👁️ 856 Views
அத்தியாயம் – 30
“ப்பா… ஸ்தாப்! ஸ்தாப்!” என்று அற்புதா கத்த,
“இப்ப எதுக்குடி நிறுத்த சொல்ற? பேசாம வர மாட்டியா?” என்று அதட்டினாள் மதுமதி.
“ப்பா…” அன்னையில் பேச்சை காதில் வாங்காமல் கத்தினாள் மகள்.
“என்னடா பேபி? எதுக்கு நிறுத்த சொல்ற?” காரை ஓட்டிக்கொண்டிருந்த மயூரன் கேட்க,
“கதைக்குப் போவணும்…” என்றாள் குட்டி.
“இப்ப எதுக்குடி உனக்குக் கடைக்குப் போகணும்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே கடைக்குப் போய்ப் பால் குடிச்ச. இப்ப என்ன வேணும்?” மதுமதி கேட்க,
“போ… நான் அப்பாத்த தான் சொல்லுவேன்…” என்று மழலையில் மிழற்றினாள் மூன்று வயதை தொட்டிருந்த அற்புதா.
மதுமதி மகளை முறைக்க, தந்தையை போலவே இருந்த தன் சுருட்டை முடி தலையைச் சிலுப்பிவிட்டு, பின் இருக்கையில் ஏறி நின்றவள் முன் இருக்கையை எட்டி பிடித்துக் குனிந்து தந்தையின் காதில் ரகசியம் பேசினாள்.
“ப்பா, சாக்கி வேணும்… தூ சாக்கி… இல்ல… இல்ல… த்தீ சாக்கி. குத்தி தம்பிக்கு ஒது சாக்கி… பெதிய தம்பிக்கு ஒது சாக்கி…” என்று அவள் சொன்னதெல்லாம் மதுமதியின் காதிலும் விழுந்தது.
“ரகசியம் பேசுறாளாம் ரகசியம். சாக்லேட் தின்னு தின்னு பல்லு எல்லாம் கரையாகிட்டு வருது. இன்னும் கொஞ்ச நாள் போனா பல் எனாமல் எல்லாம் போயிடும் போல. இன்னும் சாக்கி வேணுமாம் இவளுக்கு. உட்கார்டி. விழுந்து வச்சிட போற…” என்று மகளை இழுத்து தன் அருகில் அமர வைத்தாள்.
“ப்பா…” என்று மகள் உதட்டை பிதுக்க,
“ஓகேடா பேபி. சாக்கி வாங்கலாம். அப்பா வாங்கித் தர்றேன்…” என்று மயூரன் சொல்ல,
“ஏங்க…” என்று குரலை உயர்த்தினாள் மதுமதி.
“ஒரு சாக்லேட் தானே மது. அதுவும் அவளுக்கு மட்டுமா கேட்கிறா? அவ தம்பிகளுக்கும் சேர்த்து தானே கேட்கிறா. என்னடா பேபி?” மனைவியிடம் ஆரம்பித்து மகளிடம் அவன் முடிக்க,
“யெஸ் பா…” என்று வேகமாகத் தலையை அசைத்தாள் மகள்.
“அப்பாவும், மகளும் நான் சொல்றது எதையுமே கேட்க கூடாதுன்னு முடிவோட இருக்கீங்க. இரண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டு செய்ற சேட்டை எல்லாம் தாங்கலை…” என மதுமதி கடுகடுக்க,
“ப்பா…” என மகள் அதற்கும் தந்தையை அழைக்க,
“கூல்டா பேபி. உன் அம்மாவுக்கு நம்ம மேல பொறாமைடா…” என்று மகளைச் சமாதானம் செய்தவன், “உனக்கு வேணும்னா உன் பையன் கூடக் கூட்டு சேர்ந்துக்கோ. நாங்க வேணாம்னா சொன்னோம்?” என்று குறும்பு கொப்பளிக்கக் கேட்டவன் முன் கண்ணாடி வழியாக, பின் இருக்கையில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.
