👁️ 1675 Views
மாடியிலும் நிற்காமல் நடந்து கொண்டிருந்தான் சசிதரன்.
அவளைக் கண்டதும் அவன் வேகமாக அருகில் வர, “இது மட்டும் திருட்டுத்தனம் இல்லையா?” என்று அவர்கள் நின்றிருந்த தனிமையைச் சுட்டிக்காட்டி அமைதியாகக் கேட்டாள்.
“என்னடி குத்திக்காட்டுறீயா?” என்று எரிச்சலுடன் கேட்டான்.
“அப்படியெல்லாம் இல்லை. நீங்கதானே அப்படிச் சொல்வீங்கனு சொன்னேன்…” என்று அவள் அலட்டிக் கொள்ளாமல் பேசியதே அவனை உஷ்ணமாக்கியது.

“தேவை இல்லாததைப் பேசாதே! நீ பேசிய விஷயத்துக்கு வா. நான் உனக்கு என்னடி குறை வச்சேன்? எதுக்கு வேலைக்குப் போகப் போறதா சொல்ற? என்னை என்ன பொண்டாட்டிக்கும், பிள்ளைக்கும் சம்பாதிச்சு பார்த்துக்க முடியாத வக்கத்தவன்னு நினைச்சியா? இல்லை, இவன் சம்பாத்தியம் எல்லாம் எந்த மூலைக்கு மட்டமா நினைக்கிறயா? சொல்லுடி…” என்று அதட்டினான்.
“நான் உங்களைப் பற்றி எப்படியும் நினைக்கலை. நான் இப்ப நினைப்பதெல்லாம் என் மகளைப் பத்தி மட்டும்தான். இப்ப அவளுக்கு இரண்டே முக்கால் வயசு ஆகுது. மூனு வயசு ஆனதும் ஸ்கூலில் சேர்க்கணும். அதுக்குப் பணம் வேணும். அது நான் ஏதாவது ஒரு வேலை பார்த்தால்தான் கிடைக்கும். அதான் வேலைக்குப் போகலாம்னு முடிவெடுத்திருக்கேன்…” என்றாள் தெளிவாக.
“மகளைப் படிக்க வைக்க வேலைக்குப் போகப் போறீயா? ஏன் அவளை நான் படிக்க வைக்க மாட்டேனா?”
“இல்லை, நீங்க அவளைப் படிக்க வைக்க வேணாம்…”
“ஏன்… ஏன்… அப்படிச் சொல்ற? நான் ஏன் படிக்க வைக்கக் கூடாது. அவ எனக்கும் மகள்டி…”
“அப்படியா?” சற்றே விழிகளை விரித்து வியப்பாகக் கேட்டாள் மஞ்சரி.
“ஏய்… என்ன அப்படியா? என்ன ரியாக்ஷன் இது?” என்று சசிதரன் கடுமையுடன் அதட்ட, மஞ்சரியோ அமைதியாக இருந்தாள்.
“பேசுடி…” என்று அதட்டினான்.
“தியா உங்க மகள்னு உங்களுக்கு நினைவு இருக்கேன்னு ஆச்சரியமா யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றாள் சலனமே இல்லாமல்.
அந்த வார்த்தைகள் சசிதரனின் முகத்தில் அறைந்தது போல இருந்தது. “ஏய்… என்னடி பேசுற நீ? நினைவு இல்லாமல் என்ன?” என்று கேட்டபடி அவளை அடிக்க ஆவேசமாகக் கையை ஓங்கிவிட்டான் சசிதரன்.
பதறாமல், பின்னால் செல்லாமல் அவனைத் தீர்க்கமாக மஞ்சரி பார்த்த பார்வை அவனின் கையைக் கீழே இறக்க வைத்தது.
“என்னை அடிக்கக் கூட உங்களுக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
“ரொம்பப் பேசாதேடி!” என்றான் பற்களைக் கடித்து.
“ஓ, உங்ககிட்ட பேசவும் எனக்கு உரிமை இல்லைன்னு சொல்றீங்களா?”
“ச்சை… ஏன்டி… ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? என்னாச்சு உனக்கு? இத்தனை நாள் நீ இப்படி இல்லையே… இப்ப மட்டும் என்ன வந்தது?” என்று இயலாமை கலந்த ஆதங்கத்துடன் கேட்டான்.
