👁️ 1130 Views
அத்தியாயம் – 8
“இப்ப காரை நிறுத்த போறீயா, இல்லையா?” பற்களை நறநறவெனக் கடித்தபடி கடுமையுடன் மதுமதி கேட்க, அவளது மூச்சுக்காற்று அனலாக வெளியேறி அந்த இடத்தின் இறுக்கத்தை அதிகப்படுத்தியது.
“உன்கிட்டதான் சொல்லிட்டு இருக்கேன்…” என்று மதுமதி அலறலாகக் கத்த,
“ஷ்ஷ்! நான் உன் பக்கத்தில் தானே இருக்கேன். மெல்ல பேசு! எனக்குக் காது கேட்கும். ஹிஸ்டிரியா வந்தது போலக் கத்தாதே!” என்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொன்ன மயூரனின் முகம் முன்பிருந்த தன் குறும்புத்தனத்தை எல்லாம் தொலைத்து இறுக்கம் கொண்டிருந்தது.
“ஹிஸ்டிரியாவா? என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?” என்று சிடுசிடுத்தாள்.
அவளின் கத்தலோ, சிடுசிடுப்போ ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த மயூரனின் விரல்களில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அவன் முன்னால் இருந்த சாலையில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தினான்.

“காரை நிறுத்தலைனா கதவை திறந்து குதிச்சிடுவேன்…” என்று ஆத்திரத்தில் கத்திய மதுமதி, ஓடிக்கொண்டிருந்த காரின் கதவைத் திறக்க முயன்றாள்.
அதை ஏற்கெனவே ‘சென்ட்ரல் லாக்கிங்’ போட்டிருந்தான் மயூரன்.
கதவை திறக்க முடியாமல் போக, மதுமதியின் முகம் உக்கிரமாக மாறியது.
“உன் கூட வாழ வர மாட்டேன்னு சொன்னவளை இப்படி வம்படியா இழுத்துட்டு வந்து காரில் ஏத்திட்டு கூட்டிட்டு போறீயே… உனக்கு வெட்கமா இல்லை?” என்று பற்களைக் கடித்தபடி ஏளனமாக வினவினாள்.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு கூடத் தான் நீ சொன்ன? அதையே நான் கண்டுக்காமத்தான் உன் கழுத்தில் தாலி கட்டியிருக்கேன். உனக்கு அதுக்குள்ளவா மறந்து போச்சு? உன் கழுத்தில் தாலி கட்டவே நான் சம்மதம் கேட்கலையாம். உன் கூட வாழவா சம்மதம் கேட்பேன்னு நினைச்சு எல்லார் முன்னாடியும் என்னை அவமானப்படுத்த திட்டம் போட்ட? சில்லி கேர்ள்!” என்றான் கிண்டலாக.
அவனின் சொற்களில் தான் கிண்டல் இருந்ததே தவிர, அவனிடம் அது கிஞ்சித்தும் இல்லை.
அவனின் மனம் வெகுவாக அடிவாங்கியிருந்தது. தங்கள் பிரச்சினை மற்றவர்களுக்குத் தெரிந்துவிடாமல் மறைக்க அவன் எத்துணைப் பாடுபட்டான் என்று அவன் மட்டுமே அறிவான்!
அவளையும் சமாளித்து, உறவினர்களுக்கும் சந்தேகம் வராமல் இருக்க, அவன் எடுத்த முயற்சி அத்தனையும் அடித்து நொறுக்கிவிட்டாளே என்ற ஆதங்கம் அவனின் நெஞ்சை போட்டுக் கசக்கியது.
அவன் என்ன அவனுக்காக மட்டுமா அப்படிப் பார்த்து பார்த்து கவனத்துடன் நடந்து கொண்டான்? அவளுக்காகவும் தானே? அவளின் முன்னாள் காதல் தெரிந்து, மற்றவர்களின் பேச்சுக்கோ, அறிவுரைக்கோ அவள் ஆளாக வேண்டாம் என்றும் தானே அதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
அப்படியிருக்க, இப்போது அனைவரின் முன் ‘உன்னுடன் வாழ வர மாட்டேன்’ என்று சொல்லி, தன்னை அவமானப்படுத்திவிட்டாளே என்று நினைத்து அவன் முகமும், மனமும் குன்றிப் போனது.