வாயை கோணி அவனுக்குப் பழிப்புக் காட்டினாள் மதுமதி.
மலர்ந்து சிரித்தான் மயூரன்.
மதுமதியின் பார்வை தன் மடியில் உறங்கிக் கொண்டு வந்த மகன் மீது படிந்தது.
அற்புதாவிற்கு ஒன்றரை வயது ஆகும் போதே இரண்டாவது பிள்ளை உருவாகியிருந்தது. அதற்கும் போதுமான பாதுகாப்பு எடுத்திருந்தனர். ஆனால், எங்கோ ஒரு நாள் பிசக்க, வயிற்றில் பிள்ளை!
பிள்ளை உருவானது மகிழ்ச்சிதான் என்றாலும், மனைவியின் உடல்நிலையை நினைத்து கலங்கிப் போனான் மயூரன்.
“சாரிடி மது. நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும். உனக்குக் கஷ்டமா இருந்தால், நாம வேணா… அபார்…” என்று ஆரம்பித்தவனின் வாயை தன் கையால் மூடினாள் மதுமதி.
“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. இப்படி எல்லாம் பேசாதீங்க மய்யூ!” எனக் கண்டிப்புடனே உரைத்திருந்தாள்.
அவனைப் பிடிக்காது என்று அவள் இருந்த போதே, அவனின் பிள்ளையைச் சுமந்தவள் அவள்! இப்போது அவனின் ஊன் உயிரோடு ஒன்றி காதலோடு வாழ்ந்து உருவான பிள்ளையை மட்டும் வேண்டாம் என்று நினைப்பாளா என்ன?
அவன் மட்டுமல்ல… இப்போது அவளின் மனத்திலும் அவனின் மீதான நேசம் துளிர்த்துப் பெருகியிருந்தது.
அவனின் காதலில் கரைந்தவள் அவனைக் காதலிக்கவும் ஆரம்பித்திருந்தாள். தங்கள் நேசத்தில் உருவான பிள்ளையைச் சுகமாகத் தாங்க தயாரானாள்.
“உனக்காகத்தான் சொல்றேன் தங்கப்பொண்ணே! உன் உடம்பு வீக்காகிடும்…” என்றான் கவலையாக.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. ஏன் என்னை வீக்காக விடாம நீங்க பார்த்துக்க மாட்டீங்களா என்ன?” என்று புருவம் உயர கேட்டவளை, பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அரவணைத்துக் கொண்டான்.
அவளைக் கவனத்துடன் பார்த்தும் கொண்டான். துறுதுறுவென ஓடி விளையாடிய மகளுடன் கர்ப்பம் தாங்கிய மனைவியையும் பொறுப்புடன் பார்த்துக் கொண்டான்.
இரண்டாவதாக மகன் பிறக்க, ‘ஆர்யன்’ எனப் பெயர் சூட்டியிருந்தனர்.
“ப்பா… சாக்கி…” என்று அற்புதா மீண்டும் ஆரம்பிக்க,
“இன்னும் கொஞ்ச நேரத்தில் வீடு வந்துரும்டா பேபி. அங்க போன பிறகு கடைக்குப் போய் வாங்கலாம், சரியா?” என்று மகளைச் சமாளித்துக் கொண்டே காரை செலுத்தினான் மயூரன்.
“அப்பதியே தம்பிக்கு கிப்த்…” என்று அடுத்ததை ஆரம்பித்தாள்.
“கிஃப்ட் எல்லாம் உங்க அப்பாவும் அம்மாவும் ஏற்கெனவே வாங்கிட்டாங்க பாப்பா…” என்றார் அவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த திலகா. முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜெயராமன் உறங்கிக்கொண்டிருந்தார்.