“இத்தனை நாள் இந்த வீட்டில் எல்லாரும் என்னை நாயை விடக் கேவலமா நடத்திய போதும், உங்க அப்பா என்னைக் கீழ்த்தரமா பேசிய போதும், நீங்க என்னை ஒரு மனுஷியா கூட மதிக்காம கண்டுக்காம இருந்த போதும், நான் கண்ணீர் மட்டும் விட்டுட்டு அமைதியா இருந்தது போல… எப்பவும் இப்படியே என்னை இருக்கச் சொல்றீங்களா? இப்பவும் கூட நீங்க எல்லாம் என்னை அப்படியே தொடர்ந்து நடத்தினா எனக்குக் கண்ணீர் வரும். காரணம் நான் தப்பு செய்தவ. நான் செய்த தப்புக்கான தண்டனையை நீங்க எல்லாம் கொடுக்கும் போது, எதிர்த்துப் பேசாமல், கண்ணீரோட கண்டிப்பா ஏத்துக்குவேன்தான்.
அதுக்காக என் பிள்ளைக்குச் செய்ய வேண்டியதை என்னால் செய்யாமல் இருக்க முடியாது பாருங்க. அவளுக்கு நான்தான் எல்லாம். இந்த வீட்டில் உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி, நீங்கன்னு இத்தனை பேர் இருந்தும் அவளுக்கு முழுமையா நான் ஒருத்தி மட்டும்தான் இருக்கேன். நான் செய்த தப்புக்கு என்னைத் தண்டிப்பது நியாயம். ஆனால், எந்தத் தவறுமே செய்யாம… அவள் என் வயித்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக என் பிள்ளையை எல்லாரும் தீண்டத்தகாதவள் போல் ஒதுக்கி வைக்கிறீங்க.
இப்படிப்பட்டவங்க முன்னாடி என் பிள்ளை வளர வேண்டாம், அவளைத் தூக்கிட்டு நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொல்லத்தான் எனக்கும் ஆசை. ஆனால், போய்? போய் என்ன செய்வேன்? எனக்குப் பிறந்த வீடு இருந்தும் இல்லை. ஒரு வேலையைப் பார்த்து என் பிள்ளையைக் காப்பாத்திக்கலாம்னு நினைச்சா… வேலையும் எனக்குக் கிடையாது. எதுக்கும் வழியில்லாம திக்கற்று இந்த வீட்டில் நீங்க எல்லாம் போடுற பிச்சையில் ஒட்டிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். அந்தப் பிச்சையை நான் வேணும்னா ஏத்துக்கலாம். என் பிள்ளையும் ஏன் ஏத்துக்கணும்? எனக்குத்தான் என்னன்னு கேட்க கூட நாதி கிடையாது. ஆனால், என் பிள்ளைக்கு நான் இருக்கேன். அவளை நானே உழைச்சு என் சொந்தக் காசில் ஆளாக்கிக்கிறேன். எனக்கு அவ! அவளுக்கு நான்! அப்படியே இருந்துட்டு போறோம்…” என்று உணர்ச்சியற்ற குரலில் மஞ்சரி பேசிக்கொண்டே போக, அவளை உயிர்ப்பில்லா பார்வை பார்த்தான் சசிதரன்.
‘அப்போது நான் யார்?’ என்று கேள்வி அவனுக்குள் இருந்து குடைய, அவன் அதை அவளிடம் கேட்கவில்லை. அதன்பின் அவன் எதுவும் பேசவும் இல்லை.
அப்படியே பின்னால் நடந்தவன், வீட்டு சுற்றுச் சுவரில் சாய்ந்து அமர்ந்து அந்தச் சிமிண்ட் தரையவே வெறிக்க ஆரம்பித்தான்.
அதன்பின் அவனிடம் சிறு அசைவு கூட இல்லை.
அவனிடம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டு, பேச்சை முடித்துக் கொண்ட மஞ்சரிக்கு, அவன் அமர்ந்திருந்த அந்தக் கோலமும், அந்தப் பற்றற்ற நிலையும் அவளின் மனத்தை ஏதோ செய்தது.
“ஏங்க…” என்று மெல்ல அழைத்துப் பார்த்தாள்.
அப்போதும் அவன் அசையாமல் இருக்க, தயக்கத்துடன் மெல்ல அவனின் எதிரே வந்து நின்று, “என்னங்க… நான் சொன்னது…” என்று அவள் விளக்கம் சொல்ல வர, மெல்ல நிமிர்ந்து அண்ணாந்து அவளைப் பார்த்த சசிதரனின் கண்களின் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒருவித வலி தெரிய, அதைக் கண்டவளின் மனம் துடித்தது.
