4 – நீங்காத பந்தமொன்று

👁️ 1675 Views

அத்தியாயம் – 4

டம்… தட்… டமால்‌‌…

ஆட்கள் பொருட்களைக் குட்டியானை வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்க, அதன் சத்தம் காதை பிளந்தது.‌

அன்று காலையில் இருந்தே சசிதரனுக்குத் தலைவலியாக இருக்க, அந்தச் சத்தம் வேறு அவனின் வலியை கூட்டுவது போல இருந்தது.

“சத்தம் இல்லாம சாமானை ஏத்துங்கடா…” என்று சுள்ளென்று ஆட்களைப் பார்த்து சத்தமிட்டான் சசிதரன்.

அவனின் முகம் என்றும் இல்லாமல் கடுகடுவென்று இருக்க, அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் அதற்கு மேல் அதிகம் சத்தம் எழுப்பாமல் வேலையைப் பார்த்தனர்.

“சசி…” என்று அலுவலக அறையில் அமர்ந்திருந்த பாஸ்கரன் குரல் கொடுக்க, “இதோ வர்றேன்ணே…” என்று உள்ளே விரைந்தான்.

“சாமானை எல்லாம் விசேஷ வீட்டில் இறக்கிட்டு, அப்படியே கூடவே நின்னு வேலையை முடிச்சுக் கொடுத்துடு. பொண்ணு நம்ம வாசன் கூட வேலை பார்க்கிற பொண்ணு. இந்த நிச்சயதார்த்த ஃபங்ஷனை நல்லபடியா முடிச்சுக் கொடுத்தா மேரேஜ் ஈவென்டும் நமக்கே கொடுக்கிறதா அந்தப் பொண்ணு வாசன்கிட்ட சொல்லுச்சாம். அதனால், இதைச் சின்னக் குறையும் இல்லாம சிறப்பா செய்து கொடுத்துடணும் சசி…” என்று கண்டிப்புடன் உரைத்தான் பாஸ்கரன்.

“அதெல்லாம் நல்லா பண்ணிடலாம் அண்ணே. வாசனோட பிரண்ட்னா அப்போ அவனும் ஃபங்ஷனுக்கு வருவான் தானே அண்ணே? அவனைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு…” என்றான் சசிதரன்.

“ஆமா, இந்த ஃபங்ஷனுக்காகவே வர்றான். பெங்களூரில் வேலை பார்க்கிறானே… வேலையே சரியா இருக்குன்னு முன்ன போல இங்கே வந்து போக மாட்டிங்கிறான். நாங்களே அவனை எப்பவாவது பார்க்கிற மாதிரிதான் இருக்கு…”

“அவனுக்குக் கல்யாணம் எப்பண்ணே?”

“இப்பதான் வீட்டில் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்கோம். அமைஞ்சதும் முடிச்சிட வேண்டியது தான். சரி, நீ போய் வேலையைப் பார்…” என்று பாஸ்கரன் சொன்னதும் தலையை அசைத்துவிட்டு வெளியே சென்றான்.

ஆட்கள் விசேஷ வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை ஏற்றியதும், அவர்களுடன் வண்டியில் சசிதரனும் கிளம்பிச் சென்றான்.

பெங்களூரில் பணிபுரியும் பெண்ணின் சொந்த ஊர் சேலம். அன்று அந்தப் பெண்ணிற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து பூ வைத்து, தட்டு மாற்றி நிச்சயம் செய்யும் நிகழ்வு நடப்பதாக இருந்தது. அந்த நிகழ்வை பெண்ணின் வீட்டில் மொட்டை மாடியிலேயே நடத்த திட்டமிட்டிருந்தனர். இரண்டாவது தளம்தான் மொட்டை மாடி.

