👁️ 226 Views
அத்தியாயம் – 12.1
“இதைப் பிடி… இதுக்குத்தானே பயந்து நடுங்கித் தானே என்னை விட்டு தள்ளிப் போன?” என்று எரிச்சலுடன் சொல்லிக்கொண்டே, ஒரு கைப்பேசியை மஞ்சரியின் கையில் கொடுத்தான் சசிதரன்.
“யாரோட போன் தரு இது?”
“அந்த ஜீவன் போன்…”
“என்ன? அவன் போனா? அவன் போன் எப்படி உங்ககிட்ட?” என வியப்புடன் கேட்டாள்.
“எப்படி இருந்தால் என்ன? அவன் போனில் தானே நம்ம போட்டோ இருக்கு? அதை நீயே டெலிட் பண்ணு…” என்றான்.
மஞ்சரி தயக்கத்துடன் தொடுதிரையைத் தேய்க்க, அது கடவுச்சொல் கேட்டது.
சற்று எட்டி அந்தக் கைப்பேசியின் திரையில் இருந்த லாக்கை எடுத்துவிட்டான் சசிதரன்.
ஆச்சரியமாக அவனைப் பார்த்தவள், “அவன் பாஸ்வேர்ட் உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் தெரிந்து நீ என்ன செய்யப் போற? முதலில் அந்தப் போட்டோவை டெலிட் பண்ணு…” என்றான் கண்டிப்புடன்.
அவளும் தங்கள் புகைப்படத்தைத் தேடி எடுத்து அதை மொத்தமாக அழித்தாள்.
“ஒருவேளை அவன் வேற காப்பி வச்சிருந்தால்?” என மஞ்சரி சந்தேகமாகக் கேட்க,
“இது மட்டும்தான்! வேற காப்பி அவன்கிட்ட இல்லை…”
“அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”
“தெரியும்! அவ்வளவுதான்!”
“நீங்க பேசுற டோனே பயத்தைத் தருது தரு. என்ன செய்தீங்க அவனை? அவன் போன் எப்படி உங்ககிட்ட வந்தது?”
“அதெல்லாம் உனக்கு எதுக்கு?”
“இப்படி அலட்சியமா கேட்டா என்ன சொல்வது தரு? திரும்ப அவன் கூடப் பிரச்சினை ஆச்சுனா அடிபட்ட நாகம் போலச் சீறுவான். அந்தப் பயத்தில் தான் கேட்கிறேன்…”
“சும்மா பயந்து சாகாதேடி மஞ்சுக்குட்டி. பாம்போட பல்லை புடுங்கிட்டா எல்லாம் சரியாகிடும். அதைத்தான் செய்துட்டு வந்திருக்கேன்…”
“அப்படி என்ன செய்தீங்க?”
“ஹான்! முட்டுச் சந்தில் வச்சு நாலு மொத்து மொத்தினேன்…”
“தரு..!”
அவள் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ அதையே செய்துவிட்டு வந்து நிற்பவனை என்ன சொல்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இதனால் இனி என்ன பிரச்சினை எல்லாம் வரப்போகிறதோ? எனப் பயந்தாள்.
அவளின் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்த பயத்தைப் பார்த்தவன், “சும்மா பயந்து சாகாதேடி! அவனுக்கு நான்தான் அடிச்சதுன்னு தெரியாது. தெரிஞ்சே செய்ய எனக்கு எந்தப் பயமும் கிடையாதுதான். ஆனா… என் மஞ்சுக்குட்டி பயந்து சாவாளே… அவளுக்காகத்தான் அடிச்சது யாருன்னு காட்டாம வந்திருக்கேன்…” என்று தோளை குலுக்கினான் சசிதரன்.
“உங்களோட இந்த அலட்சியம் எனக்கு இன்னும்தான் பயத்தைத் தருது தரு. நீங்க இவ்வளவு முரட்டுத்தனமா இருப்பது நல்லதில்லை…” மஞ்சரி கவலையுடன் சொல்ல,
“இவ ஒருத்தி, கவலைப்படுவதற்கும், பயப்படுவதற்கும் புதுசு புதுசா ஒரு காரணம் கண்டுபிடிப்பா. ஒரு பிரச்சினை தீர்ந்ததுன்னு சந்தோஷமா உன் தரு கண்ணா பக்கத்தில் வாடி மஞ்சுக்குட்டி…” என்றவன், தானே அவளை நெருங்கி அமர்ந்து அவளின் தோளை சுற்றி கையைப் போட்டுக் கொண்டான்.

