👁️ 331 Views
தூறல் மழையாக வலுக்க ஆரம்பித்திருந்ததை எல்லாம் பொருட்படுத்தாமல், அந்தக் கட்டிடத்தை நோக்கி ஓடினான் சசிதரன்.
“டேய் சசி… சசி… இந்த மழையில் எங்கேடா போற? டேய் நில்லுடா…” என்று அவனின் நண்பர்கள் கத்தியது எல்லாம் அவன் காதிலேயே விழவில்லை.
பலமான இடி ஒன்று முழங்க, அந்தச் சத்தத்தில் நண்பர்களின் சத்தம் அமிழ்ந்து போனது.
அந்தக் கட்டிடத்தின் பின்னே ஓடிய சசிதரன் மஞ்சரியை தேட, அங்கே யாருமே இல்லை. அந்தக் கட்டிடத்தின் பின்னே ஒரு சந்து போல் செல்லும். அந்தப் பக்கம் சென்று பார்த்தவன் அதிர்ந்து போனான்.
அந்தச் சந்துக்குள் ஜன்னல் தாழ்வாரத்துக்குக் கீழ் மழைக்கு நனையாமல், மஞ்சரியை சுவரில் சாய்த்து நிறுத்தி, அவளின் வாயை தன் கையால் பொத்தியபடி, “கத்தாதே மஞ்சரி. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்குத்தான் இங்கே உன்னைக் கூப்பிட்டேன். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளு…” என்று சொல்லிக் கொண்டிருந்தான் அவர்களின் வகுப்பை சேர்ந்த ஜீவன் என்பவன்.
தலையை மறுப்பாக அசைத்து, அவனின் கையில் அடித்து அவனை விலக்க போராடிக் கொண்டிருந்தாள் மஞ்சரி.
அவளை அப்படிக் கண்டு, முகம் சிவக்க, கோபம் தலைக்கேற, “டேய் ஜீவா… விடுடா அவளை…” என்று கத்தியபடி, ஓடிச் சென்று அவனைத் தாக்க ஆரம்பித்தான் சசிதரன்.
அவனைக் கண்டதும் பயத்தில் மிரண்டிருந்த மஞ்சரியின் கண்களில் சட்டென்று ஒரு ஆசுவாசம் வந்தது.
சசிதரனை எதிர்பாராமல் அதிர்ந்த ஜீவன் சுதாரிக்கும் முன் அவனைச் சசிதரன் அடிக்க ஆரம்பித்தான்.
“டேய் சசி… விடு… விடு… நான் மஞ்சரிக்கிட்ட பேசத்தான் வந்தேன். விடு என்னை… டேய் நிறுத்துடா…” என்று ஜீவன் கத்தியதை எல்லாம் காதில் வாங்காமல், மழையில் போட்டு அவனைப் புரட்டி எடுத்துவிட்டான்.
“எது? இதுதான் பேசுற லட்சணமா? அயோக்கிய ராஸ்கல்…” என்று பல்லை கடித்துக்கொண்டு ஜீவனின் வயிற்றிலேயே ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.
“ஆஆ… அம்மா… டேய் நான் அவளை லவ் பண்றேன்டா. அதை அவளிடம் சொல்லத்தான்…” என்று ஜீவன் வலியை மீறிக் கொண்டு கத்த,
“மவனே… இதுக்காகவே உன்னைக் கொல்லணும்டா. யார்… யாரை லவ் பண்றது? அவ என் மஞ்சரிடா…” என்று அவனின் முகத்தைப் பார்த்து ஆங்காரமாகக் கத்தினான் சசிதரன்.
அவனைத் தடுக்கப் போராடிக் கொண்டிருந்த ஜீவன் அதிர்ந்து அமைதியாகிவிட, “என்னோட மஞ்சரிக்கு லவ் சொல்லுவியா நீ? அதுவும் அவளைத் தரத் தரன்னு இழுத்துட்டு வந்து… உன்னை இங்கேயே சமாதியாக்குறேன்டா…” என்று சுயம் இழந்து மீண்டும் அவனைப் பலமாகத் தாக்க ஆரம்பித்தான் சசிதரன்.
