5 – நீங்காத பந்தமொன்று

👁️ 1501 Views

“என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க? அவ வேலைக்குப் போயிட்டா வீட்டு வேலை?” என்று வனஜா பதற,

“அது உன் பாடு… உன் மருமக பாடு…” என்று சொல்லிவிட்டு, தன் கையில் இருந்த செய்தித்தாளை மடித்து, சோஃபாவில் பட்டென்று போட்டுவிட்டு அறையை நோக்கி நகர்ந்தவர், மற்ற இரண்டு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு நின்றார்.

“என்னடா ரவி வேலைக்குக் கிளம்பலையா நீ?” என்று இளைய மகனிடம் பாசமாகக் கேட்டார்.

“கிளம்பணும்பா…” என்றான்.

“போ… போய்க் கிளம்பு! வீணாப் போன கழுதைங்களை ஏன் பார்த்துட்டு நிக்கிற?” என்றார்.

“இதோ போறேன்பா…” என்ற ரவிசங்கர் உள்ளே சென்றுவிட, அடுத்ததாக மகளின் பக்கம் திரும்பினார் குணாளன்.

“இதோ காலேஜூக்கு கிளம்புறேன்பா…” என்று சொல்லிவிட்டு அவளும் உள்ளே ஓடிவிட்டாள்.

குணாளனும் அறைக்குள் சென்றதும், “புருஷனும் பொண்டாட்டியும் தேவை இல்லாத வேலை பார்க்கிறதுலயே குறியா இருக்கீங்கடா. இப்ப எதுக்கு நீங்க இரண்டு பேரும் இப்படிப் பண்ணிட்டு இருக்கீங்க? இப்ப இந்த வீட்டில் உன் பொண்டாட்டிக்கு என்ன குறைச்சல்னு வேலைக்குப் போகணும்னு சொல்றா?” என்று சிடுசிடுவென்று கேட்டார் வனஜா.

“அப்பாவே சம்மதம் சொல்லிட்டார். நீங்க எதுக்குமா திரும்ப ஆரம்பிக்கிறீங்க?” என்று சலிப்பாய் கேட்டான் சசிதரன்.

“ஆம்பளைங்களுக்கு என்னடா தெரியும் பொம்பளைங்க வீட்டு வேலை பத்தி? இங்கேயே ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. அது புரியாம உன் அப்பா பாட்டுக்கு சொல்லிட்டு போறார். இங்கே பார் சசி, பொண்ணு வேலைக்குப் போறதெல்லாம் நம்ம குடும்பத்துக்குச் சரி வராது. உன் பொண்டாட்டிக்கு சொல்லி புரிய வை!” என்ற வனஜா மருமகளை முறைத்தார்.

அவள் அவ்வீட்டிற்கு வந்ததிலிருந்து அனைத்து வேலைகளையும் அவளின் தலையில் கட்டி விட்டு, வீட்டு வேலைகளிலிருந்து ஒதுங்கி இருக்கிறார் வனஜா. மகனும் அதைக் கேள்வி கேட்காமல் இருக்க, கணவரும் சரிதான் என்பது போல் இருக்க, அவருக்கு அது வசதியாகிப் போனது.

இப்போது வந்து அவள் வேலை பார்க்க கிளம்பிச் சென்றுவிட்டால், மீண்டும் அவரல்லவா வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டும். அதற்காகவே மருமகளை அடக்கி வீட்டிலேயே அமர வைக்க நினைத்தார்.

“வீட்டு வேலை எப்பவும் போலப் பார்த்துடுவேன் அத்தை. அதனால் அதைப் பற்றி நீங்க கவலைப்படாதீங்க…” எங்கே வேலைக்குச் செல்ல விடாமல் தடுத்து விடுவாரோ என்று நினைத்து வேகமாகச் சொன்னாள் மஞ்சரி.

“என்ன நீ…” என்று அவர் இன்னும் ஏதோ சொல்ல வர,

“ஏன்மா… என்னைக் கட்டிட்டு வந்ததாலேயே அவளை இந்த வீட்டு வேலைக்காரியா முடிவு பண்ணிட்டிங்களாமா?” என்று சசிதரன் ஆதங்கத்துடன் கேட்க,

“என்னடா சசி இப்படிக் கேட்கிற?”