“அப்பதியாப்பா? தாய்ஸா? என்ன தாய்ஸ்?” அற்புதா ஆர்வமாகக் கண்களை விரித்துக் கேட்க,
“இவளுக்குக் கிஃப்ட்னாலே அது டாய்ஸ்தான்…” என்று அலுத்துக்கொண்டாள் மதுமதி.
“குட்டிப் பிள்ளைகளுக்கு அதுதான் கிஃப்ட்…” என்றான் மயூரன்.
“இவள் அவ தம்பிக்கு மட்டுமா கிஃப்ட் கேட்பா? அவளுக்கும் சேர்த்து தானே கேட்பா. டாய்ஸ் வாங்க அவளுக்கு ஏதாவது ஒரு சாக்கு வேணும்…” என்றாள் மதுமதி.
அவள் சொல்வது போல அற்புதாவிற்கு நினைக்கும் போதெல்லாம் பொம்மை வேண்டும். மகள் முகத்தைச் சுருக்கி கெஞ்சி கேட்டால் மயூரன் வாங்கிக் கொடுத்துவிடுவான். ஆனால் அப்படிப் பழக விடக்கூடாது என்று மதுமதி கண்டிப்பாள். அதனாலே அம்மாவுக்கும் மகளுக்கும் முட்டிக்கொள்ளும். மகள் தகப்பனுடன் கூட்டணிப் போட்டுக் கொள்வாள்.
“அவள் கேட்டதும் வாங்கிக் கொடுத்து பழகாதீங்க மய்யூ…” எனக் கணவனையும் கண்டிப்பாள்.
“இன்னும் கொஞ்ச நாளைக்குத் தானே மது? ஸ்கூல் போயிட்டா டாய்ஸ் கேட்பதை எல்லாம் நிறுத்திடுவா. இப்ப அவளுக்கு விளையாட்டுக்கு பொம்மை தானே இருக்கு…” என்று மனைவியைச் சமாதானம் செய்வான்.
பள்ளிக்குச் சென்ற பிறகுதான் மற்ற பிள்ளைகள் இது வைத்திருக்கிறார்கள் அது வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி தனக்கும் கேட்பார்கள் என அவனுக்குத் தெரியவில்லை, பாவம்!
மகளை பெற்ற தந்தைகளின் உலகம் என்றுமே தனிதான்!
“ப்பா… தாய்ஸ்…” சாக்லேட்டை மறந்துவிட்டு இப்போது பொம்மைக்குத் தாவியிருந்தாள் அற்புதா.
“வாங்கலாம்டா…” என்று மகளைச் சமாளித்துக்கொண்டு வந்தான் மயூரன்.
பேசிக்கொண்டே அடுத்த ஒரு மணிநேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடம் சென்று சேர்ந்தனர்.
அவர்கள் காரை விட்டு இறங்கவுமே… “வாங்க… வாங்க…” என ஆர்வத்துடன் வரவேற்றனர் யுகேந்திரனும், ஓவியாவும். யுகேந்திரனின் கையில் அவர்களின் ஒரு வயது மகன் இருந்தான்.
அவர்கள் வீட்டிற்குத்தான் இவர்கள் குடும்பமாக வந்திருந்தனர்.
அன்றுதான் யுகேந்திரன் ஓவியாவின் மகன் நிவேதனுக்குப் பிறந்தநாள்.
பெயரனின் முதல் பிறந்தநாளை தன் கணவர் வாழ்ந்த வீட்டில் வைக்க ஆசைப்பட்டார் யுகேந்திரனின் அன்னை ஆனந்தி.
யுகேந்திரனும் ஓவியாவும் தங்கள் மகனுடன் தற்போது சென்னையில் வசித்து வந்தாலும், அன்னையின் ஆசையை ஏற்று, தான் பிறந்த ஊரான ஏற்காட்டில் மகனின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்திருந்தான் யுகேந்திரன்.