“ஐயோ! விடுங்க… விடுங்க சசி. செத்துற போறான்…” என்று அவ்வளவு நேரமும் பயந்து நடுங்கி போயிருந்த மஞ்சரி தான் சுதாரித்து அவனை இழுத்தாள்.
பட்டென்று அவளை இழுத்து அவளின் தோளின் மீது கையைப் போட்ட சசிதரன், “இவ என் மஞ்சு. எனக்கு மட்டும்தான் சொந்தம்! இவளும் நானும் லவ் பண்றோம். இன்னொரு முறை இவளுக்குத் தொந்தரவு கொடுத்த, கொன்னு புதைச்சுடுவேன்…” என்று கீழே சுருண்டு கிடந்தவனைப் பார்த்துக் கர்ஜித்தான்.
அவனை விழிகளை விரித்துப் பார்த்தாள் மஞ்சரி.
“என்ன சரிதானே?” என்று அவளிடம் அவன் கேட்க, அவளின் தலை தானாகச் சம்மதமாக ஆடியது.
“கேட்டுக்கோ…” என்று ஜீவனைப் பார்த்து சொன்னவன், கோபத்தில் மீண்டும் அவனின் தொடையில் ஓங்கி மிதித்துவிட்டு அவளை அழைத்து வந்தான் சசிதரன்.
அவனின் தோள் வளைவில் பாதுகாப்பாக இருந்த மஞ்சரியோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து முழுதாக வெளியே வந்திருக்கவில்லை.
ஜீவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஜீவன் அடிக்கடி அவளிடம் பேச முயல்வான். ஆனால் அவனின் பார்வையிலேயே வித்தியாசத்தை உணர்ந்திருந்த மஞ்சரி அவனை விட்டு விலகிச் செல்வதில்லையே குறியாக இருந்தாள்.
அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஜீவன் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டான். அவளிடம் தன் மனதை சொல்லவே அவன் அவளை அப்படி இழுத்து வந்திருக்க, அவனின் இந்தத் தவறான செய்கையில் மஞ்சரி மிரண்டுதான் போனாள்.
அதே நேரத்தில் சசிதரன் வந்து தன்னைக் காப்பான் என்பதையும் அவள் எதிர்பார்க்கவில்லை. அதோடு இத்தனை நாள் கண்களால் மட்டும் பேசிக் கொண்டிருந்தவன் தன் மனதையும் அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்க, அந்த அதிர்வும் அவளுள் இருந்தது.
ஜீவன் தங்கள் கண் பார்வை விட்டு மறையும் தூரத்தில் அவளை இழுத்து வந்த சசிதரன் தன் தோள் வளைவில் இருந்தவளை முன்னே இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
முதலில் திகைத்த மஞ்சரி பின்தான் அவன் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
லேசாகத் தயங்கி பின் மெல்ல அவனின் முதுகை கையால் நீவிவிட்டாள்.
அவளின் பயத்துக்கும் அவனின் அணைப்பே மருந்தானது.
மழைத்துளிகள் தங்களை மொத்தமாக நனைத்துக் கொண்டிருந்ததைக் கூட அவர்கள் கருத்தில் கொள்ளவே இல்லை.
சில நொடிகள் அவளைத் தன் அணைப்பிலேயே வைத்திருந்த சசிதரன் பின் மெல்ல விலகி அவளின் முகத்தைக் கைகளில் ஏந்தி, அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே, “ஐ லவ் யூ மஞ்சரி!” என்று மென்மையாகத் தன் காதலை சொன்னான்.

தாங்கள் காதலை சொல்லிக் கொள்ளும் தருணம் இப்படி அமையும் என எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவனின் காதலை உள்வாங்கி ஏற்றுக்கொண்டவள் மெல்ல அவனின் மார்பில் சாய்ந்து தன் காதலையும் வெளிப்படுத்தினாள் மஞ்சரி.
அவர்களின் காதலுக்கு மழைத்துளிகள் வாழ்த்துத் தெரிவித்துச் சென்றன.
