26 – காதலின் ரீங்காரம்

👁️ 1059 Views

அத்தியாயம் – 26

“நீங்களும் மது கூடச் சேர்ந்து நில்லுங்க மாப்பிள்ளை. மூனு பேருக்கும் சேர்த்து ஆரத்தி சுத்துறேன்…” என்று மலர்ந்த முகத்துடன் திலகா சொல்ல, மகளைத் தன் கையில் ஏந்தியபடி மனைவியின் அருகில் நின்றான் மயூரன்.

மதுமதி திரும்பி கணவனைப் பார்க்க, அவளைப் பார்த்து பளிச்சென்று சிரித்தான் மயூரன். மதுமதியின் உதடுகளிலும், மெல்லிதாய்த் துளிர்த்தது புன்னகை!

அவர்களை நிறைவாய் பார்த்தார் ஜெயராமன்.

மகளின் முகம் முன்பை விட இப்போது சற்று தெளிவாக இருப்பதை உணர்ந்த திலகாவிற்கும் மனம் நிறைந்தது.

மகள், மருமகன், பெயர்த்திக்கு நிறைவுடன் ஆரத்தி சுற்றி தங்கள் வீட்டிற்குள் அழைத்தார் திலகா.

மூவரும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

“என் பேத்திக்குப் புதுத் தொட்டில் வாங்கினேன் மாப்பிள்ளை. மது ரூமில் போட்டுருக்கேன். பிள்ளையை அதில் படுக்க வைங்க…” என்று உற்சாகத்துடன் சொன்னார் ஜெயராமன்.

தொட்டில் மட்டும் இல்லாமல் அதில் சின்னதாக ஒரு மெத்தை, தொட்டிலை சுற்றி கொசுவலை, சத்தம் எழுப்பும் பொம்மை, பிள்ளைக்குத் தேவையான உடைகள் என அனைத்தும் பெயர்த்திக்கு வாங்கிக் குவித்திருந்தார்.

அவர் வாங்கிய தொட்டிலில் மகளைப் படுக்க வைத்தான் மயூரன்.

மதுமதி கட்டிலில் சாய்ந்து அமர, “நான் போய் உனக்குக் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்…” என்று விரைந்தார் திலகா.

தொட்டிலை மெல்ல ஆட்டிவிட்டு, பெயர்த்தியின் முகம் பார்த்து ரசித்துவிட்டு வெளியேறினார் ஜெயராமன்.

“உனக்கு டயர்டா இருந்தால் படு மது…” என்று மயூரன் சொல்ல,

“இல்லை, உட்கார்ந்திருக்கேன்…” என்று மென்மையாகச் சொன்னாள் மதுமதி.

சிறிது நேரத்தில் இருவருக்கும் குடிக்கப் பழச்சாறை கொடுத்துவிட்டு சென்றார் திலகா.

கட்டிலில் அமர்ந்திருந்த மனைவியை விட்டு சற்று தள்ளி அமர்ந்து பழச்சாறை பருகிய மயூரன், அவளிடம் எதுவும் பேச முனையவில்லை. மதுமதியும் அமைதியாக இருந்தாள்.

கடந்த ஐந்து நாள்களாக இந்த அமைதி இருவரிடமும் நிலவுகிறது.

கணவனின் காதலுக்கு மரியாதை கொடுத்து, குழந்தையை நல்லபடியாகப் பெற்றெடுத்து மீண்டு வந்துவிட்டாலும், மதுமதியிடம் இன்னும் தயக்கமும், தடுமாற்றமும் இருக்கவே செய்தது. அவள் இன்னும் முழுதாக இயல்பிற்குத் திரும்பியிருக்கவில்லை.

சுகப்பிரசவம் ஆகியிருந்தாலும், அவளின் உடல்நிலையால் ஐந்து நாள்கள் மருத்துவமனையில் இருந்து, அவளின் இரத்தஅழுத்தம் சீரான பிறகே வீட்டிற்கு அனுப்பியிருந்தனர். பிள்ளையுடன் மூன்று மாதங்கள் அன்னையில் வீட்டில் இருப்பதாக இருந்தாள் மதுமதி. அவர்களை விட்டு செல்ல உடன் வந்திருந்தான் மயூரன்.