அதற்கு மயூரன் குடும்பத்திற்கும் அழைப்பு விடுவித்திருக்க, இதோ அவர்கள் வந்திறங்கியிருந்தனர்.
அற்புதா பெரிய தம்பி என்றது நிவேதனைத்தான். ஓவியா பிரசவத்திற்குக் கரூரில் அன்னையின் வீட்டில் இருந்தாள். குழந்தை பிறந்தபின் மயூரனும் மதுமதியும் அற்புதாவுடன் சென்று பார்த்தனர். தன்னை விடக் குட்டியாக இருந்த நிவேதனை பார்த்து அவளுக்கு ஒரே கொண்டாட்டம். அதன்பின் அவளின் தம்பி ஆர்யனும் பிறக்க, இரண்டு தம்பிகளாகி போயினர்.
ஓவியா மகனுடன் சென்னை சென்ற பின்னும் அவ்வப்போது காணொளி அழைப்பில் பேசுவார்கள் என்பதால் அவர்களுக்குள் இன்னும் நெருக்கம் அதிகமாகியிருந்தது.
மயூரனும், யுகேந்திரனும் ஒரு பக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, மதுமதியின் மகனை ஓவியா தூக்கி கொஞ்சிக் கொண்டிருக்க, அவளின் மகன் மதுமதியின் மடியில் அமர்ந்திருந்தான். இருவருக்கும் நடுவே அமர்ந்து இரண்டு தம்பிகளுடனும் பேசினாள் அற்புதா.

யுகேந்திரனின் அன்னை ஆனந்தியும், முதல் நாளே பெயரன் பிறந்த நாளுக்கு வந்துவிட்ட ஓவியாவின் அன்னை ராதாவும், திலகாவும் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
ஜெயராமன் செல்வராஜுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“அப்புறம் மயூரன் அடுத்த ரிலீஸ் எப்போ?” என்று கேலியாகக் கேட்டுக்கொண்டிருந்தான் யுகேந்திரன்.
“அதுக்குச் சான்ஸே இல்லை யுகேந்திரா. இரண்டோட போதும்னு முடிவு பண்ணிட்டோம். இதுக்கு மேலனா என் மது தாங்க மாட்டா…” என்றான்.
“அடடா! நீங்க போன ஸ்பீடுக்கு இன்னும் மூனாவது பெத்துக்குவீங்கன்னு நினைச்சேனே…” என்று யுகேந்திரன் கிண்டலாகக் கேட்க, தன் சுருட்டை முடியை கையால் கோதிக்கொண்டே சிரித்தான் மயூரன்.
“என்னைக் கிண்டல் பண்றது இருக்கட்டும். நீங்க அடுத்த ரிலீசுக்கு தயாராகுங்க…” என்று மயூரன் சொல்ல,
“நீங்க வேற… நிவேதனுக்கு மூனு வயசு ஆகுற வரைக்கும் கூடவே கூடாதுன்னு தடா போட்டுட்டா என் ஓவியம்…” என்று பெருமூச்சு விட்டான் யுகேந்திரன்.
“ரொம்ப ஏமாற்றம் போல?”
“இருக்காதா பின்னே? நாங்க ஃபர்ஸ்ட் ரிலீஸே லேட்டாத்தான் பண்ணோம். செக்ண்டும் லேட்டுனா…”
“இந்தக் கேப்பும் தேவைதான் யுகேந்திரன். என்னதான் நாம பார்த்துக்கிட்டாலும் அடுத்தும் சீக்கிரம் பிரசவம்னா பொண்ணுங்க உடம்பு அலண்டுதான் போகும்…” என்று மயூரன் சொல்ல, யுகேந்திரனும் ஆமோதித்தான்.
முதல் பிரசவத்திற்கு போல இரண்டாவது பிரசவம் மதுமதிக்குப் போராட்டமாக இருக்கவில்லை என்றாலும், முதல் பிள்ளையே சிறு குழந்தையாக இருக்க, அவளையும் பார்த்து இரண்டாவது பிள்ளையையும் கவனித்து என்று மதுமதி சற்று சிரமப்பட்டுத்தான் போனாள்.