அதன்பின்னான நாள்கள் அவர்கள் கண்களால் மட்டும் பேசிக் கொள்ளவில்லை. கிடைக்கும் சில நொடிகளையும் பயன்படுத்திக் கொண்டு ஆசை தீர பேசி தங்கள் காதலை வளர்த்தனர்.
சசிதரனிடம் அடிவாங்கிய ஜீவன் ஒரு வாரம் கல்லூரிக்கே வரவில்லை.
மீண்டும் வந்தவன் காதல் பறவைகளாகச் சுற்றித் திரிந்தவர்களைக் கண்டு அவ்வப்போது முறைப்பான்.
அவனைக் கண்களை உருட்டி பார்த்து விரலை நீட்டி எச்சரிப்பான் சசிதரன்.
அப்படியே நாள்கள் சென்று கொண்டிருக்க, இரண்டாவது வருடம் படிப்பை முடித்து மூன்றாவது வருடத்தில் அடியெடுத்து வைத்த போது, தன் தந்தையிடம் கல்லூரிக்குச் சென்று வர பைக் கேட்டான் சசிதரன்.
“பஸ்ஸில் போயிட்டு வர இப்ப உனக்கு வசதியா தானே இருக்கு. அப்புறம் எதுக்குப் பைக்?” என்று முதலில் நிராகரிக்கவே செய்தார் குணாளன்.
“பசங்க நிறையப் பேர் பைக்ல தான் ப்பா காலேஜ்க்கே வர்றாங்க. நான்தான் பஸ்ஸில் போயிட்டு வந்துட்டு இருக்கேன். ப்ளீஸ்பா…” என்று மகன் கெஞ்சி கேட்கவும், ஒரு நான்கைந்து மாதங்களுக்குப்பின் அவன் கேட்ட பைக்கை வாங்கித் தந்தார் குணாளன்.
உற்சாகத்துடன் பைக்கில் கிளம்பிய சசிதரன் கல்லூரிக்கு சென்று வர மட்டுமல்லாமல், தன் காதலியுடன் அவ்வப்போது சுற்றவும் பைக்கை உபயோகித்தான்.
இளமை தந்த உற்சாகத்தில், காதல் தந்த தகிப்பில் காதல் பறவைகளாக இருவரும் சிறகடித்துப் பறந்தனர்.
அவனுக்கு அவள் மஞ்சுக்குட்டியாகிப் போனாள். அவளுக்கு அவன் தரு கண்ணாவாகிப் போனான்.
இடையில் ஒருநாள் அவர்களுடன் இணைந்து பயிலும் ஒரு மாணவிக்குக் கல்லூரியில் படிக்கும் போதே அவளின் வீட்டினர் திருமணம் முடிவு செய்திருந்தனர்.
அத்திருமணத்திற்கு மாணவிகள் அனைவரும் சேலை கட்டி செல்வதாக முடிவு செய்திருந்தனர்.
ஏற்கெனவே இரண்டு முறை கல்லூரிக்கு சேலை கட்டி சென்றிருக்கிறாள் மஞ்சரி.
அவள் சேலையைக் கட்டிக்கொண்டு வந்தாலே அன்று சசிதரன் கண்கள் சொக்கிப் போகும்.
அவளை ஆசை தீர பார்த்து ரசிப்பான் அவன்.
அவள் இடையை மறைத்து சேலையைக் கட்டினால், அவளை நெருங்கி வேண்டுமென்றே அவள் சேலையால் மறைத்து வைத்ததை விலக்கி, ஒற்றை விரலால் அவளின் இடையை வருடி சீண்டிக் கொண்டே, “இங்கே இடுப்புத் தெரிவதில்தான் ஒரு கிக். மூடியிருக்கும் அத்தனை பாகத்திலும் குட்டியா ஒரே ஒரு இடம் மட்டும், நான் இங்கே இருக்கேன்னு எட்டிப் பார்க்கும் பாரு… அப்படியே சொக்கிப் போகும்டி மஞ்சுக்குட்டி. அதைத் தெரிய விடாம இப்படி இழுத்து மூடி, மூடை ஸ்பாயில் பண்ணாதேடி!” என்று அவளின் காதின் ஓரம் தாபத்தில் குரல் கரகரக்க முணுமுணுப்பான் சசிதரன்.
