13 – காதலின் ரீங்காரம்

👁️ 1263 Views

கணவனையும், பெற்றவர்களையும் மாறி மாறி பார்த்தவள், “உன் முழியே சரியில்லையே? என்ன எனக்குத் தெரியாம வேற ஏதாவது திட்டம் போட போறீங்களா? அதுக்குத்தான் வந்தியா? நீ வந்த நேரத்தில் என்னை எதிர்பார்க்கலையோ? இப்ப என்ன திட்டம் போட போறீங்க? யாரை கொல்ல? ஒருவேளை என்னைத்தானோ? நீங்க விக்ரமை கொன்னதை நான் கண்டுபிடிச்சிட்டேன்னு என்னைப் போட்டு தள்ள பிளான் பண்ண வந்தீங்களா?” என்று குதர்க்கமாகக் கேட்டாள்.

“எதையாவது உளறாம வாயை மூடு மது!” என்று குரலை உயர்த்தி அதட்டிய மயூரன், “நீ நிதானமா இல்லை. பேசாம அமைதியா உட்கார்!” என்று அவளை இழுத்துச் சோஃபாவில் அமர வைத்தவன், “இவளுக்குக் குடிக்க ஏதாவது கொடுங்க அத்தை. ஆபிஸ்ல இருந்து நேரா இங்கே வந்திருக்கா. பசியில் கூடக் கண்ணாபின்னான்னு கத்துவா…” என்றான்.

“இதோ மாப்பிள்ளை… உங்களுக்கும் சேர்த்து எடுத்துட்டு வர்றேன். நீங்க உட்காருங்க மாப்பிள்ளை…” என்ற திலகா உள்ளே விரைந்தார்.

மயூரன் மனைவியின் அருகில் அமர, அவனைச் சூடாகப் பார்த்தாள் மதுமதி.

அவளின் பக்கம் லேசாகச் சாய்ந்தவன், “நாம இரண்டு பேரும் ஹனிமூன் போகலாம்னு பிளான். அதை உன்கிட்ட சொல்லாம சர்ப்ரைஸா ஏற்பாடு செய்வோம்னு நினைச்சேன். பெரியவங்ககிட்ட சொல்லாம போக முடியாது பாரு. அதான் சொல்லிட்டு போவோம்னு வந்தேன். வந்த இடத்தில் உன்கிட்ட மாட்டிக்கிட்டேன்…” என்று போலியாக அழுத்துக் கொண்டான்.

“எதே? ஹனிமூனா? அதுக்கு வேற எவளையாவது பாரு…” என்று அவள் சூடாகச் சொல்ல,

“ம்க்கும்! கட்டிய பொண்டாட்டி தளதளன்னு கண்ணு முன்னாடி இருக்கும் போதே அவளைக் கட்டி கூடப் பிடிக்க முடியலை. இதில் வேற எவளையோ பார்த்து… அவளைக் கரெக்ட் பண்ணி… நடக்கிற காரியமா சொல்லு? எனக்கு என் தங்கப்பொண்ணே போதும். தகர டப்பா எல்லாம் வேணாம்…” என்று கேலியாகவே பதிலுரைத்தான்.

அவள் அதற்கும் உஷ்ண மூச்சை வெளியிட்டு, “நான் உன் கூட எங்கேயும் வர மாட்டேன்…” என்று சத்தமாகக் கீச்சிட்டாள்.

“ஷ்ஷ்… நான் எவ்வளவு பக்கத்தில் உட்கார்ந்திருக்கேன்… அப்புறமும் ஏன் கத்துற? எது சொல்வதா இருந்தாலும் மெதுவா சொல்லு…” என்றவன், அவளை இன்னும் இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

மதுமதி பட்டென்று எழ முயல, அவளின் கையைப் பிடித்து எழ விடாமல் தடுத்து மீண்டும் அமர வைத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவன் மீதே மோதி அமர்ந்தாள்.