“ம்ப்ச்… கையை எடுங்க தரு…” என்று அவள் எடுத்துவிட,
“ஏய்… என்னடி… ஆசையா பக்கத்தில் வந்தால்…” என்று சீறியவன், அதே வேகத்தில் சட்டென்று தணிந்து, “ஹேய் மஞ்சுக்குட்டி… ருசி கண்ட பூனை மாதிரி மனசும், உடம்பும் இப்ப எல்லாம் ஒரு மாதிரி முறுக்குதுடி. மூணாரில் நமக்குள் நடந்ததை நினைச்சு…” என்று அவன் கிளர்ச்சியுடன் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டே போக, மஞ்சரியின் முகம் மாறியது. பட்டென்று தான் அமர்ந்திருந்த கல் இருக்கையிலிருந்து எழுந்தாள்.
இருவரும் ஒரு பூங்காவில் சற்று உள்ளே தள்ளியிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
அவள் எழவும், “ஏய்… என்ன?” என்று சசிதரன் அவளின் முகத்தை ஆராய்ந்தவண்ணம் கேட்க, அவனை விட்டு சற்று தள்ளி மீண்டும் அமர்ந்தவளின் கண்கள் கலங்கி இருந்தன.
“மஞ்சு?”
“அதை… அன்னைக்கு நடந்ததைப் பத்தி பேசாதீங்க தரு. அதை… அதை நினைச்சாலே… தப்பு பண்ணிடோமேனு உடம்பும் மனசும் கூசிப் போகுது. வீட்டில் அம்மா, அப்பா, தங்கச்சி முகத்தை எல்லாம் சகஜமா பார்த்து பேசவே முடியலை தரு. ஒரு மாதிரி கில்டியா ஃபீலாகுது…” என்றாள் கலக்கத்துடன்.
“ஏய்… என்னடி… இதுல கில்டியாக என்ன இருக்கு? நாம லவ்வர்ஸ்டி! என்னைக்கு இருந்தாலும் நமக்குள் நடக்கப் போற ஒன்னுதான். அதுக்கு இவ்வளவு அலட்டிக்காதேன்னு நான் அன்னைக்கே சொன்னேன். அப்படியிருந்தும், இப்பவும் அப்படிப் பேசினா என்ன அர்த்தம்?” என்று அவன் சாதாரணமாகக் கேட்க,
“அது நமக்குள் முறைப்படி நடந்திருந்தால் நானும் உங்களைப் போலச் சாதாரணமா எடுத்துட்டு இருந்திருப்பேன் தரு. ஆனா… நாம லவ்வர்ஸ் தானே தவிர, கப்புள்ஸ் கிடையாது!” என்றவளுக்கு அவன் இலகுவாக எடுத்துக் கொள்வது வேதனையைத் தந்தது.
“எந்தக் காலத்தில் இருக்கடி நீ? இப்ப எல்லாம் கல்யாணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காம… லிவ்விங்கில் வாழ்ற காலம் வந்துடுச்சு. நாம என்ன அப்படியா வாழப் போறோம்? முறையா கல்யாணம் பண்ணி வாழத்தான் போறோம். அப்புறம் எதுக்குத் தேவையில்லாம கவலைப்படணும்?”
“வேணாம் தரு. இனி நமக்குள்ள இதைப் பற்றிப் பேச வேணாம். அதுவும் நீங்க இதை ரொம்பச் சாதாரணமா பேசுவது வருத்தமா இருக்கு. இதைப் பத்தி நாம பேசிக்கவே வேணாம்!” என்றாள் கண்டிப்புடன்.
அவளிடம் அதற்கு மேல் வாக்குவாதம் செய்ய விருப்பமற்று, “சரி, விடு!” என்றான் எரிச்சலுடன்.
அடுத்த ஒரு வாரத்தில் செமஸ்டருக்கு படிப்பதற்காக விடுமுறை வரவிருந்தது. விடுமுறையில் இருவரும் பார்க்க முடியாது என்பதால் இப்போது சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிவிட்டனர்.
