👁️ 947 Views
அத்தியாயம் – 15
“உங்களுக்குத் தனியா சொல்ல வேண்டியதில்லை ரத்தினம். பார்த்துக்கோங்க…” என்று கட்டிப்போடப்பட்டிருந்த பெப்பியை பார்த்துக் கொண்டே மயூரன் சொல்ல, அதுவோ தன்னை அவிழ்த்து விடச் சொல்லி இப்பக்கம் அப்பக்கமுமாகக் குதித்துக் கொஞ்சி, குழைந்து, கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது.
“ஸாரிடா பேப். ஒரு இரண்டு நாள் பொறுத்துக்கோ. நாங்க சீக்கிரம் வந்துடுவோம், சரியா பையா?” என்று அதன் தலையைச் செல்லமாக வருடி சமாதானம் சொன்னான் மயூரன்.
ஆனால், அதுவோ தானும் வருவதாகச் சொல்லி காரையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் குரைத்தது.
“நோ பேப்… உன்னால் இங்கேதான் சுதந்திரமா இருக்க முடியும். நீ ஜாலியா இங்க விளையாடிட்டு இரு. ரத்தினம் உன்னை நல்லா கவனிச்சுப்பார். இல்லையா ரத்தனம்?”
“கண்டிப்பா நல்லா பார்த்துக்குவேன் சார். சாரை போக விடு பெப்பி…” என்று ரத்தினமும் சொல்ல,
தீனமான சத்தத்தைக் கொடுத்து மயூரனையே அப்பாவியாகப் பார்த்து வைத்தது பெப்பி.
“என்னை ஃபீல் பண்ண வைக்காதேடா பேப்…” என்று சொல்லிக் கொண்டே காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் மயூரன்.
“நாங்க கிளம்பியதும் கேட்டை மூடிட்டு பெப்பியை கழற்றி விட்டுருங்க ரத்தனம். லேட் பண்ணாம நேரத்துக்குச் சாப்பாடு கொடுங்க…” என்றான்.
“பெப்பிப் பத்தி கவலைப்படாம போயிட்டு வாங்க சார்…” என்ற ரத்தினத்திற்குக் கையை அசைத்தான்.
காரில் சாய்ந்து நின்றிருந்த மதுமதியின் அருகில் வந்த மயூரன், “கிளம்பலாமா?” என்று வினவ,
“நான் ரெடியாத்தான் நிக்கிறேன். உங்களுக்குத்தான் உங்க பெப்பியை விட்டு வர மனசில்லை போல. அப்படிக் கஷ்டப்பட்டு எதுக்குக் கிளம்பி போகணும்? பேசாம இங்கேயே இருக்கலாமே?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள் மதுமதி.
“நீ திரும்ப ஆரம்பிக்காதே. முதலில் வண்டியில் ஏறு…” என்றவன் தானே கார் கதவை திறந்து அவளை உள்ளே அமர வைத்து விட்டு சுற்றி வந்து காரை எடுத்தான்.
“நான் உங்க பெப்பிக்காகத் தான் சொன்னேன்…”
“பெப்பியை விட்டுட்டு போக எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. நம்ம கூடக் கூட்டிட்டு போக ஆசையாகவும் இருக்கு. ஆனா நான் கார் ஓட்டணும். நீ அவனைப் பார்த்துக்கிறேனா சொல்லு, நம்ம கூடக் கூட்டிட்டு போகலாம்…”
“நோ… நோ… என்னால் எல்லாம் பார்த்துக்க முடியாது. எனக்கு நாயினாலே அலர்ஜி. அதுங்களைத் தள்ளி நின்னு பார்க்கத்தான் பிடிக்குமே தவிர, பக்கத்தில் வைத்துப் பழகப் பிடிக்காது…” முகத்தைச் சுளித்துக் கையை மறுப்பாக ஆட்டினாள்.
“எனக்கு நாய்னா ரொம்பப் பிடிக்கும். உனக்கு நாயை கண்டாலே பிடிக்காது. நமக்குள் நல்ல ஒத்துமை போ…” என்று அலுத்துக் கொண்டபடி தன் தலையில் தட்டிக் கொண்டான்.
