11.2 – நீங்காத பந்தமொன்று

👁️ 220 Views

அத்தியாயம் – 11.2

அடுத்த இரண்டு நாள்கள் கல்லூரிக்கு விடுமுறை விட்டிருந்தனர். அதனால் இரண்டு நாள்களும் மஞ்சரியை சசிதரனால் பார்க்க முடியவில்லை. அவனின் குறுஞ்செய்தி எதுவும் கூடப் பார்க்கப்படவில்லை. அவள் வீட்டில் இருக்கும் நேரத்தில் போனில் எல்லாம் தொடர்பு கொள்ள மாட்டான் என்பதால் அவளுக்கு அழைத்தும் பேச முடியவில்லை.

அவளுக்கு உடலுக்கு என்னானதோ என்ற பதற்றம் ஒரு புறம் என்றால், தான் அனுப்பிய மெசேஜை கூடப் பார்க்க முடியாமல் புறக்கணிக்கிறாளே… என்று உள்ளுக்குள் புகையவும் செய்தது.

இரண்டு நாள்களுக்குப் பிறகு கல்லூரி திறக்கவும் அவளைப் பார்க்கவே அன்று விரைந்து கிளம்பிச் சென்றான் சசிதரன்.

ஆனால், அவள் கல்லூரிக்கு வந்திருக்கவில்லை. திவ்யாவிடம் விசாரிக்க, அவளுக்கும் தெரியவில்லை.

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அன்று மாலை கைப்பேசியில் அவளுக்கு அழைத்தான் சசிதரன்.

அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தவன் அவள் எடுக்கவில்லை என்றதும், துணிந்து அவளின் வீடு இருக்கும் ஏரியாவிற்கே சென்றுவிட்டான்.

ஆனால், அவர்கள் வீட்டிலிருந்து அவளின் தந்தை மட்டும் ஒரு முறை வெளியே சென்று உள்ளே சென்றார். மற்றவர்கள் நடமாட்டமே தெரியவில்லை. அவளைப் பார்க்க வழி இல்லாமல் தவித்தான் சசிதரன்.

அங்கேயே நின்று மீண்டும் அவளின் கைப்பேசிக்கு அழைத்தான். நிற்கப் போகும் நேரத்தில் அழைப்பு ஏற்கப்பட்டது.

“மஞ்சு… மஞ்சுக்குட்டி… என்னடி ஆச்சு? எதுக்குடி என் போனை எடுக்க மாட்டேங்கிற? இன்னும் உனக்குக் காய்ச்சல் விடலையா?” என்று படபடப்பாக விசாரித்தான்.

“காய்ச்சல் எல்லாம் விட்டுருச்சு. எதுக்கு இத்தனை முறை போன் பண்ணியிருக்கீங்க?” என்று மெல்லிய குரலில் அவள் விசாரிக்க, அவனுக்கோ சுறுசுறுவெனக் கோபம் உச்சிக்கு ஏறியது.

அவளுக்கு என்னானதோ ஏதானதோ என அவன் பதறிப் போயிருக்க, அவளோ சாவகாசமாகப் பதில் சொல்லவும் கோபம் வந்தது.

“அப்போ நான் போன் போட்டது தெரிந்தும் கண்டுக்கலை நீ? என் மெசேஜையும் பார்க்காமல் அவாய்ட் பண்ணியிருக்க. உனக்கு என்னாச்சோன்னு தவிச்சு போய் ஓடி வந்து உன் வீட்டு பக்கமே நாய் மாதிரி சுத்திட்டு இருக்கேன் பாரு. என் புத்தியை செருப்பால அடிக்கணும்!” என்றான் ஆத்திரத்துடன்.

“என்ன என்னைத் தேடி வந்திருக்கீங்களா? எங்கே இருக்கீங்க?” என்று கேட்டபடி வீட்டின் கதவை திறந்து வாசலில் நின்று அவனைத் தேடினாள். இரண்டு வீடுகள் தள்ளி நின்றிருந்தவன், அங்கிருந்து அவளை முறைத்துப் பார்த்தான்.

“இங்கே எதுக்கு வந்தீங்க தரு? யாரும் பார்த்தால் பிரச்சினை ஆகிட போகுது, கிளம்புங்க…” என்றாள்.

