித்து வைப்பதே தீர்வாகத் தெரிந்தது.

“என்னடி அவனைக் காப்பாத்த ட்ரை பண்றீயா? அப்படி என்னடி பேசினான் உங்கிட்ட?” என்று அதற்கும் அவளைப்‌ பார்த்துச் சீறினான்.

“அவன் என்கிட்ட ஒன்னும் பேசலை. நான் வழியில் நின்றிருந்தால் தள்ளி நிக்கச் சொல்லிட்டு போனான்…” என்று தன் நெஞ்சறிய பொய்யுரைத்தாள்.

“அவ்வளவுதானா?” என்று கீழ் கண்ணால் அவளைப் பார்த்து கேட்டான்.

ஆமோதிப்பாகத் தலையை அசைத்தாள்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com