13.2 – நீங்காத பந்தமொன்று

👁️ 123 Views

அத்தியாயம் – 13.2

அவர்கள் வெளியே செல்லும் வரை பல்லைக் கடித்துக்கொண்டிருந்த குணாளன், அடுத்த நொடி மெல்ல எழுந்து நின்றிருந்த மூத்த மகனின் புறம் கடும் கோபத்துடன் திரும்பி, “நாயே… படிக்கும் போதே பொம்பளையைத் தேடி போகவாடா உனக்குச் சோறு போட்டு வளர்த்தேன்? அப்படித் தின்னதால்தான் உடம்பு தெனவெடுத்துச்சோ? நீ கேட்டதை எல்லாம் இல்லைன்னு சொல்லாம வாங்கிக் கொடுத்தேனேடா… எல்லாம் நீ பொம்பளை சோக்கில் சுத்தவா?” என்று ஆரம்பித்தவர், அதன்பின் பேசியவை எல்லாம் காதில் கேட்கவே கூசுபவையாக இருந்தது.

தந்தைக்கு இப்படியும் கூடப் பேசத் தெரியும் என்று சசிதரன் அன்றுதான் அறிந்து கொண்டான்.

குணாளன் பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. பிள்ளைகள் கேட்பதை கூடச் சிலவற்றைத் தவிர்ப்பவர், அவர்களுக்குச் சிலது அத்தியாவசிய தேவை என்று நினைத்தால், சற்று தள்ளி போட்டாவது வாங்கிக் கொடுத்துவிடுவார்.

பிள்ளைகளிடம் சற்றுக் கண்டிப்பு காட்டுவாரே தவிர, அவர்கள் சற்று வளர்ந்த பின் கை வைக்க மாட்டார்.

பிள்ளைகளை நேர்த்தியுடன் தான் வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற அவரின் நினைப்பில் அந்தத் திடீர் இடி விழ, அவருக்குள் உறங்கிக் கொண்டிருந்த இன்னொரு குணம் வெளியே வந்திருந்தது.

“உங்க மகனை திட்டுவதெல்லாம் இருக்கட்டும்‌. இப்ப எங்க பொண்ணுக்கு ஒரு வழி சொல்லுங்க…” என்று கேட்ட சுப்ரமணியன் பக்கம் ஆத்திரத்துடன் திரும்பினார் குணாளன்.

“என்கிட்ட ஏன்யா வழி கேட்கிற? இவன்கிட்ட கேளு…” என்று மகனை காட்டி இகழ்வாக‌ சொன்னவர், “என்னவோ நான் என்ன பிள்ளையை வளர்த்திருக்கேன்னு கூசாமல் கேட்டயே… நீ‌ மட்டும் என்ன லட்சணத்தில் பொண்ணை வளர்த்து வச்சிருக்க? கல்யாணத்துக்கு முன்னாடியே எவனையாவது காதலிச்சு வயித்துல பிள்ளையை வாங்கிட்டு வா… கல்யாணச் செலவு மிச்சம்னு சொல்லிக் கொடுத்து வளர்த்தியோ?” என்று எகத்தாளமாகக் கேட்டார்.

“என்னங்க இப்படி எல்லாம் பேசுறீங்க?” என்று‌ லலிதா அதிர்ந்து கத்த, குணாளனின்‌ பேச்சில் குன்றிப் போன சுப்ரமணியன், “இவளை பெத்ததுக்கு நமக்கு இதெல்லாம் தேவைதான்…” என்று மகளை வெறுப்புடன் பார்த்தவர், அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.

“அம்மா…” என்று அவள் அதிர்ந்து தடுமாறி முன்னே விழ போக, “மஞ்சு…” எனக் கத்தியபடி தன் கால் வலியைப் பொருட்படுத்தாமல் விரைந்து வந்த சசிதரன் அவளை விழ விடாமல் பிடித்து, காலில் பலம் இல்லாமல் தானும் விழப்போனான்.

மஞ்சரிதான் சமாளித்து அவனைப் பிடித்தாள். இருவரும் ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நின்றிருக்க, “இந்தக் கருமத்தை எல்லாம் பார்க்கணும்னு தலையெழுத்து. என் மானத்தை வாங்கவே பிள்ளையா பிறந்திருக்கான்டி இவன்…” என்று மனைவியிடம் கத்தினார் குணாளன்.

“என் பொண்ணுக்கு ஒரு‌ வழி சொல்லு…” என்று சுப்ரமணியன் இப்போது சசிதரனை பார்த்து கேட்க, “நான் உடனே மஞ்சுவை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று சிறிய குரலில் சொன்னான் சசிதரன்.