“நான்…” என்று அவள் வாயைத் திறக்க, தன் வாயில் ஒற்றை விரலை வைத்துக் காட்டியவன், “நீ சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சு இல்லையா? நீ என்ன செய்ய நினைக்கிறயோ செய். நான் தடுக்க மாட்டேன். இப்ப போ… போய்த் தூங்கு…” என்றான் ஜீவனில்லா குரலில்.

அதன்பின்னும் மஞ்சரி ஏதோ சொல்ல முயல, சசிதரன் அவளைப் பேசவே விடவில்லை.
சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்தாள். அவன் அசையவே இல்லை என்றதும், குழந்தை தனியாக இருக்கிறாளே என்று வேறு வழியில்லாமல் கீழே இறங்கிச் சென்றாள்.
அதன்பின் சசிதரன் கீழே இறங்கி வரவில்லை.
மறுநாள் காலையில் மஞ்சரி வழக்கமாக வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கூடத்தில் கணவனின் குரல் கேட்க, யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறான்? என்று சமையலறை வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தாள்.
கூடத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்து குணாளன் செய்தித்தாளை படித்துக்கொண்டிருக்க, அவரின் எதிரே நின்றிருந்த சசிதரன் பின்னால் தன் கைகளைக் கட்டியபடி, “அன்னைக்கு நீங்க ஒன்னு சொன்னீங்க. நீயெல்லாம் எதுக்குமே லாயிக்கு இல்லைடா. நீ எல்லாம் உருப்படவே மாட்ட. நீ உன் வாழ்க்கையில் நிச்சயமா தோத்துதான் போவன்னு நீங்க சொன்னது எவ்வளவு உண்மைன்னு எனக்கு இப்பதான் புரியுது. ஆமா, நான் தோத்துப் போயிட்டேன். ரொம்ப மோசமா தோத்து போயிட்டேன்…” என்று அவரின் முகம் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தான் சசிதரன்.
அவன் பேசியதை கேட்டு குணாளன் யோசனையுடன் நெற்றியை சுருக்கினார் என்றால், மஞ்சரியோ விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.
“மஞ்சரி, இங்கே வா…” என்று தொடர்ந்து சசிதரன் அவளை அழைக்க,
தன் அதிர்ந்த நிலையை மாற்றிக் கொள்ளாமல், அவனை நோக்கிச் சென்றாள்.
“இவர்கிட்ட என்னவோ சொல்லணும்னு சொன்னியே… என் முன்னாடியே சொல்லு…” என்றான்.
“ஏங்க…” என்ற மஞ்சரிக்கு இப்போது எதுவும் சொல்ல யோசனையாக இருந்தது.
கணவன் வாழ்க்கையில் தோற்றுப் போனதாக சொல்லியிருக்க, தான் இப்போது வேலைக்கு செல்ல முடிவெடுத்த விஷயத்தை சொன்னால் நன்றாக இருக்காதே… என கணவனை பார்த்து மறுப்பாக தலையை அசைத்தாள் மஞ்சரி.
மகன் பேசிக் கொண்டிருக்கும் போதே அறையிலிருந்து வந்த வனஜா ஒன்றும் புரியாமல், “என்ன மஞ்சரி, என்ன விஷயம்?” என்று கேட்டார்.
“ஒன்னுமில்லை அத்தை…” என்றுவிட்டாள் மஞ்சரி.
“என்ன? என்ன ஒன்னுமில்லை? ஒரு முடிவை எடுத்துட்டு இப்ப எதுக்கு பின்வாங்குற? நீ எடுத்ததுதான் சரியான முடிவு! தைரியமா சொல்லு…” என்றான் சசிதரன்.
ஆனால், மஞ்சரி வாயே திறக்கவில்லை.
“என்னடா சசி… அவளை என்ன சொல்ல சொல்ற? என்ன முடிவு எடுத்திருக்கா அவ? எதுவும் சொல்லாம இரண்டு பேரும் என்னடா குழப்புறீங்க? எதுவா இருந்தாலும் சொல்லித் தொலைங்கடா…” என்று அதட்டல் போட்டார் வனஜா.
“மஞ்சரி வேலைக்கு போகலாம்னு முடிவெடுத்திருக்கா மா…” என்று சசிதரனே சொல்ல,
அதுவரை அவரின் முன் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாதவர் போல அமர்ந்திருந்த குணாளன், தன் கையில் இருந்த செய்தித்தாளை இறக்கி, மகனையும், மருமகளையும் பார்த்தவர், “வேலைக்கா?” என்று இளக்காரமாக கேட்டார்.
©nandhavanamnovels.com