11.1 – நீங்காத பந்தமொன்று

👁️ 226 Views

அத்தியாயம் – 11.1

“ஹேய்… மஞ்சு… மஞ்சரி…” என்று திவ்யா உலுக்கியதில், “ஹான்…” எனத் திடுக்கிட்டு அவளின் புறம் திரும்பினாள் மஞ்சரி.

“ரெஸ்ட்ரூம் போகப் பஸ்ஸை நிறுத்தியிருக்காங்க மஞ்சு. வர்றீயா, போயிட்டு வரலாம்?” என்று திவ்யா கேட்க,

“இல்லை, நீ போயிட்டு வா…” என்றாள் மஞ்சரி.

அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்த திவ்யா,‌ “என்னடி கண்ணெல்லாம் இப்படி வீங்கியிருக்கு? உனக்குத் தலை வலிச்சா இப்படிக் கண்ணு வீங்குமா என்ன?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் இல்லை…”

“உன் முகம் கூட வீங்கியது போல இருக்கு மஞ்சரி. காய்ச்சல் எதுவும் அடிக்கிதா?” என்று அவளின் நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.

அவளின் உடலில் சூடு தெரிய, “ஹேய், காய்ச்சல் அடிக்கிது மஞ்சு. என்னடா காலையிலிருந்து உன் முகம் எப்படியோ இருக்குன்னு நினைச்சேன். அலைச்சலும், குளிரும் உனக்குச் சேரலை போலிருக்கே…” என்ற திவ்யா, “நீ கீழே இறங்கி வா. ஒரு பால் வாங்கிக் குடி. என்கிட்ட காய்ச்சல் மாத்திரை இருக்கு. எமர்ஜென்சிக்கு எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துட்டு வந்தது எவ்வளவு நல்லதா போச்சு பாரு…” என்றபடி வரவில்லை என்றவளை கட்டாயப்படுத்தி அழைத்துப் போனாள்.

தேநீர் கடையில் அவளுக்குப் பால் வாங்கிக் கொடுத்தாள் திவ்யா. ஆனால், மஞ்சரிக்கு ஒரு சொட்டு கூட அருந்த முடியவில்லை. அவளுக்குத் தொண்டை எல்லாம் அடைத்துக் கொண்டது போல இருந்தது.

அவளுக்கு முந்தைய நாள் இரவு நடந்ததே போட்டு உலுக்கிக் கொண்டிருந்தது.

தானா? தானா அப்படி நடந்து கொண்டோம்? என்ற கேள்விக்கு அவளுக்கு இப்போது வரை பதில் சொல்ல தெரியவில்லை.

அவன்தான் போதையில் இருந்தான். தானும் ஏன் அப்படி நிதானம் இழந்து போனோம்? என்று தனக்குள்ளேயே கேட்டு மறுகி‌னாள் மஞ்சரி.

இரவு, மழை, குளிர், தனிமை, தன் காதலன் தானே என்று ஏதேதோ சமாதானம் சொல்ல முயன்றாலும், அவளாலேயே அந்தச் சமாதானத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உணர்வுகளின் சதிராட்டத்திலிருந்து அவளால் அந்த நேரம் தப்ப முடியவில்லை என்பதே உண்மை. இளமையின் வேகம், தன்னவனின் தொடுகை, மூன்று நாள்களாக அவளுக்குள் நடந்து கொண்டிருந்த மனப்போராட்டம் எல்லாமுமே கூடக் காரணம் என்றும் சொல்லலாம்.

ஆனால் என்ன காரணம் சொன்னாலும், தான் நிதானம் இழந்திருக்கக் கூடாது என்பதே மஞ்சரிக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.‌

இரவு இருவரும் அப்படியே கண்ணசந்திருந்தனர்.

திடீரென ஒரு இடி சத்தம் கேட்க, அதில் பதறி எழுந்தாள் மஞ்சரி. தாங்கள் இருந்த நிலையை அந்த மெல்லிய வெளிச்சத்தில் உணர்ந்தவள் உடலும் உள்ளமும் ஆடித்தான் போயின. அவளின் கண்கள் தன்னால் கலங்க ஆரம்பித்தன.