அவளின் அன்னை, கணவன் எல்லாம் பார்த்துக்கொண்டாலும் அன்னையாகப் பிள்ளைகளை அவள்தானே அதிகம் கவனிக்க வேண்டியது இருக்கும். அதில் அவளுக்கு முதுகுவலி கூட வரும்.
அவள் பிள்ளைகளைக் கவனிக்க, மனைவியைத் தான் கவனித்துக் கொள்வான் மயூரன்.
சில விஷயங்கள் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றாலும், நடப்பதை ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் இருந்து அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கும் போது, கஷ்டங்களையும் கூட இலகுவாகச் சமாளித்துவிடலாம்.
மயூரனும், மதுமதியும் அந்தத் தாரக மந்திரத்தை பற்றிக் கொண்டு சமாளித்துக் கொண்டார்கள்.
அன்று மாலை அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாட, ஓவியா மகனை தூக்கி வைத்து அவனின் கையைப் பிடித்து, கேக் வெட்ட வைக்க, அதில் சிறு துண்டை எடுத்து மகனுக்கு ஊட்டிவிட்டான் யுகேந்திரன்.
நிவேதன் அந்தக் கேக் துண்டை சப்பு கொட்டி சாப்பிட, “நானு… நானும் தம்பிக்கு ஊத்துவேன்…” என்றாள் அற்புதா.
புன்னகையுடன் அவளைத் தூக்கிக் கொண்ட யுகேந்திரன், அவளின் கையில் சிறிய கேக் துண்டை கொடுத்தான். அதை நிவேதனின் உதட்டில் வைத்தாள் அவள். அவன் அதையும் சுவைத்து சப்புக்கொட்ட, “ஹை… அப்பா… தம்பிக்கு கேக் பிச்சிருக்கு. நம்ம தம்பிக்கும் கொதுக்கத்தா?” என்று தலையைச் சாய்த்து ஆர்வமாகக் கேட்டாள் அற்புதா.
“ஆரியனுக்கு இப்ப கேக் கொடுக்கக் கூடாதுடா குட்டிம்மா. நிவேதனுக்குக் கேக் பிடிச்சிருக்கு பார். அவனுக்குக் கொடு!” என்றான் மயூரன்.
நிவேதனுக்கு மீண்டும் ஊட்டிவிட்டாள்.
“நீயும் கேக் சாப்பிடுடா…” என்று ஓவியா அற்புதாவுக்கு ஊட்டி விட்டாள்.
தன் மகனை கையில் வைத்துக்கொண்டு கணவன் அருகில் நின்று மகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமதி.
அற்புதா அதன்பின்னும் அவர்களுடனே இருக்க, “அவளைக் கூப்பிடுங்க. என்னமோ அவளுக்குத்தான் பர்த்டே போலப் பண்ணிட்டு இருக்கா…” என்று கணவனை விட்டு மகளை அழைத்து வர செய்துவிட்டாள் மதுமதி.
அற்புதா மீண்டும் அங்கே ஓடப் பார்க்க, “நாம தம்பிக்குக் கிஃப்ட் கொடுக்கலாம் பேபி…” என்றவன், அவளின் கையில் ஒரு பரிசு பெட்டியை கொடுத்தான் மயூரன்.
“தாய்ஸாப்பா?” என்று அற்புதா கண்களை விரித்துக் கேட்க,
“ஆமா… இது நீ தம்பிக்குக் கொடுக்கப் போற கிஃப்ட். நீயே உன் கையால் கொடு வா…” என்று மகளை அழைத்துச் சென்றான்.
