3 – நீங்காத பந்தமொன்று

👁️ 1519 Views

அத்தியாயம் – 3

அந்த அதிகாலை வேளையில் அந்த வீடே ஆழ்ந்த அமைதியில் இருந்தது.

சேலத்தில் முன்பு அவுட்டராக இருந்த ஏரியாவில், குணாளன் இடம் வாங்கிக் கட்டிய வீடு அது. வீட்டின் முன் புறம் சற்று இடம் விட்டு, பிள்ளைகள் எல்லாம் சிறியவர்களாக இருந்த போது, இரண்டு படுக்கையறை மட்டுமே எடுத்து அந்த வீட்டை கட்டியிருந்தார்.

பிள்ளைகள் வளர, அதிலும் ஒரு பெண் பிள்ளை வேறு இருக்க, அவரவருக்குத் துணை என்று வரும் போது தனித்தனி அறை வேண்டும் என முன் பக்கம் விட்டிருந்த இடத்தையும் இணைத்து மேலும் இரண்டு படுக்கையறைகளைக் கட்டியிருந்தார் குணாளன்.

ஒரு சமையலறை, நான்கு படுக்கையறைகளைக் கொண்ட வீடு என்றாலும், இந்தக் காலத்திற்கு ஏற்ப பளபளவென்று டைல்ஸ் தரை பதிக்கப்படவில்லை. இண்டீரியரும் செய்யப்படவில்லை.

சிவப்பு நிற கல் பதிக்கப்பட்ட தரை. ஒவ்வொரு அறையிலும் ஒரு மர அலமாரி. குடும்பத் தலைவர் அறையில் மட்டும் கூடவே ஒரு இரும்பு பீரோ, நான்கு அறையிலும் டபுள் காட் பெட், படுக்கையறையுடன் கூடிய சிறிய குளியலறை. கூடத்தில் தொலைக்காட்சி வைக்க ஒரு மர மேஜை, குறைந்த விலை கொண்ட ஒரு மர சோஃபா செட், கிட்சனில் சிமிண்ட் செல்ப் என்று இன்னும் புதுமையை எட்டிப் பார்க்காத வீடுதான் அது.

குணாளன் ஒரு டிரான்ஸ்போர்டில் கணக்காளராகப் பணிபுரிகிறார். தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்குச் சொந்தமான ஒரு டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். தன் வேலையில் வீட்டு செலவையும் பார்த்து, சிறுக சிறுக சேர்த்து அந்த வீட்டை கட்டியிருந்தார். இப்போது மகளின் திருமணத்திற்காகப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தார். கணக்கு போட்டுக் கச்சிதமாக வாழும் கணக்காளர்தான் அவர்.

வழக்கமாக ஐந்தரை மணிக்கு எழுந்து வேலையை ஆரம்பிக்கும் மஞ்சரி அன்று அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து கொண்டாள்.

எழுந்ததுமே முதல் நாள் இரவு கணவன் வீடு வந்து சேர்ந்திருக்க வேண்டுமே என்றுதான் அவளுக்கு முதலில் நினைவு வந்தது. உடனே மகளைத் தாண்டி படுக்கையைப் பார்த்தாள்.

இன்றும் அவளுக்கு ஏமாற்றம் மட்டுமே காத்திருந்தது.

கணவன் இரவு வீடு வரவில்லையா? அல்லது வழக்கம் போல் படுக்கையில் படுக்கவில்லையா என்ற கேள்வி எழுந்தது.

அவளின் கண்கள் வலது பக்கம் இருந்த சுவரில் இருந்த ஹேங்கரை பார்த்தன. அங்கே அவன் வீட்டிலிருந்து கிளம்பும் போது அணிந்திருந்த சட்டையும், மறுநாள் மாற்றிக் கொண்ட இன்னொரு சட்டையும் தொங்கிக் கொண்டிருந்தது.

அப்படியெனில் இப்போது வீட்டில்தான் இருக்கின்றான். இன்றும் தன்னுடன் ஒரே அறையில் படுக்காமல் மாடிக்கு சென்றுவிட்டான் என்பது புரிய, நெஞ்சில் பாறாங்கல்லை வைத்தது போலக் கனத்தது.

