23 – காதலின் ரீங்காரம்

👁️ 1404 Views

மதுமதியோ இடி தலையில் விழுந்தது போல ஒரே இடத்தில் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள்.

“மதுமா… மது… இங்கே பாருடி!” அவளை அப்படிப் பார்த்து துடித்த மயூரன், அவளைப் போட்டு உலுக்க,

கண்ணை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தவள், “இவர்… இவர் சொல்வதெல்லாம் உண்மையா?” என்று தீனமாகக் கேட்டாள்.

மயூரன் அமைதியாக இருக்க, “சொல்லு… எப்பவும் ஏதேதோ சொல்லி சமாளிப்பயே… இப்ப சொல்லு…” என்றாள் உயிர்ப்பற்ற குரலில்.

“மது… அதெல்லாம்…”

“என் மேல் சத்தியம் பண்ணி சொல்லு…” என்று அவனின் கையைப் பற்றித் தன் உச்சந்தலையில் வைத்து கேட்டாள்.

“அய்யோ… என்னடி நீ இப்படி எல்லாம்…” என்று மயூரன் துடித்துப் பதற,

“நான்… நான் அசிங்கமா நின்னேனா? அதுவும்… அதுவும்… அதை நெட்டில் வித்து…” என்று குரல் நடுங்க மதுமதி கேட்க, மயூரனுக்குத் தன் உயிரே ஆடிப் போனது.

“இன்னும் நம்பலையா நீ? அதை எல்லாம் தேடிப் பிடிச்சு… நானும் செல்வாவும் அழிச்சோம். அதனால் உனக்கு இப்ப அதை ஆதாரமா கூடக் காட்ட முடியலை. ஆனா, நீ யூஸ் பண்ணது போதை மருந்து தைலம்னு மாப்பிள்ளை விசாரிச்சு ரிப்போர்ட் வச்சிருக்கார். அதைப் பார்த்தா நம்புவியா? இல்லை, அந்த நாய் லேப்டாப்பில் மத்த பொண்ணுங்க அசிங்கமா இருந்ததைப் பார்த்தா நம்புவியா?” என்று ஜெயராமன் ஆத்திரமாகக் கேட்க,

“இன்னைக்கு என்னாச்சு மாமா உங்களுக்கு? பேசாம இருங்களேன்…” என்று அவரை அதட்டினான் மயூரன்.

“நீங்க சொன்னதால்தான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன் மாப்பிள்ளை. ஆனால், என் பொண்ணோட முட்டாள்தனம் நாளுக்கு நாள் கூடுதே தவிர, குறைய மாட்டிங்கிதே. உண்மை தெரிஞ்சா நீங்க இவ எதுவும் செய்துக்குவாளோன்னு பயப்படுறீங்க. ஆனால், சொல்லாம விட விட இவ பைத்தியக்காரியா மாறிட்டு இருக்கா. அது புரியலையா உங்களுக்கு?” என்று அவனையும் சாடினார் ஜெயராமன்.

“ம்ப்ச்!” என்று சலித்துக் கொண்ட மயூரனுக்கு இப்போது அவருக்குப் புரிய வைப்பதை விட மனைவியைக் கவனிப்பதே முக்கியமாகப் பட, நிலைக் குத்திய கண்களுடன் உறைந்து நின்றிருந்தவளின் தோளில் கை வைத்து, “மது, இங்கே பார்… என்னைப் பார்…” என்று தவிப்புடன் அழைத்தான்.

அவனை உணர்ச்சிகள் என்பதே சுத்தமாக இல்லாமல் பார்த்தாள்.

“நான்… அப்போ… அசிங்கமா? அருவருப்பா? என்னை… என்னை… கண்டவன் எல்லாம் பார்த்தானா?” என்று மதுமதி குரலே எழும்பாமல் கேட்க,

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“அய்யோ… இல்லைடி இல்லை… நீ… நீ உன் அப்பா சொல்வதை எல்லாம் நம்பாதே! அவர்… அவர்… பொய் சொல்றார்…” அவளை எப்படியாவது நம்ப வைத்துவிட வேண்டும் என்று வேகத்துடன் அவன் சொல்ல,

“அப்போ… நீங்க உண்… உண்மையைச் சொல்லுங்க…” என்றாள் பெண்.