“அப்புறம் என்னமா…”

“என்னங்க… வேண்டாம்! நான் வேலைக்குப் போனாலும் இந்த வீட்டு வேலை பாதிக்கப்படாது. அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க அத்தையை எதுவும் சொல்ல வேண்டாம்…” என்று இடையில் புகுந்து தடுத்துவிட்டாள் மஞ்சரி.

‘இவளுக்காக நான் பேசக் கூடாதா?’ என்று மனைவியை உணர்வுகளற்று பார்த்தவன், சட்டென்று திரும்பி அறைக்குள் சென்றுவிட்டான்.

கட்டிலில் சென்று அமர்ந்த சசிதரனுக்குக் கோபம் அடங்குவேனா என்றது.

கோபம் மனைவி மேல் என்பதை விட, தன் மேலே கோபமாக வந்தது.

காலை ஆறரை மணி ஆகியிருக்க, தியா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அவளின் முகத்தைப் பார்த்ததும், மனைவியின் வார்த்தைகள் வண்டாய் அவனைக் குடைந்தன.

“இந்த வீட்டில் உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி, நீங்கன்னு இத்தனை பேர் இருந்தும் அவளுக்கு முழுமையா நான் ஒருத்தி மட்டும்தான் இருக்கேன். அவள் என் வயித்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக என் பிள்ளையை எல்லாரும் தீண்டத்தகாதவள் போல் ஒதுக்கி வைக்கிறீங்க…” என்று மனைவி சொன்னது வலியைக் கொடுத்தது.

“அப்பா உன்னை அப்படி நினைக்கலைடா பாப்பா. உனக்கு அம்மா மட்டும் இல்லை, நானும் இருக்கேன். அதை உன் அம்மாதான் புரிஞ்சுக்கலை. நீயாவது புரிஞ்சிக்கோடா. அப்பா உன்னை அப்படி எல்லாம் அநாதரவா விட்டுட மாட்டேன்…” என்று மகளின் தலையை வருடி விட்டுக் கொண்டே முணுமுணுத்தான் சசிதரன்.

அப்போது அறைக்குள் ஒரு டம்ளருடன் உள்ளே நுழைந்த மஞ்சரி, கணவன் குழந்தையின் தலையை வருடி விட்டு கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றாள். இப்படி எல்லாம் மகளின் அருகில் அவன் அமர்ந்து அவள் பார்த்ததே இல்லை. குழந்தையே அப்பாவை பார்த்துட்டு ஆவலாகக் குதித்தாலும், வேலை என்று நிற்காமல் ஓடிவிடுவான். அவன் இவ்வளவு இலகுவாக அந்த அறைக்குள் அமர்ந்திருந்தது கூட இல்லை.

கணவனை ஒரே அறைக்குள் பார்க்க பல நாள்கள் மஞ்சரி ஏங்கியிருக்கிறாள். அப்போதெல்லாம் அவளுக்கு வெறுமை மட்டுமே பதிலாகக் கிடைக்கும்.

ஆனால், இப்போது அவன் அறைக்குள் நிதானமாக அமர்ந்து மகளின் தலையை வேறு வருடிவிட்டுக் கொண்டிருக்க, வறண்ட முறுவல் மட்டுமே அவளின் உதடுகளில் துளிர்த்தது

ஆள் அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்த சசிதரன் மனைவியின் கண்களில் தெரிந்த உணர்வில்லா தன்மையைப் பார்த்துவிட்டு முகம் கசங்கினான்.

“உங்களுக்குக் காஃபி எடுத்துட்டு வந்தேன்…” என்று சொல்லி அவனிடம் நீட்டினாள்.

அவன் வீட்டில் காஃபி அருந்தியே வருடங்களாயிற்று. நேராக உணவை மட்டும் முடித்துக் கொண்டு கிளம்பிவிடுவான். அதிலும் வீட்டில் அளவு சாப்பாடுதான். என்னவோ ஓய்வில்லாமல் வேலை பார்த்தாலும், வயிறு நிறைய அவன் உண்டதே இல்லை.

மனைவி கொடுத்த காஃபியை மறுக்காமல் வாங்கிக் கொண்டவன், மனைவி நின்றிருந்த தோரணையே ஏதோ பேச போகிறாள் என்பதை உணர்த்த, கேள்வியுடன் அவளைப் பார்த்தான்.

“நானே வேலைக்குப் போவதை பற்றி மாமாகிட்ட பேசியிருப்பேனே? நீங்க ஏன் பேசினீங்க?” என்று கேட்டாள்.