வேகமாகத் தன் உடைகளை எடுத்து அணிந்தவள், இன்னும் உறக்கத்தில் இருந்த சசிதரனை எழுப்பினாள்.

“மஞ்சுக்குட்டி…” என்று தூக்கத்தில் உளறியபடி மீண்டும் அவளைத் தன்னிடம் இழுக்க முயன்றான்.

“ஐயோ! எழுந்திருங்களேன்…” என்று கதறலாக அழைத்தாள்.

அதில் கண்விழித்து எழுந்தான். இப்போது போதையின் வீரியம் குறைந்திருந்தாலும், தலை பாரமாகக் கனத்தது.

“உங்க ட்ரெஸை முதலில் போடுங்க…” என்று வேறு பக்கம் திரும்பி கொண்டு அவனின் உடையை எடுத்து அவன் மீது போட்டான்.

அப்போதுதான் தான் இருந்த நிலையைப் பார்த்து மிரண்டு போனான் சசிதரன். போதையில் ஏதேதோ மங்கலாக நினைவு வர, ‘ஐயோ! என்ன செய்து வைத்திருக்கிறோம்’ என அவனும் பதறித்தான் போனான்.

“இங்கிருந்து போயிடுவோம்னு எவ்வளவு சொன்னேன் கேட்டீங்களா தரு? இப்ப பாருங்க… நீங்க தான் போதையில் என்ன செய்றோம்னு தெரியாமல் செய்தீங்கனா… நானும் இப்படி அசிங்கமா… அய்யோ! தப்புப் பண்ணிட்டேனே…” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் மஞ்சரி.

சசிதரனும் தன் செயலை எதிர்பாராமல் வருந்திக் கொண்டுதான் இருந்தான். ஆனால், அவள் ‘அசிங்கமாகத் தப்பு பண்ணிட்டேனே’ என்று சொல்லி அழுததும், சட்டென்று மூண்ட கோபத்துடன், “போதும் நிறுத்துடி!” என்று அதட்டினான்.

உடையை மாற்றிவிட்டு அவளின் எதிரே வந்தவன், “அசிங்கமாவா? என்ன அசிங்கம்?” என்று கோபத்துடன் கேட்டான்.

“நாம தப்பு பண்ணிட்டோம் தரு. உங்களுக்குப் புரியுதா இல்லையா?” என்று அவளும் கோபம் துளிர்க்க கேட்டாள்.

“ஆமாதான். நானும் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை. அதுக்காக அசிங்கம்னு சொல்லுவியா? நாம லவ்வர்ஸ்டி. நாமதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அப்படி இருக்கும் போது ஏதோ நிதானம் இல்லாம அவசரப்பட்டுட்டோம். அவசரப்பட்டது வேணா தப்பா இருக்கலாம். ஆனா… நமக்குள் நடந்தது அசிங்கம் இல்லைடி. இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே!” என்றான் கண்டிப்புடன்.

இவன் என்ன இப்படிச் சாதாரணமாகப் பேசுகிறான்? என்று அதிர்ந்தாள் மஞ்சரி.

“உங்களுக்கு இது சாதாரண விஷயமா தெரியுதா தரு?” என்று கலக்கத்துடன் கேட்கவும் செய்தாள்.

“அப்படி நினைக்கலைதான். ஆனால் நடந்துருச்சு. நடந்து முடிந்ததை மாத்த முடியாது இல்லையா? அப்ப அடுத்து என்னன்னு பார்க்கிறதை விட்டுட்டு அசிங்கம் அது இதுன்னு சொல்வது சரியில்லை மஞ்சரி…” என்றான்.

“இன்னும் என்ன பார்க்க போறீங்க? என்னை இங்க வர வைக்க மிரட்டி கலாட்டா பண்ணி இப்படி ஒரு நிலைக்குக் கொண்டுவந்து விட்டுட்டீங்க. அதுவும் குடிப்பழக்கம் வேற? என்ன தரு இது?”

