👁️ 1374 Views
அத்தியாயம் – 14
இரவு பத்துமணி ஆகியிருக்க, பால்கனியில் நின்றிருந்தாள் மதுமதி.
அவளின் கண்கள், இரவு விளக்கின் வெளிச்சத்தில் வீட்டை சுற்றி ஓடிக் கொண்டிருந்த கணவனைத் தீர்க்கமாய்த் துளைத்துக் கொண்டிருந்தன.
அவனின் பின்னால் பெப்பியும் மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
‘எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது, எலி புழுக்கை எதுக்குக் காயுது’ என்பதுபோல இந்த நாயும் ஏன் அந்தாள் கூட வெக்கு வெக்குன்னு ஓடிட்டு இருக்கு? என்று தனக்குள் கிண்டலாக நினைத்துச் சிரித்துக் கொண்டாலும், கணவனை விட்டு அவளின் பார்வை அகலவில்லை.

அவளின் பார்வையை உணர்ந்துபோல, லேசாகத் தலையை உயர்த்தி அவளைப் பார்த்தான் மயூரன்.
அவனின் கண்களில் எந்த உணர்வுகளும் இல்லை. அடுத்த நொடியே முகத்தைத் திருப்பி, ஓடுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
“இப்ப எதுக்கு இந்த நைட் நேரத்தில் இப்படி ஓடிட்டு இருக்கான்? தூங்குற நேரத்தில் பேய் போல உலாத்துறான். அதுமட்டுமா ரொம்பத்தான் மூஞ்சை திருப்புறான். போயேன்…நான் அவன் நல்லதுக்காகத்தானே சொன்னேன். அது புரியாம மூஞ்சை குரங்கு மாதிரி வச்சுட்டு சுத்துறான்…” என்று அலுத்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் ஓட்டத்தை முடித்துக்கொண்டு அறைக்கு வந்த மயூரன், இப்போது அறையில் இருந்த மேஜையின் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த மனைவியைக் கண்டுகொள்ளாமல், குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவளும் அவனைக் கண்டுகொள்ளாதது போலக் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஈர முகத்தைத் துடைத்துக் கொண்டே வந்தவன் சோஃபாவின் ஒரு பக்கம் ஈரத்துண்டை போட்டுவிட்டு, மறுபக்கம் தளர்ந்து அமர்ந்தான்.
“ஈரத்துண்டை போய்ச் சோஃபாவில் போட்டுருக்க? அது நான் படுக்குற சோஃபா. ஈரமாச்சுனா சோஃபா நாறும். அப்புறம் எப்படி நான் அதில் படுக்க முடியும்? முதலில் அதை எடு!” என்று அதட்டினாள் மதுமதி.
அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் சொல்லாமல் தன் கைப்பேசியைப் பார்க்க ஆரம்பித்தான்.
“சொல்லிட்டே இருக்கேன். காது கேட்கலையா?” என்று கேட்டபடி வந்தவள், அவனின் கையில் இருந்த கைப்பேசியைப் பட்டென்று பறித்தாள்.
“இப்ப எதுக்குச் சலங்கை கட்டியது போல ஆடிட்டு இருக்க?” என்று சலிப்புடன் கேட்டான்.
“ஈரத்துண்டை எடு!” என்றாள் கட்டளையாக.
“அது உலரத்தான் விரிச்சு விட்டுருக்கேன். அதை ஏன் எடுக்கணும்?”
“சோஃபா என்ன ஈரத்துணியைக் காயப் போடுற இடமா? ஈரவாடை நாறும். எடு!” என்று இடுப்பில் கை வைத்து முறைப்புடன் கட்டளையிட்டாள்.
