👁️ 703 Views
அத்தியாயம் – 8
கல்லூரி வளாகத்திலிருந்து அந்தச் சொகுசுப் பேருந்து கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தது.
மாணவர்கள் சிலர் அந்தப் பேருந்தின் முன்புறம், பின்புறம், பக்கவாட்டில் எல்லாம் தங்கள் கல்லூரி பெயர் தாங்கிய பேனர் கட்டிக் கொண்டிருக்க, இன்னும் சிலர் விசிலடித்தும், கூச்சலிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
மாணவிகள் எல்லாம் தங்கள் லக்கேஜ்களைப் பேருந்தில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
மாணவர்களுடன் சேர்ந்து பேருந்தின் மீது ஏறி நின்று, பேனரை கட்டிக் கொண்டிருந்த சசிதரனின் பார்வை கீழே நின்றிருந்த மஞ்சரியையே சுற்றி வந்தது.
ஒரு ஷார்ட் டாப், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, தலைமுடியை குதிரைவாலாக இழுத்துக் கட்டியிருந்தாள் மஞ்சரி.
வழக்கமாகக் கல்லூரிக்குச் சல்வார்தான் அணிந்து வருவாள். அதனால், தற்போதைய அவளின் உடை அவளுக்கு வித்தியாசமாக அழகாக இருக்க, வேலை பார்க்கும் பாவனையிலேயே அவளை ரசித்து, பெருவிரலையும், ஆட்காட்டி விரலையும் மடக்கி, சூப்பர் என்பதாகப் பாராட்டினான்.
அவனின் பாராட்டில் மஞ்சரியின் முகம் மலர்ந்து போயிற்று.
சிறிது நேரத்தில் மாணவர்களை எல்லாம் பேராசிரியர்கள் வாகனங்களில் ஏற சொன்னார்கள்.
மாணவிகள் எல்லாம் முன் பக்க இருக்கையில் அமர்ந்திருக்க, மாணவர்கள் எல்லாம் பின் பக்க இருக்கையில் சென்று அமர்ந்தனர்.
அனைவரும் ஏறியதும் பேருந்தே நிறைந்து போனது.
“போலாம்! ரைட்! ரைட்!” என்று மாணவர்கள் எல்லாம் சேர்ந்து உற்சாகத்துடன் கத்த, பேருந்தும் கிளம்பியது.
“போவோமா ஊர்கோலம்… பூலோகம் எங்கெங்கும்…” என்று ஒரு மாணவன் பெருங்குரலெடுத்து பாட, “நாம கேரளாக்கு மட்டும்தான்டா போறோம். பூலோகம் முழுவதும் இல்லை…” என்று இன்னொருவன் பதிலுக்குக் கத்தினான்.
“கேரளாவே சொர்க்கலோகம்தான்டா!” என்று இன்னொருவன் குரல் கொடுத்தான்.
“டேய், நாம எல்லாம் தமிழன்டா! கேரளாவை தூக்கிப் பிடிக்கிற…” என்று ஒருவன் சண்டை போடுவது போலச் சொல்ல, அதற்கு இன்னொருவன் பதில் சொல்ல என ஒரே கலகலப்பாக இருந்தது. பேராசிரியர்கள் கடிந்து கொண்டது எல்லாம் அவர்களின் காதிலேயே ஏறவில்லை.
“அண்ணா… நீங்க பாட்டைப் போட்டு விடுங்க. இல்லைனா இங்கே கைகலப்பு ஆகிடும்…” என்று பேருந்து ஓட்டுநரை பார்த்துக் கத்தினான் சசிதரன்.
அவரும் போட்டுவிட, “ஐய்ய… இதென்ன அதர பழசான பாட்டு? நாங்க எல்லாம் யூத்ணா. வேற பாட்டு போடுங்க…” என்றனர் மாணவர்கள்.
அவரும் பாடலை மாற்ற, அதற்கும் குறை சொன்னார்கள். இன்னொரு மாணவன், “நான் பென்ட்ரைவ்ல பாட்டு போட்டு எடுத்துட்டு வந்திருக்கேன். இதைப் போடுங்கண்ணா…” என்று சொல்ல, கடைசியாக அதையே போட்டு விட்டான்.