கூசி சிலிர்த்து அவனைத் தடுக்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் தடுமாறிப் போவாள் மஞ்சரி.
வகுப்புத் தோழியின் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதும், அவளுக்கு அந்நினைவுதான் வந்தது.
‘சரியான சேட்டைக்காரன்!’ என்று தனக்குள்ளயே கள்ளத்தனத்துடன் அவனைக் கடிந்து கொண்டபடி கிளம்பினாள் மஞ்சரி.
அவளின் எண்ணம் சரிதான் என்பது போல மண்டபத்தில் நுழைந்ததிலிருந்து சசிதரனின் கண்கள் அவளையே சுற்றி வந்தன.
அவள் கண்களால் அவனைக் கண்டிக்க, மயங்கி விழுவது போலப் பாவனைக் காட்டினான். அவனின் செயலில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
விரலை நீட்டி அவனை எச்சரித்தாள்.
அதை அசட்டையாகத் தட்டிவிட்டு தன் மனம் கவர்ந்தவளை கண்களால் சிறைப்பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.
நடுவில் நண்பர்களிடமிருந்து பிரிந்து வந்து மஞ்சரியை தனியாக அழைத்து வந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் சசிதரன்.
அப்போது மண்டபத்தின் அலங்காரத்தைப் பார்த்துவிட்டு, “இந்தக் காம்பினேஷன் ரொம்ப அழகா இருக்கு தரு கண்ணா. நம்ம கல்யாணத்துக்கும் இதே கலரில் தான் அலங்காரம் செய்யணும். ஆனா இந்த டிசைன் ரொம்பச் சிம்பிளா இருக்கு. நம்ம கல்யாண மேடையில், நடுவில் ஹார்ட் ஷேப்பில், வெள்ளை, சிவப்பு இரண்டு கலர் ரோஜாவும் மாத்தி மாத்தி வச்சு அழகா டெக்கரேட் செய்யணும்…” என்று தன் ஆசையை அவனிடம் பகிர்ந்து கொண்டாள் மஞ்சரி.
“இப்பவே அதை எல்லாம் ஏன்டி சொல்ற? நம்ம கல்யாணம் நடக்க இன்னும் ரொம்ப நாள் இருக்கு. அதுவரை உன் கற்பனை குதிரையை அடக்கி வை!” என்று அவன் அவளின் தலையில் செல்லமாகத் தட்ட, சிணுங்கினாள் மஞ்சரி.
“என்னவோ எனக்கு மட்டும்தான் நம்ம கல்யாணத்துக்கு அவசரம் போலச் சொல்ல வேண்டியது. ஏன் உங்களுக்கு இல்லையா அவசரம்?” என்று சீண்டலாகக் கேட்டாள்.
அவளை ஏற இறங்க ஒரு மார்க்கமாகப் பார்த்தவன், “இப்பவே அப்படியே வாரி சுருட்டி எனக்குள்ள உன்னைக் கொண்டு வந்துடணும்னு போலத்தான் அவசரமா தோனுது. என்ன கொண்டு வந்திடட்டுமா?” என்று புருவத்தை உயர்த்திச் சீண்டலாகக் கேட்டான்.
“பேச்சைப் பார் பேச்சை…” என்று அவனின் தோளில் விளையாட்டாக அடித்தாள்.
அவளின் கையைப் பற்றியவன் சட்டென்று தன் உதட்டில் வைத்து லேசாக ஒற்றி எடுத்தான்.
“அச்சோ, தரு கண்ணா என்ன செய்றீங்க?” என்று மஞ்சரி பதற, அவளைப் பார்த்து குறும்புடன் சிரித்தான் அவன்.
சீண்டலும், சிணுங்கலுமாக அவர்களின் காதல் தங்கு தடையின்றி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது.
கூடவே மூன்றாவது வருட கடைசிச் செமஸ்டரும் நெருங்கி வந்தது. அந்த நிலையில் மூன்றாம் வருட மாணவர்களை மட்டும் கல்லூரியிலிருந்து சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கேதான் அவர்களின் தலைவிதியும் மாற்றி எழுதப்பட்டது.
©nandhavanamnovels.com