👁️ 1378 Views
“ஸாரி மிஸ்டர்… அது… என் மாமனாரும், செல்வராஜ் மாமாவோட ஆளுங்களும் சேர்ந்து அவனைப் பிடிச்சு, அடைச்சு வச்சு விசாரிச்சதா சொன்னாங்க. அதோட விக்ரம் அவங்ககிட்ட இருந்து தப்பி ஓடும் போதுதான் வண்டியில் மோதி அடிப்பட்டு இறந்ததாகச் சொன்னாங்க…” என்று விளக்கமாகச் சொன்னான் மயூரன்.
“அது அவங்க வாய்மொழி சொன்னது தானே? சிலர் துரத்தும் போது, ஓடி வந்த ஒருத்தன் மேல் வண்டி மோதுச்சுனா, அவனோட உடல் விழுந்திருக்கிற திசையும், காயத்தோட தன்மையும் வேற மாதிரி இருக்கும் மிஸ்டர் மயூரன்! இந்தப் போட்டோவில் விக்ரம் விழுந்து கிடக்கிற நிலையைப் பாருங்க. உடம்புல ரத்தக்காயங்கள் இருந்தாலும், அவரோட கைகால்கள் மடிந்து கிடக்கிற விதம்… அடிபட்ட வேகத்தில் விழுந்தவர் போல இல்லை. இது என்னோட யூகம்தான் மயூரன். விபத்து நடந்ததா சொல்லபட்ட இடத்தில் எடுத்த இன்னும் சில போட்டோஸ் கிடைச்சா நல்லது…” என்றான் கவியுகன்.

“என்கிட்ட வேற எதுவும் இல்லை கவியுகன். விக்ரமோட போன், லேப்டாப் கூடச் செல்வராஜ் மாமாகிட்ட தான் இருக்கு. அவரிடமிருந்து அதை எல்லாம் வாங்கித் தரச் சொல்லி என் மாமனார்கிட்ட சொல்லியிருக்கேன். அவங்க கொடுத்ததும், அதையும் கொண்டு வந்து கொடுக்கிறேன். அதில் இருக்கும் பெண்கள் பற்றிய வீடியோக்களும் நிஜமா, போலியா உருவாக்கப்பட்டதான்னு நான் தெரிஞ்சிக்கணும். அதோட…” என்று மயூரன் தயங்கி நிறுத்த,
“எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசுங்க மயூரன். நீங்க சொல்ல போற சின்னச் சின்ன விஷயமும் கூட முக்கியமானதா இருக்கலாம்…” என்று அவனின் தோளில் ஆதரவுடன் தட்டிக் கொடுத்து மேலும் பேசத் தூண்டினான் கவியுகன்.

“என் மாமனார் ஏதோ ஒரு விஷயத்தை என்கிட்ட மறைக்கிறார்னு என்னால் புரிந்து கொள்ள முடியுது. ஆனால், எதை மறைக்கிறார்னு தெரியலை… ஒருவேளை…” என்று மீண்டும் தயங்கி கையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன், “என்… என் வொய்போட வீடியோ எதுவும் விக்ரமோட லேப்டாப்பில் இருந்தால்… அது எப்படி வந்ததுன்னு தெரியணும். ஏன்னா… என் வொய்ப் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே சாய்ஸ் இல்லைன்னு உறுதியா சொல்றா. அப்படி இருக்கும் போது… என் மாமனார் ஏன் அப்படி வித்தியாசமா பிகேவ் பண்றார்னு எனக்குப் புரியலை. எனக்கு எல்லாத்துக்கும் விடை தெரிஞ்சாகணும் கவியுகன். அதுக்கு நீங்க தான் ஹெல்ப் செய்யணும்…” என்றான் மயூரன்.
தாடையைத் தடவியபடி யோசித்த கவியுகன், “இப்போ இதுக்கு எல்லாம் நாம பதில் கண்டுபிடிக்கிறோம்னு வைங்க… இதனால் என்ன யூஸ்னு நீங்க நினைக்கிறீங்க மயூரன்?” என்று விசாரித்தான் கவியுகன்.