“தப்புதான்டி! பதறிப் போய் ஓடி வந்தேன்ல என் தப்புதான்…” என்று அவன் பல்லைக் கடிக்க,

“நிலைமை புரியாம கோபப்படாதீங்க தரு. இப்ப நான் எதுவும் பேசுற நிலையில் இல்லை…” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “கதவை திறந்து போட்டு எங்கே போன மஞ்சு?” என்று அவளின் அன்னை அழைக்கும் குரல் கேட்க, “நாம அப்புறம் பேசலாம் தரு…” என்று வேகமாக அழைப்பை துண்டித்த மஞ்சரி, “இதோ வந்துட்டேன்மா…” என்றபடி உள்ளே ஓடிவிட்டாள்.

எரிச்சலுடன் அங்கிருந்து கிளம்பினான். ஆனால், மறுநாள் கல்லூரிக்கு வந்தவளோ, அவன் இருந்த திசை பக்கமே திரும்பி பார்க்கவில்லை.

அது அவனை மேலும் பாதித்தது. நடந்தது தங்களை மீறிய தவறுதான். அதற்காகத் தன்னை இப்படி மொத்தமாக ஒதுக்குவாளா? அப்போது தன்னை மொத்தமாக விலக முடிவெடுத்துவிட்டாளா? அதுவும் தாங்கள் ஒன்றான பின்னும்? என்ற கேள்வி குடைய அவன் அவனாகவே இல்லை.

“என்னடா டூர் போயிட்டு வந்ததிலிருந்தே மந்திருச்சு விட்ட மாதிரி சுத்துற?” என்று அவனின் அன்னை கவனித்துக் கேட்க, “அதெல்லாம் ஒன்னுமில்லைமா…” என்று அவரிடமும் சிடுசிடுத்தான்.

“செமஸ்டருக்கு ரெடியாகிட்டு இருக்கீயா சசி?” என்று அவனின் தந்தை விசாரிக்க, “ரெடியாகிட்டுதான் இருக்கேன்பா…” என்றான் அவரிடம்.

ஆனால், மஞ்சரி அவனின் மூளைக்குள் அமர்ந்து குடைந்து கொண்டிருக்க, அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதே உண்மை. மூன்றாம் வருடத்தின் இறுதி செமஸ்டர் நெருங்கிக் கொண்டிருந்தது. செமஸ்டருக்கு முன் படிப்பதற்காக விடுமுறை வேறு விடுவார்கள். அதற்கு முன் மஞ்சரி ஏன் இப்படித் தன்னை ஒதுக்குகிறாள்? என்று அவன் அறிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அவளோ கடிவாளம் கட்டியது போல் கல்லூரிக்கு வந்து சென்று கொண்டிருந்தாள். அவள் அப்படித் தன்னை ஒதுக்குவது அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. என்ன விஷயம் என்று தெரிந்தால், பேசி தெளிவுபடுத்தலாம். நடந்ததற்காகத் தன் மேல் கோபம் என்றாலும் அதை நேரடியாகக் காட்டாமல் தன்னை இப்படி ஒதுக்குகிறாளே என்று அவள் மேல் அவனுக்கு ஆதங்கமும் கோபமும் வந்தது.

மேலும் நாளடைந்து நாள்கள் சென்றிருந்த நிலையில் ஒருநாள் பேருந்துக்காகக் காத்திருந்தாள் மஞ்சரி.

அப்போது அவளின் முன் வந்து தனது பைக்கை நிறுத்திய சசிதரன், “ஏறுடி…” என்றான் பற்களைக் கடித்துக்கொண்டு.

மிரண்டு விழித்த மஞ்சரி வேகமாகத் தன்னைச் சுற்றி பார்த்தாள்.

அவர்களின் கல்லூரி மாணவர்கள் நின்றிருந்தனர்.

இப்படி எல்லாம் அவன் எல்லோரின் முன்பும் அவளை அழைத்ததில்லை. இப்போது அழைக்க, “என்ன விளையாடுறீங்களா? எல்லாரும் நம்மைப் பார்க்கிறாங்க. இங்கிருந்து போங்க…” தலையைக் குனிந்து கொண்டு பற்களுக்கிடையே வார்த்தைகளைத் துப்பினாள்.

“யார் பார்த்தாலும் எனக்குக் கவலை இல்லை. இப்ப நீ வண்டியில் ஏறுற, அவ்வளவுதான்!” என்றான் மிரட்டலாக.

