👁️ 124 Views
அத்தியாயம் – 10.2
“அப்புறம் என்ன இதுக்குடி என்னைக் கண்டுக்காம போன?” என்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தான்.
“நீங்க கேட்பது உங்களுக்கு நியாயமா இருக்கா தரு? நாம காலேஜ் டூர் வந்திருக்கோம். நம்ம மட்டும் தனியா ஹனிமூன் ட்ரிப் வரலை. உங்க கூடவே நான் சுத்துறதுக்கு. சந்தர்ப்ப சூழ்நிலை புரியாம பக்கத்துல வான்னு கூப்பிடுறீங்க. போட்டோ எடுக்கணும்னு கூப்பிடுறீங்க. கூடவே இருந்து பேசிக்கிட்டு இருக்கணுங்கிறீங்க. அப்படி நாம பக்கத்தில் இருக்கும் போது யாரும் பார்த்தா? புரொபசர்ஸ் காதுக்கு விஷயம் போனா என்னாகும்னு யோசிச்சீங்களா? எதையும் யோசிக்காம… என்ன பேச்சு இது?” என்று பொறுக்க முடியாமல் அதட்டினாள் மஞ்சரி.
“நீ யோசிக்கிறதை நான் யோசிக்க மாட்டேனா? அப்படியா எல்லாருக்கும் தெரியுற மாதிரி நடந்துப்பேன்?” என்று வியாக்கியானமாகக் கேட்டான்.
‘யோசிச்சிருந்தா அந்த ஜீவன் இப்போ நம்மைப் போட்டோ எடுத்து வச்சு மிரட்டும் நிலையே வந்திருக்காதே’ என்று தனக்குள் மட்டும் நினைத்துக் கொண்டாள் மஞ்சரி.
“இதோ இந்த அர்த்த ராத்திரியில் நாம மட்டும் இங்கே தனியா இருக்கோம். இதுவே தப்பு. உங்களுக்குப் புரியுதா இல்லையா தரு?” என்று ஆதங்கமாகக் கேட்டாள்.
“என்னடி சொன்ன? என் கூட இருந்தால் தப்பா? தப்பா? நான் யாருடி உனக்கு? சொல்லு நான் யாரு?” என்று அவளை அடிக்கப் போவது போல் வந்து ஆவேசமாகக் கேட்டான்.
“தரு…” என்றபடி மிரண்டு பின்னால் சென்றாள்.
அவளின் இரண்டு தோள்களையும் கையால் பிடித்து அழுத்தி பிடித்தவன், “சொல்லுடி, நான் உனக்கு யாரு?” என்று கோபமாகக் கேட்டான்.
“தரு… கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க. ப்ளீஸ்! நீங்க இப்படிக் கோபப்படுவது சரியில்லை…” என்று அப்போதும் மஞ்சரி சொல்லிப் பார்க்க, அவன்தான் எதையும் கேட்கும் நிலையிலேயே இல்லையே.
“என்னடி சரியில்லை? என்ன சரியில்லை? நான் என்ன பேசினாலும் உனக்குத் தப்பா தெரியுது. என்னோட நியாயமான ஆசை கூட உனக்குத் தப்பா தெரியுது அப்ப என்னைக் கழட்டி விட முடிவு பண்ணிட்ட…” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.
“அப்படி இல்லை… இல்லை… நான் நினைக்காத ஒன்னை நினைச்சதா சொல்லாதீங்க தரு…”
“அப்போ நீ என்னைக் கழட்டி விட நினைக்கலை?”
“இல்லை…”
“அப்போ ப்ரூஃப் பண்ணி காட்டு!”
“என்ன? எதை ப்ரூஃப் பண்ணனும்?”
“என்னை விட்டு எப்பவுமே நீ போக மாட்டன்னு ப்ரூஃப் செய்து காட்டு!”
“அப்போ என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”
“நம்பிக்கை பத்தி எல்லாம் பேசாதே! இப்ப வரை நான் உன்னை நம்பத்தான் செய்றேன். ஆனா… ஆனாலும்… பயமா இருக்கு!”
“பயமா? எதுக்கு?”
“ஒரு டூர் வந்த இடத்திலேயே என்னை இப்படி யாரோ போலத் தள்ளி நிறுத்துற. நாளைப்பின்ன உன் அப்பா அம்மா இவனை மறந்துடு! இவன் வேண்டாம். இவனைக் கல்யாணம் பண்ணிக்காதேன்னு சொன்னால், அவங்க பேச்சை கேட்டுட்டு நீ என்னை விட்டு போயிருவ…”
“நீங்களா கற்பனை செய்றதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது தரு…” என்றாள் கண்டிப்புடன்.