“என் வொய்ப் அந்த விக்ரமை ரொம்பவே நம்புறா கவியுகன். அவளின் நம்பிக்கைக்கு அவன் பாத்திரமானவன் தானான்னு நான் தெரிஞ்சிக்கணும். அது மட்டும் இல்லை, அப்படி அவன் உண்மையிலேயே நல்லவனா இருந்து என் மாமனார் ஜாதி வெறியில் தான் அவனை எதுவும் செய்திருந்தால், அது பெரிய தப்பு இல்லையா? அந்தத் தப்புக்குத் தண்டனை கிடைச்சே ஆகணும்னு நினைக்கிறேன். ஒருவேளை அந்த விக்ரம் கெட்டவன்தான்னா அவனைப் பற்றி என் மனைவிக்குப் புரிய வைக்க எனக்குச் சரியான ஆதாரம் வேணும். அவனைப் பற்றி எதுவுமே தெரியாம, நான் அவளிடம் என்னன்னு எடுத்துச் சொல்லி புரிய வைப்பேன்? அவளுக்கு விக்ரம் பற்றிய உண்மை தெரிந்தால்தான், அவளின் மனநிலையும் மாறும்னு நம்புறேன். இல்லைனா… அவள் இப்ப இருக்கும் மனநிலை…” என்றவன், தங்களுக்குள் நிலவும் பனிப்போரை மேலோட்டமாகப் பகிர்ந்து கொண்டு, வேதனையுடன் தோளை குலுக்க, அவனின் தோளில் தட்டிக் கொடுத்தான் கவியுகன்.
“என்னைத் தேடி வந்திருக்கீங்க. என்ன எதுன்னு லைட்டா மட்டும் விசாரிப்போம்னு நினைச்சேன் மயூரன். ஆனா, நீங்க கொடுத்த கேஸ் உங்க வாழ்க்கையில் இவ்வளவு முக்கியமானதா இருக்கும் போது, இந்தக் கேஸை நானே எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். பட், கேஸோட தன்மையை எல்லாம் பார்க்கும் போது, இது உடனே முடியும் கேஸ் போல் தெரியலை மயூரன். சோ, நீங்க கொஞ்சம் காத்திருக்கணும்…” என்றான்.
“நீங்க இந்தக் கேஸை எடுத்துக்கிறேன்னு சொன்னதிலேயே சந்தோஷம் கவியுகன். தேங்க்யூ! நீங்க நல்லபடியா எனக்கு இதை முடிச்சுக் கொடுப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…” மயூரன் திருப்தியுடன் சொல்ல,
“ஓகே மயூரன், விக்ரமோட திங்க்ஸ் எனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்ங்க. வேற எதுவும் தேவைப்பட்டால் கால் பண்றேன்…” என்று அவனுக்கு விடைகொடுத்தான் கவியுகன்.
அவனிடம் பேசி முடித்துவிட்டு, உண்மை வெளிவரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்ற மனத்திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பிய மயூரன் நேராகத் தனது பைக் ஷோரூமிற்குச் சென்றுவிட்டான்.
அதே நேரத்தில் ஒரு தனியார் மருத்துவரிடம் சென்று, இத்தனை நாள்கள் வேலைக்குச் செல்லாததற்காக மருத்துவச் சான்றிதழ் எழுதி வாங்கிக் கொண்டு அலுவலகம் சென்று சேர்ந்தாள் மதுமதி.
“ஹேய் மது, வா… வா… நீ வருவன்னு எதிர்பார்க்கவே இல்லை. ஸ்வீட் சர்ப்ரைஸ்…” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள் தோழி உமா.
அவளைப் பார்த்துச் சம்பிரதாயத்திற்குச் சிரித்த மதுமதியின் தோளில் கையைப் போட்டு நட்புடன் அணைத்து விடுவித்தாள் உமா.