“கல்யாணம் பண்ண காசு வச்சுருக்கானா உன் மகன்?” என்று எகத்தாளமாகக் கேட்டார் குணாளன்.

“நீ இப்படி நடந்துப்பன்னு நாங்க நினைக்கவே இல்லைடா சசி. உன்னை இன்னும் நான் சின்னப் பிள்ளையாவே நினைச்சுட்டு இருக்கேன். ஆனா, நீ…” என்று வனஜா ஆதங்கமும் கோபமாகச் சொல்ல,

“சின்னப் பிள்ளையா உன் மகன்? அவனுக்கே ஒரு பிள்ளை ஏற்பாடு பண்ணிட்டான்டி. இவனை வீட்டுக்குள் உட்கார வச்சு வைத்தியம் பார்த்து சோறு போட்டு வளர்த்தேன் பாரு…‌ என் புத்தியைத்தான் செருப்பால அடிக்கணும்…” என்று சீறினார் குணாளன்.

தந்தையின் வார்த்தை ஒவ்வொன்னும் சசிதரனை குத்தியது. தவறு செய்யும் போது இருந்த அலட்சியத்தை… இப்போது அவனால் காட்டவே முடியவில்லை. ‘நாங்கள் லவ்வர்ஸ் தானே?’ என்று திடமாக அவனால் இப்போது கேட்க முடியவில்லை.

ஒரு முறை கூடிக் களித்ததற்கே குழந்தை வரும் என அவன் யோசிக்காமல் போன விளைவை இப்படி எதிர்கொள்ள நேரும் என்று அவன் கிஞ்சித்தும் நினைக்கவில்லை.

அவர்கள் முன் கூசி குறுகி நின்றான்.

“உங்க பிரச்சினையை எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க. இப்ப எங்க மகளுக்கு ஒரு வழி தெரிஞ்சே ஆகணும். உங்க பிள்ளைதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாரே… கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவோம்…” என்றார் சுப்ரமணியன்.

“கல்யாணத்துக்கு முன்னாடியே பிள்ளையை வயித்துல வாங்கிட்டு வந்து நிற்கிறவ இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா? ச்சீ… நினைக்கவே அருவருப்பா இருக்கு. த்தூ…” என்று குணாளன் காறி உமிழ்ந்தார்.

அவமானத்தில் குன்றி போன மஞ்சரி கைகளால் முகத்தை மூடியபடி அழுதாள்.

“எங்க பொண்ணை மட்டும் ஏன் பேசுறீங்க? உங்க பையனும்தான் தப்பு பண்ணிருக்கான். இப்ப அவனே எங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னபிறகு எதுக்கு வளவளன்னு பேசிட்டு? பெத்த கடமைக்குக் கல்யாணத்தை முடிச்சு வைப்போம். என்ன சொல்றீங்க?” என்று சுப்ரமணியன் கேட்க, உடனே எல்லாம் குணாளன் சம்மதம் சொல்லிவிடவில்லை.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“கல்யாணம் முடிச்சு வச்சா போதுமா? அதுக்குப் பிறகு உங்க பொண்ணை வச்சு காப்பாத்த அவன்கிட்ட என்ன இருக்கு? படிப்பையும் முடிக்கலை. வேலையும் கிடையாது. இவனுக்கே நான் சோறு போட்டுட்டு இருக்கேன். இப்ப உங்க பொண்ணுக்கும் நான் போடணுமா? என்ன தேவைக்கு?” என்று சிடுசிடுப்பாய் கேட்டார்.

“அதை எலலாம் யோசிக்கிற நிலையிலா நாம இப்ப இருக்கோம்? இப்ப ஆக வேண்டியதை பார்ப்போம். அப்புறம் எப்படிப் பொழைக்கிறதுன்னு அவங்க முடிவு பண்ணட்டும்…” என்றார் சுப்ரமணியன்.

“என்னடா? என்ன பண்ண போற?” என்று குணாளன் மகனிடம் கேட்க, என்ன பதில் சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.

தான் அவரசப்பட்டிருக்கக் கூடாது என்று காலம் கடந்து யோசித்தான்.

இனி யோசித்தும் பயன் இல்லையே? அனைத்தும் அவனை மீறிச் சென்றிருந்தது. இரண்டு வீட்டுப் பெரியவர்கள் முன்னால் அவனால் பேச கூட முடியவில்லை. அவர்கள் சொல்வதைச் செய்யும் நிலையில் மட்டுமே இருந்தான்.

எரிச்சலும், கோபமும் பிடித்தமின்மையுமாக வேறு வழியில்லாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் எனப் பேசி முடிவெடுத்தனர்.