மாடியில் அனைத்துப் பொருட்களையும் ஏற்றி, ஷாமியானா பந்தல் போட்டு, பெண் வீட்டார் சொன்னது போல, அதில் ஓர் ஓரத்திலேயே சின்னதாக மேடை அமைத்து, பின்னணியில் பூக்களால் அலங்கரித்து, மொட்டை மாடியையே சின்ன மண்டபம் போல் நிறைவாய் அலங்கரித்து விட்டனர்.

அனைத்து வேலைகளையும் ஊழியர்களை வைத்துச் செய்து முடித்தான் சசிதரன்.

மாலை மாப்பிள்ளை வீட்டார் இரண்டு வேன்களில் வந்து இறங்க, அவர்களுக்குச் சசிதரன் தன் ஆட்கள் மூலமாக வரவேற்பு குளிர்பானம் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்த போது, பெண் வீட்டு ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்த வாசனை கண்டான்.

வாசன், பாஸ்கரனின் உடன் பிறந்த தம்பி! அவனைக் கடைசியாகப் பார்த்து ஒரு வருடம் இருக்கும். பாஸ்கரனின் அலுவலகத்திற்கு வந்த போது பார்த்திருந்தான் சசிதரன்.

சசிதரனை எப்போது பார்த்தாலும், அவனுடன் நன்றாகப் பேசி நலம் விசாரிப்பான் வாசன். அவனைப் பார்த்துவிட்டு நலம் கூட விசாரிக்கவில்லை என்றால் எப்படி? என்று நினைத்த சசிதரன், அவனுக்குக் குளிர்பானம் கொடுப்பது போல அருகில் சென்றான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அவனின் அருகில் நின்றிருந்த மற்றவர்களுக்குக் குளிர்பானம் கொடுத்துவிட்டு, அப்படியே வாசனுக்கும் கொடுத்த சசிதரன், “எப்படி இருக்க வாசா? பார்த்து ரொம்ப நாளாச்சு? வேலை எல்லாம் எப்படிப் போகுது?” என்று புன்னகையுடன் விசாரித்தான்.

அவன் கொடுத்த குளிர்பானத்தை வாங்கிக் குடித்துக் கொண்டே, தலையை மட்டும் லேசாக அசைத்த வாசன், “வந்தவங்களை நல்லா கவனி. நான்தான் இந்த ஈவென்ட் பொறுப்பை என் அண்ணன்கிட்ட கொடுங்க. நல்லா செய்து தருவான்னு பொண்ணு வீட்டில் சொல்லி ஏற்பாடு பண்ணி கொடுத்தேன். என் பெயரோ, அண்ணன் பெயரோ கெடுவது போல எந்தக் குறையும் இருக்கக் கூடாது. சும்மா நின்னு வேடிக்கை பார்க்காம… போய் வேலையைப் பார்…” என்று வேலைக்காரனை விரட்டுவது போல அவன் விரட்ட, எப்போதும் இந்த மாதிரி பேசியிராத வாசன் அப்படிப் பேசவும் குன்றிப் போனது சசிதரனுக்கு.

வாசனின் பேச்சில் மட்டுமில்லாது, அவனின் முகபாவனையிலும் கூட அத்துணை அலட்சியம்.

‘வேலைக்காரன் தானே நீ!’ என்று அவன் தன்னை இளக்காரமாகப் பார்ப்பது சசிதரனுக்கு நன்றாகவே புரிந்தது.

‘நான் வேலைக்காரன் தானே’ என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்ட சசிதரன் அங்கிருந்து விலகிச் சென்று விட்டான்.

இப்போது தலைவலியை விட மனவலி அதிகமாக இருந்தது. முணுமுணுவென்று அவன் இதயத்திற்குள் எதையோ விட்டு குடைவது போல் இருக்க, ஒரு டம்ளர் தண்ணீரை குடித்துத் தன் வேதனையைத் தனக்குள்ளேயே முழுங்கிக் கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

நிச்சயதார்த்தம் முடிந்து, மாடியிலேயே இன்னொரு ஓரத்தில் நடந்த விருந்தையும் சிறப்பாகக் கவனித்து, அனைத்தும் முடிந்ததும், பொருட்களை ஏற கட்டி அதையெல்லாம் கொண்டு வந்து அலுவலக அறையில் வைத்து விட்டு தான் வீடு வந்து சேர்ந்தான் சசிதரன்.

