13 – காதலின் ரீங்காரம்

👁️ 1263 Views

சட்டென்று கண்களில் கண்ணீர் துளிர்க்க, அவனையே தவிப்புடன் பார்த்து, லேசாகக் குனிந்து அவனின் காலை ஊதிவிட்டுக் கொண்டிருந்த மனைவியையே மயூரனின் கண்கள் மொய்த்தன. காஃபி கொட்டிய இடத்தில் அவனுக்கு எரிந்ததுதான். ஆனால், தன்னவள் தனக்காகத் துடிக்கும் போது, அவனுக்கு அந்த எரிச்சல் பெரிதாகவே தெரியவில்லை.

அவளின் தலையை மிருதுவாக வருடி, எனக்கு ஒன்றுமில்லை என்று அவனுக்குச் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

ஆனால், அதற்குள் சத்தம் கேட்டு வேகமாக அங்கே விரைந்து வந்த திலகா, “என்னாச்சு மாப்பிள்ளை? காப்பியை உங்க மேல ஊத்திட்டாளா? ஏன்டி, கொதிக்கிற காப்பியை போய் அவர் மேல் கொட்டி வச்சிருக்கியே… உனக்கு அறிவில்லை?” என மகளைத் திட்ட ஆரம்பித்தார்.

“அத்தை… அத்தை… அவ ஒன்னும் கொட்டலை. என் கைதான் தவறிடுச்சு. அவளை எதுவும் சொல்லாதீங்க…” என்று அவரைத் தடுத்தான்.

அவள் அவனின் முடியை பிடித்து ஆட்டியதால்தான் காஃபி சிந்தியது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். தன்னைக் காட்டிக் கொடுக்காமல், அவன் மீதே பழியைப் போட்டு கொள்வதைக் கேட்டு, ஒரு நொடி அமைதியானாலும், அவனின் பேச்சினால் தானே தான் தலையைப் பிடித்து ஆட்ட வேண்டியதாயிற்று என்ற கோபம் உடனே அவளைத் தொற்றிக் கொண்டது.

தன்னையும் மீறிக் கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டவள், “எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லுங்க…” என அன்னையைப் பார்த்து சீறினாள்.

“போதும்! வாயை அடக்குடி. மாப்பிள்ளைக்கு என்னாச்சு பாரு. உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் மாத்திக்கத் துணி ஏதாவது கொடு…” என்றார்.

“என்கிட்ட ஆம்பளைங்க ட்ரெஸ் ஏது?”

“உன் அப்பாவோட புது லுங்கி இருக்கும், எடுத்துட்டு வர்றேன். அதைக் கொடு… இப்ப நீ அவரை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ…” என்றார்.

‘ஏன் என் ரூமுக்குத்தான் கூட்டிட்டுப் போகணுமா? வேற ரூமுக்கு கூட்டிட்டு போனா ஆகாதா?’ என்று கடுப்புடன் முணுமுணுத்தாலும், அவன் முகத்தில் சூடு தாங்காத எரிச்சலின் சாயல் தெரிய, தாமதப்படுத்த விருப்பமில்லாமல், “வாங்க…” என்று அவனைத் தன் அறைக்கு அழைத்துப் போனாள்.

அவனைக் குளியலறைக்குள் செல்ல சொல்லிவிட்டு, “நான் போய் லுங்கியை வாங்கிட்டு வர்றேன்…” என்று நகர்ந்தவள், மீண்டும் நின்று, “ஆமா, உங்களுக்கு லுங்கி கட்ட தெரியுமா?” என்று கேட்டாள்.

அவன்தான் அரைக்கால் டவுசருடன் சுற்றுவானே…

கதவை மூடப் போனவன் அப்படியே நின்று அவளை முறைத்து, “என்னைப் பங்கம் பண்ணாதேடி! அதெல்லாம் எனக்குக் கட்ட தெரியும்!” என்றான்.

“அப்போ தெரிஞ்சும், என் முன்னாடி டவுசரோட சுத்தியிருக்க நீ?” என்று முறைப்புடன் கேட்டாள்.

“ஆமா, அப்படித்தான்னு வச்சுக்கோ, போடி!” என்றான் சீண்டலாக.

“நீ போடா பம்பரக்கட்ட மண்டையா…” என்று பதிலுக்குக் கத்திவிட்டு சென்றாள்.

கதவை மூடிவிட்டு காஃபி கொட்டிய இடத்தில் சுத்தம் செய்ய ஆரம்பித்தவனின் உதடுகளில் மெல்லிதாய் அரும்பியிருந்தது மென்னகை!

அவ்வளவு கோபம் கொண்டு கத்திக் கொண்டிருந்தவள், இப்போது தன்னிடம் வாயாடுவதில், அவளின் மனநிலை சற்று மாறி விட்டது என்பதை எடுத்துரைக்க, அவள் இப்படியே இருந்தால் கூடப் போதும் என்று நினைத்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் கதவை தட்டிய மதுமதி, ஒரு புதிய லுங்கியும், ஒரு துண்டையும் கொடுத்தாள்.