எப்படி எப்படி எல்லாம் கோலாகலமாகத் திருமணம் செய்யலாம் என்ற சசிதரன், மஞ்சரியின் கற்பனைகள் எல்லாம் கலைந்து சிதறி போக, மிக மிக எளிமையாக அவர்களின் திருமணம் கோவிலில் வைத்து நடந்து முடிந்தது.

ஒருவர் முகத்திலும் சந்தோஷம் என்பதே இல்லை.

கடமைக்குச் செய்து வைத்த அவர்களின் திருமணத்திற்கு எந்தச் சடங்கு சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படவில்லை. பெரியவர்கள் வேண்டாவெறுப்பாக அந்தத் திருமணத்தை முடித்து வைத்திருந்தனர். இருபக்கமும் வார்த்தைகள் தடித்திருந்ததில், இப்போது தேவைக்கு மட்டும் பேசிக்கொண்டிருந்தனர்.

மகளுக்குத் திருமணம் செய்து வைத்த கையுடன், “நீ தொடைச்சு எடுத்து தொலைய வச்ச எங்க கௌரவத்தை உனக்குக் கல்யாணம் முடிச்சு வச்சுக் கொஞ்சமா காப்பாத்திக்கிட்டோம். எங்களால் முடிஞ்சது அவ்வளவுதான். எங்களுக்கு இன்னொரு பொண்ணு இருக்கா‌. அவளையாவது நாங்க நல்ல முறையில் கரையேத்தணும். மகளே, இனி உன் சமத்து! உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ…” என்றுவிட்டனர் மஞ்சரியின் பெற்றவர்கள்.

“ம்மா… ப்பா… ஸாரிம்மா…” என்று மஞ்சரி கதற,

“நீ மன்னிப்பு கேட்டா மட்டும் எல்லாம் மாறிடுமா? எங்களுக்குத் தீராத அவமானத்தைத் தேடிக் கொடுத்துட்ட மஞ்சரி. வெளியே தலை காட்ட முடியலை. சொந்தங்காரங்க எல்லாம் கேவலமா பேசுறாங்க. எல்லாம் உன் தப்பால… கல்யாணத்துக்கு முன்னாடி பிள்ளை பெத்துக்கிறது பெருமை கிடையாது. அவமானம்! ம்ப்ச், இனி பேசி என்ன ஆகப்போகுது. இனியாவது புத்தியோட இருக்கப் பாரு…” என்றுவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

“பொண்ணைப் பெத்தவன் எவ்வளவு சுதாரிப்பா விலகிட்டான் பாரு. அவன் விவரமானவன். நான்தான் கேனையன்…” மகனையும் மருமகளையும் வீட்டிற்குள் சேர்த்துக்கொண்டதற்கு வெறுப்பாய் பேசினார் குணாளன்.

திருமணம் முடிந்து மஞ்சரியின் வீட்டினர் அப்போதுதான் கிளம்பியிருந்தனர்.

சசிதரனும் மஞ்சரியும் குனிந்த தலையுடன் ஓரமாய் நின்றிருக்க, “இதுங்களைப் பார்க்க பார்க்க எரியுதுடி எனக்கு. என் கண்முன்னால் வர வேணாம்னு சொல்லிவை…” என்றவர், இளைய மகனையும், மகளையும் பார்த்து, “உங்க அண்ணன் மாதிரி இல்லாம நீங்களாவது ஒழுக்கமா வளரணும். நீங்களும் ஏதாவது தப்பு பண்ணா…” என்று கண்களை உருட்டி அவர் கேட்க,

“நாங்க அப்படி எல்லாம் தப்பு பண்ண மாட்டோம்பா…” என்றனர் இருவரும்.

சுரீரென அடித்தது போல இருந்தது சசிதரனுக்கு. வீட்டின் மூத்த மகன் என்ற செருக்கு உண்டு அவனுக்கு. எனக்குப் பிறகுதான்டா உங்களுக்கு என்ற எண்ணம் கொண்டவன்.

தம்பி தங்கை மீது பாசம் இருந்தாலும், இத்தனை நாள் அவர்கள் முன் தலை நிமிர்ந்து கர்வத்தோடு சுற்றிக் கொண்டிருந்தவன், இன்று அவர்கள் முன்பே தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை அவனை அவமானத்தில் குன்ற வைத்தது.

அவர்கள் ‘தன் அண்ணனா இப்படி?’ என்ற பார்வை பார்த்த போதே, அடிமட்டத்தோடு சாய்ந்து போனான் சசிதரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com