இனி அனைவரையும் அவன்தான் சமாளிக்க வேண்டும்! அதற்கு முன் மதுமதியின் திட்டத்தைச் சிதறடிக்க, அவர்கள் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே இருந்து உறவினர்கள் அவர்களை நோக்கி வர ஆரம்பிக்க, ‘நீ மட்டும் தனியா உன் வீட்டுக்கு போ!’ என்று சொல்லிக் கொண்டிருந்த மனைவியின் கையைச் சட்டென்று இறுக பற்றியவன், “அத்தை, பெரியம்மா… எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. நாங்க முன்னாடி போறோம்…” என்று சொல்லியபடி நிற்காமல் மனைவியை இழுத்து தன் காரில் ஏற்றி அமர வைத்து அழைத்து வந்துவிட்டான்.
அவன் இப்படிச் செய்வான் என்பதை எதிர்ப்பாராமல்தான் கத்திக் கொண்டிருந்தாள் மதுமதி.
“பிடிக்காத பொண்ணு கூடக் கட்டாயப்படுத்தி வாழ்வியா? ச்சீ…” என்று மதுமதி அருவருப்பாக முகத்தைச் சுளிக்க, அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தானே தவிர, அதற்கு வேற எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
மதுமதி வாய் ஓயாமல் திட்டிக் கொண்டே வர, காது கேளாதவன் போல்தான் வந்தான் அவன்.
வீட்டிற்கு வந்த பிறகும், “நீ என்னைக் கட்டாயப்படுத்தி இங்கே கூட்டிட்டு வந்துட்டா நான் இங்கேயே இருந்துடுவேன்னு நினைப்பா? ஏன் எனக்கே போகத் தெரியாதா? இல்லை, நீயும்தான் இருபத்துநாலு மணிநேரமும் வீட்டில் உட்கார்ந்து காவல் காப்பியா?” என்று இளக்காரமாகக் கேட்டாள்.
அவள் என்னவோ பேசட்டும் என்பதுபோல், சோஃபாவில் சென்று அமர்ந்துவிட்டான் மயூரன்.
அவனின் சிந்தனை எல்லாம், இப்போது வீட்டிற்கு வரப்போகும் உறவினர்கள் கேட்க போகும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்பதே! அவனின் மீதும், அவன் வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட அன்பு நெஞ்சங்கள். அவர்களிடம் என்னவென்று இப்போது நடந்ததற்கு விளக்கம் சொல்வான்?
அதுவும் மனைவி அவர்கள் முன் தன்னைக் கீழே இறக்கினாலும், அவளை அவர்களின் முன் கீழிறக்காமல் எப்படி இந்தச் சூழ்நிலையைக் கையாளுவது என்றே அவனின் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அவளுக்கும் சேர்த்து தான் அவன் யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத அவனின் மனைவியோ இன்னும் நடுகூடத்தில் நின்று கத்திக்கொண்டிருந்தாள்.
“நான் வேணாம் வேணாம்னு கெஞ்சி அழுததை எல்லாம் காதில் வாங்காமல் இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்ச என்னைப் பெத்தவனையும், என் கழுத்தில் தாலி கட்டிய உன்னையும் சும்மாவே விட மாட்டேன். என் மனசு வேதனையில் துடிச்சுப் போயிருப்பதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாம, உன் காரியத்தைச் சாதிச்சுக்கிட்ட தானே… இனி உனக்கு நிம்மதி என்பதே கிடையாதுடா. நான் எப்படி என் விக்ரமை இழந்து வேதனையில் துடிக்கிறேனோ… அதேபோல, என்னைக் கல்யாணம் பண்ணிட்ட காரணத்துக்காகவே உன்னைத் துடிக்க வைக்கிறேன். தாலி கட்டிட்டால் போதும்! இவ நாம சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டு மூடிட்டு இருப்பாள்னு நினைப்பு தானே என் அப்பனுக்கும் உனக்கும். அதை உடைச்சுக் காட்டுறேன். என்னால் உன் கூட வாழவே முடியாது. வாழவே விடமாட்டேன்!” என்று ஆங்காரமாகத் தொண்டை நரம்புகள் வெறிக்கக் கத்தியவளை நோக்கி எழுந்து வேகமாக வந்தான் மயூரன்.