“இல்லை, என்னால் வர முடியாது. நீங்க கிளம்புங்க…” என்று மஞ்சரி மறுக்க,

“ஓ, வர மாட்டியா? இப்ப நீ வரலைனா அப்படியே வண்டியோட எங்கேயாவது போய் மோதிடுவேன்…” என்று கடுமையுடன் சொன்னவனை, விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“அன்னைக்கு மாதிரி சும்மா மிரட்ட சொல்லலை. இப்படி உன் இந்த விலகலை பார்த்து தினம் தினம் சாகுறதுக்கு அப்படியே மொத்தமா போயிட்டா என்னன்னு தோனுது…” என்றவன் முகம் இறுக வேகத்துடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

அந்தச் சத்தத்தில் எல்லாரும் அவர்களைப் பார்க்க, பட்டென்று வண்டியில் ஏறி அமர்ந்தாள் மஞ்சரி.

உடனே அங்கிருந்து வண்டியை கிளம்பியவன், ஒரு பூங்காவின் பின் புறம் இருந்த மரத்தடியில் சென்று வண்டியை நிறுத்தினான்.

அவள் இறங்கியதும், “என்னடி உனக்குப் பிரச்சினை? எதுக்கு என் முகத்தைப் பார்க்காம அவாய்ட் பண்ற? அன்னைக்கு நடந்ததுக்குக் கோபம்னா என்னைத் திட்டியாவது உன் கோபத்தைக் காட்ட வேண்டியதுதானேடி? இப்படித்தான் என்னைக் கண்டாலே ஓடுவியா? மெசேஜுக்கும் ரிப்ளே பண்ண மாட்டேங்கிற. உன்னைத் தேடி வந்தாலும் விரட்டுற. அப்போ அன்னைக்கு நான் நினைச்ச மாதிரி என்னைக் கழட்டி விடப் போறீயா?” என்று கோபமாகப் பொரிந்து தள்ளினான்.

“ஆமா, கழட்டிதான் விடப் போறேன்…” என்று அவனை விடக் கோபமாகச் சொன்னவளை அதிர்ந்து பார்த்தான் சசிதரன்.

“என் மேல் உங்களுக்கு அவ்வளவுதான் நம்பிக்கை இல்ல? இவ எப்ப நம்மைக் கழட்டிவிடுவாளோன்னு உங்க மனசில் ஓடிட்டே இருக்கு. அதான் அதையே கேட்டுட்டு இருக்கீங்க. அப்படித்தானே?” என ஆதங்கமும் கோபமுமாகக் கேட்டாள்.

“என்னவோ நானா நினைச்சுக்கிட்ட மாதிரி சொல்ற? என்னை அப்படி நினைக்க வச்சவளே நீ தானேடி?” என்று எரிச்சலாகக் கேட்டான்.

“எப்பவும் இல்லாம நான் அப்படி நடந்துக்கிட்டால் அதுக்குக் காரணம் என்ன ஏதுன்னு எல்லாம் யோசிக்க மாட்டீங்களா?”

“அப்படி என்ன காரணம்? அதைச் சொன்னால் தானேடி எனக்குத் தெரியும். சொல்லாமல் ஓடி ஒளிஞ்சிட்டு இப்ப நான் தப்பு போலப் பேசுற?”

“ஆமா, நீங்க செய்த தப்புதான் நான் இப்படி ஓடி ஒளியுறதுக்குக் காரணம்…”

“ஏய்! அன்னைக்கு ஏதோ நாம இருந்த சூழ்நிலையில் தப்பு பண்ணிட்டோம்…”

“இப்ப நான் அதைச் சொல்லலை…”

“அப்போ வேற என்ன?” என்று சசிதரன் கேட்க, ஒரு வேகத்தில் சொல்லிக்கொண்டே வந்தவள், சட்டென்று பேச்சை நிறுத்தினாள்.

“ஏன்டி அமைதியா இருந்தே சாகடிக்கிற? சொல்லித்தான் தொலையேன். அப்படி என்ன தப்புச் செய்தேன் நான்?” என்று குரலை உயர்த்தினான்.

அவளோ பேச முடியாமல் தவிப்புடன் அவனைப் பார்த்தாள்.

“இப்படி அமைதியா இருந்தே இன்னும் எத்தனை நாள்தான்டி என்னைச் சாகடிக்கப் போற?” என்று அவன் ஆவேசமாகக் கேட்க,

“நானா உங்களைச் சாகடிக்கிறேன்? நீங்கதான் என்னைச் சாகடிக்கிறீங்க. நீங்க செய்த காரியம் தான் என்னைத் தினம் தினம் கொன்னுட்டு இருக்கு…” என்று உணர்ச்சியில் குரல் நடுங்க சொன்னவள், “உங்க ஆசைக்கு என்னைப் பலிகடா ஆக்கிட்டீங்க…” என்று குற்றம்சாட்டினாள்.