அதில் குத்துப் பாடல்கள், பாப் பாடல்கள் எல்லாம் வரிசையாக ஒலிக்க ஆரம்பிக்க, மாணவர்கள் பின் பக்கமும், மாணவிகள் முன் பக்கமும் நின்று ஆடிக் கொண்டு வந்தனர்.
சசிதரனும் பின்னால் ஆடிக்கொண்டு வர, இருக்கையில் அமர்ந்திருந்த மஞ்சரி தோழிகளின் ஆட்டத்திற்குக் கைத்தட்டிக் கொண்டு வந்தாள். அவ்வப்போது திரும்பி சசிதரனின் ஆட்டத்தையும் பார்த்தாள்.
அவளைக் கவனித்தவன், அவளையும் ஆட சொல்ல, மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டாள்.
இரவு நெருங்கிய நேரத்தில் தான் கிளம்பியிருந்தனர். ஆட்டம் பாட்டம் என்று நீண்டு கொண்டே இருக்க, பேராசிரியர்கள் பாடலை அணைத்துவிட்டு அனைவரையும் தூங்க சொன்னார்கள்.
அதையும் அவர்கள் இரண்டு மூன்று முறை சொன்ன பிறகே மாணவர்கள் தம்தம் இருக்கையில் அமர்ந்தனர்.
சிறிது நேரத்தில் மஞ்சரி உறங்கிவிட, நள்ளிரவுக்கு மேல் அவளின் காதின் ஓரம் யாரோ ஊதுவது போல இருந்தது. தூக்கத்திலேயே கையை வைத்து விரட்டி விடுவது போலச் செய்தாள். மீண்டும் அதே போல் ஊதும் காற்று அவளின் மீது மோத, “ஏய் திவ்யா… பேசாம இருக்கு…” என்று கண்களைத் திறக்காமலே தன் அருகில் அமர்ந்து வந்த தோழியைக் கடிந்து கொண்டாள்.
மீண்டும் அதுவே தொடர, “ச்சே… என்ன இது?” என்று எரிச்சலுடன் சொன்னபடி கண்களைத் திறந்து அருகில் இருந்தவளை திட்ட வாயை திறந்தவள், அடுத்த நொடி அதிர்ந்து கத்தப் போனாள்.
“ஷ்ஷ், கத்திடாதேடி மஞ்சுக்குட்டி!” என்றவாறு வேகமாக அவளின் வாயை கையால் பொத்தினான் அவளின் அருகில் அமர்ந்திருந்த சசிதரன்.
பேருந்து முழுவதும் இருட்டாக இருந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் வாகனங்களின் மூலம் பாய்ந்த வெளிச்சம் மட்டும் பேருந்தில் வந்து சென்றது.
அந்த மங்கிய வெளிச்சத்தில் கண்களை அதிர்ச்சியில் விரித்து, மூடிய வாயிற்குள்ளிருந்து முனகினாள் மஞ்சரி.
“என்னடி சொல்ற?” அவன் கிசுகிசுப்பாகக் கேட்க, மீண்டும் முனகினாள். அவன் கையால் வாயை மூடி இருந்ததால் அவனுக்குக் கேட்கவில்லை.
“கத்திடாதே!” என்று சொல்லிக்கொண்டே கையை விலக்கியவன், “இப்ப சொல்லு!” என்றான்.
“நீங்க எப்படி இங்கே? திவ்யா எங்கே?” என்று குரலை தழைத்துக் கேட்டாள்.
“அங்கே…” என்று எதிர் இருக்கையைச் சுட்டிக்காட்டினான்.
அந்த இருக்கைக்கு அவளை அனுப்பிவிட்டு தான் மஞ்சரியின் அருகில் இருந்த இடத்தைப் பிடித்துக் கொண்டான் சசிதரன்.
