👁️ 1074 Views
அத்தியாயம் – 29
நாள்கள் விரைந்து சென்று குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்தது.
மற்றவர்களுக்கு விரைந்து சென்றது போலத் தெரிந்த நாள்கள் மயூரனுக்கு என்னவோ ஊர்ந்து சென்றது போலத்தான் இருந்தது.
என்னதான் தினமும் மாமனார் வீடு சென்று மனைவி, மகளைப் பார்த்து வந்தாலும் கூட, அவனுக்கு அதில் எல்லாம் முழுத் திருப்தியே இல்லை. அவர்களை நாள் முழுவதும் தன் வீட்டில் வைத்து, நினைத்த நேரம் பார்க்கவே ஆசையாக இருந்தது.
ஆனால், மனைவியின் உடல் தேறவும், மகளை அவளே கவனித்துக் கொள்ளத் திடம் வரவும், பொறுமையாக இருக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.
பொறுமையானவனுக்கு, இந்தப் பொறுமை சோதிக்கவே செய்தது.
அதை எல்லாம் கடந்து இதோ இன்று மாலையளவில் அவனின் மனைவியும், மகளும் வீடு வருகின்றனர்.
அதில் உற்சாகப் பந்தாகத்தான் துள்ளிக் கொண்டிருந்தான் மயூரன்.
“ஆரத்தி கரைச்சு வைங்க கவிக்கா. அப்படியே வாசலில் சின்னதா ஒரு கோலம் போட்டுருங்க. அப்புறம், எல்லாரும் வந்ததும் குடிக்க ஜூஸ் ஏதாவது ரெடி பண்ணி வைங்க. மதுவுக்கு மட்டும் மாதுளை ஜூஸ்!” என்று சமையல் வேலை செய்யும் கவிதாவிடம், பரபரப்பாக ஆணையிட்டுக் கொண்டிருந்தான்.
அவரும் மெலிதாகச் சிரித்துக்கொண்டே அவன் சொன்ன வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில், ஜெயராமனும், திலகாவும், தங்கள் மகளையும் பெயர்த்தியையும் அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தனர்.
வேகமாக வெளியே சென்று தானே மனைவிக்குக் காரின் கதவை திறந்து விட்ட மயூரன், அவளின் கையில் இருந்த மகளைத் தான் வாங்கிக்கொண்டு அவளை இறங்க சொன்னான்.
மதுமதி புன்னகையுடன் இறங்கி நின்றாள். அவர்களைக் கண்டுவிட்டு ஓடி வந்தது பெப்பி.
“டேய் பேப், இங்கே பார்… என் அற்புதா பேபி வந்துட்டா. எப்படி இருக்கா?” என்று சற்று குனிந்து பெப்பியிடம் மகளைக் காட்டினான் மயூரன்.
பெப்பிக் குழந்தையை முகர்ந்து பார்ப்பது போல அருகில் வர, “அச்சோ! கடிச்சுடாம…” எனப் பயந்தாள் மதுமதி.
“அவன் அப்படியெல்லாம் கடிக்க மாட்டான் மது…” என்று மயூரன் சொன்னாலும் மதுமதி பயந்து கொண்டே தான் பார்த்தாள்.
குழந்தையின் முகத்தையும், மயூரனையும் பார்த்து குரைத்த பெப்பி, பின் வாலை வேகமாக ஆட்டியபடி அவர்களைச் சுற்றி வந்தது.
“அவனுக்கு நம்ம பேபியை பிடிச்சிருக்காம்…” என்று மயூரன் மனைவியிடம் சொல்ல, பெப்பிச் சுற்றி வந்ததைப் பார்த்து அவளுக்குப் புன்னகை கூட வந்தது.
“நீ உன் வீட்டுக்குப் போடா பேப். அப்புறமா பார்ப்போம்…” என்று மயூரன் பெப்பியிடம் சொன்னதும், அங்கிருந்து ஓடியது.