“நிவே… இந்தா கிஃப்த்…” என்று அற்புதா கொடுக்க, நிவேதன் வாங்காமல் அன்னையின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
“அக்கா கிஃப்ட் தர்றா பாரு. வாங்கிக்கோ நிவே…” என்று மகனை தோளிலிருந்து நிமிர்த்தி வாங்க வைத்தாள் ஓவியா.
அடுத்ததாக, அவர்களின் பின்னால் வந்த மதுமதி, தன் கையில் இருந்த ஒரு சிறிய பரிசு பொதியை எடுத்துக் கணவனிடம் கொடுத்து நிவேதனிடம் கொடுக்கச் சொன்னாள்.
“நீயே கொடு மது…” என்றான் மயூரன்.
“நாம இரண்டு பேரும் சேர்ந்தே கொடுக்கலாம்…” என்றாள்.
அனைத்திலும் அவள் அவனையும் இணைத்துக் கொள்வாள். அவன் அவளை முன்னிலை படுத்த முயல, அவன் இல்லாமல் தான் இல்லை என்பது போல, அவனுடன் சேர்ந்துதான் செய்வாள். மகளுக்குப் பெயர் வைத்த நிகழ்விலிருந்தே மதுமதியின் வழக்கமாக இது மாறியிருந்தது.
இப்போதும் இருவரும் சேர்ந்தே பரிசை கொடுத்தனர்.
“அதான் அற்புதா கொடுத்தாளேக்கா. நீங்க வேற எதுக்குத் தனியா?” ஓவியா கேட்க,
“இது எங்க கிஃப்ட். பிரிச்சு பார்த்து உன் மகனுக்குப் போட்டு விடு!” என்றாள் மதுமதி.
ஓவியாவும் அப்போதே பரிசை பிரித்துப் பார்க்க, உள்ளே ஒரு தங்க செயின் டாலருடன் இருந்தது.
“டிசைன் நல்லாருக்குக்கா. தங்கம் விக்கிற விலை எதுக்குக்கா? நீங்க குடும்பமா வந்ததே எங்களுக்குச் சந்தோஷம் தான். என்ன யுகேன்?” என்று ஓவியா கேட்க,
“அதானே! என்ன மயூரன் இதெல்லாம்?” என்று யுகேந்திரனும் கடிந்து கொள்வதைப் போலக் கேட்டான்.
“நிவேதனுக்கு நாங்க ஆசையா செய்றோம். அதெல்லாம் கேள்வி கேட்க கூடாது. போட்டு விடுங்க யுகேந்திரன்…” என்று மயூரன் புன்னகையுடன் சொல்ல, அவனும் மறுக்க முடியாமல் அந்தச் செயினை மகனின் கழுத்தில் போட்டுவிட்டான்.
பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து திருப்தியுடன் சிரித்து மகிழ்ந்தனர்.
பிறந்தநாள் விழா நல்லபடியாக நிறைவு பெற்றது.
அன்று இரவு உணவிற்குப் பின், “அப்போ நாங்க கிளம்புறோம்…” என்று மயூரன் சொல்ல,
“இன்னைக்கு இங்கேயே தங்கியிருக்கலாம் தானேக்கா? எதுக்குத் தனியா?” என்று மதுமதியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் ஓவியா.
“எல்லாம் உன் மாமா பிளான் ஓவியா. நீ கேள்வி கேட்கணும்னா அவரைக் கேளு…” மதுமதி சொல்ல,
“ஏன் மாமா…” என்று ஓவியா மயூரனிடம் ஆரம்பிக்க,
“அவங்க பிள்ளை குட்டியோட ஹனிமூன் போகப் பிளான் பண்ணியிருக்காங்க ஓவியமே. அது புரியாம ஏன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க…” என்று கேலியுடன் சொன்ன யுகேந்திரன், “என்ஜாய் மயூரன்!” என்றான் கண்களைச் சிமிட்டி.