அவர்களைத் திரும்பி பார்த்த திவ்யா, “ரொம்ப ஓவரா போறீங்க…” என்று முணுமுணுத்துவிட்டு, தலையில் லேசாக அடித்துக்கொண்டு, கண்களை மூடி உறங்க தயாரானாள்.
“அச்சோ! மானம் போகுது. நாளைக்கு என்னைத் திவ்யா கேலி பண்ணியே சாகடிச்சிருவா. நீங்க ஏன் இங்கே வந்தீங்க தரு? முதலில் இங்கிருந்து போங்க…” என்று மஞ்சரி தவிப்புடன் சொல்ல,
“உன் பக்கத்தில் உட்காரணும்னு ஆசையா வந்தால், என்னை இப்படி விரட்டுறீயே மஞ்சுக்குட்டி?” என்று முகம் சுருங்க கேட்டான்.
“புரொபசர் யாராவது பார்த்தால் பிரச்சினை ஆகிடும் தரு…” என்று பயந்தாள் அவள்.
“எல்லாரும் நல்லா தூங்குறாங்க. நாம இப்படிப் பேசிட்டே இருந்தால்தான் யார் காதிலாவது விழுந்துடும். அமைதியா இரு மஞ்சு…” மென்மையாக அதட்டியவன், அவளை உரசியபடி அமர்ந்து கொண்டான்.
“சொல் பேச்சு கேட்கிறதே கிடையாது. சரியான அடம் நீங்க!” என்று அலுத்துக் கொண்டாலும், அவனின் அருகில் அமர்ந்திருப்பது அவளுக்கும் பிடிக்கவே செய்தது.
இருவரும் ஒரே வகுப்பில் படித்தாலும் அவனை பன்மையில்தான் பேசுவாள். ‘புருஷனுக்கு மரியாதையா?’ என்று அவன் முன்பு கேலி கூட செய்வான். தானும் நெருக்கத்தை கூட்டுவது போல் ‘டி’ போட்டு பேசுவான். மனத்தால் மிகவும் நெருங்கிய காதலர்களாக இருந்தனர்.
“அப்படி என்ன அடம் பண்ணிட்டேனாம் நான்? இதுவரை நாம ஒரு லிப் கிஸ் கூட அடிச்சதில்லை. நான் அதெல்லாம் கேட்டு அடம் பண்ணினேனா என்ன?” என்று கிசுகிசுப்பாய் கேட்டவனை முறைத்தாள்.
“முறைக்காதேடி குட்டி!” என்றவன் சட்டென்று அவளின் புறம் குனிந்து வேகமாகத் தன் உதட்டை அவளின் உதட்டோடு உதடு உரசிவிட்டு நிமிர்ந்து, “என்னைக்கோ ஒரு நாள் ரகசியமா இப்படி லிப்ஸோட லிப்ஸ் உரசிக்கிறது எல்லாம் லிப் கிஸ்ஸில் வராதுடி மஞ்சுக்குட்டி!” என்றான் சீண்டலாக.
அவனின் செய்கையை எதிர்பாராமல் அதிர்ந்து, பின் அவனின் தோளில் சட்டென்று அடித்து, “எங்கே வச்சு என்ன பண்றீங்க தரு கண்ணா?” என்று சத்தம் எழுப்பாமல் கடிந்து கொண்டாள்.
“டெமோதான்டி காட்டினேன். என்னவோ டீப் கிஸ் அடிச்சது போலச் சிலிர்த்துக்கிறயே…” என்றான்.
“நீங்க இங்கே இருந்தால் சரிவராது. முதலில் எழுந்து உங்க இடத்துக்குப் போங்க…” என விரட்டினாள்.
“என் மஞ்சுக்குட்டி எங்கே இருக்காளோ… அதுதான் என் இடம்!” என்று சட்டமாகச் சொன்னவன், இன்னும் அவளை நன்றாக உரசிக்கொண்டு அமர்ந்தான்.
“ம்ப்ச், தரு!” என அவள் கண்டிப்புடன் அதட்ட,
“விரட்டாதே குட்டி என்னை. நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். உன் கண்ணா சமத்து பையனா உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன்…” என்றான் கெஞ்சலாக.