அவ்வீட்டில் இருக்கும் மற்றவர்களின் புறக்கணிப்பை கூட அவளால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால், உடையவனே அவளைப் புறக்கணிக்கும் போது அவளால் தாளவே முடியவில்லை.

அந்தளவிற்கா அவள் அவனுக்கு வேண்டாதவளாகி விட்டாள்? என்ற கேள்வி முணுமுணுப்பாய் அவளுள் எழுந்து அவளை அரித்தது. அதில் அவளின் கண்களும் கலங்க ஆரம்பிக்க, அதைப் புறங்கையால் துடைத்தபடி எழுந்து ஓய்வறைக்குச் சென்றாள்.

திரும்பி வந்தவள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகளின் இரண்டு பக்கமும் தலையணையை அணைவாக வைத்துவிட்டு, அவளின் நெற்றியில் மென்முத்தம் ஒன்றை வைத்துவிட்டு, அறையை விட்டு வெளியே சென்றாள்.

வீட்டிலிருந்த அனைவரும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தனர். அனைவரும் ஆறுமணியளவில்தான் எழுந்து வருவார்கள் என்பதால், யாரைப் பற்றியும் யோசிக்காமல், வீட்டின் கதவை திறந்து வெளியே சென்றாள்.

வீட்டின் பக்கவாட்டில் இரண்டு வேப்பமரம் இருக்க, அதிலிருந்து வீசிய காற்றுக் குளுமையாக அவளின் முகத்தை வந்து தழுவியது.

ஆனால், அதெல்லாம் அவளின் கவனத்தில் பதியவே இல்லை. வீட்டை ஒட்டியிருந்த மாடிக்குச் செல்லும் படியில் ஏற ஆரம்பித்தாள் மஞ்சரி.

கணவன் வேண்டுமானால் அவளை விட்டு விலகி நிற்கலாம். ஆனால், அவளால் அப்படி அவனை விட்டு விலகி இருக்க முடியவில்லை. அவனின் முகம் பார்த்தே இரண்டு நாள்கள் ஆகியிருக்க, அவனின் முகம் பார்க்கும் ஆசையைச் சுமந்து கொண்டு மாடியேறிச் சென்றாள்.

அதிகாலை நேர காற்று ஜில்லென்று இருக்க, அங்கே மொட்டைமாடியில் ஒரு கோரைப்பாயை விரித்து, உள்பனியன், லுங்கி மட்டும் அணிந்து, தன் ஒருகையையே மடக்கி தலைக்குத் தலையணையாக்கிக் கொண்டு, மெல்லிய குறட்டை ஒலி எழுப்பியபடி உறங்கிக் கொண்டிருந்தான் சசிதரன்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அவள் வந்த பக்கம் அவன் முதுகு மட்டுமே தெரிய, மெல்ல அடிகளை எடுத்து வைத்துச் சுற்றி வந்து அவனின் முகம் பார்த்தபடி நின்றுவிட்டாள் மஞ்சரி.

உறக்கத்திலும் கூட, ஏதோ ஒரு பாரத்தைச் சுமப்பவனைப் போல இறுக்கத்தைப் பிரதிபலித்தது அவனின் அழுத்தமான முகம். அந்த இறுக்கத்தைக் காணச் சகிக்காமல், லேசாகக் குனிந்து அவனது நெற்றியில் சரிந்து கிடந்த தலைமுடியை மெல்ல ஒதுக்கிவிட அவளது கை நீண்டது. ஆனால், சட்டெனத் தன் கையைத் திரும்பப் பின்னால் இழுத்துக் கொண்டாள்.

அவனின் உறக்கம் கலைந்துவிட்டால், இப்போது போல நிறுத்தி நிதானமாகக் கூட அவனது முகத்தை அவளால் பார்க்க முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தை அவளால் நழுவ முடியாது என்று தோன்ற, அவனைத் தொடாமல் தள்ளிச் சென்று தரையில் அமர்ந்து முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு, அதில் தன் தலையைச் சாய்த்தபடி கணவனின் முகத்தையே இமை சிமிட்டாமல் பார்த்தாள்.