“நமக்குள் எந்த ஒத்துமையும் கிடையாது, பொருத்தமும் கிடையாது. அதனால்தான் இதெல்லாம் வேணாம்னு சொன்னேன். கேட்டால் தானே…” என்று அலட்சியமாகத் தோளை குலுக்கினாள்.
“அப்படியே மண்டையில் போட்டேனா பாரு. எங்க சுத்தினாலும் நீ அங்கேயே வந்து நில்லுடி…” என்று காரை ஓட்டிக்கொண்டே இன்னொரு கையினால் அவளின் தலையில் லேசாகத் தட்டினான்.
“என்ன நீ அடிக்கிற?” என்று தலையைத் தேய்த்துக் கொண்டே கேட்டாள்.
“பின்ன என்ன எப்ப பார்த்தாலும், பிரிஞ்சிடலாம். விட்டுட்டு போயிடுறேனே பேசிட்டு இருக்க? திரும்ப என்னோட ஆங்கார ஆட்டத்தைப் பார்க்க ஆசையா இருக்கா? இனி நீ என்னைச் சீண்டிப் பார்த்தால் ஆங்கார ஆட்டத்தோட நிறுத்திக்க மாட்டேன். அன்னைக்கு ட்ரையல் காட்டியதையும் முழுசா நடத்திக் காட்டிடுவேன்…” என்று கடுமையாகவே எச்சரித்தான்.
“நீ இப்படியே பேசிட்டு இருந்தால் மூஞ்சில கொதிக்கக் கொதிக்கச் சூடுதண்ணீயை ஊத்தி விட்டுடுவேன்…” என்றாள் பற்களைக் கடித்துக் கொண்டு.
“நீதானே? கொஞ்சமா காஃபியை தெரியாம என் மேல கொட்டியதுக்கே கில்டியா ஃபீல் பண்ணிட்டு சுத்தின. நீ என் மூஞ்சில சுடுதண்ணீ ஊத்திருவ?” கிண்டலாகக் கேட்டான்.
“எல்லா நேரமும் அப்படிக் கில்டியாக மாட்டேன். எனக்குப் பிடிக்காததை நீ இனி ட்ரை பண்ணா திரும்பக் கத்தி என் இடுப்பில் தான் இப்ப எல்லாம் இருக்கு. எடுத்து ஒரே சொருகுதான்…” என்றாள்.
“அடிப்பாவி! இன்னுமா கத்தியை வச்சுட்டு சுத்துற?” என்று அவன் வியந்து கேட்க,
“அன்னைக்கு என்கிட்ட கத்தி இல்லை. அது இல்லாததால்தானே நீ ட்ரையல் காட்டுறேன்னு அசிங்கம் பண்ண? இனி நீ ட்ரையல் காட்டக்கூட என் பக்கத்துல வரக்கூடாதுன்னுதான் இப்பவெல்லாம் என் கூடவே கத்தியை வச்சுட்டு இருக்கேன். இனி ட்ரையல் காட்ட நீ முயற்சி பண்ணினா கூட, நீ ‘டை’ (Die) ஆகிடுவ!” என்று தலையைச் சாய்த்து, நாக்கை வெளியே தள்ளி ஜாடை காட்டினாள்.
“அம்மாடியோவ்! என் பொண்டாட்டி வீரதீர சூரப்புலிதான். புருஷன் பக்கத்தில் வந்தால் கூடக் குத்தி கொல்ல ரெடியா இருக்கும் பெண் புலி…” என்று போலி வியப்புடன் மெச்சினான்.
“என்ன நக்கலா?”
“இல்லைடி, நிஜமா உன் துணிச்சலில் எனக்குப் புல்லரிச்சு போச்சு போ…” என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.
அவள் சூடாகப் பார்க்க, “கத்தியை பார்த்து கவனமா வச்சுக்கோ. உன் மேலே எங்கயாவது குத்திக்கப் போகுது…” என்றான் அக்கறையும் கலந்து.