மனைவி தன் பேச்சுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரும்பி வந்ததில் மயூரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மருத்துவமனையில் வைத்து அவளிடம் அவன் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. பொதுவாக மட்டுமே பேசிக் கொண்டனர்.

பழச்சாறு குடித்து முடித்ததும், காலி டம்ளரை அருகில் இருந்த மேஜை மீது வைத்த மயூரன், மெல்ல எழுந்து தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த தன் மகளின் அருகில் சென்றான். அவளது பிஞ்சு விரல்களை அசைப்பதை பார்த்து அவனது இதயம் உருகியது. அவனைப் போலவே குழந்தைக்கும் சுருட்டை முடி இருந்தது. புருவங்களும் கூடச் சற்று அடர்த்தியானவைதான். முடியில் மட்டுமே தந்தையைக் கொண்டு இருந்தாள் பிள்ளை. முக அமைப்பு எல்லாம் மதுமதியின் பிரதிபலிப்பாய் இருந்தாள். மனைவியின் குட்டி பிம்பத்தைக் கண்டு பூரித்துப் போய் ரசித்துப் பார்த்தான் அவன்.

குழந்தையின் கையில் தன் விரலை கொடுத்தான். குழந்தை தகப்பனின் விரலை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

“மது இங்கே பாரேன். என் விரலை எப்படிப் பிடிச்சுக்கிட்டாள்னு…” என்று மயூரன் உற்சாகத்துடன் சொல்ல, கட்டிலில் அமர்ந்தபடியே தலையை உயர்த்தி எட்டிப் பார்த்தாள் மதுமதி.

“வயித்தில் இருக்கும் போதே, உங்க குரலை கேட்டால் உங்ககிட்ட ஓடி வரப் போவது போலத் துள்ளுவாள். இப்ப நேரிலேயே இருக்கும் போது கேட்கவா வேணும்?” என்று மென்மையாகச் சொன்ன மனைவியைத் திரும்பி பார்த்துச் சிரித்தான் மயூரன்.

“என் பொண்ணுக்கு என்னை அவ்வளவு பிடிச்சிருக்காம். அதான் நாங்க இரண்டு பேரும் சட்டுனு கூட்டணி போட்டுக்கிட்டோம். ஆனா… என் பொண்ணோட அம்மாவுக்குத்தான் என்னைப் பிடிக்குமா தெரியலையே?” என்று பூடகமாகக் கேட்டான்.

உடனே அமைதியான மதுமதி, குனிந்து தன் கை விரல்களையே பார்த்தாள்.

அவளின் அமைதியை கண்டு லேசாகப் பெருமூச்சுவிட்டபடி மனைவியின் அருகில் வந்து அமர்ந்த மயூரன், அவளின் விரல்களை மெல்ல பற்றினான். மதுமதியும் தடுக்கவில்லை.

அவளின் புறங்கையை இன்னொரு கையால் நீவிவிட்டவன், “என் கேள்விக்குப் பதில் சொல்ல நீ இவ்வளவு யோசிக்க வேண்டிய தேவையே இல்லை மது. உனக்கும் என்னைப் பிடிக்கும். அதனால்தான் இப்ப நாம இப்படி உட்கார்ந்திருக்கோம்…” என்றவனை இமைகளை உயர்த்தி உண்மையா என்பது போல் பார்த்தாள்.

அவளின் நெற்றியோடு தன் நெற்றியை லேசாக முட்டியவன், “உண்மைதான்டி தங்கப்பொண்ணே! அதை நீயே போகப் போகப் புரிஞ்சுப்ப…” என்றான்.