“அன்னைக்கு நைட் நான் அவசரப்பட்டது தப்புதான்னு எத்தனை முறைடி சொல்வது. அன்னைக்கு நான் நிதானம் இல்லாம…”

“நீங்க நிதானத்தோட செய்த செயலோட விளைவை பத்தி நான் சொல்லிட்டு இருக்கேன்…”

“எதைச் சொல்ற? புரியலை எனக்கு!”

“அன்னைக்கு நைட் பஸ்ஸில் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தீங்களே அதைத்தான் சொல்றேன்…”

“அதுவா? அதுல என்னடி தப்பு?”

“என்ன தப்பா? நாம ஒருத்தர் மேலே ஒருத்தர் சாய்ந்து தூங்கியதை போட்டோ எடுத்து வச்சு அந்த ஜீவன் என்னை மிரட்டுறான்…”

“என்ன ஜீவனா?”

“ஆமா… ஆமா… அந்த நாய்தான். ஆலப்புழாவில் இருந்தே என்னை அதைக் காட்டி மிரட்டுறான். நாம அப்படிப் பஸ்ஸில் தூங்கிய போட்டோவை புரொபஷர்கிட்ட எல்லாம் காட்டி, நம்ம மேலே ஆக்ஷ்ன் எடுக்க வைக்கிறேன்னு சொன்னான். அதுக்குப் பிறகும் உங்க பக்கத்தில் வந்தால் திரும்ப நம்மை அவன் போட்டோ எடுத்துருவானோன்னு பயந்து உங்க பக்கமே வராம இருந்தேன். ஆனா… அதுக்கு நீங்க என்னை மிரட்டி, என்னைத் தனியா வர வச்சு, நமக்குள் தப்பு நடந்து… ம்ப்ச்… அதுக்குப் பிறகும் அவன் சும்மா இருக்கலை. டூர் போயிட்டு வந்த பிறகு அவன் எப்படியோ என் போன் நம்பரை கண்டுபிடிச்சு, தினமும் மெசேஜ் அனுப்பி மிரட்டுறான். உங்களை விட்டு இப்ப மாதிரி நான் தள்ளி இருக்கலைனா… அந்தப் போட்டோவை காலேஜ் மேனேஜ்மென்ட்ல கொடுத்துடுவேன்னு மிரட்டுறான்…” என்று கலங்கியபடி சொன்னவளை கோபமாகப் பார்த்தான்.

“அவன் சொன்னான்னு என்னை விட்டு தள்ளிப் போவியா? இதை அன்னைக்கே என்கிட்ட சொல்லியிருக்க வேண்டியது தானேடி? அந்த நாயை ஒரு கைப் பார்த்திருப்பேன்…”

“இதோ… இதுக்குத்தான் சொல்லலை. அன்னைக்கு ஒரு நாள் நீங்க அடிச்சதை மனசில் வச்சுட்டுதான் இப்படி எல்லாம் பண்றான். திரும்ப அவன் மேல் நீங்க கைவச்சா… நிச்சயமா பெரிய சிக்கலா போயிரும். இப்பவும் அவசரப்பட்டுச் சொல்லித் தொலைச்சுட்டேன்… நீங்க அவனை ஏதாவது செய்யப் போய்…” என்றவளை முறைத்தவன், “அதுக்காக அவன் சொன்னதுக்கு எல்லாம் தலையை ஆட்டிட்டு என்னை விட்டு விலகி போவியா?” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

கண்கள் கலங்க அமைதியாக இருந்தாள் மஞ்சரி. தினமும் ஜீவனின் மிரட்டலை கேட்டு அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல்தான் அமைதியாக இருந்தாள் சசிதரனிடம் சொன்னால், இவன் அவனை அடித்துப் பெரிய சிக்கலை இழுத்துவிடுவானோ என்ற பயம். வீட்டினரிடமும் சொல்ல முடியவில்லை. தனக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்தவள் ஒருவித வேகத்தில் இப்போது சொல்லிவிட்டாள். இனி இவன் என்ன செய்து வைப்பானோ என்று பயத்துடன் தான் அவனைப் பார்த்தாள்.

“என்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்ட தானே? இனி நான் பார்த்துக்கிறேன்…” என்று ஒருவித தீவிரத்துடன் சொன்னான் சசிதரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com