“எனக்கே தெரியும், நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்…” என்று முறைப்புடன் சொல்லிவிட்டு பார்வையை வெளிப்புறமாகத் திருப்பிக் கொண்டாள் மதுமதி.
மயூரனும் அவளைக் கண்டுகொள்ளவில்லை.
அதன் பின் சிறிது நேரம் காரில் அமைதி மட்டுமே சிறிது நேரம் நிலவியது.
அப்போதுதான் நினைவு வந்தது போல மனைவியின் புறம் திரும்பிய மயூரன், “ஒரு இரண்டு நாளைக்கு என்னை மானாவரியா பேசாம, மரியாதையா பேசு. நம்ம வீட்டுக்கு வந்த பிறகு நீ என்னை எப்படியாவது பேசிக்கோ…” என்றான்.
“மரியாதை கொடுக்கலைனா?” என்று அவனின் புறம் திரும்பி கிண்டலாகக் கேட்டாள்.

“மரியாதை கொடுக்காத வாய்க்கு பரிசா லிப் லாக் அடிச்சுடுவேன்…” என்றான் அசால்டாக.
“ஹான்! என்று சட்டென்று அதிர்ந்தவள், அடுத்த நொடியே, “கத்தின்னு சொன்ன பிறகும்…” என்று கடுகடுத்தாள்.
“அதுக்கெல்லாம் பயந்தா உன் கூட வாழ முடியுமாடி?” என்று கேலியாகக் கேட்டான்.
“வர வர ரொம்ப ஓவரா பேசுற நீ…” என்று சீறினாள்.
“பேச மட்டும்தானே செய்றேன்…” என்று தோளை குலுக்கினான்.
‘அதென்னவோ உண்மைதான்’ என்று நினைத்தவள் அவனுடன் வேறு எதுவும் வாயாடாமல் அமைதியாக வந்தாள்.
அவர்கள் ஒரே படுக்கையில் படுக்க ஆரம்பித்து ஒரு மாதத்தைக் கடந்திருந்தது. ஆனால், இத்தனை நாள்களில் அவன் அவளை நெருங்கவே இல்லை. அவள் கூட, தூக்கத்தில் நெருங்குவது போல அவன் தன்னை எதுவும் செய்துவிடுவானோ என்று ஆரம்பக் காலங்களில் பயந்திருக்கிறாள். ஆனால், அப்படி எல்லாம் விளையாட்டுத்தனமாகக் கூட அவன் முயற்சிக்கவில்லை.
‘என்னை நம்பி ஒரே படுக்கையில் படு!’ என்றவன், அந்த நம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொண்டான்.
ஆனால், அவளுக்குத்தான் குத்தும். இந்த வாழ்வினால் இவனுக்கு என்ன லாபம்? இப்படி ஒரு வாழ்வு இவனுக்குத் தேவையா? என்றுதான் அவளுக்குத் தோன்றுமே தவிர, தன்னால் அவனின் இந்த வாழ்க்கையை வளமாக்க முடியும் என்பதை மட்டும் சொகுசாக மறந்து போவாள்.
அதைவிட, மனம் விரும்பியவனை அவளால் மறக்க முடியவில்லை என்பதே உண்மை. ‘அவன் இல்லை என்றால் இவன்’ என்று அவளால் அவ்வளவு இலகுவாக மனத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அவன் உயிரோடு இல்லை என்பதைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, இன்னொருவன் தன் வாழ்வில் வந்ததும், ‘அதுதான் அவன் இப்போது இல்லையே… இவனோடு வாழ்ந்துவிட்டு போவோம்’ என்று அவளால் நினைக்க முடியவில்லை.
அது அவளுக்கு மட்டுமல்ல, இப்போது அவளை உண்மையாக விரும்பிக் கொண்டிருக்கும் மயூரனுக்கும் செய்யும் துரோகமாகவே நினைத்தாள். ‘நீ என்னை விரும்புகிறாய், அதனால் போனால் போகிறது என்று உன்னோடு நான் வாழ்கிறேன்’ என்பது கூட மயூரனுக்குத் தான் இழைக்கும் அநியாயமாகவே அவளுக்குப் பட்டது.