“எல்லாத்துக்கும் காரணம் நீதான். நீயேன்டி என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காம போன?” என்று இப்போதும் அதையே ஆரம்பித்தவனைச் சலிப்புடன் பார்த்தவள் தன்னை மீறி வெளியேறிய கண்ணீர் துளிகளைத் துடைத்துக் கொண்டு குடிலை விட்டு வெளியேறினாள்.

“ஏய், மஞ்சு… இருடி நானும் வர்றேன்…” என்று சசிதரனும் அவளின் பின்னால் சென்றான்.

இன்னும் விடிந்திருக்கவில்லை. மழையினால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்க, இருவரும் அவரவர் இடத்திற்குச் சென்றுவிட்டனர்.

ஆனால் அதன்பின் மஞ்சரி நடந்ததையே நினைத்து நினைத்து மனத்தால் நொந்து போனாள். அன்றைய பகல் நேர சுற்றுலா பொழுதுகளில் சோர்வுடன் நடமாடினாள். காரணம் கேட்ட தோழிகளிடம் தலைவலி என்று சொல்லி சமாளித்து வைத்தாள்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அவள் அப்படி இருப்பதைப் பார்த்து சசிதரனுக்குத் தவிப்பாகவும் இருந்தது. தெரியாமல் நடந்துவிட்டது இதற்கு ஏன் இப்படி இருக்க வேண்டும் என்று கோபமாகவும் இருந்தது.

தாங்கள் காதலர்கள் தானே! ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இணைந்துவிட்டோம். அதனால் பெரிய தவறொன்றும் இல்லை என்றுதான் அவனின் எண்ணமாக இருந்தது.

செய்த காரியத்தின் வீரியத்தை அப்போது அவன் உணரவில்லை.

அன்று இரவே சேலத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் மஞ்சரிக்கு காய்ச்சல் வந்திருந்தது.

மஞ்சரி அரை டம்ளர் பாலை மட்டும் கஷ்டப்பட்டு அருந்த, அவளுக்குக் காய்ச்சல் மாத்திரையைக் கொடுத்து போட்டுக் கொள்ள வைத்தாள் திவ்யா.

தள்ளி இருந்தாலும் சசிதரனின் பார்வை முழுவதும் மஞ்சரியைச் சுற்றிதான் வந்தது.

அவளுக்குத் திவ்யா மாத்திரை கொடுப்பதைப் பார்த்தவன், அவர்களைக் கடந்து செல்வது போலச் சென்று என்னவென்று விசாரித்தான்.

மஞ்சரி பதில் சொல்லாமல் போக, “அவளுக்குக் காய்ச்சல் சசி. அதான் மாத்திரை கொடுத்தேன்…” எனத் திவ்யாதான் பதிலுரைத்தாள்.

“காய்ச்சலா?” என்று அதிர்ந்தவன், மஞ்சரியின் முகத்தைத் தவிப்புடன் பார்க்க, அவளோ அவனின் பக்கமே திரும்பவில்லை. அவளுக்குள் அழுத்திக்கொண்டிருந்த குற்றவுணர்வு அவளைக் கொன்று தின்று கொண்டிருந்தது.‌

அவளின் மனநிலை புரியாமல் அப்போதும் அவள் தன்னைப் பார்க்கவில்லை என்று கோபம் கொண்டான் அவன்.

“புரொபஷர்கிட்ட சொல்லி டாக்டரை யாரையும் பார்க்க ஏற்பாடு செய்யச் சொல்லட்டுமான்னு அவள்கிட்ட கேட்டு சொல்லு திவ்யா…” என்றான்.

“அதெல்லாம் எதுவும் வேணாம்னு சொல்லிடு திவ்யா. நான் பஸ்ஸில் போய் உட்காருறேன்…” என்று சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்காமல் கடந்து போனாள் மஞ்சரி.

