👁️ 1500 Views
அத்தியாயம் – 5
“வேலைக்குப் போறாளா? ஏன் உன் பொண்டாட்டிக்கு அதுக்குள்ள வீட்டு வேலை பார்த்து அலுத்துடுச்சா?” என்று உதட்டை கோணலாக வளைத்துக் கேலியாகக் கேட்டார் குணாளன்.
“அப்படியெல்லாம் இல்லை…” சசிதரன் விறைப்பாக நிமிர்ந்து சொல்ல,
“பின்ன, இப்ப வேலைக்குப் போக வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு?”
“அது… அவளே சுயமா ஏதாவது வேலை பார்க்கணும்னு நினைக்கிறா…”
“ஓஹோ! சுயமா?” என்று ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டே கேட்டார்.
அவரின் நக்கல் ஏன் என்று கணவன் மனைவி இருவருக்குமே புரிந்தது.
“உன் பொண்டாட்டி அப்படி என்ன வேலை பார்க்க போறாளாம்? இங்க கலெக்டர் வேலை வச்சிருக்கோம் வாங்கன்னு அவளை யாராவது வெத்தலை பாக்கு வச்சு கூப்பிட்டாங்களோ?” என்று நக்கலாகக் கேட்டார் குணாளன்.
இப்படித்தான் மாமனார் ஏதாவது சொல்வார் என்று தெரிந்திருந்தாலும் மஞ்சரியின் முகம் வேதனையில் கசங்கவே செய்தது.
“ஏன் உலகத்தில் கலெக்டர் வேலை ஒன்னுதான் இருக்கா என்ன? இப்ப நான் ஒரு வேலை பார்க்கலையா? அது போல அவளும் ஏதாவது வேலை பார்ப்பா. அதில்லை இப்ப முக்கியம். அவளை வீட்டு வேலை மட்டும் பார்க்க வச்சுட்டு இருக்கீங்க. இனி அவளும் வேலைக்குப் போவா. அதைச் சொல்லத்தான் உங்க முன்னாடி வந்து நிக்கிறேன்…” என்று விறைப்பாகச் சொன்னான் சசிதரன்.
“நீ பார்க்கிற வேலைக்கு உனக்குப் பெருமை வேறயா? நீ பார்க்கிறதே எடுபிடி வேலை. நீ கல்யாண வீட்டில் வேலை பார்க்கிறது போல… அவ என்ன கல்யாண வீட்டில் சமைச்சு கொடுக்கிற வேலை பார்க்க போறாளாமா? உன் பொண்டாட்டி சமைக்க, நீ பந்தி பரிமாற… பேஷ்! பேஷ்! உங்க இரண்டு பேருக்கும் பொருத்தமான வேலைதான்!” என்றார் எகத்தாளமாக.
இப்போது சசிதரன், மஞ்சரி இருவரின் முகமுமே சுருங்கிப் போனது.
“நல்ல வேலையில் இல்லைனாலும் ஆம்பளையா லட்சணமா பொண்டாட்டி பிள்ளையைக் காப்பாத்துற அளவாவது சம்பாதிப்பன்னு நினைச்சேன். ஆனா, நீ அதுக்குக் கூட லாயிக்கு இல்லைன்னு, வேலைக்குப் போறதா சொல்லி உன் பொண்டாட்டியே உன் முகத்தில் கரியை பூசிட்டா. இது என்னைக்காவது நடக்கும்னு நினைச்சேன்டா. ஆனா அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு எதிர்பார்க்கலை. நீயெல்லாம் ஆம்பளைன்னு வெட்கமில்லாம வெளியே சொல்லிக்காதேடா…” என்று குணாளன் மகனை கடுமையாகச் சாட,
உடல் இறுக, கண்களை அழுத்தமாக மூடி நின்றிருந்த சசிதரன் தன் வலது கையால் இடது கையின் மணிக்கட்டை முறிப்பது போல் அழுத்திப் பிடித்துத் தந்தையின் சொற்களை ஜீரணிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

“மாமா…” அதிர்ந்து அழைத்த மஞ்சரி ஏதோ சொல்ல முயல,
“டேய், உன் பொண்டாட்டியை என்கிட்ட பேச வேணாம்னு சொல்லு. பேசினா… அவ்வளவுதான்!” என்று மகனை நோக்கி விரல் நீட்டி எச்சரித்தார்.
தன் வேதனைகளைத் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டு விழிகளைத் திறந்தான் சசிதரன்.
அப்போதுதான் அவரவர் அறையிலிருந்து எழுந்து வந்த தம்பியும், தங்கையும் அறை வாயிலில் நின்று தன்னைப் பார்ப்பதை கவனித்தான்.
அவனின் முகம் இன்னும் இறுகிப் போயிற்று.
மனைவியைப் பார்த்தான். அவனையே பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி.
தொண்டையை லேசாகச் செருமிக் கொண்டவன், “மஞ்சரி வேலைக்குப் போக முடிவெடுத்த விஷயத்தை அவளேதான் உங்ககிட்ட சொல்வதாகச் சொன்னாள். இதோ… இப்ப போல அவளை நீங்க உங்ககிட்ட பேச விட மாட்டீங்கன்னு தான் நானே வந்து சொன்னேன். உங்களுக்குச் சொல்ல வேண்டிய தகவலை சொல்லிட்டோம்…” என்றவன் அங்கிருந்து நகர,
“டேய், நில்லுடா!” என்று அதட்டினார் குணாளன்.