“ஏய்… என்ன பண்ற?” என்று அவள் கத்த,

“கத்தாதேடி! உன் அப்பா பார்க்கிறார் பார்…” என்று மாமனாரை காட்டினான்.

மகளும், மருமகனும் அருகருகே இடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, அங்கே இருப்பதா வேண்டாமா என்று தடுமாறிய மனிதர், “நீங்க… நீங்க பேசிட்டு இருங்க மாப்பிள்ளை. நான் இதோ வந்துடுறேன்…” என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்.

சென்றவரை பார்த்து மதுமதி முறைக்க, அவளின் நாடியில் கைவைத்து தன் பக்கம் திருப்பியவன், “ஹனிமூன்னு சொன்னேனே… எந்த ஊருக்குன்னு கேட்க மாட்டியா?” என்று கேட்டான்.

தன் தாடையைப் பற்றியிருந்த அவனின் கையைப் பட்டென்று தட்டிவிட்டவள், “தொடுற வேலை எல்லாம் வச்சுக்காதே. என்ன சொன்ன, ஹனிமூனா? ஹனிமூன், சுகர்மூன் எல்லாம் நீயே தனிமூனா போய்க்கோ…” என்றாள் அலட்சியமாக.

“ஹனிமூன், சுகர்மூன் எல்லாம் போறதே நீயும் நானும் தொட்டு… தொட்டு விளையாட தான்டி தங்கப்பொண்ணே! தொடாதேனா எப்படி? அதுவும் பொண்டாட்டி புருஷனை தொடாதேன்னு சொல்றதெல்லாம் பெரும் பாவம் பார்த்துக்கோ. நீயோ இளகிய மனசுக்காரி. உன் புருஷனோட பாவத்தைச் சம்பாதிச்சுக்க மாட்டேன்னு நினைக்கிறேன்…” என்றான் அப்பாவியாக முகத்தைச் சுருக்கி.

“மூஞ்சை‌ பாரு… கரடி மூஞ்சி. சகிக்கலை…” என்று வெடுக்கென்று தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“இந்த லுக் பிடிக்கலையா உனக்கு? வேணும்னா நான் ஒரு ரொமான்டிக் லுக் விடட்டுமா?” என்று அவளின் பக்கம் நன்றாகக் குனிந்து காதருகே கிசுகிசுப்பாகக் கேட்டான்.

“இப்ப அது ஒன்னுதான் குறைச்சல். விட்டா மேலேயே விழுவ போல? தள்ளிப் போ…” என முழங்கையால் அவனின் வயிற்றில் இடித்துத் தள்ளினாள்.

அதே நேரம் திலகாவும், இருவருக்கும் காஃபியை போட்டு எடுத்து வர, சற்று தள்ளி அமர்ந்தான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

மாப்பிள்ளைக்கு முதலில் காஃபியை கொடுத்துவிட்டு, அடுத்து மகளுக்குக் கொடுத்தார்.

“நான் ஒன்னும் இங்கே விருந்தாட வரலை…” என்று வெறுப்புடன் சொன்னவள் காஃபி கப்பை எடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க,

“அநியாயம் பண்ணாதேடி மது. காப்பியை எடுத்துக் குடி…” என்று திலகா வற்புறுத்த, அப்போதும் அசையவில்லை அவள்.‌

“அத்தை, அதை இங்க கொடுங்க. அவளை நான் குடிக்க வைக்கிறேன்…” எனக் காஃபி கப்பை வாங்கிக் கொண்டான்.

அவரும் கொடுத்துவிட்டு, நாசுக்காக ஒதுங்கி சென்றுவிட, தனது காஃபி கப்பை டீப்பாயில் வைத்துவிட்டு, மனைவியின் தோளில் கைவைத்து தன் பக்கம் திருப்பியவன், அவளின் உதட்டில் காஃபி கப்பை வைத்து குடிக்க வைக்க முயல

“என்ன இப்படியெல்லாம் அடாவடித்தனம் செய்ற நீ? நான்தான் வேணாம்னு சொல்றேன்ல?” என்று கடுப்புடன் அவனின் கையைத் தட்டிவிட முயன்றாள்.

