2 – காதலின் ரீங்காரம்

👁️ 1286 Views

அவரின் முகம் லேசாக மாறினாலும், சமாளித்துக் கொண்டவர், “என்ன மாப்பிள்ளை… நம்ம ஜாதி ஆளு நீங்களே இப்படிக் கேட்டால் எப்படி? நமக்கு நம்ம ஜாதி தானே பெருசு…” என்றார்.

“அது உங்களுக்கு. எனக்கு இல்லை! ஜாதி மதம் பார்த்து மனுஷங்களை வகைப் பிரிக்கிறவன் இல்லை நான். எனக்கு எல்லாரும் ஒன்னு தான்!” என்றான் அழுத்தமாக.

“ஆங்” என அவனைப் பார்த்தார் அவர்.

“பொண்ணோட ஆசையைப் பொசுக்கிட்டு ஜாதியை தூக்கி வச்சு அப்படி என்ன நீங்க சாதிச்சிட போறீங்க சார்? உங்க பொண்ணு சாகுமளவுக்குத் துணிந்திருக்காங்கனா அப்போ அவன் மேல அவங்களுக்கு எவ்வளவு லவ் இருக்குன்னு புரியலையா உங்களுக்கு? ஒருவேளை உங்க பொண்ணுக்கு எதுவும் ஆகியிருந்தால் என்ன செய்திருப்பீங்க சார்? அப்போ வந்து உங்க ஜாதி உங்களுக்கு ஆறுதல் சொல்லுமா? இல்லை, உங்க பொண்ணைத் தான் திருப்பித் தருமா?” என்று கேட்டான் அவன்.

“நல்லா கேளுங்க தம்பி…” என்றபடி அங்கே வந்தார் திலகா.

மயூரனும், ஜெயராமனும் மருத்துவமனைக்குப் பக்கவாட்டில் இருந்த பூங்கா போன்ற இடத்தில் போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து தான் பேசிக் கொண்டிருந்தனர்.

“ஏய், பொண்ணைத் தனியா விட்டுட்டு நீ எதுக்குடி இங்கே வந்த?” மனைவியை அங்கே பார்த்ததும் அதட்டினார் ஜெயராமன்.

“ராதா வந்திருக்கா. அவளைப் பார்த்துக்கச் சொல்லித்தான் விட்டுட்டு வந்தேன். நம்ம பொண்ணை இப்படிப் கொஞ்ச நேரம்கூடத் தனியா விடவே பயப்படுறீங்களே… அப்ப அவ உயிரோட இருக்க ஆசைப்படுறீங்க தானே? அவளுக்குப் பிடிச்சவனுக்குக் கட்டி வச்சால் தான் அவள் இனி விபரீத முடிவு எடுக்க மாட்டாள்ங்க. பேசாம நாம அவளை அந்த விக்ரமுக்கே கட்டி வச்சிடலாம்ங்க…” என்றார் திலகா.

“என்னடி நீயும் இப்படிப் பேசுற? அவனுக்குப் போய் எப்படி?” அப்போதும் ஜெயராமன் தன் முடிவிலிருந்து பின்வாங்க முடியாமல் தயங்கினார்.

“நானும் முதலில் அப்படி நினைச்சுத் தான் நீங்க சொல்வதை எல்லாம் கேட்டுக்கிட்டு அவனை மறந்துட சொல்லி அவளுக்குப் புத்தி சொன்னேன். ஆனால், அவள் இந்தளவு துணிவாள்னு நாம நினைக்கவே இல்லையேங்க? சாவை தொட்டுட்டு மறுபிறப்பு பிறந்து வந்திருக்காள். அவள் நமக்கு ஒரே பொண்ணுங்க. அவள் இல்லாம… என்னால் நினைச்சுக் கூடப் பார்க்க முடியலைங்க…” என்று கண்ணீருடன் சொன்னவர், “அவள் விருப்பப்பட்டவனுக்கே கட்டி வச்சுடலாம்ங்க…” என்றார் கெஞ்சுதலாக.

“அது ஒன்னும் அவ்வளவு சுலபம் இல்லைடி. நம்ம ஜாதிக்காரங்களே நம்மைக் கீழ்த்தரமா பேச ஆரம்பிச்சிருவாங்க. ஒருத்தனும் நம்மை மதிக்க மாட்டானுங்க. நம்ம முகத்துக்கு நேரா கேள்வி கேட்பானுங்க…” என்று அடுக்கினார் அவர்.