அவன் வரும் வரையிலும் தூங்காமல் விழித்திருந்த அவனின் மனைவி, “இனி எனக்கும், என் பொண்ணுக்கும் தேவையானதை எல்லாம் நானே பார்த்துக்கிறேன். அதுக்கு நான் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்…” என்று சொன்னதும் அவனுக்குச் சுர்ரெனக் கோபம் ஏறியது.

“வேலைக்குப் போகப் போறீயா? அதுக்கு என்னடி அவசியம் வந்தது? உனக்காகவும், நம்ம பொண்ணுக்காகவும் தானே… கண்டவன்கிட்ட எல்லாம் பேச்சுக் கேட்டுக்கிட்டு, தலைவலி, காய்ச்சல் வந்தால் கூட அதைப் பொருட்படுத்தாமல் நாயா ஓடுறேன். உனக்கு நான் இங்கே என்ன குறை வச்சேன்னு இப்ப உங்களை நீயே பார்த்துக்கிறேன்னு சொல்ற? சொல்லுடி…” என்று நாக்கை மடித்துக் கடித்துக் கொண்டு தடித்த குரலில் அதட்டினான் சசிதரன்.

அவனின் அதட்டலுக்கு அவனின் மனைவி அசரவில்லை என்றாலும், குழந்தை சிணுங்க ஆரம்பித்தாள். அப்போது போல் தட்டிக் கொடுத்ததும் உறங்கிவிடாமல், எழுந்து படுக்கையில் அமர்ந்து அம்மாவை தேடி அழவும் ஆரம்பிக்க, “அம்மா இங்கேதான் இருக்கேன்டா பாப்பா…” என்று சமாதானம் சொல்லிக்கொண்டே, மகளைத் தூக்கி தன் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தாள் மஞ்சரி.

அன்னையின் தோளில் சாய்ந்து, அவளின் கழுத்தில் இருந்த தாலி கயிறை விரலில் சுருட்டிப் பிடித்துக்கொண்டு, சிணுங்கினாள் தியா.

“ஒன்னுமில்லைடா பாப்பா. தூங்கு… தூங்கு…” என்று பிள்ளையின் முதுகை தட்டிக் கொடுத்த மஞ்சரியின் கண்களோ அறைக்குள் வேகத்துடன் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாக நடந்து கொண்டிருந்த கணவனின் கால்களையே கண்டன.

தலைவலி மண்டையைப் பிளக்க, அதைவிட மனைவியின் வார்த்தைகள் அவனைப் போட்டு உலுக்க, உச்சந்தலை முடியை கையால் இறுக பிடித்துக் கொண்டு, கோபத்தை அடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்தான் சசிதரன்.

குழந்தையின் அழுகையால், தன் கோபத்தை முழுதாகக் காட்ட முடியாத கையறு நிலை… அவனை இன்னும்தான் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தது.

சில நொடிகளில் தியா உறங்கிவிட, சத்தம் இல்லாமல் இருக்கவும், திரும்பிப் பார்த்தான். மகளை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்து, மெல்லிதான போர்வையைப் போர்த்தி விட்டுக் கொண்டிருந்தாள் மஞ்சரி.

அவளின் அருகில் வேகமாக வந்த சசிதரன், “மாடிக்கு வா…” என்று பற்களைக் கடித்து முனகிவிட்டு கதவை திறந்து வெளியேறினான்.

மகளின் தலையை வருடிக் கொடுத்துவிட்டு நிதானமாகத்தான் எழுந்து சென்றாள் மஞ்சரி.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com