அதைச் செய்ய முயலுவாள் என எதிர்பார்த்தது போல மயூரன் சட்டென்று கையை விலக்கி அவள் தட்டி விடாதவாறு பார்த்துக் கொண்டான்.

“இதோ பார்… நீயே குடிச்சேனா நல்லது. அப்புறம் நான் குடிக்க வச்சா வருத்தப்படுவ…” என்று கண்களை உருட்டி மிரட்டலாகச் சொன்னான்.‌

அதையும் அவள் அசட்டையாக ஒதுக்க, “எப்படிக் குடிக்க வைப்பேன்னு கேளேன்…” என்றவன் பேச்சுக் காதில் விழாதது போல எங்கோ பார்த்தாள்.

“ரொமான்டிக் படம், ரொமான்டிக் நாவலில் எல்லாம் ஹீரோ தன் வாயில் ஃபுட்டை(Food) போட்டு அதை ஹீரோயின் வாயோட வாய் வச்சு… அப்படியே ஊட்டி விடுவாங்க. அதேபோல…”

“ச்சை… உவாக்! கருமம்! கருமம்!” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாந்தி எடுப்பது போல முகத்தை அஷ்டகோணலாக்கினாள் பாவை.

“இந்த உவாக் பண்ணாத்தான்டி… அந்த உவாக் வரும்…” என்று அவன் நமுட்டு சிரிப்புடன் சொல்ல,

எதைச் சொல்கிறான்? என்பதுபோல் மதுமதி அவனைத் திரும்பி பார்க்க, அவனின் பார்வையோ அவளின் வயிற்றைச் சுட்டிக்காட்டியது.

“அடேய்! கருமம் பிடிச்சவனே… உன் மூளை ஏன்டா இவ்வளவு டர்டியா யோசிக்கிது? பம்பரக்கட்ட மண்டையா. உன்னை அப்படியே…” என்று பாய்ந்து அவனின் சுருள் கேசத்தைக் கொத்தாகப் பிடித்தாள் பெண்.

“ஆஆ… அடியே… விடுடி… என் அழகான தலையைக் குருவிக் கூடு தலையா மாத்திடாதே! டர்டி பண்ணாத்தான்டி தங்கப்பொண்ணே… குட்டி தங்கக்குட்டி கிடைக்கும்…” அவள் தன் தலைமுடியைப் பிடித்து ஆட்டுவதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவன் வாயாட, அவளுக்குப் பொங்கி வந்த ஆத்திரத்தில், அவனின் உச்சி முடியைப் பிடித்து நன்றாகவே ஆட்டிவிட்டாள்.

அதில் அவனின் கையில் இருந்த காஃபி சிதற, அவன் மேலும் மட்டும் இல்லாமல் அவளின் மேலும் காஃபி சிதற, “ஷ்ஷ்! ஆ… சுடுது…” என்று வேகமாக விலகினாள் மதுமதி.

அவள் உடையில் காஃபி சிறிது மட்டுமே சிதறியிருந்தது. ஆனால், அவனின் கால்சட்டையில் நன்றாகவே கொட்டி நனைந்து போயிருந்தது. கொதிக்கக் கொதிக்க இருந்த காஃபி அது. சிறிது துளி அவள் மேல் தெறித்தற்கே எரிச்சல் கொடுத்தது. அவனுக்கு எவ்வளவு எரியும் என்று நினைக்கும் போதே அவளுக்குச் சட்டென்று பதறிப் போயிற்று.

“அச்சோ! ஸாரி…. ஸாரி மயூரன்… நான் தெரியாம… ரொம்பச் சுடுதா? ஐயோ எரியுமே…” என்று துடித்துப் போனாள்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com