விடுமுறை விடுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, காலையில் வகுப்புத் தொடங்குவதற்கு முன் திவ்யாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் மஞ்சரி.
“சசிக்கு என்னாச்சுன்னு தெரியலை திவ்யா, இரண்டு நாளா காலேஜுக்கு வரலை. போன் போட்டால் போனும் எடுக்கவே இல்லை. இப்படி எல்லாம் என் போனை எடுக்காமல் இருந்தது இல்லை…” என்று கவலையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“டூர் போன போது இரண்டு பேரும் முறைச்சுட்டு திரிஞ்சீங்களே… அந்தக் கோபம் இன்னும் சசிக்கு போகலையா?” திவ்யா கேட்க,
“அதை எல்லாம் பேசி ராசியாகிட்டோம். காலேஜுக்கு லீவ் போட்டால் கூட மெசேஜ் செய்து சொல்லிடுவார். ஆனா… இப்போ…” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்த போது, வகுப்புக்குள் பதற்றமாக நுழைந்த வாசன், “டேய், பிரசாந்து நம்ம சசிக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சாம்டா. ஹாஸ்பிட்டலில் இருக்கானாம். நான் பார்க்க போறேன். நீயும் வர்றீயா?” என்று தன் நண்பனிடம் சொல்ல, தோழியிடம் பேசிக் கொண்டிருந்த மஞ்சரி பதறி திரும்பினாள்.
“வாசன்… என்ன சொன்ன? யாருக்கு ஆக்ஸிடெண்ட்?” என்று குரல் நடுங்க விசாரித்தாள்.
“சசிக்குத்தான் மஞ்சரி...” என்றான்.
“என்ன?” அதிர்ந்து நெஞ்சில் கைவைத்து எழுந்தவள், “எப்…போ… யா…ர் சொன்னா?” என்று கேட்டாள்.
“அவன் இரண்டு நாளா காலேஜ் வரலைல? அதான் இன்னைக்கு வருவானான்னு கேட்க போன் பண்ணினேன். அவன் தம்பி ரவிதான் போனை எடுத்து, சசிக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. இப்ப ஹாஸ்பிடலில் இருக்கான்னு சொன்னான். அவனைப் பார்க்கத்தான் கிளம்பிட்டு இருக்கேன்…” என்று வாசன் சொன்னதும், உறைந்து போன மஞ்சரிக்கு சில நொடிகள் உணர்வே இல்லை.
“என்னடா சொல்ற? எப்போ ஆக்ஸிடெண்ட் ஆச்சு? இப்ப எப்படி இருக்கான்?” என்று பிரசாத் வாசனிடம் விசாரிக்க,
“இரண்டு நாளைக்கு முன்னாடி காலேஜ் விட்டு வீட்டுக்கு போற வழியில்தான் நடந்திருக்கு. ஏதோ கார் இடிச்சிருச்சுன்னு அவன் தம்பி ரவி சொல்றான். பலமான அடின்னு தான் சொல்றான். என்னாச்சுன்னு தெரியலை. போய்ப் பார்த்துட்டு வரலாம், வர்றீயா?” என்று வாசன் கேட்க,
“கிளாஸ் ஆரம்பிக்கப் போகுதேடா? இப்ப எப்படிப் போறது?” பிரசாத் கேட்க,
“கிளாஸ் முடிந்தபிறகு போக எல்லாம் எனக்குப் பொறுமை இல்லை. நான் இப்பவே போய்ப் பார்த்துட்டு வரப் போறேன். நீ வேணா அப்புறம் பாரு…” என்ற வாசன் கிளம்பப் போக, “டேய்… இரு, நானும் வர்றேன்…” என்று பிரசாத்தும் அவன் பின்னால் ஓடினான்.
“மஞ்சரி…” என உறைந்து நின்றிருந்தவளை திவ்யா உலுக்க, “திவி… நான்… நான் தருவை பார்க்கணும்டி. ஐயோ அவருக்கு என்னாச்சோ?” என்று கலங்கி அழ ஆரம்பித்தாள்.
அதே நேரம் பேராசிரியர் வந்துவிட, திவ்யா மஞ்சரியை சமாதானம் செய்து வைத்தாள்.
©nandhavanamnovels.com