அதை வாங்கியவன், “ஏதாவது ஆயில்மெண்ட் இருந்தால் கொடு மது…” என்றான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“என்னாச்சு? ரொம்பப் புண்ணாகிருச்சா?” என்று சற்று வருத்தத்துடன் கேட்டாள்.

“நல்லா சிவந்து போயிருக்கு. கொஞ்சம் எரிச்சலாவும் இருக்கு. அதான் ஆயில்மெண்ட் போட்டால் எரிச்சல் குறையுமேன்னு பார்க்கிறேன்…” என்றான்.

“ஆயில்மெண்ட் இருக்கான்னு தெரியலை, பார்க்கிறேன். இல்லைனா அம்மாகிட்ட வாங்கிட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

சிறிது நேரத்தில் திலகாவிடமே ஒரு ஆயில்மெண்டை வாங்கிக் கொண்டு வந்தாள். அவள் வந்த போது உள்பனியன், லுங்கியுடன் கட்டிலில் அமர்ந்திருந்த மயூரன், கைலியை லேசாக விலக்கி தொடையில் சிவந்திருந்த இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

உள்ளே வந்த மதுமதி அவன் அமர்ந்திருந்த நிலையை எதிர்பாராமல் தடுமாறினாலும், அவளையும் மீறி அவளின் கண்கள் அவனின் கால் காயத்தைக் கண்டிருந்தன. அவனின் சிவந்த நிறத்தில் சூடுபட்ட சிவப்பு நன்றாகவே தெரிந்தது. பெரிய காயம் தான் போலவே… என்று கவலைப்பட்டாள்.

ஆனாலும், சட்டென்று கண்களைத் திருப்பிக் கொண்டு அவனிடம் மருந்தை கொடுத்தாள்.

“தேங்க்ஸ் மது…” என்று சொல்லி வாங்கிக் கொண்டான்.

“ஸாரி, நான் வேணும்னு செய்யலை…” என்று உண்மையாகவே வருந்தி மன்னிப்புக் கேட்டாள்.

மருந்தை தடவிக் கொண்டிருந்தவன், நிமிர்ந்து தனக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்தவளைப் பார்த்து விரிந்த முறுவலை சிந்தினான்.

மருந்தை போட்டுவிட்டு அவளின் அருகில் வந்தவன், அவளின் தோளில் கையை வைத்து, முகத்தைப் பார்த்தவன், “நீ இளகிய மனசுக்காரின்னு நான் சொன்னதில் தப்பே இல்லைடி தங்கப்பொண்ணே!” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவனின் அந்தப் பார்வையிலும், குரலிலும் அவளையும் அறியாமல் லேசாகத் திணறினாள். அவன் கை தன் தோளில் இருப்பது உறுத்த, “கொஞ்சம் பாவம் பார்த்தால் போதுமே… உடனே மேலே கையை வைக்கிறது. கையை எடு பம்பரக்கட்ட மண்டையா…” என்று பட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டாள்.

“ஜாம்பிக்கு உயிர் வந்திடுச்சு…” என்றான் நக்கலாக.

“ஹஹ… நான் ஜாம்பியா?” என்று பற்களைக் கடித்து, கைகள் இரண்டையும் அவனைப் பிராண்டுவது போல் வைத்துக் கொண்டு கேட்டாள்.

“இப்ப பார்க்க அப்படியே ஜாம்பி மாதிரித்தான் இருக்க…” என்று அவளின் நிலையைச் சுட்டிக்காட்ட, பட்டென்று கையைக் கீழே இறக்கியவள், “நான் ஒன்னும் ஜாம்பி இல்லை. என்னை அப்படிச் சொல்லாதே!” என்றாள் வெடுக்கென்று.

“நீ மட்டும் என்னைப் பம்பரக்கட்ட மண்டையான்னு சொல்லலாமா?” என்று கேலியாகக் கேட்க,

“ஹான்! அது உன் தலை அப்படி இருக்கு…” என்றாள் காரணம் போல்.

“என் அழகான புசுபுசு சுருள் முடியைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட. என் அம்மாவுக்கு என்னோட இந்த முடி ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? என் தலைக்குள்ள கையை விட்டு இதமா பதமா வருடி கொடுப்பாங்க. அப்படியே எனக்குச் சுகத்தில் கண் சொக்கும். ம்ம்! அதெல்லாம் ஒரு காலம்!” என்று தன் சிறு வயது பிராயத்தை நினைத்து பெருமூச்சு விட்டவன், “அம்மாவுக்கு அப்புறம், என் வொய்ப் வந்து அப்படி வருடி கொடுப்பாள்னு ஆசையா காத்திருந்தேன். ஆனால், நான் கட்டிக்கிட்ட ஜாம்பி என் தலையைப் பிடிச்சு ஆட்டி உலுக்குது. நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்டா மயூரா…” என்று புலம்பினான்.

“இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகலை. அப்படி உங்களைப் பாசமா பார்த்துக்கிறவளா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க. நாம டிவோர்ஸ் பண்ணிடலாம்…” என்று மதுமதி இலகுவாகச் சொல்ல, அத்துணை நேரமாக இலகுவாக இருந்தவனின் முகமோ பாறையாக இறுகிப் போனது.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com