மயூரன், மதுமதி, குழந்தை அற்புதா மூவருக்கும் சேர்த்து கவிதா ஆரத்தி சுற்றிய பின் உள்ளே சென்றனர்.
அவர்களை விட்டுவிட்டு, சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு ஜெயராமனும் திலகாவும் கிளம்பினார்கள்.
அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, மனைவி, மகளுடன் தங்கள் அறைக்கு வந்தான் மயூரன்.
“அற்புதா பேபி அப்பாகிட்ட வந்துட்டீங்க. நம்ம வீட்டுக்கு வந்துட்டீங்க. இனி தினமும், அப்பாவும், பேபியும் ஜாலியா விளையாடுவோம். அப்படிதானேடா…” என்று மகளிடம் கேட்டான்.
நன்றாக முகம் பார்க்க ஆரம்பித்திருந்த அற்புதா, தந்தையின் முகம் பார்த்து ஜொள்ளு வடிய சிரித்து, ஆ… ஊ… என்று சத்தம் கொடுத்து கையை, காலை வேகமாக ஆட்டினாள்.
“எங்க பேபிக்கு எவ்வளவு சந்தோஷம் பாரு…” என்று மகளைக் கொஞ்சினான்.
மதுமதி தான் கொண்டு வந்த பையிலிருந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்தவன், “ஷ்ஷ், கொஞ்சம் நேரம் அழாம அமைதியா இருடா பேபி. அப்பா இதோ வந்துடுறேன்…” என்று மகளின் முகம் பார்த்து கிசுகிசுப்பாக முணுமுணுத்தவன், அவளைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டுச் சத்தம் எழுப்பாமல் மெல்ல நடந்து மனைவியின் அருகில் வந்த மயூரன், அவளின் வயிற்றைச் சுற்றி கையைப் போட்டு பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.
“ஆவ்!” அவனின் திடீர் செய்கையை எதிர்பார்பாராமல் மதுமதி அதிர்ந்து சத்தமிட,
“என்ன நீ என்னைக் கண்டுக்காம வேலை பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டுக்கொண்டே அவளைத் தன் பக்கம் திருப்பி அணைத்துக் கொண்டான்.
“நீங்களும்தான் என்னைக் கண்டுக்காம உங்க மகளைக் கொஞ்சிட்டு இருந்தீங்க. நான் ஏதாவது கேட்டானா?” என மதுமதி புறம் உயர்த்திக் கேட்க,
“அப்ப நான் வந்து உன்னைக் கொஞ்சணும்னு எதிர்பார்த்திருக்க?” என்று தன் அடர் புருவங்களை மாற்றி மாற்றி ஏற்றி இறக்கி வினவியவனின் உதடுகள் குறும்பில் மிளிர்ந்தன.
“அப்படியெல்லாம் இல்லையே…” இமைகள் தாழ சொன்னாள்.
அவளின் நாடியில் கைவைத்துத் தன்னைப் பார்ப்பது போல் அவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவள் கண்களைப் பார்த்து, “ஆசையை மறக்கணும்னு அவசியம் இல்லைடி தங்கப்பொண்ணே!” என்றவன், அவளின் உதட்டோடு தன் உதடுகளை லேசாக உரசியவன், பின் மொத்தமாகக் கவர்ந்து கொண்டான்.
கண்களை மூடி அமைதியாக நின்றிருந்த மதுமதியின் கைகள் அவனின் தோளை இறுக்கிப் பிடித்தன.
கடந்த இரண்டு மாதங்களில் அவர்களுக்குள் அணைப்பும், முத்தங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருந்தன.
ஆனால், அதன்பின் அவன் இரவு அங்கே தங்கவில்லை.
“இது வெறும் முத்தத்தோடு நிற்காது போல மது…” என்று தன் தவிப்பை அவளுக்கு உணர்த்துவான்.
