👁️ 455 Views
அத்தியாயம் – 27
அன்று குழந்தை பிறந்து முப்பதாவது நாள். அன்றுதான் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜெயராமனின் வீட்டில்தான் விழா நடப்பதாக இருந்தது.
அதனால் காலையிலேயே மயூரன் மாமனாரின் வீட்டிற்கு வந்திருந்தான்.
வீட்டின் முன் இருந்த தோட்ட பகுதியில் பந்தலிட்டு, விழா ஏற்பாடு நடந்தது. அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயராமன்.
மதுமதி குளிக்கச் சென்றிருக்க, மயூரன் குழந்தையைப் பார்த்துக்கொண்டு அறையில் இருந்தான்.
“என்ன பேபிமா, நைட் எல்லாம் நல்லா தூங்கினீங்களா?” என்று மயூரன் பிள்ளையைக் கைக்குள் அணைவாக வைத்துக் கொண்டு கேட்க,
தன் குட்டி இமைகளைப் பொசுக் பொசுக்கென மூடி மூடி திறந்தாள் பிள்ளை.
“மம்மம் குடிச்சீங்களா?” எனக் கேட்டதும், ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் சப்சப்பென்று சப்பினாள்.
“சமத்துடா குட்டி நீங்க!” என்று பிள்ளையை மெச்சி கொண்டான் தகப்பன்.
குளித்துவிட்டு நைட்டியை அணிந்து கொண்டு வெளியே வந்த மதுமதி, தகப்பனும் மகளும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அலமாரியை திறந்து மாற்றுடை எடுக்கப் போனாள்.
“மது, உனக்கும் பாப்பாவுக்கும் நான் ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். உனக்குப் பிடிச்சா போடு. நான் கொண்டு வந்த பையில் இருக்கு…” என்றான் மயூரன்.
அவன் ஏன் பிடித்தால் போடு என்று சொல்கிறான் என அவளுக்குப் புரிந்தது. இதற்கு முன்பும் அவன் உடைகள் வாங்கித் தருவான். அதை எல்லாம் அவள் உடுத்தியதே இல்லை.
அவனுக்குப் பதில் சொல்லாமல், அலமாரியை மூடி விட்டு மேஜை மீதிருந்த அவன் கொண்டு வந்த பையைத் திறந்து உள்ளே பார்த்தாள். புது உடைகள் இருக்க, அதை வெளியே எடுத்தாள்.
அவளுக்கும் குழந்தைக்கும் மட்டும் இல்லாமல் அவனுக்கும் சேர்த்து பர்பிள் நிறத்தில் உடை வாங்கியிருந்தான்.
அவளுக்குப் பர்பிள் நிறப் பட்டுச்சேலை. குழந்தைக்கு அதே நிறத்தில் கவுன், அவனுக்குப் பர்பிள் நிறச் சட்டை, வெள்ளை நிறக் கால்சட்டை இருந்தது.
“ஒரே கலரில் எடுத்திருக்கீங்க. அழகா இருக்கு…” என்றாள் மதுமதி.
“உனக்குப் பிடிச்சிருக்கா?” என ஆர்வமாகக் கேட்டான்.
“பிடிச்சிருக்குங்க…”
“அப்ப கட்டிக்கிறயா?” ஆசையாகக் கேட்டான்.
“ம்ம்… நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க…”
“இன்னமும் நான் வெளியேதான் போகணுமா?” என்று மயூரன் குறும்புடன் கேட்க, தயக்கத்துடன் விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
முன்பு எல்லாம் தன் எதிர்பார்ப்பை, ஆசையை அவன் இப்படி வெளியிட்டதில்லை. விளையாட்டாக ஏதாவது சொல்லிவிட்டு, அதை விட்டுவிடுவான். ஆனால், இப்போதெல்லாம் உரிமையுடன் உண்மையாகவே தன் ஆசையை வெளியிட்டான்.
ஆனால், மதுமதிக்கு உடனே அப்படி இலகுவாக மாறிவிட முடியவில்லை. அவளுக்குத் தயக்கம் இருக்கவே செய்தது. அன்று மன்னிப்புக்காகக் கொடுத்த முத்தம் தவிர, வேறு எந்த நெருக்கமும் அவர்களுக்குள் நிகழவில்லை. ஆனால், மயூரனாக வந்து அருகில் அமர்ந்தால், அவளின் தோளின் மீது கையைப் போட்டுக்கொண்டால் அமைதியாக ஏற்றுக்கொள்வாள்.
குழந்தை பெற்றவள் என்பதால், மயூரனும் வேறு எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவ்வப்போது இது போல் அவனின் ஆசையை வெளியிடுவான். ஆனால், அவளால்தான் உடனே சம்மதிக்க முடியவில்லை.