அவனை அதற்கு மேல் என்ன செய்வது என்று அறியாமல், முன்னே பின்னே பக்கவாட்டில் என்று தங்களை யாரும் பார்த்துவிடுவார்களோ எனப் பயந்து பயந்து திரும்பி பார்த்தாள் மஞ்சரி.
அவளின் நாடியில் கை வைத்து தன் புறம் திருப்பியவன், “தேவையில்லாம பயந்து நீயே எல்லாருக்கும் காட்டிக் கொடுத்துடாதே!” என்று கடிந்தபடி, அவளின் கையைப் பிடித்தபடி அவளின் கவனத்தைத் திருப்புவது போல மெல்லிய குரலில் பேசிக் கொண்டு வந்தான்.
ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் போகப் போக மஞ்சரியும் அவனுடன் மெதுவாகப் பேசிக்கொண்டு வந்தாள்.
இருவரும் பேசியபடி எப்போது என்று அறியாமலே உறங்கியிருந்தனர்.

“ஏய் மஞ்சு… மஞ்சரி…” யாரோ அவளின் தோளை தொட்டு உலுக்க, திடுக்கிட்டு எழுந்தாள் மஞ்சரி.
திவ்யாதான் எக்கி நின்று ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த மஞ்சரியை உலுக்கி எழுப்பியிருந்தாள்.
“பாத்ரூம் போகப் பஸ்ஸை நிறுத்த சொல்ல நம்ம சார் ட்ரைவர்கிட்ட பேச போயிருக்கார். சசியை எழுந்து அவன் சீட்டுக்குப் போகச் சொல்லு…” என்று திவ்யா சொல்ல, பதறி போய் அருகில் இருந்தவன் பக்கம் திரும்பினாள் மஞ்சரி.
அவனோ அவளின் கையைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு, அவளின் தோளில் தலையைச் சாய்த்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
“சசி… சசி… எழுந்திருங்க…” என்று அவனை உலுப்பி எழுப்பினாள் மஞ்சரி.
“என்ன மஞ்சு?” என்று அவன் சாவகாசமாக எழ,
“இதெல்லாம் டூ மச் சசி. சீக்கிரம் எழுந்து இங்கிருந்து போ. கொஞ்ச நேரம் பாவம்னு விட்டா… தூங்கி எழுந்து சாவகாசமா கேள்வி கேட்கிறான்…” என்று திவ்யா கடுப்படிக்க,
“ப்ளீஸ் சசி…” என்று மஞ்சரியும் துரிதப்படுத்த, “போறேன்… போறேன்…” என்று முனகிவிட்டு எழுந்து சென்றான் சசிதரன்.
அந்த இடத்தில் அமர்ந்து கொண்ட திவ்யா, “அவனுக்குத்தான் அறிவில்லைனா… உனக்கு எங்கேடி போச்சு அறிவு? கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு துரத்திவிடாம தோளில் படுக்க வச்சு தாலாட்டு பாடிட்டு இருக்க…” என்று மஞ்சரியை கடிந்து கொண்டாள்.
“பேசிட்டு தான் இருந்தோம் திவி. எப்ப தூங்கினோம்னு தெரியலை…” என்று அப்பாவியாக உதட்டை பிதுக்கினாள் மஞ்சரி.
“லவ் பண்றவளுக்குப் பிரண்டா இருந்து, ஹய்யோ… நான் இன்னும் எவ்வளவுதான் பார்க்கணுமோ…” என்று அலுத்துக்கொண்டாள் திவ்யா.
“விடுடி விடுடி! லவர்ஸ் பிரண்ட் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்…” என்று சிரித்தபடி தோழியைச் சமாதானம் செய்தாள் மஞ்சரி.
“நீ ஏன் சொல்ல மாட்ட?” என்று அதற்கும் அவள் சாட, அவர்களின் பேச்சை முடித்து வைப்பது போல் ஒரு கடையின் முன் பேருந்து நிறுத்தப்பட்டது.
©nandhavanamnovels.com