“யார்? நான் கற்பனை பண்ணிக்கிறேனா? அப்படிப் பார்த்தா எனக்கு அப்படிக் கற்பனை உருவாக வச்சவளே நீதான்டி…” என்று குற்றம் சாட்டினான்.
“நீங்க என்னைக் குறை சொல்லணும்னு நினைச்சுட்டே பேசுறீங்க? நீங்க மட்டும் இல்லை. உங்க புத்தியும் இப்ப நிதானமா இல்லை. நாம காலையில் பேசலாம். இப்ப இங்கிருந்து கிளம்புங்க…” என்று மஞ்சரி சொல்ல, அவனோ வர மாட்டேன் என்றான்.
அப்போது தான் இங்கிருந்து செல்வதாகச் சொன்ன மஞ்சரி வெளியே செல்ல, அவளின் கையைப் பிடித்துத் தடுத்தவன், “இப்ப நீ என்னை விட்டு போனா... அப்புறம் எப்பவுமே என்னைப் பார்க்க முடியாதுடி…” என்றான்.
“சும்மா மிரட்டாதீங்க தரு…” என்றாள் கோபமாக. அவளுக்கு இந்தச் சூழலே அத்துணை அழுத்தத்தைத் தந்தது. அவன் தெளிவாக இருந்தால் கூட, பேசி புரிய வைக்கலாம். ஆனால், போதையில் பேசியதையே பேசிக் கொண்டிருந்தவனுக்கு எப்படிப் புரிய வைப்பது என்றே அவளுக்குப் புரியவில்லை.
அதோடு தோழிகளுக்குத் தெரியாமல் இங்கே வந்திருந்தாள். அவர்கள் யாராவது விழித்துத் தன்னைத் தேடினால் என்னாகும் என்ற பதற்றம் வேறு அவளுக்கு இருந்தது.
அவளின் மனநிலை எல்லாம் அவனுக்குப் புரியவில்லை. புரியும் நிலையிலும் அவன் இல்லை.
“சும்மா மிரட்டுறேனா?” என்று தானும் கோபத்தில் எகிறியவன், குடிலிலிருந்து அவளை வெளியே அழைத்து வந்தான்.
“நீ உன் ரூமுக்கு போடி…” என்று அடித்து ஊற்றிக் கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் அவளை ஹோம்ஸ்டே பக்கம் தோளில் கை வைத்து தள்ளிவிட்டவன், தான் மலைச்சரிவை நோக்கி சென்றான்.
அவன் தள்ளிவிட்டதில் தடுமாறி சுதாரித்து நின்ற மஞ்சரி அவன் சென்று கொண்டிருக்கும் திசையைப் பார்த்து திடுக்கிட்டு அவனை நோக்கி ஓடினாள்.
அவள் ஓடிய வேகத்தில் அந்த ஈரமான மண் தரை அவளை வழுக்கிவிட, “தரு…” என்று அலறிக் கொண்டே மட்டமல்லாக்கில் விழுந்தாள்.
அவளின் சத்தத்தில் திரும்பி பார்த்தவன், அவள் விழுந்து கிடப்பதை பார்த்து, “மஞ்சுக்குட்டி….” என்றபடி ஓடி வந்தவனையும் தரை வாரிவிட, அவளின் மேலேயே வந்து விழுந்தான்.
“ஆ… அம்மா…” என்று பாரம் தாங்காமல் அவள் கத்திய சத்தம் இடியோசையோடு கரைந்து போனது.
அவளைத் தூக்குவதாக நினைத்து அவளோடு புரண்டு எழ முடியாமல் தடுமாறினான் சசிதரன்.
“விடுங்க… விடுங்க… நானே எழுந்திக்கிறேன்…” என்று அவனை விலக்கிவிட்டு தான் முதலில் எழுந்த மஞ்சரி, இன்னும் சகதியில் புரண்டு கொண்டிருந்தவனுக்குக் கை கொடுத்து தூக்கிவிட்டாள்.
மீண்டும் வழுக்கி மண் தரையில் நிற்க முடியாமல் தடுமாறியவன், “மஞ்சுக்குட்டி, உனக்கு எதுவும் அடி படலையேடி?” என்றபடி அவளின் தோள், முகம், கை, உடலை எல்லாம் தடவி பரிசோதித்தான்.
அவனின் தொடுகை கூச்சத்தைத் தர, “எனக்கு ஒன்னும் இல்லை விடுங்க…” என அவனை விட்டு விலகி நின்றவள், “நாம முதலில் இங்கிருந்து போயிடலாம் தரு. ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சலாக.
“ம்கூம்… நான் வர மாட்டேன்…” என்று மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தான் அந்தப் போதை தலைக்கேறியவன்.
இருவரும் மழையில் தொப்பலாக நனைந்து உடலில் சேறு சகதி எல்லாம் ஒட்டி அலங்கோலமாகியிருந்தனர்.