அவளின் மனம் தானாகவே மாற வேண்டும். அப்போதுதான் அவள் மட்டும் இல்லாமல் மயூரனும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
அவர்களுக்குள் இப்போது மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ மாற்றங்கள் நிகழவில்லை என்றாலும், சற்று இலகுவாக நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.
அன்றைக்கு மறுநாளே மயூரன், ஜெயராமனை வெளியே சந்தித்து, அவரையும் அழைத்துச் என்று செல்வராஜை சந்திந்து விக்ரமின் மடிக்கணினி, அலைபேசியைக் கேட்டான்.
செல்வராஜ் உடனே எல்லாம் தூக்கிக் கொடுத்துவிடவில்லை.
“அதான் அவனே இல்லைன்னு ஆகிருச்சே மாப்பிள்ளை. அப்புறம் எதுக்கு அவனைப் பற்றி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு? அதுவும் உங்க கல்யாணம் வேற முடிஞ்சிருச்சு. மது மனசு கொஞ்சம் மாறியதும், பழசை எல்லாம் மறந்துட்டு உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறதை விட்டுட்டு. எதுக்கு முடிஞ்சு போனதை தூக்கி சுமக்க நினைக்கிறீங்க?” என்று கேட்டார் செல்வராஜ்.
“சில விஷயங்களில் எனக்கே தெளிவு வராம அப்படிப் போனா போகுதுன்னு விட முடியாதுங்க செல்வா மாமா…”
“அதான் நாங்க எல்லாமே தெளிவா சொல்லிட்டோமே?”
“நீங்க சொன்னது எல்லாமே அப்பட்டமான உண்மைதானா?” கூர் பார்வையுடன் மயூரன் கேட்க, அரசியல் பக்கம் இருக்கும் அவர் தன் முகத்தில் சிறு சலனத்தைக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை.
ஆனால், ஜெயராமன் நெளிந்தார். அவரின் முகத்தில் கலக்கமான சலனம்.
அதைக் கண்டுகொண்ட மயூரனுக்குச் சந்தேகம் இன்னும் வலுக்கவே செய்தது.
“நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான்னு நானே உறுதிப்படுத்திருக்கிறேன் மாமா. விக்ரமோட திங்க்ஸ் எல்லாம் கொடுங்க. இதுக்கு மேலேயும் நீங்க மறுத்தால்…” என்றவன் உங்கள் மேல் சந்தேகமாக உள்ளது என்று சொல்லாமல் சொல்ல, அதன்பின் செல்வராஜ் மறுக்கவில்லை.
விக்ரமின் பொருட்களை எடுத்து வந்து கொடுத்தார். அப்போது ஜெயராமன் கலக்கத்துடன் செல்வராஜை பார்ப்பதும், அவர் கண்களால் ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்னதும் மயூரனின் ஆராய்ச்சி கண்களில்பட்டது.
அதை வாங்கிச் சென்று கவியுகனிடம் கொடுத்தான்.
“நீங்களும் ஒரு முறை இதை நேரடியா செக் பண்ணிடுங்க மயூரன்…” என்ற கவியுகன் அவன் முன்பே விக்ரமின் மடிக்கணினியை இயக்கினான்.
மயூரன் என்ன வரப் போகிறதோ என்று சங்கடத்துடன் அதைப் பார்த்தான்.
சில ரகசிய போல்டர்களில் தான் காணொளி வீடியோக்கள் இருந்தன. அதற்கான பாஸ்வேர்டை விக்ரமை அடித்து வாங்கியதாகச் சொல்லி, செல்வராஜ் தான் சொல்லிவிட்டிருந்தார். அதைக் கொடுத்தே அந்த ரகசிய போல்டர்களைத் திறந்திருந்தனர்.
©nandhavanamnovels.com