“இதுக்கு முன்னாடி எல்லாம் விலகி இருந்தீங்க தானே? இப்ப மட்டும் என்னவாம்?” என்று மதுமதி கேட்க,
“அப்போ என்னால் உன் மனநிலையை யோசிச்சு விலகி இருக்க முடிந்தது. ஆனால், இப்ப அப்படி இல்லையே. ஆரம்பிச்சா நிறுத்த முடியாதுன்னு தோனுது. இனி என்னைத் தங்க சொல்லாதே!” என்றவன், அவளை ஆசை தீர முத்தமிட்டுவிட்டுக் கிளம்பிவிடுவான்.
இப்போது அவள் மொத்தமாகத் தன் கைகளுக்குள் நிற்க, தாய்மையில் மெருகேறி பளபளத்த மேனியை விரல்களால் வருடிக்கொண்டே, அவளின் கழுத்துக்கடியில் செல்ல கடி கடித்தான்.
“உன்னை அப்படியே கடிச்சு மொத்தமா சாப்பிட்டுறணும் போல இருக்குடி தங்கப்பொண்ணே!” என்று அவஸ்தையுடன் முனகினான்.
“சாயந்திரம் தான் ஆகுது. பாப்பா முழிச்சிருக்கா. எனக்கும் வேலை இருக்கு. விடுங்க…” என்று அவனின் தலையில் கைவைத்து விலக்கினாள்.
“என்னை விட்டு விலகுறதுலயே குறியா இரு…” என்று பல்லை கடித்தான்.
“நான் இனி இங்கே தானே இருக்கப் போறேன்…” என்றாள் சமாதானமாக.
“இருந்து மட்டும்…” என்று அலுத்துக் கொண்டான்.
“இப்ப என்ன பண்ணனும்?” என்று மதுமதி அமைதியாகக் கேட்க,
“அப்படிக் கேளுடி சமத்துக்குட்டி. இதோ இங்கே நச்சுன்னு ஒரு முத்தா கொடு!” என்று தன் உதட்டை குவித்துக் காட்டினான்.
“இப்பத்தானே கொடுத்தீங்க?”
“அது நான் கொடுத்தேன். இப்ப நீ கொடு!”
“ம்கூம்…” மறுப்பாகத் தலையை அசைத்தாள்.
“அதானே பார்த்தேன்! என்னடா நம்ம பொண்டாட்டி அமைதியின் சிகரமாக நாம சொல்வதை எல்லாம் கேட்கிறாளேன்னு. ஆசையா ஒரு முத்தம் கேட்டா கூடக் கொடுக்க மாட்டேங்கிறா. ம்ம்ம்… நான் என் பொண்டாட்டிக்கிட்ட ஒவ்வொன்னுக்கும் போராடியே என் ஆயுசு முடிஞ்சிரும் போல…” என்றவனின் பேச்சு அத்தோடு நின்று போனது.
கண்கள் விரிய மனைவியைப் பார்த்தான். அவளோ கண்களை இறுக மூடியிருந்தாள். அவளின் இதழ்களோ அவனின் இதழ்களுக்குப் பூட்டிட்டுக் கொண்டிருந்தது.

கடந்த இரண்டு மாதங்களில் அவன் முத்தம் கொடுத்த தருணமே அதிகம். இப்போது அவளே தன் இதழ் தீண்ட, சொக்கிப் போனான் மயூரன்.
அவளின் விருப்பத்திற்கு விட்டுவிட்டானே தவிர, தானாக அவன் எதுவும் செய்யவில்லை. சில நொடிகள் அவனின் இதழ்களைத் தீண்டிவிட்டு விலகியவள் அவனின் முகம் பார்க்க முடியாமல் அவனின் மார்பிலே தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
“நீயா எனக்குக் கொடுத்த இரண்டாவது லிப் கிஸ் இது!” அவளின் தலையை வருடிக்கொண்டே ரசித்துக் கூறினான்.
தலையை நிமிர்த்திக் கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்.
©nandhavanamnovels.com