23 – காதலின் ரீங்காரம்

👁️ 1403 Views

அத்தியாயம் – 23

யுகேந்திரன், ஓவியாவின் முன் அமர்ந்திருந்த மயூரன் தவிப்புடன் இருந்தான்.

அவர்களுக்குச் செல்வராஜ் பக்கம் இருக்கும் உண்மையை விளக்க, விக்ரமின் விஷயத்தில் அவரின் பங்கு எவ்வளவு என்று சொல்ல மட்டுமே நினைத்து அவர்களிடம் பேச நினைத்தாலும், மேலோட்டமாக மற்ற சில விஷயங்களையும் அவர்களுக்குச் சொல்ல வேண்டியது இருந்ததால் அவனால் இலகுவாக இருக்க முடியவில்லை.

“எங்களுக்குச் சொல்ல வேண்டியதை மட்டும் சொன்னால் போதும் மயூரன்…” என்று யுகேந்திரன் உறுதி கிடைத்த பிறகே அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தான்.

தனக்கு மதுமதியின் காதல் விஷயம் எப்படித் தெரிய வந்தது என்று ஆரம்பித்து, விக்ரம் பற்றித் தான் அறிந்து கொண்ட தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் விக்ரமை ஜாதி காரணம் கொண்டு செல்வராஜின் உதவியுடன் அடித்து விரட்டி விட்டாலும், மதுமதியின் தற்கொலை முயற்சிக்குப் பின், மனம் மாறிய ஜெயராமன் மீண்டும் விக்ரமை தேடிச் சென்ற போது அவனின் உண்மை முகம் தெரிய வந்ததைச் சொன்னான் மயூரன்.

விக்ரம் எப்படிப்பட்டவன், அவன் என்ன மாதிரியாகப் பெண்களை உபயோகித்துக் கொண்டான் என மயூரன் சொன்னதை வைத்தே யுகேந்திரனும், ஓவியாவும் மற்ற அனைத்தையும் ஊகித்துக் கொண்டனர்.

அதற்கு மேல் அவர்களுக்குத் தான் அறிந்து கொண்ட மற்ற விஷயங்களை மயூரன் விளக்கவில்லை.

விக்ரமின் மடிக்கணினியில் பெண்களின் காணொளிகள் இருந்தன என்று சொல்லி மயூரன் நிறுத்தி அதற்கு மேல் பேச முடியாமல் எழுந்து சமையலறைக்குச் சென்றான்.

அந்த இடைவெளியில் மதுமதியின் காணொளியும் இருந்திருக்கிறது. அதைக் கண்டே கோபத்தில் ஜெயராமன் விக்ரமை கொன்றிருக்க வேண்டும் என்று ஊகித்த யுகேந்திரன் தன் அருகில் இருந்த ஓவியாவிடம் சொல்லிக் கொண்டிருக்க, அது வீட்டின் வெளியே நின்றிருந்த மதுமதியின் காதில் அப்பட்டமாக விழுந்திருந்தது.

விக்ரம் பற்றி மயூரன் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்திருந்தாள் மதுமதி.

அவள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த போதே அவளிடம் அந்த வீட்டின் சாவி ஒன்று உண்டு. மயூரன் இரவுதான் ஷோரூமிலிருந்து வருவான் என்பதால், அவள் மாலை வேலை முடிந்து வரும்போது தன்னிடம் உள்ள சாவியை பயன்படுத்திக் கொள்வாள்.

பெற்றவர்களின் வீட்டில் இருக்க முடியாமல் அவஸ்தையாக உணர்ந்தவள், இந்த நேரம் மயூரன் ஷோரூமில் தான் இருப்பான் என்பதால் அவளுக்கு அந்தத் தனிமையும் தேவையாக இருக்க, தானே கிளம்பி வந்திருந்தாள்.

அவள் வரும்போது வீடு திறந்திருக்க, உள்ளேயும் பேச்சுச் சத்தம் கேட்கவுமே… அதிலும் விக்ரம் பற்றிய பேச்சு என்றதும் அப்படியே வெளியே நின்றுவிட்டாள்.

அவளிடம் மயூரன் சொன்ன அதே விஷயம்தான் என்பதால் முதலில் அதை எல்லாம் கேட்ட மதுமதிக்குக் கோபம்தான் வந்தது. அதுவும் அதை எல்லாம் ஓவியாவிடமும், வேறு ஏதோ ஒரு ஆடவனிடம் ஏன் சொல்கிறான்? என்ற ஆத்திரமும் வந்தது.

ஆனால் அவர்கள் தொடர்ந்து பேசிய விஷயம் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

விக்ரம் பற்றி மயூரன் சொல்லி முடித்ததும், “விக்ரம் ஃப்ராடுன்னு அக்காவுக்குத் தெரியாதா மாமா?” என்று கேட்டாள் ஓவியா.