“அவங்க எல்லாம் யார் சார்? அவங்களா உங்களை உட்கார வச்சு சோறு போடுறாங்க? இல்லை, உங்க பொண்ணுக்கு அவங்களா நகை போட்டு, பணம் செலவு செய்து கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க? உங்க பொண்ணுக்குக் கல்யாணம் வச்சா ஐநூத்தி ஒன்னு ரூபா மொய் வச்சுட்டு, நீங்க வைக்கிற விருந்தையும் குறை சொல்லிட்டுத்தான் போவாங்க. அவங்களுக்காக உங்க பொண்ணு மனசை கொன்னு அவளுக்கு வேற வாழ்க்கை அமைச்சு கொடுத்தா உங்களுக்குப் பாராட்டு விழா நடத்தப் போறாங்களா? உங்க இந்தப் பிடிவாதத்தால் கஷ்டப்படப் போவது உங்க பொண்ணு தான் சார். மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்காம, உங்க பொண்ணை மட்டும் யோசிச்சு நல்ல முடிவா எடுங்க…” என்று மயூரன் சொன்ன பிறகும் ஜெயராமனிடம் பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடவில்லை.

அதற்கு மேல் அவன் என்ன சொல்வது? அவரின் பெண்! அவர்தான் யோசிக்க வேண்டும் என்று நினைத்தவன், திருமணம் நடக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டான்.

கீழ்வானம் மெல்ல சிவந்து சூரியன் வருவதற்கான அறிகுறிகள் தெரிய, ஓடிக் கொண்டிருந்தவன் கால்கள் முற்றிலும் தொய்ந்து போக, இதற்கு மேல் என்னால் முடியாது என அவனின் கால்கள் கிடுகிடுவென்று ஆட ஆரம்பிக்கவும், ஓரமாகப் போட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்து கொண்டான் மயூரன்.

உடனே பெப்பியும் எழுந்து வந்து அவன் அருகில் நின்று, முகத்தால் அவனை உரசியது.

அதன் முகத்தைத் தடவி கொடுத்தாலும் அவனின் யோசனை எங்கோ இருந்தது.

மதுமதிக்காகப் பேசிவிட்டு, திருமணத்தை நிறுத்திவிட்டு வந்துவிட்டாலும், அவனின் மனதில் பெரும் சஞ்சலம்!

முதல் முறையாக அவன் விரும்பிய பெண் அல்லவா! அதை அவளிடம் திருமணத்திற்குப் பின் தான் சொல்ல வேண்டும் என்று அத்துணை ஆவலுடன் இருந்தான்.

அப்படிச் சொல்லும் போது அவளின் பாவனை எப்படி இருக்கும்? அவளின் கருவிழிகள் என்ன சொல்லும்? அதிருமா? தன் அழகான உதடுகள் விரிய வியந்து அவனைப் பார்ப்பாளா? அல்லது முன்பே ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று கடிந்து கொள்வாளா? என்று அவனுக்குள்ளாக ஆசையாக நினைத்துப் பார்த்துக் கொள்வான்.

அதிலும், நிச்சயம் முடிந்தபின், அவள் தனக்கானவள் என்ற உறுதியில் பல பல கற்பனை ஊற்றுகள் அவனுள்.

இப்போது அனைத்தும் நிராசையாகப் போன உணர்வு! அவ்வுணர்வை விட்டு வெளியே வர அவனின் மனம் கால அவகாசம் கேட்டுத் துடித்துக் கொண்டிருந்தது.

தனக்கே இப்படி இருக்கிறது என்றால், மதுமதிக்கு எப்படி இருக்கும்? என்று அவனின் அந்த மனநிலையிலும் அவளுக்காக யோசித்தான் அவன்!

அவளுக்காகவாவது அவளின் தந்தை அவள் காதலுக்குச் சம்மதம் தெரிவித்து விக்ரமுடனே அவளைச் சேர்த்து வைக்க வேண்டும்! என்று மனதார நினைத்தபடி தன் சிந்தையிலிருந்து வெளியே வந்தான் மயூரன்.

அவனின் தடவலுக்குத் தலையைக் கொடுத்தபடி அவனையே பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தது பெப்பி.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அவனின் முகம் சரியில்லை. எதையோ நினைத்து வருந்துகிறான் எனப் புரிந்து, தானும் வருந்திக் கொண்டிருந்த அந்த ஜீவனைப் பார்த்து, அவனின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

இரண்டு கைகளாலும் அதன் புசுபுசுவென்ற முடிக்குள் கைவிட்டு கொஞ்சியவன், “என்னடா பேப், எனக்காக ஃபீல் பண்றீயா? என் முகத்தில் அப்படி உனக்கு என்ன புரிஞ்சதாம், ம்ம்?” என்று கேட்டவன், அதன் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி விளையாடினான்.

அவன் ஓடியதில் சுருள் கேசத்தில் தண்ணீர் கோர்த்து நின்றிருக்க, அவன் முட்டியதும் அந்த வியர்வை துளிகள் பெப்பியின் மீது பட, வாலை ஆட்டிக் கொண்டு தலையை அசைத்து சிலுப்பியது.

“ரொம்பத்தான் சிலிர்த்துக்கிறயே… சுத்த காரன்டா நீ!” என்று செல்லமாகக் கடிந்து கொண்டபடி அதன் தலையில் தட்டியவன், அதனுடன் சற்று நேரம் விளையாடினான்.