“ஏய்… மூடு! வாயை மூடு!” என்று தன் வாயில் விரல் வைத்துக் கண்களை உருட்டி, அவளை விடக் குரலை உயர்த்தி மிரட்டினான்.

அவனின் சத்தத்தில் ஒரு நொடி அரண்டுதான் போனாள் மதுமதி.
“இனி ஒரு வார்த்தை பேசின…” என்று விரல் நீட்டி எச்சரித்தவன், “இப்ப என்னடி வேணும் உனக்கு? என்னைப் பழிவாங்கணும், அவ்வளவுதானே? வாங்கிக்கோ… நல்லா பழிவாங்கிக்கோ… நான் துடிக்க… துடிக்க… எவ்வளவு வேணுமானாலும் பழி வாங்கிக்கோ. ஆனால், எதுவா இருந்தாலும் இந்த வீட்டில் இருந்து பண்ணு. இந்த வீட்டிலிருந்து போகணும் மட்டும் நினைச்ச… ராஸ்கல்! அப்போ இன்னொரு மயூரனை நீ பார்ப்ப…” என்று நாக்கை மடித்து, முகம் சிவக்க எச்சரித்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மதுமதி.
முதல்முறையாக அவனின் கோபத்தைப் பார்க்கிறாள். விளையாட்டுப் பிள்ளை போலத் தன்னைச் சீண்டிக் கொண்டிருந்தவன் இவன் இல்லை என்பதை அவளுக்குப் புரிய வைக்க, அவனை அலங்க மலங்க தான் பார்த்தாள்.
பயந்து போன பச்சப்பிள்ளையின் பாவனை அவள் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது. பயத்தில் அவளின் கண்கள் சட்டென்று கலங்கியும் போயிருந்தன.
தன்னைப் பழிவாங்கப் போவதாக அப்படி வெறிவந்தவள் போல் கத்தியவள், இப்போது கண்களில் கண்ணீர் தேங்க, பாவமான பரிதாப பிள்ளையாய் மாறி முழிப்பதை கண்டதும், சட்டென்று தணிந்தான் மயூரன்.
இந்த வெறி அவளின் இயல்பு இல்லையே… அவளின் மனத்துக்குள் இருக்கும் புழுக்கத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், ஆங்காரம் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறாள் எனப் புரிந்ததால், அவளின் மீது அவனுக்கு இரக்கம்தான் சுரந்தது.
மனிதர்களில் சிலர் மதுமதியின் வகையைச் சார்ந்தவர்கள்தான். மிகவும் இயல்பான, யாருக்கும் எந்த வகையிலும் தொந்தரவு தராமல் ‘தான் உண்டு, தன் ஆசை உண்டு, தன் வாழ்க்கை உண்டு’ என்று இருப்பார்கள். ஆனால், அடுத்தவர்களுக்கு மனத்தால் கூடத் தீங்கு நினைக்காத அவர்களுக்குத்தான் விதி அடி மேல் அடி கொடுக்கும். அப்படி விழும் ஒவ்வொரு அடியும் மரண அடியாக இருக்கும்போது, அந்த வலியைத் தாங்கித் தாங்கி ஒருகட்டத்தில் அவர்கள் மனம் மரத்துப் போய்விடும். ‘என்னை விட நீங்கள் ஒன்றும் பெரிய வலியில் துடிக்கவில்லை’ என்ற அலட்சிய மனோபாவம் அவர்களுக்குள் குடியேறிவிடும். அடுத்தவர்களின் காயத்தைத் துச்சமென நினைக்கத் தூண்டும் அந்தப் பிடிவாதமான மனநிலைக்குத்தான் தற்போது மதுமதியும் தள்ளப்பட்டிருந்தாள்.
அவளுக்கு விழுந்த அடி, அவளின் உயிரானவனின் உயிரையே பறித்துச் சென்றிருக்க, அந்தப் பேரிழப்பைக்கூட அவளைச் சார்ந்தவர்கள் துச்சமென நினைத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவளது வாழ்க்கையைக் கட்டாயத் திருமணப் பந்தத்தில் திணித்ததால்தான், அவர்கள் மீது தன் கனலைக் கக்க ஆரம்பித்திருந்தாள்.