“அவன் இப்படி ஆள் மாறாட்டம் செய்து பொண்ணுங்களை ஏமாத்துறவன்னு அவள்கிட்ட சொன்னோம். ஆனால், அவள் அதை இப்ப வரை நம்பலை. ஆரம்பத்தில் அவ அப்பா அவளோட காதலுக்குத் தீவிரமா மறுப்பு தெரிவித்தது… அவளை நம்ப விட மாட்டிங்குது. அவளோட லவ் ஜெயிக்கக் கூடாதுன்னு வேணும்னே பொய் சொல்றோம்னு நினைக்கிறாள்…” என்றான் மயூரன்.

“அவனைப் பற்றி நீங்க திரட்டிய ஆதாரத்தை அவங்ககிட்ட காட்டியிருக்கலாமே?” என்று இப்போது யுகேந்திரன் கேட்க,

“அதையும் அவள் நம்பத் தயாரா இல்லை. போலியா விக்ரம் பற்றித் தகவல் தயாரிச்சு அவளை ஏமாத்திட்டு இருப்பதா நினைக்கிறாள்…” என்று ஆதங்க பெருமூச்சு விட்டான் மயூரன்.

“இதென்ன இத்தனை பிடிவாதம்?” என்று ஓவியா கேட்க,

“அவங்க அப்படி நினைப்பதை தப்பு சொல்ல முடியாது ஓவியமே! மதுமதி சூசைட் அட்டெம்ட் செய்து, போராடி பிழைத்து வந்த பிறகும் கூட, அவங்கப்பா அவங்க காதலுக்குப் பச்சை கொடி காட்ட தயங்கி இருக்கார். அப்படி இருக்கும் போது, அவங்க டவுட் படுவதில் நியாயம் இருக்கு. அதையும் தாண்டி அந்த விக்ரம் ஃபிராடுதான்னு நம்ப வைக்கிற மாதிரி வேற ஏதாவது ஆதாரம் இருந்தால் அவங்க நம்பலாம்…” என்று யுகேந்திரன் மதுமதிக்கு ஆதரவாகப் பேசினான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“இதுக்கு மேல் என்ன ஆதாரத்தைக் கொண்டு வர முடியும் யுகேன்?” என்று ஓவியா கேட்க,

“இருக்கலாம். அதை அவங்ககிட்ட இவங்க வெளிப்படையா சொல்ல முடியாத நிலையா இருக்கலாம். அப்படிச் சொன்னால், மதுமதி அதனால் மிகவும் பாதிக்கப்படலாம்னு இவங்க மறைக்கலாம்…” என்று மயூரனை பார்த்துக் கொண்டே சொன்ன யுகேந்திரனின் கண்கள், ‘அப்படித்தானே?’ என்று அவனிடம் வினவின.

மயூரன் ஒப்புக்கொள்ளவும் இல்லை, அதே நேரம் மறுக்கவும் இல்லை.

அதைக் கவனித்த மதுமதிக்கு ஏதோ உறுத்தியது. மயூரன் அதை மறுக்கவில்லை என்றால், அப்போது தன்னிடம் சொல்லாத வேறு விஷயமும் இருக்கிறதா? அப்படி என்ன விஷயத்தைத் தன்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறான்? என்று யோசித்தாள்.

அவர்கள் தொடர்ந்து விக்ரமை ஜெயராமன் கொன்றதாகவும், அதை மறைக்க மட்டுமே செல்வராஜ் உதவி செய்ததாகவும் பேசிக் கொண்டிருக்க, எந்தக் காரணத்திற்காக என்று மயூரன் சொல்லாமல், அவர்களையே ஊகிக்கவிட்டான்.

விக்ரம் பெண்களை எப்படி அவனுக்கு ஏற்ப நடக்க வைத்தான் என்று மயூரன் சொன்னதை வைத்தே ஊகித்த யுகேந்திரன், “பொண்ணுங்களோட நீயூட் வீடியோவை வைத்துப் பிராட்தனம் செய்தவன் மேல் உங்க பெரியப்பாவுக்குக் கோபம் வந்திருக்கலாம். அதுவும், தன் பொண்ணோட ‘அந்த’ மாதிரி வீடியோவை பார்த்தபிறகும் எப்படி ஒரு அப்பாவால் பொறுமையா இருக்க முடியும்? அதான் அவரே…” என்று ஓவியாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ந்தாள் மதுமதி.