ஒரு குழந்தையே பிறந்து விட்டாலும், அவர்களுக்குள் அன்னியோன்யம் என்பது இருந்ததில்லை என்பதால், புதுப்பெண் போல அவளுக்குள் பல தடுமாற்றங்கள் இருந்தன.
அவளிடம் தெரிந்த தயக்கத்தைப் பார்த்துவிட்டு, “நாம ஒரு டீலுக்கு வரலாம்…” என்றான் மயூரன்.
“சொல்லுங்க…”
“நான் ரூம் விட்டு வெளியே போக மாட்டேன்…” என்றவனை அவள் மீண்டும் தயக்கமாகப் பார்க்க,
“சும்மா அப்படியே பார்க்காதேடி தங்கப்பொண்ணே! எதுக்கும் ஃபர்ஸ்ட் டைம்னு ஒன்னு இருக்குத்தானே? நாம சில விஷயங்கள் எல்லாம் இப்ப ஃபர்ஸ்ட் இருந்து ஒவ்வொன்னா பழகிக்கலாம்…” என்றவனுக்குச் சம்மதமாகத் தலையை அசைத்தாள்.
“குட்! அப்போ ட்ரெஸ் மாத்த ஆரம்பி!” என்று அவளைக் குறுகுறுப்பாய் பார்த்துக் கொண்டே சொன்னவனை அதிர்ந்து பார்த்தாள்.
“என்ன? இப்பதானே சரின்னு தலையை ஆட்டின?” என்று அவன் புருவத்தை உயர்த்திக் குறும்புடன் கேட்க,
“ஹான், அது ஏதோ டீலுன்னு சொன்னீங்க?”
“இதுதான் நம்ம டீல்!” என்று அழுத்தமாகச் சொன்னவனைக் கெஞ்சலாகப் பார்த்தாள்.
“ஹைய்யோ! அப்பாவி போலப் பார்த்தே ஆளை சாய்க்கிறாளே…” என்று அவன் புலம்ப,
“நான் ஒரு டீல் சொல்லலாமா?” என்று இப்போது கேட்டவள் மதுமதி.
“சொல்லேன்…” என்று அவன் ஆர்வமாகக் கேட்க,
“நீங்க ரூம் விட்டு போக வேண்டாம்!” என்றவளை கண்கள் மின்ன பார்த்தான்.
“வாவ்! சூப்பர் டீலிங்! இதையே தானே நானும் சொன்னேன். அப்போ நீ என் வழிக்கு வந்துட்டன்னு சொல்லு…” என்றான் சீண்டலாக.
அவனின் கண்கள் குறும்புடன் மின்னின.
“நான் இன்னும் என் டீலை சொல்லி முடிக்கலை…” என்றாள் அலுப்புடன்.
“இன்னும் சொல்லவே இல்லையா? அப்போ, என்னையே சேலை கட்டி விடச் சொல்றீயா?” என்று கேட்டவனை, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு பார்த்தாள்.
“அதுவும் இல்லையா?” என்று ஏமாற்றத்துடன் உதட்டை பிதுக்கினான்.
“ரூமிலேயே வேற பக்கம் திரும்பி உட்காருங்கன்னு சொல்ல வந்தேன்…” என்றாள்.
“ம்ப்ச்! இவ்வளவுதானா? இதெல்லாம் சரியில்லை தங்கப்பொண்ணே!” என்று அலுத்துக் கொண்டான்.
“எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்களேன், ப்ளீஸ்!” என்று மதுமதி மாறிவிட்ட முகத்துடன் கலக்கமாகச் சொல்ல,
“இப்ப எதுக்குக் கண்ணைக் கசக்குற? திரும்பி உட்காருடா மயூரான்னு சொன்னால், திரும்பி உட்காரப் போறேன்…” என்று சொல்லிக் கொண்டே பிள்ளையுடன் வேறு பக்கம் திரும்பி அமர்ந்தான்.
“உன் அம்மா சரியான அழுமூஞ்சிடா பேபி. எதுக்கு எடுத்தாலும் கண்ணைக் கசக்குறா. பொண்ணுன்னா தைரியமா இருக்கணும். எது நடந்தாலும் சமாளிக்கலாம்னு திடமா இருக்கணும். சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் பொசுக்குன்னு உடைஞ்சு போயிட கூடாது. நீ உன் அம்மா போலப் பூஞ்சை மனசா இருக்கக் கூடாது. சரியாடா குட்டிமா?” என்று பிள்ளைக்குப் பாடம் எடுத்தான்.