“இந்தச் சோஃபா நான் ரிலாக்ஸா உட்கார்ந்து பேப்பர் படிக்க, போன் பார்க்க, இப்படியே உட்கார்ந்து ரூமில் இருக்கும் டிவியைப் பார்க்க, என்னோட சின்னச் சின்ன ரிலாக்ஸேஷனுக்காகப் போட்டது. உனக்குப் படுக்கையா யூஸ் பண்றதுக்கு இல்லை. அப்படி உனக்கு இந்தச் சோஃபா நாறுச்சுனா… அதோ அங்கே அவ்வளவு பெரிய கிங் சைஸ் கட்டில் இருக்கு. அதில் போய்ப் படுத்து தூங்கு…” என்றான்.
“என்ன கட்டிலில் படுக்கணுமா? என்ன விளையாடுறீயா?” என்று அவள் சீற,
“இல்லை, நிஜமா சொல்றேன். இனி நீயும் நானும் ஒரே கட்டிலில் தான் படுக்கப் போறோம்…” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவள் ஏதோ சூடாகச் சொல்ல வர, “பொறு, நான் பேசிக்கிறேன்! இல்லை, கட்டிலில் படுக்க முடியாது… சோஃபாவில் படுப்பேன்… அதுக்கு விடலைனா தனி ரூமுக்கு போவேன். இல்லைனா, அப்பன் வீட்டில் போய் வாழாவெட்டியா இருப்பேன்னு சும்மா பூச்சாண்டி காட்டலாம்னு நினைக்காதே! அப்படி என் கூட வாழக்கூடாதுன்னு எண்ணம் இருந்திருந்தால், எப்படியாவது போராடி நீ நம்ம கல்யாணத்தை நடக்க விடாமல் செய்திருக்கணும். ஆனால், நடக்க விட்டுட்ட. அப்போ என் மனைவியா நீ இருந்தே ஆகணும்.
பாவம்! ரொம்ப மனக்குழப்பத்திலும், வேதனையிலும் கஷ்டப்படுறாளே… நாமும் அவளுக்குக் கஷ்டத்தைக் கொடுத்துட கூடாதுன்னு தான் உன் இஷ்டத்துக்குச் சோஃபாவில் படுத்துக்கோன்னு விட்டேன். உனக்காக நான் அப்படி வளைஞ்சு கொடுத்துப் போறதால்தான் உனக்கு டிவோர்ஸ் கேட்கிற தைரியத்தைக் கொடுத்திருக்கு. இனி நான் வளைஞ்சு போறதா இல்லை. நானும் நீயும் ஹஸ்பெண்ட் அன்ட் வொய்ப்! அதுக்கு ஏத்த மாதிரி தான் நம்ம வாழ்க்கை இருக்கணும்!” என்று கண்டிப்புடன் உரைத்தான் மயூரன்.
அவனின் குரலில் தெரிந்த தீவிரம் அவள் இதுவரை கேளாதது. அவனுக்கு இப்படியும் பேச தெரியும் என்பதை அறிந்ததில் அசந்து நின்றுவிட்டாள்.
சற்று நேரத்திற்கு முன் அவளின் வீட்டில் வைத்து அவள் விவாகரத்துச் செய்து விடலாம் என்று சொன்னதில் இருந்தே மயூரனின் முகம் முற்றிலும் மாறிப் போயிருந்தது. அங்கே வைத்து அவன் எதுவும் பேசவில்லை. திலகா அங்கேயே இரவு உணவு உண்ணலாம் என்று சொல்ல, மறுத்துவிட்டு, தன் உடையை மாற்றிக் கொண்டு உடனே மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
ஜெயராமன் கூட அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டுச் செல்லுங்கள் என்றார். ஆனால், அதில் அவனுக்கு விருப்பமில்லை. மதுமதியுமே இருக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அவனுடன் வந்துவிட்டாள்.
ஆனால், அப்போதிருந்து இருவருக்கும் இடையே மௌனம் மட்டுமே நிலவியது. அவனின் அமைதி மதுமதிக்கு உறுத்தவே செய்தது. ஆனால் அந்த மௌனத்திற்கும் சேர்த்து வைத்துப் பேசியிருந்தான் அவன்.
அவன் பேச்சில் அவள் அசந்து நின்றது ஒரு நொடி தான். அடுத்த நொடியே, “என்ன மிரட்டுறீங்களா மிஸ்டர் மயூரன்?” என்று உக்கிரத்துடன் கேட்டாள்.