‘உன் வீடியோவும் அதில் இருந்த மாதிரி உன் அப்பா சொன்னார்’ என்று முன்பு மயூரன் மேலோட்டமாகச் சொல்லியிருந்தான். ஆனால், அப்போது அவனுக்கே உறுதியாகத் தெரியாது என்றும் சொல்லியிருந்தான். அதன்பின் சில மாதங்களுக்கு முன் விக்ரம் பற்றி மீண்டும் அவளுக்கு எடுத்து சொன்ன போதும், அவளின் வீடியோ இருந்த மாதிரி மயூரன் அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அதிலும் தான் அப்படி நடந்து கொள்ளவே இல்லை எனும் போது விக்ரமிடம் அப்படி எல்லாம் வீடியோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பினாள் மதுமதி.

ஆனால், உள்ளே மயூரனோ… யுகேந்திரனின் ஊகத்தை மறுக்கவே இல்லை. அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்? என்ற பெரிய வினா அவளிடம் எழுந்தது.

மயூரன் உள்ளே பேசியது கேட்க, அதைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“மாமா அப்ப இருந்த மனநிலையில் அவரசப்பட்டு… ம்ப்ச்… ஒரு தகப்பனா அவர் செய்தது எனக்குத் தப்பா தெரியலை. அவர் இடத்தில் நான் இருந்திருந்தாலும் அதுதான் செய்திருப்பேன். அவர் அவசரப்பட்டுச் செய்தாலும், அது விக்ரமுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைதான். அதைப் புரிந்து கொண்ட உங்க அப்பா அதை ஆக்ஸிடென்டா மாத்தினார். இந்த விஷயம் என் மாமியாருக்கு கூடத் தெரியாது. மதுகிட்ட முழுக் காரணமும் சொன்னால், அவள் நிச்சயம் உயிரை விட்டுருவாள். அதனால் அவகிட்ட ஓரளவுக்கு மேல் எங்களால் உண்மையைச் சொல்ல முடியலை. இப்ப உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு…” என்ற மயூரன் இருவரிடமும் அவர்கள் மூலம் யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்க, அவர்களும் அவனுக்கு உறுதி கொடுத்தனர்.

மதுமதிக்கோ, “மதுகிட்ட முழுக் காரணமும் சொன்னால், அவள் நிச்சயம் உயிரை விட்டுருவாள். அதனால் அவகிட்ட ஓரளவுக்கு மேல் எங்களால் உண்மையைச் சொல்ல முடியலை…” என்று கணவன் சொன்னதே காதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டது.

உள்ளே “இந்த உண்மை எல்லாம் தெரிந்த பின்னும் எப்படி அக்காவை நீங்க கல்யாணம் செய்யச் சம்மதம் சொன்னீங்க?” என்று ஓவியா கேட்டுக் கொண்டிருக்க,

“ஏன்னா… எனக்கு மதுவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!” என்று மயூரன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அது எல்லாம் காதில் விழுந்தாலும், அதற்கு முன் அவன் சொன்னதே மதுமதிக்குள் இருந்து குடைந்து கொண்டிருந்தது.

பேசி முடித்துவிட்டு, ஓவியாவும், யுகேந்திரனும் அங்கிருந்து கிளம்புவது போல இருக்க, அவர்களிடம் பேசும் மனநிலையில் இல்லாத மதுமதி, அப்படியே பக்கவாட்டில் நகர்ந்து சென்று சுவரின் பக்கம் மறைந்து கொண்டாள்.

அப்போதுதான் தன் குட்டி வீட்டிற்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெப்பி விழித்து அவளைப் பார்த்துவிட்டு ஓடி வர, அதே நேரத்தில் மயூரனும் யுகேந்திரனையும், ஓவியாவையும் வழியனுப்ப வீட்டின் வெளியே வர, மதுமதியின் பக்கம் வந்த பெப்பி அப்படியே திரும்பி மயூரன் பக்கம் ஓடிவிட்டது.

யுகேந்திரனும், ஓவியாவும் கிளம்பியதும், மயூரன் வாசலிலேயே நின்று பெப்பியிடம் பேசிக் கொண்டிருக்க, அதுவோ, மதுமதி இருந்த பக்கம் அவனை வர சொல்லி குரைத்தது.

அது தன்னை விளையாட கூப்பிடுவதாக நினைத்த மயூரன், “இப்ப உன் கூட விளையாட எனக்கு டைம் இல்லைடா பேப். நான் ஷோரூம் கிளம்பணும்…” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆனால் பெப்பி மதுமதி இருந்த பக்கம் சென்று குரைத்து, மயூரனையும், அவளையும் மாறி மாறிப் பார்த்தது.

“அங்கே என்னடா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே அவன் அந்தப் பக்கம் வர, அதே நேரம் மறைவிலிருந்து வெளியே வந்தாள் மதுமதி.

அவளைப் பார்த்து அதிர்ந்தவன், “மது!” என்று மெல்ல முணுமுணுத்தான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com