“மழையில் நனையுற பாரு மஞ்சுக் குட்டி. வா… வா… மழையில் நனையாம உள்ள போயிடலாம்…” என அவளின் கையைப் பிடித்து மீண்டும் குடிலுக்குள்ளேயே அழைத்து வந்தான்.
அவனோடு அதற்குமேல் அவளால் போராட முடியவில்லை. உள்ளே வந்தவள் அமைதியாகக் கைகளை மார்பின் குறுக்கே ஓரமாகச் சென்று நின்றுவிட்டாள். அவனும் சற்று தள்ளி அவளைப் போலவே நின்றிருந்தான்.
சில நொடிகள் அமைதியாக இருந்த சசிதரன் “மஞ்சுக்குட்டி… மஞ்சு…” என்று மெல்ல அழைத்தான்.
மழையில் நனைந்திருந்தாலும் அவனின் ரத்தத்தோடு கலந்திருந்த போதை உடனே எல்லாம் தெளிவை தந்திருக்கவில்லை. இன்னும் அவனின் குரலில் குழறலும், உடலில் தள்ளாட்டமும், புத்தி நிதானமில்லாத தன்மையோடும் தான் இருந்தான்.
அவள் திரும்பிப் பார்க்க, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி நின்றிருந்தவன், பற்கள் தந்தியடிக்கக் கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தான்.
“ரொம்பக் குளிருதுடி…” என்றபடி அவளை உரசியபடி வந்து நின்றான்.
அவளுக்கும் கூட குளிரவே செய்தது.
“அதுக்கு என்ன செய்யச் சொல்றீங்க? தள்ளிப் போய் நில்லுங்க…” என்றவளே சற்று விலகி நின்றாள்.
“என்னை விட்டு போறதிலேயே குறியா இருக்காதேடி!” என்று சட்டென்று கோபப்பட்டவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“சசி… என்ன பண்றீங்க விடுங்க?” என்று அவள் திமிர,
“குளிர் தாங்கலைடி மஞ்சுக்குட்டி கொஞ்ச நேரம். வேற எதுவும் பண்ண மாட்டேன்…” என்று முனகினான்.
அவளுக்கும் குளிர் உடலை ஊடுருவி பற்களை நடுங்க வைக்க, அவனை விலக்க நினைத்தாலும் அவளால் முடியவில்லை.
இருவரின் உடைகளும் தொப்பலாக நனைந்து உடலோடு ஒட்டியிருக்க, லேசாக மட்டுமே அணைக்க ஆரம்பித்தவனின் கரம் அவளைச் சுற்றி வளைத்து தன்னோடு இறுக்கியது. அவனின் மூச்சுக் காற்றிலிருந்து வெளியேறிய உஷ்ணம் அவளின் கழுத்தில் சூடாகப் பதிய, அந்தக் குளிருக்கு அவளுக்கு அது இதத்தையே தந்தது.
ஆனாலும், தாங்கள் இருக்கும் நிலை அவளை எச்சரிக்கை செய்ய, “வேணாம் தரு…” என்று அவனைத் தன்னிடமிருந்து விலக்க முயன்றாள்.
“எனக்கு வேணும்டி. குளிரில் நடுங்கியே செத்துப் போயிருவேன் போல. உனக்கும் குளிருதானே? ஹக் மட்டும்தான்…” என்று குழறலாகச் சொன்னவன், தங்களுக்கு இடையேயான நெருக்கத்தைக் கூட்டினான்.
அந்த இறுக்கம் விபரீதமாகத் தோன்ற, “இல்லை… வேணாம் விடுங்க…” என்று தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தன்னிடமிருந்து பிரிக்க முயன்றாள்.
அவனுக்கோ இப்போது போதையுடன் குளிரும் சேர, அவனுக்கு அவள் உடலின் உஷ்ணம் தேவையாக இருந்தது.
தன்னை விலக்க முயன்றவளை விடாமல் அணைத்தவன் உதடுகள், அவளின் இதழ்களை ஸ்பரிசிக்க ஆரம்பித்தன.
“த…ரு…” என்ற அவளின் முனகல் அவனுக்குள் அடைக்கலமானது.
அவளின் இதழ்களைக் கவர்ந்தவனின் கைகள் அவளின் உடலில் அத்துமீற ஆரம்பித்தன. “தரு… விடுங்க… ப்ளீஸ் விடுங்க…” சற்று சுதாரித்த மஞ்சரி அவனைத் தன்னை விட்டு விலக்க முயற்சி செய்தாள்.
“மஞ்சு… மஞ்சுக்குட்டி… என்னை விட்டு தள்ளிப் போகாதேடி! என்னை விட்டு நீ போனா நான் தாங்க மாட்டேன்டி. புரியுதா உனக்கு?” என்று போதை மயக்கத்தில் குழறலாகச் சொன்ன சசிதரன், தன்னை விட்டு விலகிச் சென்றவளை இழுத்து மீண்டும் அவளின் இதழ்களைத் தன் அதரங்களால் அணைத்தான்.