“உனக்கு மிரட்டலா தோனுச்சுனா… ஆமாம்! அப்படியே வச்சுக்கோ…” என்றான் அலட்சியமாக.
“ஆ!” என்று அதிர்ந்தவள், சுதாரித்து, “நீங்க மிரட்டினா நான் அடிபணிந்து போயிடுவேன்னு நினைப்பா?” எனக் கேட்டாள்.
“அடிபணிந்து போகணும்னு நான் எதிர்பார்க்கலை. அன்பா இருக்கணும்னு தான் எதிர்பார்க்கிறேன். ஆனால், நீதான் என்னை இப்படி மிரட்டும் நிலைக்குத் தள்ளுற. அது உனக்குத்தான் நல்லதில்லை…” என்றான் அழுத்தமாக.
“நீங்க ரொம்ப ஓவரா பண்றீங்க. நீங்க கூப்பிட்டதும் உங்க பின்னாடி வந்துட்டேன்னு தெனாவட்டில் பேசுறீங்களா? எனக்கு என் அப்பா மேல இருக்கும் கோபத்துக்கு அவர் வீட்டில் சாப்பிட, தங்க எதுவும் பிடிக்கலை. ஆனால், உங்க மேல கோபம் இருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் உங்க பின்னாடி வந்தேன். ஆனால், அதையே உங்களுக்குச் சாதகமா எடுத்துக்கிட்டு நீங்க பேசுவது சரியில்லை மயூரன்…” என்றாள் கண்டிப்புடன்.
சோஃபாவிலிருந்து பட்டென்று எழுந்து அவளின் அருகில் வந்தான் மயூரன்.
அவன் எழுந்து வந்த வேகத்தில் பயந்து பின்வாங்கிய மதுமதி அப்படியே பின்னால் விழப் போனாள்.
அவளின் இடுப்பை சுற்றி கையைப் போட்டு வளைத்து அவளை விழ விடாமல் பிடித்தவன், “நம்பிக்கையா? என் மேலா? அப்படி என் மேல் நம்பிக்கை இருந்திருந்தால் டிவோர்ஸ் கேட்டிருப்பியாடி?” என்று அவளின் மீது தன் உஷ்ண மூச்சை அனலாகத் தெறிக்க விட்டபடி சீறினான் மயூரன்.

அவன் தன் இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்து அவனுக்கு நெருக்கமாக நெருக்கியதில் திணறிய மதுமதி, அவனின் பிடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயன்றாள். ஆனால், அவளின் முயற்சி புரிந்தும் சிறிதும் அவளை விடாமல் தன்னோடு இறுக்கினான் மயூரன்.
“ம்ப்ச்… விடு! விடு!” என்று அவனின் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினாள்.
“முடியாதுடி! விட முடியாது! இப்பவும் எப்பவும் உன்னை என்னால் விடவே முடியாது!” என்று கர்ஜித்தான்.
“எனக்கு நீ தொடுவது பிடிக்கலை… விடுன்னு சொல்றேன்ல!” என்று குரலை உயர்த்தித் தன் எதிர்ப்பைக் காட்டினாள் மதுமதி.
“ஆமாடி! உனக்கு என்னைப் பிடிக்காது… நான் தொடுவது பிடிக்காது! ஆனா அந்த விக்ரமை மட்டும் உனக்குப் பிடிக்கும்! அப்படி அவனைத்தான் உனக்குப் பிடிக்கும்னா கழுத்தை அறுத்துக்கிட்டுச் செத்தாவது போயிருக்கணுமே தவிர, எனக்குக் கழுத்தை நீட்டியிருக்கக் கூடாது!” என்று அவளை விட ஆங்காரமாகக் கத்தினான் மயூரன்.
அவன் கழுத்து நரம்புகள் புடைக்கக் கத்தியதில் மிரண்டுதான் போனாள் பாவை.
©nandhavanamnovels.com