அவளது ஆக்ரோஷம் ஆரம்பத்திலேயே படமெடுத்து ஆடியதன் விளைவு, மயூரனுக்குச் சொந்தங்களின் முன் அவமானத்தைத் தேடித் தந்திருந்தது. அந்தச் செயலால் அவள் மீது அவனுக்குக் கோபம் இருந்தாலும், இப்போது தன்முன் பரிதவித்து நிற்பவளைக் கண்டதும் அவனது மனம் கசிந்தது.
தன் சிறு மிரட்டலுக்கே அரண்டு போனவளின் மென்மையான மனம் எத்துணைக் காயம் கொண்டிருந்தால் இப்படி அவளின் இயல்பையே மாற்ற வைத்திருக்கும்… என்று எண்ணி இப்போதும் அவளுக்காக மனம் வருந்தினான் அவன்.
மனைவியின் கலங்கிய முகம் அவனை நெக்குருக வைக்க, அவளை இன்னும் நெருங்கியவன், அவளின் இரு கன்னங்களையும் கைகளில் தாங்கி முகத்தை ஏந்தினான்.
“கலங்காதேடி தங்கப்பொண்ணு! உனக்கு என்னைப் பழிவாங்கணும், அவ்வளவுதானே? தாராளமா வாங்கு… உன் மனம் அமைதியாகும் வரை எவ்வளவு வேணுமானாலும் என்னைப் பழிவாங்கிக்கோ. ஆனா, அத்தனையும் நீ இங்கே என்கூட இருந்து மட்டும்தான் செய்யணும். நீ எனக்குக் கொடுக்க நினைக்கிற தண்டனையில் நான் துடிப்பதை, கூடவே இருந்து கண்குளிரப் பார்த்து ரசி!”
அவன் ஆழ்ந்த குரலில் உருக்கமாகப் பேச, அவளது கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் சரசரவென இறங்கி அவனது கைகளை நனைத்தது.

ஆனால், அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டவள், தன் முகத்தைத் தாங்கியிருந்த கணவனின் கையைத் தட்டிவிட்டு, “இப்படி எல்லாம் உருகி உருகி பேசினா உன்னைச் சும்மா விட்டுடுவேன்னு நினைச்சியா?” என்று கோபத்துடன் கேட்டபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
அவளின் அந்தக் கோபம் கூட அவனுக்கு ரசனையாக இருந்து தொலைத்தது.
சிறு குழந்தை ஒன்று கோபம் கொண்டு தன் அழுகையைக் காட்ட விருப்பமில்லாமல் தலைச் சிலுப்பிக் கொள்வது போலச் சிலுப்பிக் கொண்ட மனைவியின் மீது அவனுக்கு இப்போது கோபமே வரவில்லை.
“என்னைச் சும்மா விடாதேன்னு தான் நானும் சொல்றேன்…” என்றான் இளமுறுவலுடன்.
“நான் உன்னைப் பழிவாங்குவேன்னு சொல்றது உனக்கு அவ்வளவு விளையாட்டா இருக்கா என்ன?” அவனின் முறுவலை கண்டு இன்னும் கடுப்பானாள்.
“ச்சே ச்சே… இல்லையே…” என்று அவன் கைகளை விரித்துச் சமாதானம் சொல்ல முயன்றபோது, வீட்டு வாசலில் அடுத்தடுத்து வாகனங்கள் வந்து நிற்கும் ஓசை கேட்டது.
உடனே, சட்டென்று மனைவியின் கையைப் பிடித்துக் கீழே இருந்த ஓர் அறையின் பக்கம் அழைத்துப் போனான்.
“ஏய், என்ன செய்ற? விடு! என் கையை விடு!” எனத் துள்ளினாள் மதுமதி.
“உன்னை ஒன்னும் செய்யலை… கொஞ்சம் அமைதியா இரு மது!” என்று அதட்டியவன், அவளை அறைக்குள் தள்ளி, “நான் எல்லார்கிட்டயும் பேசி முடிக்கிற வரை நீ இங்கேதான் இருக்கணும்” என்று கட்டளையிட்டுவிட்டு வெளியே வந்து கதவைத் தாழிட்டான்.
“ஏய்… ஏய்…” என்று அவள் கதவைத் தட்டிக் கத்தியதை அவன் கண்டுகொள்ளவே இல்லை.
©nandhavanamnovels.com