“நான் போய்ச் சாரைப் பார்த்துட்டு வர்றேன் உமா…” என்று சொல்லிவிட்டு மதுமதி அந்த அலுவலகத்தின் எம்டியைப் பார்க்கச் சென்றாள்.
மொத்தமே இருபத்தைந்து பேர் மட்டுமே வேலை பார்க்கும் சிறிய அலுவலகம் தான் அது. ஆனால், பெரிய பெரிய கடைகளுக்கு, பள்ளிகளுக்கு என இன்னும் சில முக்கிய வியாபார நிறுவனங்களுக்கு எல்லாம் இணையதளம் உருவாக்கித் தந்து கொண்டிருந்தனர்.
மதுமதி அங்கே வெப் டிசைனராகப் பணிபுரிகிறாள். ஒரு இணையதளம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும், எளிமையாகவும், உபயோகிப்பதற்கு இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து வடிவமைப்பது தான் அவளது வேலை. விக்ரம் அவளுக்கு மேலே சீனியர் வெப் டிசைனராகப் பணிபுரிந்து கொண்டிருந்தான். இருவரும் இணைந்து வேலை பார்த்த தருணங்கள் அதிகமே!
மேலாளரின் அறையை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போதே, மதுமதியின் கண்கள் இயல்பாகவே விக்ரம் அமர்ந்திருந்த அந்த இடத்தைத் தேடிச் சென்றன. அங்கே இப்போது வேறு யாரோ ஒருவன் அமர்ந்து மும்முரமாகக் கணினியில் தட்டச்சுச் செய்துகொண்டிருந்தான். அது அவளது இதயத்தில் ஒரு மெல்லிய வலியை உண்டாக்கியது. அவ்வலி அவளின் கண்களிலும் பிரதிபலித்தது.
தன்னைச் சமாளித்துக் கொண்டு, மேலாளரின் (MD) அறைக்குச் சென்றாள்.
“வாங்க மதுமதி. எப்படி இருக்கீங்க? நீங்க திரும்பி வந்ததுல சந்தோஷம்!” என்று கனிவுடன் வரவேற்றார் எம்.டி. அவருக்கு விக்ரமும், மதுமதியும் விரும்பியது தெரியும். அவருக்கு மட்டுமல்ல, அந்த அலுவலகத்தில் சிலருக்கும் கூடத் தெரியும். இப்போது விக்ரம் விபத்தில் இறந்ததும், மதுமதியின் திருமணமும் என அனைத்தையும் கேள்விப்பட்டிருந்த மேலாளரின் பார்வை அவளை அனுதாபத்துடன் பார்த்தது.
“தேங்க்ஸ் சார். நான் சரியா இன்பார்ம் பண்ணாம, வேலைக்கு வராமல் இருந்ததுக்கு ஸாரி. நீங்க கேட்ட மெடிக்கல் சர்டிபிகேட். இனி ரெகுலரா வந்திடுவேன் சார்…” என்று அவரிடம் தன் மருத்துவச் சான்றிதழை நீட்டினாள்.
“இது சும்மா பார்மாலிட்டிக்குத்தான்…” என்று வாங்கி வைத்துக் கொண்டவர், “விக்ரமுக்கு அடுத்து நம்ம கம்பெனிக்கு முக்கியமான வெப் டிசைனர் நீங்க. உங்க பழைய ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் இப்போ உமா பார்த்துட்டு இருக்காங்க. ஆனா, இப்ப புதுசா ஒரு ‘ஈ-காமர்ஸ்’ (E-commerce) சைட் டிசைன் பண்ண வேண்டியிருக்கு. அந்த வேலையை இன்னையில் இருந்து ஆரம்பிச்சிருங்க. விக்ரமுக்குப் பதில் வந்து ஜாயின் செய்த ஜெகன் உங்க கூட ஜாயின் பண்ணிப்பார்…” என்று சொல்லி வேலையைப் பார்க்க அனுப்பினார்.
அவரிடம் பேசி முடித்துவிட்டு தன் இருப்பிடம் வந்து அமர்ந்தாள் மதுமதி.
©nandhavanamnovels.com