அவனால் சொல்லவே முடியவில்லை. அவன் வாயாலேயே உண்மையைச் சொல்லவா இத்தனை நாள்களும் பொறுமை காத்தான்? ஆனால், இப்போது அவள் இறுக்கி பிடிக்க, என்ன சொல்லி சமாளிப்பது என்றே தெரியவில்லை.

ஆனால், அவனின் அமைதி கூட அவளுக்கு இடியாக இருந்தது.

“ஒருத்தனை… ஒருத்தனை நான் நம்பினேனே… அவன் நிஜமாவே பொய்யானவனா? அப்போ… அவன் காதல்… என்னை அசிங்கமா பார்த்து… ஊருக்கே விற்கத் தானா? என்னோட… காதல் பொய்யா? அவன்… அவன்… விக்ரம்… என்னை அசிங்கமா… நான் நிஜமாவே அப்படி நின்னேனா? சொல்லுங்க… சொல்லுங்க… உண்மையைச் சொல்லுங்க…” என்று கணவனிடம் கதறலாகக் கேட்டாள் மதுமதி.

“மது… மதுமா. இங்கே பார். அதெல்லாம் விட்டுடு. இப்ப நீ என் பொண்டாட்டிடி. நம்ம பிள்ளையைச் சுமந்துட்டு இருக்கும் ஒரு அம்மா. கண்டதை எல்லாம் நினைக்காதே! நான் சொன்னா நம்பணும். நீ எந்தத் தப்பும் செய்யலை…” என்று மயூரன் அவளைச் சமாதானம் செய்ய முயல,

“அது… நிஜமாவே போதை தைலமா?” என்று தீனமாகக் கேட்டாள்.

அவன் மறுக்கப் போக, “உண்மையை மட்டும் தான் சொல்லணும். என் மேல் சத்தியம்!” என்றாள்.

“அய்யோ! என்னைச் சித்திரவதை பண்றயேடி…” என்று வாய்விட்டு புலம்பிய மயூரன், வேறுவழி இல்லாமல் ‘ஆமாம்’ என்றான்.

அந்தப் பதில் மதுமதியை இன்னும் நிலைகுலைய வைக்க, அவளுக்குள் ஏதேதோ ஓடியது. அந்தத் தைலம் தடவிய அன்று மயூரனுடன் தான் இருந்ததையே மறந்து போயிருக்கிறேன் என்றால், அதுவே தானே… விக்ரம் முன் காணொளியில் பேசிய போதும் நடந்திருக்கும். தலைவலியில் அந்தத் தைலத்தைத் தடவிய படி அவனிடம் பேச ஆரம்பித்தது மட்டுமே அவளின் நினைவில் இருந்தது. மறுநாள் காலையில் எழுந்த போது பேசிக் கொண்டே அப்படியே உறங்கிவிட்டோம் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால், அது அப்படி இல்லையோ என்ற சந்தேகம் வந்தது.

ஆனால், காலையிலும் உடையுடன் தான் இருப்பாள் என்பதால் அவளுக்கு வேறு விதமாகச் சந்தேகமே வந்ததில்லை. ஆனால், உடையை அவனே திரும்பப் போடவும் வைத்திருப்பானோ என்று இப்போது தோன்றியது. போதையின் விளைவில் கணவனுடன் வாழ்ந்தே இருந்தாள் என்றால்… அது எவ்வளவு வீரியம் மிக்கது… உணர்வுகளைத் தூண்டக்கூடியது… அப்போது… விக்ரம் முன்னிலையிலும் நான் வீடியோவில்… உணர்வு தூண்டலில்… என்று நினைக்க நினைக்க அவள் தலை கிறுகிறுவென்று சுற்ற, கண்கள் இருட்டி கொண்டு வர, அப்படியே மயங்கி, மடங்கித் தரையில் விழப் போனாள்.

“மது…” என்று பதறியபடி அருகில் நின்றிருந்த மயூரன் அவளைத் தாங்கிக் கொண்டான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com