உதட்டை லேசாக வளைத்து வறட்சியாகச் சிரித்த மதுமதி, “நமக்கு இப்ப ஒரு குழந்தையும் பிறந்துடுச்சு. இப்பதான் பிடித்தத்தைப் பற்றியே பேசுறோம். வேடிக்கையா இல்லை?” என்று வேதனையுடன் கேட்டவள், “உங்களால் இப்பவும் எப்படிங்க பாசிட்டிவா மட்டும் யோசிக்க முடியுது? நிஜமாவே என் மேல் உங்களுக்குக் கோபம் வரலையா?” என்று கேட்டாள்.

“கோபமா? உன் மேல் எனக்கு ரொம்ப ரொம்பக் கோபம் இருக்கே…” என்றவனை முகத்தைச் சுருக்கி பார்த்தாள்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அவளின் உச்சந்தலையில் கை வைத்து ஆட்டியவன், “என் கண்ணில் சீக்கிரம் படாமல், ரொம்ப லேட்டா ஏன் பட்டன்னு உன் மேல் எனக்குக் கோபமா வருது. ஆனால், என்ன செய்வது? நீ என் தங்கப்பொண்ணாச்சே… உன் மேல் நானே கோபத்தை இழுத்து பிடிச்சு வச்சுக்க நினைச்சாலும் என்னால் முடியலையே?” என்று தோளை குலுக்கினான்.

அவனையே இமைக்காமல் பார்த்தாள் மதுமதி.

“ஓய், என்னடி என்னை இப்படிச் சைட் அடிக்கிற?” என்று கேலியாகத் தன் அடர் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

“உங்க இந்தக் காதலுக்கு நான் தகுதியானவளே இல்லை. அப்படி இருந்தும்…” என்று பேசிக்கொண்டே போனவள் உதட்டில் ஒற்றை விரலை வைத்துத் தடுத்தான் மயூரன்.

“இன்னொரு முறை தகுதி அது இதுன்னு பேசாதே! நமக்குள் கடந்த இரண்டு வருஷமா மூனாவதா ஒருத்தன் நுழைஞ்சு நம்ம வாழ்க்கையை அவன் கையில் எடுத்துக்கிட்டதெல்லாம் போதும்! முன்னாடி நடந்த எதுவும் நம்ம வாழ்க்கைக்குள் இனி நுழைய கூடாது. இப்ப மறுபிறப்பு பிறந்து வந்திருக்க. அதுவும் இந்த மயூரனோட பொண்டாட்டியா மட்டும் முழு மனசோட திரும்பி வந்திருக்க. மயூரன் பொண்டாட்டி எப்படி யோசிப்பாளோ அப்படி மட்டும் யோசி!” என்று கண்டிப்புடன் உரைத்தான்.

ஆமோதிப்பது போல லேசாகத் தலையை அசைத்தாள் மதுமதி.

“குட்!” என்று மெச்சியவனும் அதன்பின் அநாவசியமாக எதுவும் பேசவில்லை.

குழந்தையும் சிணுங்க ஆரம்பிக்க, பிள்ளையைத் தூக்கி வந்து மனைவியிடம் கொடுத்தான்.

“பசிக்குது போலிருக்கு…” என்றவள் லேசாகத் திரும்பி அமர்ந்து குழந்தைக்கு அமுதூட்ட ஆரம்பித்தாள்.

மயூரனும் அங்கேயே தான் கட்டிலில் அமர்ந்திருந்தான்.

மருத்துவமனையில் இருந்த போதும் அவன் அறைக்குள் இருந்த போது அமுதூட்டி அவளுக்குப் பழக்கமாகியிருந்ததால் இப்போதும் அவள் வேறுபாடு காட்டவில்லை.

“நம்ம பேபிக்கு பெயர் செலக்ட் செய்யணும் மது. உனக்குப் பிடிச்ச பேரா ஏதாவது யோசி…” என்று அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“நீங்களே யோசிங்களேன்…” என மதுமதி சொல்ல,

“நோ… நோ… நீதான் சொல்லணும்…” என்று அவளின் பக்கமே பொறுப்பைத் தள்ளிவிட்டான்.

