👁️ 1332 Views
செல்வராஜின் மகள் ஓவியா இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே அவளுக்கு டீம் லீடராக இருந்த யுகேந்திரனை காதலிக்க ஆரம்பித்தாள்.
அவளின் காதல் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் மதுமதி தற்கொலைக்கு முயற்சி செய்தது ஓவியாவிற்குத் தெரிய வர, அவளைப் பார்க்க சென்னையிலிருந்து கிளம்பி வந்தவளிடம், உயிருக்கு போராடி பிழைத்த மதுமதி தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் ஓவியாவின் தந்தை செல்வராஜும் தான். அவருடன் சேர்ந்து தான் தன் தந்தை ஜாதி வெறியில் விக்ரமை எங்கோ அடித்து விரட்டி விட்டதாகச் சொல்ல, வேற்று ஜாதிக்காரனான யுகேந்திரனை காதலித்த ஓவியா பயந்துதான் போனாள்.
அதோடு மதுமதியை பார்க்க வந்த அவளின் தோழி உமாவை பிடித்து ஓவியா விசாரிக்க, அவளும் மதுமதி சொன்னது உண்மைதான் என்பதை உறுதி செய்தாள். அதனால் தந்தைக்கும் ஜாதி வெறி உண்டு. வேறு ஜாதிக்காரனை விரும்பினால் தந்தை சும்மா விட மாட்டார் எனப் பயந்து போன ஓவியா, அதை அவளின் காதலன் யுகேந்திரனிடம் சொல்லி உடனே பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி அவனை வற்புறுத்தினாள்.
அவனும் அவள் சொன்னதை ஏற்றுப் பதிவுத் திருமணம் செய்ய இருந்த நேரத்தில்தான் விக்ரமின் இறப்பு பற்றி ஓவியாவிற்குத் தெரிய வந்தது. அதற்கு அவளின் தந்தை செல்வராஜும் துணையாக இருந்தார் என மதுமதியின் தோழியின் மூலம் அறிந்து கொண்ட ஓவியா, ஒருவேளை தன் காதலனையும் தன் தந்தை விக்ரமை போல் ஜாதி வெறியால் கொன்று விடுவாரோ என்று பயந்து தன் காதலனை பிரியும் முடிவை எடுத்தாள் அவள். அதனால் அவளுக்கும், யுகேந்திரனுக்கும் இடையே பிரச்சினை வலுத்திருந்தது.
அதே நேரத்தில் யுகேந்திரனை அலுவலகத்திலிருந்து லண்டனுக்கு அனுப்ப, வேலை நிமித்தமாக ஓவியாவை பிரிய வேண்டிய கட்டாயம் அவனுக்கு வந்தது. ஆனால், அதையே தங்கள் காதலின் பிரிவிற்கும் அடித்தளமாக்கிக் கொண்டாள் ஓவியா.
சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு யுகேந்திரனுக்குத் தெரியாமல் பெங்களூர் சென்று அங்கே வேறு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாள் ஓவியா.
இரண்டு வருடங்கள் சென்றிருந்த நிலையில் லண்டனில் இருந்து வந்த யுகேந்திரன் ஓவியாவே தேடி கண்டுபிடித்து, அவளின் மனத்தை மாற்றி, மீண்டும் தங்கள் காதலை புதுப்பித்துக் கொண்டான்.
அதோடு மதுமதி சொன்னதை மட்டுமே வைத்து அவள் எப்படித் தன்னைப் பிரியும் முடிவை எடுக்கலாம்? மதுமதி சொன்னதெல்லாம் உண்மைதான் என என்ன உறுதி என்று கேள்வி எழுப்பிய யுகேந்திரன், ஓவியாவை இன்னும் தீவிரமாக விசாரித்துவிட்டு வரச் சொல்லியிருந்தான். அதோடு, தங்கள் காதலை அவளின் பெற்றவர்களிடம் சொல்லி, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் சொல்லி அனுப்பியிருந்தான் அவன்.