“நீங்களே சொல்லிட்டீங்க பிள்ளை குட்டியோடன்னு… அப்புறம் எங்கிருந்து ஹனிமூன் கொண்டாட?” என்று மயூரன் போலியாக அலுத்துக் கொள்ள,
“அதான் பிள்ளைங்களை நாங்க பார்த்துக்கிறோம்னு சொன்னோம் மாப்பிள்ளை…” என்றார் ஜெயராமன்.
“மூத்தவளையாவது பார்த்துக்கலாம். கைப்பிள்ளையை எப்படிப் பார்த்துப்பீங்க?” என்று திலகா கணவரை கடிந்து கொண்டார்.
“அப்போ அற்புதாவை மட்டுமாவது எங்ககிட்ட விட்டு கிளம்புங்க…” என்றார் ஜெயராமன்.
“அதெல்லாம் வேண்டாம் மாமா. அவ இல்லாம எங்களால் இருக்க முடியாது. நாங்க பார்த்துக்கிறோம்…” என்ற மயூரன் அவர்களிடம் விடைப்பெற்று மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
ஏற்காட்டிலேயே இரண்டு நாள்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தான் மயூரன். அதற்காக ஒரு ரிசார்டில் அறை எடுத்திருந்தான். அங்கேதான் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
மாமியார், மாமனாரையும் அழைக்கவே செய்தான். அவர்கள் வரவில்லை என்று மறுத்துவிட்டனர். அன்று இரவு யுகேந்திரனின் வீட்டிலேயே தங்கிவிட்டு, காலையில் செல்வராஜ் ராதாவுடன் சேர்ந்து கரூருக்குக் கிளம்புவதாக இருந்தனர் ஜெயராமனும் திலகாவும்.
சிறிது நேரத்தில் ரிசார்டிற்குச் சென்று சேர்ந்தனர்.
“சூப்பதா இதுக்குப்பா. ஹை!” என்று அறையின் கட்டிலில் ஏறி நின்று குதித்தாள் அற்புதா.
“இன்னும் வெளியே நல்லா இருக்கும்டா. நாளைக்குப் போகலாம், சரியா? இப்ப நேரமாச்சு தூங்கு. தம்பிக்கும் தூக்கம் வருது பாரு…” என்று மயூரன் சொல்ல,
“தம்பியை நான் தூங்க வைக்கிதேன்பா. ம்மா… தம்பி கொது…” கையை நீட்டி அழைத்தாள் அற்புதா.
இது வழக்கம் தான் என்பதால் மதுமதி மகனை மகள் அருகில் படுக்க வைத்தாள்.
“அக்கா கதை சொல்லத்துமா உனக்கு? என்ன கதை சொல்லத்தும்?” என்று தம்பியின் புறம் திரும்பி படுத்து மழலையில் ஆரம்பித்தாள் அற்புதா.
கையையும் காலையும் அசைத்து வேகமாக புரண்டு குப்புற விழுந்து அக்காவின் முகம் பார்த்துச் சிரித்தான் ஆர்யன்.
“ஹான்… தோதா புஜ்ஜி கதை சொல்லுதேன். இப்ப நாம எங்க போதோம்? தோதா புஜ்ஜி கதைக்குள்ள போதோம்…” என்று அவள் பாவனையாகச் சொல்ல,
“ஆ… கூஉ…” என்று பதிலுக்குச் சத்தமிட்டான் ஆர்யன். தங்கள் இரு பிள்ளைகளையும் பார்த்து மயூரனும் மதுமதியும் சிரித்துக் கொண்டனர்.
தினமும் இரவு தம்பியின் அருகில் படுத்து கதை சொல்லுவாள் அற்புதா. அவனும் அவளின் முகத்தைப் பார்த்து சிரித்தபடி சத்தமிடுவான். அவனுக்குக் கதை சொல்பவள்தான் முதல் ஆளாகத் தூங்கியும் போவாள்.