அவன் சரியாகிவிட்டான் என்ற சந்தோஷத்தில் பெப்பியும் அவனைச் சுற்றி சுற்றி ஓடி வந்து விளையாடியது.

பெப்பியுடன் விளையாடியதில் மனம் சற்று அமைதியாகியிருக்க, பெப்பியும் சகஜமாகிவிட்டதை அறிந்த பிறகே வீட்டிற்குள் சென்றான்.

சமைப்பதற்குக் கவிதா என்ற ஒரு பெண்மணி வருவார். அவரும் சற்று நேரத்தில் வந்துவிட, அவரைச் சமைக்கச் சொல்லிவிட்டு, தனது அறைக்குச் சென்றான்.

கால்கள் வலிக்க, வியர்வையில் நனைந்த பனியனை கழற்றி போட்டு விட்டு மேலாடை இல்லாமல் சற்று நேரம் படுக்கையில் அப்படியே கால்களை நீட்டி படுத்துவிட்டான்.

உறக்கம் அண்டவில்லை என்றாலும், உடல் ஓய்வு கேட்டது.

கவிதா சமைத்து முடித்துவிட்டு அவனுக்குக் குரல் கொடுக்க, எழுந்து வந்து மாடியிலிருந்தே எட்டிப் பார்த்தவன், “நீங்க எடுத்து வச்சுட்டு கதவை சாத்திட்டு கிளம்புங்கக்கா. நான் பார்த்துக்கிறேன்…” என்றான்.

“சரிங்க தம்பி…” என்றார்.

உள்ளே வந்து குளித்து, கிளம்பி கீழிறங்கி வந்தான். கவிதா பெப்பிக்குத் தனியாகச் சமைத்துவிட்டு போனதை எடுத்துச் சென்று வீட்டிற்கு வெளியே அதன் குட்டி வீட்டிற்குள் இருந்த பெப்பியை அழைத்து அதற்குக் கொடுத்தான்.

அது சாப்பிடுவதைத் திருப்தியாகப் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் வந்து, தனக்கான உணவை எடுத்து வைத்து சாப்பிட்டான்.

உண்டு முடித்துவிட்டுச் சோஃபாவில் வந்து அமர்ந்து தொலைக்காட்சியைப் போட்டு விட்டு அதைப் பார்த்தான்.

அவனின் தந்தை நடத்திய சிட்பண்ட் தொழிலில் அவனுக்கு ஆர்வமில்லை. அவன் ஒரு பைக் பிரியன்! விதவிதமான பைக்குகள் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தன் தொழிலாகப் பைக் சார்ந்ததையே தேர்ந்தெடுத்து, ஒரு பிரபல பைக் கம்பெனியின் டீலர்ஷிப் வாங்கிப் பைக் ஷோரூமை நடத்திக் கொண்டிருந்தான்.

ஷோரூம் திறக்க நேரம் இருந்ததால் மெதுவாகத்தான் கிளம்பிச் செல்வான். சிறிது நேரம் தொலைக்காட்சியில் நேரத்தை நெட்டி தள்ளிவிட்டு ஷோரூமிற்குத் தனது பைக்கிலேயே கிளம்பிச் சென்றான்.

நாள்கள் மெல்ல அப்படியே நகர்ந்து சென்று கொண்டிருந்தன. இடையில் அவனின் பெரியம்மாவும், அத்தையும் அழைத்துத் திருமண வேலைகள் எந்தளவில் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்டனர்.

அவர்களிடம் அவன் திருமணம் நின்றுவிட்டதை இன்னும் சொல்லவில்லை. அவனாக விருப்பப்பட்டுக் கேட்டு, அவனுக்காகப் பேசி முடித்தார்களே… இப்போது அது நடக்காது என்று எப்படிச் சொல்வது? மதுமதியை திட்டுவார்களோ? என்று ஏதேதோ யோசித்துத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான்.

ஒரு சில நாள்கள் சென்றிருந்த நிலையில், இதற்கு மேலும் தள்ளி போட வேண்டாம் என்று நினைத்து, அன்று காலையில் முதலில் அவன் தன் பெரியம்மாவிற்கு அழைத்தபோது, வீட்டின் அழைப்புமணி அழைத்தது.

பெரியம்மாவிற்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, போய்க் கதவை திறந்தான்.

மதுமதியின் தந்தை ஜெயராமன் வாசலில் நின்றிருந்தார்.

அவரை யோசனையுடன் பார்த்தபடி வரவேற்றான்.

“மாப்பிள்ளை… அந்தப் பய விக்ரம் சரியில்லை மாப்பிள்ளை… அவன்… அவன்… இப்ப செத்துட்டான் மாப்பிள்ளை!” என்று படபடப்பாய் சொன்னபடி உள்ளே வந்தார் ஜெயராமன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com