ஓவியாவும் வீட்டில் தன் காதல் விஷயத்தைச் சொல்ல, அவளின் தந்தை செல்வராஜோ யுகேந்திரனை நேரில் சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அதனால் யுகேந்திரனும் கரூர் வந்து முதல் நாள் மாலையில்தான் செல்வராஜை சந்தித்துப் பேசியிருந்தான்.
ஆனால், இதுவரை அவனுக்கு எந்தச் சாதகமான பதிலும் செல்வராஜ் சொல்லியிருக்கவில்லை. அந்த நிலையில் தான் மதுமதியின் வளைக்காப்புக்கு வந்தால் விக்ரமை கொல்ல தந்தையும் உடைந்தையாக இருந்தாரா என அறிந்த கொள்ள முடியுமா என அறியவே அங்கே வருகை புரிந்திருந்தாள் ஓவியா.
சற்றுமுன் அறைக்குள் மயூரனும், மதுமதியும் பேசுவதைக் கேட்டிருந்த ஓவியா, மயூரனுக்கு விக்ரம் பற்றி ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை மனத்திற்குள் குறித்துக் கொண்டு, அதை யுகேந்திரனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் அன்னையின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
அறையிலிருந்து கோபமாக வெளியேறிய மதுமதி, வளைகாப்பிற்காகக் கிளம்பி வந்திருந்த யாரையும் பொருட்படுத்தாமல் விறுவிறுவென வீட்டிலிருந்து வெளியேறி பக்கவாட்டில் இருந்த தோட்டத்தின் பக்கம் சென்றிருந்தாள்.
அவளைத் தேடிக் கொண்டு பின்னாலேயே வந்த மயூரன் ஜெயராமனும், செல்வராஜும் பேசிக் கொண்டு நின்றிருந்ததைப் பார்த்து செல்வராஜை முறையாக அழைக்க அருகில் சென்றான்.
“ஜாதி எல்லாம் பார்த்து ஒரு புரயோஜனமும் இல்லை செல்வா. அதோட பொண்ணுக்குப் பிடிச்சா போதும்னு மட்டும் நினைக்காம, பையன் எப்படின்னு தீர விசாரி. நான்தான் அதை முதலிலேயே செய்யாம முட்டாள்தனம் பண்ணிட்டேன். நீயாவது நல்லா விசாரித்து அதுக்குப் பிறகு முடிவு பண்ணு…” என்று செல்வராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெயராமன்.
“அந்த யுகேந்திரனை பத்தி விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கேன் அண்ணே. நேத்து நேரில் பேசி பார்த்த வரைக்கும் பையன் பரவாயில்லைதான். ஆனா, அவன் பின்னணி தெரியாம என்னால் ஒரு முடிவுக்கு வர முடியாது அண்ணே…” என்று செல்வராஜ் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்களை நெருங்கிய மயூரன், “வாங்க செல்வா மாமா. அத்தை வந்திருக்காங்களா?” என்று விசாரித்தான்.
“ராதாவும் எங்க பொண்ணும் வந்திருக்காங்க மாப்பிள்ளை…” செல்வராஜ் சொல்ல,
“இப்பதான் ஓவியாவை பார்த்தேன் மாமா. அத்தையைத்தான் இன்னும் பார்க்கலை. இதோ பார்க்கிறேன்…” என்ற மயூரன் கண்களால் மனைவி எங்கே சென்றாள் என்றும் தேடினான்.