அதிகாலை நேர காற்று உடலை தழுவி லேசான இதத்தைக் கொடுத்தது. ஆனால், சட்டை இல்லாமல் உள்பனியனுடன் படுத்திருந்த அவனின் புஜத்தைக் கண்டவள், இந்தக் காற்றுக்கு அவனுக்குக் குளிருமே என்ற கவலையை அவளுக்குத் தந்தது.

‘ஒரு போர்வை எடுத்துட்டு வந்து போர்த்திப் படுத்திருக்கலாமே!’ என்று அவனின் மீது துளிர்த்த அக்கறையுடன் நினைத்துக் கொண்டாள்.

அவள் அவனையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்ததை, உறக்கத்தில் இருந்தவனாலும் உணர முடிந்ததோ என்னவோ… தன் புருவங்களைச் சுருக்கி, லேசாக அசைந்து படுத்தான்.

அவன் எழுந்து தன்னைப் பார்த்துவிடுவானோ என்றெல்லாம் அவள் பதறவில்லை. தன் பார்வையை மாற்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அந்தப் பார்வை அவனை உறுத்த, புரண்டு படுக்கத் திரும்பினான். அப்போது உறக்கம் முழுவதும் கலையாமல், விழிகளை லேசாகத் திறக்க, அதில் விழுந்தது மனைவியின் உருவம்.

இருள் இன்னும் முழுதாகப் பிரியாத அந்த வேளையில் ஒரு உருவத்தைப் பார்த்து சட்டென்று பதறி எழுந்தான்.

“நான்தான்ங்க…” முழங்காலில் சாய்த்திருந்த தலையை நிமிர்த்தி அவள் மெல்லிய குரலில் சொல்ல,

சசிதரன் ஒரு கணம் திகைத்துப்போய் அவளையே பார்த்தவன், பின் சுற்றி முற்றியும், இன்னும் இருட்டாக இருந்த வானத்தையும் பார்த்தான்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிஞ்சிடும்!” என்றாள் அவனின் பார்வை புரிந்து.

பாய் அருகில் வைத்திருந்த தன் கைப்பேசியை எடுத்து மணியைப் பார்த்தான். ஐந்து இருபது என்று காட்டிக் கொண்டிருந்தது.

“இந்த நேரம் இங்கே என்ன பண்ற?” என்று கேட்டபடி எழுந்து நின்றவன், இடுப்பை விட்டு நழுவிய லுங்கியை வேறு பக்கம் திரும்பி நின்று இழுத்து இறுக கட்டிக் கொண்டான்.

“உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்…” என்றாள் இன்னும் அதே இடத்தில் அமர்ந்தபடி.

அவளின் புறம் திரும்பி நெற்றி சுருங்க யோசனையுடன் பார்த்தவன், “என்ன விஷயம்?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கேட்டான்.

“உங்களைப் பார்க்க நான் விஷயத்தோடத்தான் வரணுமா?” என்று அண்ணாந்து அவனின் முகத்தைப் பார்த்து மென்மையுடன் கேட்டாள். அவளின் விழிகளில் ஒருவித ஏக்கம்!

அதைக் கண்டு ஒரு கணம் உறைந்தவன், உடனே தலையைத் திருப்பிக் கொண்டு, ‘ம்ப்ச்!’ என்று சலிப்புடன் உச்சுக் கொட்டி, “விஷயம் எதுவும் இல்லைனா எதுக்கு இந்த நேரம் இங்கே வரணும்? எழுந்து கீழே போ. எல்லாரும் எழுந்து வரும் நேரமாச்சு. போய் வேலை ஏதாவது இருந்தால் பாரு…” என்றான் சற்றே சிடுசிடுப்புடன்.

“வேலை எப்பவும்தான் இந்த வீட்டில் இருக்கு. உங்களை எப்பவாவது இப்படிப் பார்த்தால் தானே உண்டு?” என்று கேட்டபடி தானும் எழுந்து நின்றாள்.

அவளின் வார்த்தைகள் அவனைத் தாக்கியதோ என்னவோ… புஜங்கள் இறுக, எங்கோ பார்த்துக் கொண்டிந்தவன், பின் எதுவும் பேசாமல் பாயை சுருட்டி கையில் எடுத்துக் கொண்டு, “நான் கீழே போறேன்…” என்று அவளின் புறம் கூடத் திரும்பாமல் சொல்லிவிட்டு படியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com