சசிதரன் அப்படியே நின்று திரும்பிப் பார்க்க, “தகவல் சொன்னா போதுமா? நான் சம்மதிக்க வேணாமா? இந்த வீட்டில் நீங்க இரண்டு பேரும் இருக்கணும்னா… நான் என்ன சொல்றேனோ அதைக் கேட்டுத்தான் நடக்கணும்னு சொல்லியிருக்கேன். உங்க இஷ்டத்துக்கு நீங்க முடிவு பண்ணிட்டு வந்து சொன்னா நான் கேட்டுக்கணுமா?” என்று தோரணையுடன் கேட்டார்.
“அதானே… உங்க இஷ்டத்துக்கு எல்லாம் முடிவு பண்ணுவீங்களாடா? அப்ப இந்த வீட்டில் பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்? உன் பொண்டாட்டி வேலைக்குப் போனால் வீட்டு வேலை எல்லாம் யார் பார்ப்பது? வீட்டுலேயே ஏகப்பட்ட வேலைகள் இருக்கு. ஒழுங்கா அவளை அதை மட்டும் பார்த்துட்டு இருக்கச் சொல்லு, போதும்!” என்று அதட்டலாகச் சொன்னார் வனஜா.
“இத்தனை நாளும் நீங்க சொன்னதை எல்லாம் கேட்டுட்டு தானேப்பா நாங்க இங்க இருக்கோம்? உங்க பேச்சை நாங்க எதை மீறினோம்?” என்று தந்தையிடம் கேட்டவன், “மஞ்சரி இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னாடி நீங்க தானேமா இந்த வீட்டு வேலை எல்லாம் பார்த்தீங்க? அவள் வந்த பிறகு எல்லா வேலையும் அவள்தான் பார்க்கிறாள். அதை அப்பா எங்களுக்குக் கொடுத்த தண்டனையா நினைச்சு இத்தனை நாளும் ஏத்துக்கிட்டோம். ஆனால், அதுக்காக ஆயுசுக்கும் அவள் இந்த வீட்டு வேலைக்காரியாவே இருக்கணுமாம்மா?” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.
“என்னடா புதுசா கேள்வி எல்லாம் கேட்கிற? இத்தனை நாள் இந்த வீட்டு விருந்தாளி போல வந்து போயிட்டு பேசாமத்தானே இருந்த. இப்ப என்ன… அய்யா பெரிய மனுஷன் ஆகிட்டீங்களோ?” என்று நக்கலாகக் கேட்டார் குணாளன்.
“நான் அப்படி வந்து போனது மட்டும் தப்புன்னு இப்பதான் எனக்குப் புத்தி வந்திருக்கு…” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.
இரவில் மனைவி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவனின் நெஞ்சில் ஆணியால் அடித்தது போல உள்ளே இறங்கி, உதிரம் பீறிட்டுக் கொண்டல்லவா இருந்தது.
“ஓஹோ! உனக்குப் புத்தின்னு ஒன்னு இருக்கோ…” என்று அவர் அதையும் எகத்தாளமாகக் கேட்டு வைக்க, அவரிடம் அதற்கு மேல் அவனுக்குப் பேச விருப்பமற்றுப் போனது.
அவன் இனி என்ன பேசினாலும், அவரின் பதில் இப்படித்தான் இருக்கும் என்று தெரியும் என்பதால் அமைதியாக நின்றான்.
“எப்படி ஏத்தமா நிக்கிறான் பார்த்தியா உன் மூத்த பிள்ளை?” என்று அவர் அதையும் குறை சொல்ல, அவனுக்கு வெறுத்துப் போனது.
“இத்தனை நாள் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருக்கு. இப்ப எதுக்குத் தேவையில்லாத பிரச்சினை? ஏன்டா நீயே உன் பொண்டாட்டி பிள்ளைக்குத் தேவையானதை சம்பாதிச்சு கொடுக்கிற தானே… அது போதாதா அவளுக்கு? அப்புறம் எதுக்குடா அவளும் வேலைக்குப் போகணும்?” என்று கேட்டார் வனஜா.
“அத்தை, வேலைக்குப் போகணும்னு நான்தான் அவர்கிட்ட சொன்னேன். பாப்பா கைப் பிள்ளையா இருந்ததால் இவ்வளவு நாள் என்னால் வேலையைப் பத்தி எல்லாம் யோசிக்க முடியலை. பாப்பாவுக்கு மூனு வயசு ஆகப் போகுதே… அதான் அவள் ஸ்கூல் போற நேரத்தில் நானும் ஏதாவது வேலை பார்த்தால் நல்லதுதானேன்னு தோனுச்சுன்னு அவர்கிட்ட சொன்னேன்…” என்று மஞ்சரி சொல்ல,
“ஆமாம்மா… உன் மருமக இதுவரை செய்த நல்லதெல்லாம் போதாதுன்னு இப்ப இது ஒன்னுதான் குறைச்சலா இருந்தது. வேலைக்குத் தானே போகணும்? போகட்டும். அவ இலட்சணத்துக்கு அப்படி என்ன வேலை பார்த்துக் கிழிக்கப் போறாள்னு நானும் பார்க்கணும்…” என்று நக்கலாகவே குணாளன் சம்மதம் சொல்ல,
அவரின் வார்த்தைகள் ஈட்டியாகப் பாய்ந்து வலியைக் கொடுத்தாலும், அவர் சம்மதம் சொன்னதே போதும் என்று நினைத்துக் கொண்டாள் மஞ்சரி.
©nandhavanamnovels.com