“மது கிளம்பிட்டாளா மாப்பிள்ளை?” என்று ஜெயராமன் கேட்க,
“அத்தை அவளைக் கிளப்பி விட்டாங்க மாமா. ஆனா… அதெல்லாம் அவளுக்குக் கோபம். நேத்து இருந்தே ரொம்பக் குதிச்சுட்டு இருந்தாள். இன்னைக்கு உச்சாணிக்கொம்பில் ஏறிட்டாள். அவளுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கலையாம். இந்தப் பக்கம் தான் எங்கயோ போனாள். நான் போய்ப் பார்த்து கூட்டிட்டு வர்றேன் மாமா…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
“மது இன்னும் மாப்பிள்ளை கூட ராசியா போகலையா அண்ணே?” என்று செல்வராஜ் விசாரிக்க,
“எங்கே செல்வா? இன்னும் அவள் மலை இறங்கவே இல்லை. பழசையே பிடிச்சு தொங்கிட்டு இருக்காள்…” என்று பெருமூச்சு விட்டார் ஜெயராமன்.
“பேசாம நீங்க மதுகிட்ட உண்மையைச் சொல்லியிருக்கலாம் அண்ணே…”
“அதுக்கு மாப்பிள்ளை விட மாட்டேன்னு சொல்லிட்டார் செல்வா. அவள் எதுவும் விபரீதமா முடிவு எடுத்துடுவாளோன்னு பயம். அதுக்கும் அவள் கர்ப்பமான பின்னால், ஒருமுறை… ரொம்ப ஆடினாள்னு மாப்பிள்ளை அவனைப் பற்றி டிடெக்டிவ் மூலமா விசாரிச்சதை மட்டும் சொன்னார். அதையும் அவள் நம்பலை செல்வா…” என்றார் வருத்தமாக.
ஆம்! மீண்டும் மதுமதி ஒரு முறை மனம் அழுத்தம் தாங்காமல் வெடித்திருக்க, அவளுக்கு முழு உண்மையும் சொல்லாமல், விக்ரம் பற்றி விசாரித்த தகவல்களை மட்டும் கவியுகன் கொடுத்த ரிப்போர்ட்டில் இருந்து பிரித்து எடுத்து, அவளிடம் காட்டி சொல்லியிருந்தான் மயூரன்.
அவை எல்லாம் ஏற்கெனவே தந்தை சொன்னதுதானே… மீண்டும் இவனும் சேர்ந்து கொண்டு சொல்கிறான் என்று கணவன் மீதுதான் மதுமதி கோபம் கொண்டாளே தவிர, மயூரன் சொன்னதை நம்பவில்லை அவள்.
அரைகுறை தகவல் என்றுமே நிறைவை தராது. அனைத்தையும் முழுதாகச் சொன்னால் மட்டுமே மதுமதியால் நம்ப முடியும் என்று மயூரன் மீண்டும் பாடம் கற்றான். ஆனாலும், கூட அவளிடம் முழுவதையும் சொல்ல அவனுக்கு விருப்பமிருக்கவில்லை.
வீட்டின் பக்கவாட்டில் இருந்த மனைவியைத் தேடி சென்ற மயூரன், “வீட்டுக்குக் கெஸ்ட் வந்திருக்கும் போது, இப்படி அநியாயம் பண்ணாதே மது! நீ ஒன்னும் செய்யத் தேவை இருக்காது. சேரில் உட்கார்ந்திருந்தால் பெரியவங்க வளையல் போட்டு, ஆசீர்வாதம் பண்ணுவாங்க அவ்வளவுதான்…” என்று அறைக்குள் பேசியதை மீண்டும் ஆரம்பிக்க விரும்பாமல் அதை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, நயமாக அழைத்தான் மயூரன்.
“எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கவே இல்லைன்னு சொன்னால் உனக்குப் புரியுதா இல்லையா? அதிலும் என் அப்பன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம், பெருமை. அப்படி என்ன சாதிச்சுட்டார்னு அவருக்குச் சந்தோஷம்? அதை எல்லாம் பார்க்க பார்க்க எனக்கு வெறியாகுது. அதுவும் வளைக்காப்பு முடிஞ்சு அந்தாள் வீட்டுக்குத்தான் என்னைக் கூட்டிட்டுப் போவாங்களாம். இப்படி வயிறை காட்டிக்கிட்டு என்னால் அந்த ஆள் வீட்டுக்கு எல்லாம் போக முடியாது…” என்று கோபமாகக் கீச்சிட்டாள் மதுமதி.