“ஏன் உனக்காக நான் பேசுற உரிமையைக் கூட இழந்துட்டேனா?” என்று வறண்ட குரலில் கேட்டான்.

“உரிமையா?” என்ற மஞ்சரி வறட்சியாகச் சிரிக்க,

ஒரு மிடறு காஃபியை அருந்தியவனுக்கு அது உள்ளே இறங்குவேனா என்று சண்டித்தனம் செய்து அவனின் தொண்டையை அடைத்தது.‌

கஷ்டப்பட்டு அந்த மிடறை விழுங்கியவன், “நீ பேசியிருந்தா உன்னை இன்னும் அவமானப்படுத்தியிருப்பார். அதுவும் என்னால் தானே நீ வேலைக்குப் போகும் முடிவை எடுத்த? அப்ப நான்தான் பேசியாகணும்…” என்றான்.

“இந்த வீட்டில் நான் அவமானப்படுவது ஒன்னும் புதுசில்லை. ஆனா… நான் வேலைக்குப் போனால் நீங்க தோத்துப் போயிட்டதா அர்த்தமா? ஏன் மாமாகிட்ட தோத்துப் போயிட்டேன். ரொம்ப மோசமா தோத்து போயிட்டேன்னு சொன்னீங்க?” என்று சற்று சூடாகவே கேட்டாள்.

“உண்மைதானே? நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சதே உனக்காகவும், நம்ம பிள்ளைக்காகவும் தான். ஆனால், இப்ப என்னோட காசில் பிள்ளையை வளர்க்கவோ, படிக்க வைக்கவோ மாட்டேன்னு நீ சொன்ன பிறகு அதுகெல்லாம் என்ன அர்த்தம் இருக்குன்னே எனக்குத் தெரியலை…” என்றான் விரக்தியாக.

அவன் வருந்தி பேசியது மனத்தைத் தாக்கினாலும், “காசை கொடுத்துட்டா மட்டும் கடமை முடிஞ்சிடாதுங்க…” என்றாள் மெல்லிய குரலில்.

“அதைத்தான் நேத்தே என் பொட்டில் அடிச்ச மாதிரி எனக்குப் புரிய வச்சிட்டயே…” என்று இயலாமையுடன் சொன்னவன், “உங்களை நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சு தான் ஓடுறேன். ஆனா… பணத்தை வச்சு மட்டும் நல்லா வாழ்ந்துட முடியாதுன்னு புரியுது. ஆனா… ஆனா… என்னால் முடியலைடி! எனக்கும் எல்லா ஆசைகளும் இருந்தது. ஆனா… ஆனா… இப்ப என்னால் முடியலைடி. ரொம்ப ரொம்பக் குற்றவுணர்வா இருக்கு…” என்றவன், திடீரெனக் குலுங்கி அழ ஆரம்பிக்க, அவன் அப்படி அழுது பார்த்திராதவள் பதறி அவனின் அருகில் சென்றாள்.

“என்னங்க? என்ன இது?” என்றவளுக்கும் சரசரவெனக் கண்ணீர் வெளியேறியது.

சட்டென்று அவளின் இடையைச் சுற்றி கையைப் போட்டு அணைத்துக் கொண்டவன், “எல்லாம்… எல்லாத்தையும் தப்புத் தப்பா பண்ணிட்டேன்.‌ நேத்து நீ தப்புப் பண்ணதா சொன்ன. இல்லை… எல்லாத் தப்பும் நான்தான் பண்ணினேன். ஆனா, என்னை விடத் தண்டனை அனுபவிச்சதும், அவமானப்பட்டதும் நீதான். ஆனா, எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு என் கூடவே இருக்க. அப்படியும் உன்னையும் நம்ம பொண்ணையும் நல்லா பார்த்துக்காம அநாதரவா விட்டுட்டேன். நான் எதையுமே சரியா பண்ணலை. எல்லாமே தப்பா மட்டும்தான் பண்ணிட்டு இருக்கேன். நான் ஒரு நல்ல மகனாகவும் இல்லை, நல்ல புருஷனாவும், நல்ல அப்பனாவும் இல்லை. மொத்ததில் நான் வேஸ்ட்! எங்கப்பா சொல்ற போல எதுக்கும் உதவாதவன்…” என்று அனைத்திலும் தோற்றுப் போனவனாகப் புலம்பியபடி அவளின் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதான் சசிதரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com