இன்றும் அதுவே நடந்தது. உறக்கத்தில் உளறிக்கொண்டே இருந்த மகளின் அருகில் படுத்த மயூரன் அவளை லேசாகத் தட்டிக் கொடுக்க, ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள் பிள்ளை.
அதற்குள் தூக்கத்திற்கும் பசிக்கும் ஆர்யன் சிணுங்க, அவனைத் தூக்கி மடியிலிட்டு கவனிக்க ஆரம்பித்தாள் மதுமதி.
பாலை குடித்துக்கொண்டே அவன் உறங்கிவிட, தோளில் போட்டு சில நொடிகள் தட்டிக் கொடுத்துவிட்டு மகளின் அருகில் மகனையும் படுக்க வைத்தாள் மதுமதி. பிள்ளைகள் இருவரும் உறங்கியதும், எழுந்து மனைவியின் அருகில் வந்து அமர்ந்தான் மயூரன்.
கட்டிலில் அமர்ந்திருந்த மனைவியைத் தூக்கி தன் மடியில் அமர வைத்துக்கொண்டவன், “இன்னைக்கு என்ன என் தங்கப்பொண்ணு ரொம்ப அமைதியா இருக்கா?” என்று அவளின் கழுத்தில் மீசையால் உரசிக் கொண்டே கேட்டான்.
“மனசு அமைதியா இருக்கு. அதனால்தான் போல…” என்றாள்.
“அப்படியா? ஏன் மனசு அமைதியா இருக்கு?”
“வாழ்க்கை அழகா இருந்தா மனசும் அமைதியா இருக்குமாம்!” என்று மதுமதி சொல்ல,
“ஆஹான்!”
“வாழ்க்கை அழகா மாற நீங்கதான் காரணம் மய்யூ. நீங்க மட்டும் இல்லைனா…”
“ஷ்ஷ் மது… அழகான நேரத்தில் அனாவசியமா எதுக்குப் பேச்சு, ம்ம்?” என்று கேட்டவன் அவளின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, அவளின் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு அவளின் பேச்சை நிறுத்தினான்.

“பேச வேணாம்னா அப்ப தூங்கலாமா?” சில நொடிகளுக்குப் பிறகு மதுமதி கேட்க,
“தூங்கவா? அதுக்கா இங்கே வந்திருக்கோம்?” என்று அவளை முறைத்தான்.
“வேற எதுக்காம்?” அவள் உதட்டோரம் பதுக்கிய புன்னகையுடன் கேட்க,
“ஹான்… ஹனிமூன் கொண்டாட…”
“அதெல்லாம் இல்லைன்னு யாரோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னாங்களே?”
“அதெல்லாம் சொல்றதுதான். அதுக்காக… பக்கத்தில் பொண்டாட்டியை வச்சுக்கிட்டு எந்த மடையனாவது ஹனிமூன் கொண்டாடாம இருப்பானா?”
“இந்த மய்யூ மடையன் இருப்பான்…” என்று அவனின் சுருட்டை முடி கேசத்துக்குள் விரலை விட்டு விளையாடியபடி மதுமதி சொல்ல,
“ஓய், என்னடி நக்கலா?”
“நான் நடந்ததைத்தான் சொன்னேன்பா…” என்று மதுமதி தோளை குலுக்க,
அவளின் தோளை அழுந்த பற்றித் தன்னை நோக்கி இழுத்த மயூரன், “இப்ப நடக்கப் போவதையும் சேர்த்து சொல்லுடி தங்கப்பொண்ணே…” என்ற மயூரனின் கரங்கள் ஆக்டோபஸாக அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டன.
அவனின் இறுகிய பிடிக்குள் இணக்கத்துடன் இணைந்து கொண்டாள் மதுமதி.
காதலின் ரீங்காரம் என்றென்றும் இன்னிசையாய் இசைக்கட்டும்!
****சுபம்****
©nandhavanamnovels.com