“அப்படியே குழந்தைக்கு என்னென்ன வாங்கணும்னு ஒரு லிஸ்ட் போடு. வாங்கிட்டு வர்றேன். எல்லாம் உன் அப்பாவே வாங்கிக் குமிக்கிறார். என் பொண்ணுக்கு நான்தான் நிறைய வாங்கித் தருவேன்…” என்று பிடிவாதத்துடன் சொல்லி, குழந்தையைச் சுற்றியே அவளின் நினைவுகளைத் தள்ளிவிட்டான்.

அதன்பின்னான நாள்களில் மதுமதிக்கும் வேறு யோசிக்கவோ, மனத்தைத் தேவையில்லாமல் குழப்பிக் கொள்ளவோ நேரமிருக்கவில்லை. குழந்தையும் அன்னையைப் பிஸியாகவே வைத்திருந்தாள்.

குழந்தை பிறந்த முப்பதாவது நாளில் பெயர் வைக்கும் விழா நடத்தலாம் என்று மயூரன் முடிவு செய்திருந்தான்.

“பங்ஷனுக்கு ஓவியாவையும், அவளோட ஹஸ்பெண்டையும் இன்வைட் பண்ணனும்ங்க…” என்று மதுமதி சொல்ல,

“பண்ணலாமே…” என்று மயூரனும் உடனே ஒப்புக்கொண்டவன், “நீயே பேசுறீயா?” என்று கேட்டான்.

தயக்கத்துடன் சம்மதித்தாள்.

மனைவியின் அருகில் அமர்ந்து கைப்பேசியில் ஓவியாவை அழைத்தவன், அவளின் கையிலேயே கொடுத்துவிட்டான்.

“ஹலோ மாமா… எப்படி இருக்கீங்க? உங்களுக்குக் குட்டிப் பாப்பா பிறந்திருக்குன்னு அம்மா சொன்னாங்க. பாப்பா எப்படி இருக்கா?” என்று படபடவென்று பேசினாள் ஓவியா.

அவளுக்குப் பதில் சொல்லாத மயூரன், இன்னும் அமைதியாக இருந்த மனைவியைப் பேச சொல்லி ஊக்கினான்.

“ஹ… ஹலோ ஓவியா… நான் மது பேசுறேன்…” என்று மதுமதி தயக்கத்துடனே பேச்சை ஆரம்பிக்க, இப்போது அந்தப் பக்கம் அமைதி நிலவியது.

“ஓவியா?”

“மதுக்கா… நிஜமா நீங்கதானா?” என்று ஆச்சரியமாக ஓவியா கேட்க,

“ம்ம்…” என முனகினாள்.

“நீங்க எனக்குப் போன் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. எப்படிக்கா இருக்கீங்க? குட்டிப் பாப்பா எப்படி இருக்கா? இப்ப உங்க உடம்புக்கு பரவாயில்லையா?” என்று ஓவியா இயல்பாகப் பேச,

மதுமதிக்குத்தான் சகஜமாகப் பேச முடியாமல் தொண்டை அடைத்தது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் தான் எப்படி எல்லாம் வெறுப்பைக் கக்கியிருக்கிறோம். அதிலும் தன் பேச்சால், அவளின் காதலிலும் சிக்கல் வந்து, தன்னால் அவள் எத்தனை அனுபவித்திருக்கிறாள். அப்படியிருந்தும் தன்னிடம் இயல்பாகப் பேசுகிறாளே… அதிலும் தன்னைப் பற்றிய உண்மையை அறிந்திருந்தும், உன் மீது தவறை வைத்துக் கொண்டு, என் தந்தையையா கொலைகாரர் என்று சொன்னாய்? என்று கூட அவள் கேட்க முயலவில்லையே… அவளின் அந்தப் பெருந்தன்மை மதுமதியை வெட்கி போக வைத்தது.

தொண்டைக்குழி ஏற இறங்க பேச முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மனைவியின் நிலை புரிந்து, அவளின் தோளை சுற்றி கையைப் போட்டு அவளின் தோளில் அழுத்தம் கொடுத்தான் மயூரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com