அவனின் செய்கையில் ஒருவித முரட்டுத்தனமும் கலந்திருந்தது. ஆரம்பத்தில் அவனது முரட்டுத்தனமான பிடிவாதத்திற்குத் திமிறிய மஞ்சரியின் உடல், அவனது இதழ்களின் ஆழமான தீண்டலில் மெல்லத் தன் வீரியத்தை இழந்தது. அந்தக் குளிர் பிரதேசத்தில் மழையில் நனைந்ததால் உடலில் ஏறிய நடுக்கத்திற்கு அந்தத் தீண்டலின் உஷ்ணம் தேவையாக இருந்தது.
அறிவு விலகு என்று சொன்னாலும், அவளின் உடல் அவள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. நடுக்கத்தில் இன்னும் அவனோடு ஒட்டிக்கொள்ளவே முயன்றது. ஈர உடை குளிரை கூட்டுவது போலிருக்க, அதற்கு விடுதலை கொடுக்க ஆரம்பித்தான் சசிதரன்.
உள்ளத்தின் ஆர்ப்பரிப்பை மீறி எழுந்த உணர்வுகளின் அலைக்கழிப்புச் சுயத்தில் இருந்த மஞ்சரியையே தாக்கிய போது, இன்னும் போதை உணர்வில் இருந்தவனைத் தாக்காமல் இருக்குமா என்ன?
அறிவு விழித்துக்கொள்ளும் போதெல்லாம் மஞ்சரி காட்டிய எதிர்ப்பையும், மதுவுக்கு அடிமையாகி இருந்தவன் மாதுவை அடக்கியே முறியடித்தான். அவனுக்குள் இருந்த ஆதிக்கக் காதலும், அவளை இழந்துவிடுவோமோ என்ற போதை தந்த பயமும் அவனது கரங்களுக்கு அசுர பலத்தைத் தந்திருந்தன.
மூணாரின் அந்த நள்ளிரவுக் கொடூரக் குளிரும், நனைந்த உடலின் ஜில்லிப்பும் அவர்களின் காதலின் வெம்மையில் சூடாகிப் போயின. அந்த அர்த்த ராத்திரியின் நிசப்தத்தில், சுற்றிலும் கொட்டும் மழையின் பேரிரைச்சலுக்கு நடுவே, இரு உடல்களின் உஷ்ணமும் ஒன்றையொன்று தேடித் தவித்தன.
அவள் தன்னை விட்டு விலகி சென்று விடக் கூடாது என்று இன்னும் இன்னும் நெருக்கத்தைக் கூட்டினான். அவனது முரட்டுத்தனமான, அதே சமயம் தவிப்பான அந்தத் தழுவலுக்கு அவளும் மெல்ல மெல்லத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள்.
வெளியில் கொட்டும் பேய் மழையின் சத்தமும், இடியோசையும் அவர்களின் காதுகளுக்கு எட்டவே இல்லை. சகல கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் உடைத்துக் கொண்டு இருவரின் காதலும் அந்த இருண்ட குடிலுக்குள் தாம்பத்தியத்தில் சங்கமித்தது.
விதியும் இயற்கையும் ஒன்று சேர்ந்து, அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான, திருப்பங்கள் நிறைந்த புதிய பக்கத்தை அங்கே எழுதி முடித்திருந்தது!
இந்தக் கதை பிளாஷ்பேக் ஆரம்பிச்சதிலிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை மக்களே… அதனாலேயே எபிசோட் போடும் ஆர்வமே எனக்கு வரலை. ஆனா… நான் கதையை போடும்போது கண்டுக்காம அமைதியா இருந்துட்டு, நிறுத்தி வச்சதும் எபி கேட்டு மெசேஜ் வருது. இதை நான் எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியலை. இப்போதும் ஒரு டெஸ்ட்க்குத்தான் போஸ்ட் பண்றேன். இந்த எபிக்கு ரெஸ்பான்ஸ் வந்தால் மட்டுமே அடுத்த எபி வரும். இல்லைனா வராது மக்களே… மாமியார் மாமனார் பிரச்சினை வந்தால்தான் நாங்க கமெண்ட் போடுவோம். மத்ததை கண்டுக்க மாட்டோம்னா. அப்புறம் மத்த சீன் எல்லாம் எதுக்குடா எழுதுறோம்னு சோர்வு வருது. அடுத்த எபி வருமா… இல்லை, கதையை நிறுத்தி வைப்பதான்னு இந்த எபிக்கு வரும் ரெஸ்பான்ஸ் பொறுத்து மக்களே…
©nandhavanamnovels.com