அவன் கோபத்தை அடக்கியபடி நிற்க, அவனைக் கடந்து திவ்யாவும் சென்றுவிட்டாள்.

“என்ன மஞ்சு இரண்டு பேருக்கும் சண்டையா?” என்று திவ்யா கேட்க,

“ம்ப்ச், அதெல்லாம் ஒன்னுமில்லை…” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.

அதிகாலையில் சேலம் வந்து சேர்ந்தனர். இப்போது மஞ்சரிக்கு எப்படி இருக்கிறது காய்ச்சல் விட்டுவிட்டதா என அறிய அவளையே பார்த்தான் சசிதரன்.

ஆனால் அவளை அழைத்துச் செல்ல அவளின் தந்தை வந்திருக்க, அவன் பக்கம் திரும்பாமலே, அவருடன் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

அவளின் அந்தப் புறக்கணிப்பு இப்போது அவனுக்கு வலிக்கவும் வைத்தது. முகத்தைச் சுருக்கினான்.

அவர்கள் இருவரையும் கவனித்த ஜீவனின் முகமோ மலர்ந்து போயிற்று.

அவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் பனிப்போர் பற்றி அறியாமல், எல்லாம் தன் திட்டப்படி செல்கிறது. அவர்களை இப்படியே பிரித்துவிடலாம் எனச் சந்தோஷப்பட்டுக்கொண்டான்.

“என்னடா சசி, இன்னும் உங்களுக்குள் எதுவும் சரியாகலையா?” வாசன் விசாரிக்க, “ம்ப்ச், இல்லைடா…” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் சசிதரன்.

வீட்டிற்குச் சென்றவனுக்குக் குணாளன்தான் கதவை திறந்துவிட்டார்.

“டூர் எல்லாம் எப்படிப் போச்சு சசி?”

“நல்லா போச்சுப்பா…”

“முகமெல்லாம் சோர்வா தெரியுது. போய்க் கொஞ்ச நேரம் தூங்கு…” என்று அனுப்பி வைத்தார்.

தன் அறைக்கு வந்தவன், கைப்பேசியை எடுத்து மஞ்சரிக்கு அவளின் உடல்நிலை பற்றிக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான் சசிதரன்.

அங்கே அவளோ கைப்பேசியைப் பார்க்கும் நிலையிலேயே இல்லை.

பெற்றவர்களையும், தங்கையையும் பார்த்த மஞ்சரிக்கு குற்றவுணர்வு நெஞ்சை அரித்தது.

அவளை நம்பி அவர்கள் சுற்றுலா அனுப்பி வைத்திருக்க, தானோ தன்னையே இழந்து வந்து நிற்கிறோமே எனக் குன்றி போனாள். அவர்களின் முகத்தை அவளால் இயல்பாகக் கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை‌.

அவளின் தங்கை சுற்றுலா அனுபவத்தைப் பற்றி விசாரிக்க, மஞ்சரியால் சரியாகக் கூடப் பதில் சொல்ல முடியவில்லை.

மனத்தின் புழுக்கம் அவளின் உடலில் உஷ்ணத்தைக் கூட்ட, மீண்டும் அவளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டிருந்தது.

“டூருக்கு போயிட்டு புள்ள காய்ச்சலை வாங்கிட்டு வந்திருக்கு. புள்ள முகமெல்லாம் வெளுத்துப் போயிருக்கே… நல்லா விடிஞ்சதும் கூட்டிட்டு போய் டாக்டர்கிட்ட காட்டிட்டு வரணும்ங்க…” என்று அவளின் அன்னை லலிதா கவலையுடன் அங்கலாய்த்தார்.

“போகலாம். இப்ப புள்ளைக்குக் கசாயம் ஏதாவது போட்டு கொடு. குடிக்கட்டும்…” என்று அவளின் தந்தை சுப்ரமணியும் அக்கறையுடன் சொல்ல, அவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

அவர்களின் முகத்தைப் பார்க்கும் திராணியற்றுக் கண்களை மூடி படுத்துவிட்டாள்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com