“ஷ்ஷ்! கத்தாதேடி… எப்படி இருந்தாலும் இதை எல்லாம் சமாளிச்சு தானே ஆகணும். இனி குழந்தை பிறக்கும். அப்போ அதையும் யாருக்கும் காட்டாம வளர்ப்பியா? லூசுத்தனமா ஏதாவது உளற கூடாது. இங்கே உன்னைப் பார்த்துக்கப் பெரியவங்க யாரும் இல்லை. அங்கேனா உங்கம்மா உன்னைப் பார்த்துக்குவாங்க. அதை மட்டும் யோசி. கண்டதை எல்லாம் யோசிச்சு மனசை குழப்பிக்காதே!” என்று கடிந்து கொண்டான்.
“இதுக்கெல்லாம் காரணம் நீதான். உன்னால்தான் எனக்கு இவ்வளவு திண்டாட்டம் என்று மதுமதி சீற,
“அவ்வா! அநியாயமா பொய் சொல்லாதேடி. நீதான் எல்லாத்துக்கும் காரணம்னு மறந்துட்டு… கன்னி பையன் கற்பை களவாடிட்டு… நான் காரணமா?” என்று அவன் வாயில் கையால் அடித்து அப்பாவியாகப் பேச, அவன் அப்படி அவளையே சொல்வது வேறு அவளின் முகத்தைச் சுருங்க வைத்தது.
இனியும் விளையாடினால் தாங்க மாட்டாள் என்று நினைத்தவன், அவளின் கையைப் பற்றி எழுப்பி, “கொஞ்சமே கொஞ்ச நேரம். ஒரு குட்டி பிள்ளையை இந்த உலகத்துக்கு வரவேற்க இந்தப் பங்க்ஷ்ன் நடக்கப் போகுது. அதை மட்டும் நினைவில் வச்சு வா…” என்று சாந்தமாக அழைத்தான்.
“சும்மா இப்படியே பேசி என்னைச் சமாளிக்கப் பார்க்காதே. இப்ப வர்றேன். ஆனால் நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கே தான் இருப்பேன். டெலிவரி டேட் நெருங்கும் போது வேணா அம்மா கூட இருக்கேன்…” என்றாள் உத்தரவு போல்.
“சரி, உன் விருப்பபடியே பண்ணிக்கலாம், வா…” என்று அவளைச் சமாளித்து அழைத்துச் சென்றான்.
அதன்பின்னும் சிரித்து மகிழ்ந்து எல்லாம் அவள் இருக்கவில்லை. அமைதியாக மணையில் பெயருக்கு அமர்ந்திருந்தாள்.
ஊரிலிருந்து மயூரனின் அத்தை குடும்பமும், பெரியம்மா குடும்பமும் வந்திருக்க, அனைவரும், மதுமதிக்கு வளையல் பூட்டி சந்தனம் தடவி ஆசீர்வதித்தனர்.
மயூரன் மனைவிக்குத் தங்க வளையல் வாங்கியிருந்தான்.
“என் தங்கப் பொண்ணுக்குத் தங்கத்தில் வளையல்…” என்று மென்புன்னகையுடன் சொல்லி அவளுக்குப் போட்டுவிட்டான்.
“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை…” என்று முணுமுணுத்துக் கொண்டாள் மதுமதி.
ஒருவழியாக மனைவியைச் சமாளித்து நல்லபடியாக வளைக்காப்பை நடத்த வைத்த மயூரன் அவளை அவளின் அன்னையின் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அப்படியும் செல்லும் போது மதுமதி முகத்தைத் தூக்க, “ஒரு இரண்டு மூனு நாளைக்குச் சம்பிரதாயத்துக்கு அங்க இரு மது. அப்புறம் இங்கே வந்திடலாம். நானே வந்து உன்னை அழைச்சுட்டு வர்றேன்…” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.
©nandhavanamnovels.com