👁️ 1604 Views
அத்தியாயம் – 7
இரவெல்லாம் உறக்கமே வரவில்லை மயூரனுக்கு. திருமணம் நடந்த அன்று ஒரு மணமகன் முதலிரவில் உறங்காமல் இருப்பது இயல்புதான். ஆனால் இவன்… தான் விரும்பி மணந்தவளின் உடல் அருகில் இருந்தும், அவளது உயிர் வேறொருவனின் நினைவில் வாடுவதை எண்ணி, தன் மனத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் விழித்திருந்தான்!
அவனின் மனைவி சோஃபாவில் படுத்ததும், எழுந்து பால்கனிக்கு வந்தவன், அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்தபடி நிலவை வெறித்துக் கொண்டிருந்தாலும், அவனின் மனம் என்னவோ தன்னவளையே சுற்றி வந்துகொண்டிருந்தது.
தன்னிடம் கெஞ்சியவளுக்குச் செவி சாய்க்காமல், சுயநலமாய் முடிவெடுத்துவிட்டு, திருமண நிகழ்விலும் அவளைச் சீண்டி விளையாடிய அவன் மனம் இப்போது குற்றவுணர்வில் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.
திருமணப் பந்தம் என்பது இரு மனங்களின் சங்கமம் என்பார்கள். ஆனால், இங்கே ஒரு மனதின் பிடிவாதமும், இன்னொரு மனதின் இயலாமையும் அல்லவா கைகோர்த்திருக்கிறது?

‘உன் வலி தீர நான் என்ன செய்வேனடி பேதையே?’ என்று அன்று ஷோரூமில் அமர்ந்து உருகியவன், இன்று அவளது அந்தத் தீராத வலிக்குத் தானே காரணமாகிப் போனதை எண்ணி மயூரன் உள்ளுக்குள் புழுங்கினான்.
தன்னைப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும், தன்னை மணக்க விருப்பமில்லை என்று கெஞ்சியும், அவள் தனக்கு வேண்டும் என்று சுயநலமாக யோசித்ததின் விளைவில் எடுத்த முடிவு, இன்று அவளையே அவனுக்கு எதிரியாக்கிவிட்டது.
அவளைத் தன்னிடம் கொண்டு வந்துவிட்டோம் என்று முழுதாக மகிழவும் முடியாமல், தன் காதலை அவளிடம் சொல்லவும் முடியாமல் ஒருவிதமான தத்தளிப்பிலேயே மனம் ததும்பியது.
தன் காதலை சொல்லும் சந்தர்ப்பமும் இது இல்லை என்பதை அறிவான். அவளின் காதல் உணர்வுகளும் அவனுக்குப் புரியவே செய்தது.
வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இந்தத் திருமண வாழ்வு அவளுக்கு எட்டிக்காயாகக் கசக்கும் எனப் புரிந்தது. ஆனாலும், ஏன் இப்படி எல்லாம் நடந்தது என்று அவனின் காதல் கொண்ட நெஞ்சம் துடித்தது. ஏன் எல்லாம் சுபமாய் நடக்கவில்லை? என்று மனம் ஏங்கியது.
ஆனால், வாழ்க்கை என்னும் சுழலுக்குள் அனைத்தும் சுபமாய் நடந்துவிடுமா என்ன? சுபமாக நடக்கும் நிகழ்வுக்கும் பின்னால் எத்தனை அனர்த்தங்களும், வருத்தங்களும், வேதனையும் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகின்றன.
இங்கே அத்தனை அனர்த்தங்களையும் அறிந்தே ஏற்றுக்கொண்ட வாழ்வு இது! பின்னால் என்ன வரும் என்று தெரியாமலே, அப்போது வரும் பிரச்சினைகளை அந்த நேரத்தில் அதற்கு ஏற்ப சமாளித்து வாழ்வது தானே இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இந்த வாழ்க்கை சுழல் வைத்திருக்கும் சவால்!
இப்போது தான் எந்த மாதிரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என அறிந்தே அதனுள் நுழைந்த மயூரன், ‘சமாளித்துவிடலாம்!’ என்ற திடத்தை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டு தன் மணவாழ்க்கையை வாழ முடிவெடுத்துக் கொண்டான்.
மனைவி வீசப்போகும் வெறுப்பு அம்புகளைத் தாங்கிக் கொள்ளத் தன் மார்பைத் தயார்படுத்திக் கொண்டவன், என்றாவது ஒருநாள் அதே மார்பில் அவளுக்கான இடம் என்ன என்பதை அறிந்துகொள்வாள் என்ற ஒற்றை நம்பிக்கையில் அந்த இரவின் எஞ்சிய கணங்களைக் கடக்க, பெருமூச்சுடன் பால்கனியிலிருந்து எழுந்து அறைக்குள் சென்றான் மயூரன்.
சோஃபாவில் படுத்திருந்த மதுமதி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் மென்மையைத் தொலைத்த இறுக்கம் சூழ்ந்திருந்ததைக் காண முடிந்தது. சோஃபாவை விட்டு தாண்டி நீட்டிக்கொண்டிருந்த அவளின் கை மணிக்கட்டில் தெரிந்த தழும்பு, அவளின் காதலுக்கான போராட்டத்தின் சாட்சியாக நிற்பதை கண்டு மனத்தில் வேதனை படலம் புகைமூட்டமாய்ச் சூழ்ந்தது.
‘எதையும் நினையாதே மனமே!’ எனத் தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்டு படுக்கைக்குச் சென்றான்.
உறவினர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மலர் படுக்கையை ஒதுக்கி சுத்தப்படுத்திவிட்டுப் படுக்கையில் விழுந்த மயூரன், இமைகளை மூடி விழிகளுக்கு ஓய்வு கொடுக்க ஆரம்பித்தான்.
©nandhavanamnovels.com