ஜொள்ளு வடிந்த உதட்டை அழகாக அசைத்து, குட்டி கண்களைச் சிமிட்டி தந்தையின் பேச்சுப் புரிந்தது போல பார்த்தாள் பிள்ளை.
“எனக்கு நடந்தது எல்லாம் சாதாரணமானது தானா? அவ்வளவு நடந்த பிறகும்…” என்ற மதுமதி அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்த,
“கஷ்டங்களைச் சந்திக்காத மனுஷன் இந்த உலகத்திலேயே கிடையாது மது. ஆனா அந்தக் கஷ்டங்கள் வரும்போது அதுலயே உழன்று உடைஞ்சு போயிட கூடாதுன்னு சொல்றேன்…”
“நீங்கதான் பழசை எல்லாம் பேச வேணாம்னு சொன்னீங்க. இப்ப நீங்களே…”
“நான் பழசை பேசலை. நீ சின்னச் சின்ன விஷயத்துக்கும் இப்பவும் கலங்கிப் போற. அது வேணாம்னு சொல்றேன்...”
“ம்ம்…”
“என்னோட வாழ்ற வாழ்க்கை உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்காது. அப்படியே கஷ்டமா இருந்தால் ‘அடங்குடா பம்பரக்கட்ட மண்டையான்னு என் தலையிலேயே இரண்டு தட்டு தட்டு போதும். நம்ம வீட்டு பெப்பி மாதிரி குழைஞ்சு உன் காலடியிலேயே கிடைப்பேனாக்கும்…”
“க்கும்… போதும்! போதும்! நீங்க குழைவதில் நான் உருகிட போறேன்…”
“இன்னுமா உருகலை நீ?” என்று கேட்டுக் கொண்டே அவளின் புறம் திரும்பினான்.
சேலையைக் கட்டிவிட்டுக் கீழ் மடிப்பை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“நான் ஹெல்ப் பண்ணுட்டுமா?” என்றவனின் குரலில் ‘என்ன?’ என்பது போல நிமிர்ந்து பார்த்தாள்.
அப்போதுதான் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
“ம்ம்…” என்று சம்மதமாகத் தலையை அசைத்தாள்.
நொடியில் அவனின் கண்களும் முகமும் மலர்ந்து போயிற்று.
இதற்கே இப்படி மகிழ்பவனைக் கண்டு அவளுக்குத்தான் தவிப்பாகி போனது. அவனின் பாவனைகள் ஒவ்வொன்றும் அவனது சின்னச் சின்ன ஆசைகளின் பிரதிபலிப்பாகவே தெரிந்தது.
“வந்து இந்த மடிப்பை ஒன்னு போல எடுத்து விடுங்க, வாங்க…” என்று உரிமையுடன் அழைத்தாள்.
“இதோ வர்றேன்டி தங்கப்பொண்ணே…” துள்ளலுடன் சொன்னவன், “குட்டிம்மா, கொஞ்சம் நேரம் சமத்துக் குட்டியா தொட்டிலில் படுத்துருடா. அப்பா, அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வர்றேன்…” என்று பிள்ளையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு, மனைவியிடம் சென்றான்.
தரையில் மண்டியிட்டு அமர்ந்து, அவளின் சேலை மடிப்பை அழுத்தி ஒன்று போல் எடுத்துவிட்டான்.

“சரியா செய்றேனா?” என்று தலையை நிமிர்த்தி அவளிடமும் கேட்டுக் கொண்டான்.
“அடியில் உள்ளதை இன்னும் கொஞ்சம் உள்ள தள்ளி மேல உள்ளதை லைட்டா வெளியே இழுத்துவிடுங்க…” என்றாள்.
அவள் சொன்னது போலச் செய்துவிட்டு, ஏதோ சாதனை செய்தது போல அவளைப் பார்த்தான்.
“பொண்டாட்டி சேலையைச் சரி பண்றதில் அவ்வளவு சந்தோஷமா?” மதுமதி வியந்து கேட்டுவிட,
எழுந்து நின்றவன், “இருக்காதா பின்ன? என் பொண்டாட்டிக்கு நான் தானே இதெல்லாம் உரிமையா செய்ய முடியும்!” என்றவன் தள்ளி நின்று அவளைப் பார்த்தான்.
அவன் எடுத்துக் கொடுத்த சேலையைக் கட்டியிருக்கும் மனைவியை கண்கள் நிறையக் கண்டு ரசித்தான்.
“அழகா இருக்கடி தங்கப்பொண்ணே…” என்றவன் அவளின் நெற்றியில் தன் உதடுகளைப் பதித்து முத்தமிட்டான்.
அம்முத்தத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும், மெல்லிய புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள் மதுமதி.
©nandhavanamnovels.com