8 – நீங்காத பந்தமொன்று

👁️ 703 Views

பேருந்து பதினைந்து நிமிடங்கள் நிற்கும், விரைவில் ஓய்வறைக்குச் சென்று வருமாறு சத்தமாக ஒரு பேராசிரியர் சொல்ல, உறங்கி கொண்டிருந்த மாணவர்கள் எல்லாம் எழுந்து ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர்.

மாணவிகள் எல்லாம் ஓய்வறை உபயோகிக்கச் செல்ல, திவ்யாவுடன் மஞ்சரி பேசிக்கொண்டே நடந்தாள்.

அப்போது மஞ்சரியின் காதருகே, “எனக்கும் கொஞ்ச நேரம் இந்தத் தோள் கிடைக்குமா? நானும் சொகுசா தூங்க…” என்ற குரல் மெல்லிதாகக் கேட்க, பட்டென்று திரும்பி பார்த்தாள்.

அங்கிருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தான் ஜீவன். அந்தப் பக்கம் மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருக்க, அந்தப் பக்கம் விறுவிறுவென்று சென்று மறைந்து விட்டான்.

அவனைக் கண்டு மஞ்சரி அதிர்ந்து நின்றுவிட, “என்ன நின்னுட்ட?” என்று திவ்யா உலுக்க, அவளை விட்டு சற்று முன்னே சென்றுவிட்ட திவ்யா ஜீவனைக் கவனிக்கவில்லை என்று புரிந்தது.

ஜீவன் பேசிச் சென்றது மஞ்சரிக்கு அருவருப்பாக இருக்க, அவளின் முகமே மாறிவிட்டது. அதை அந்த அரை இருட்டில் திவ்யா கவனிக்கவில்லை. இவளும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை.

ஆனால், அவள் திரும்பி வந்தபோது வெளிச்சத்தில் அவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை தேநீர் கடையில் நின்றிருந்த சசிதரன் கண்டுவிட்டுப் புருவத்தைச் சுருக்கினான்.

மாணவிகளும் தேநீர் அருந்த நிற்க, “எனக்கு வேணாம் திவ்யா, நான் பஸ்ஸுக்கு போறேன்…” என்ற மஞ்சரி பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டாள்.

அவள் செல்வதைக் கண்டுவிட்டு சசிதரனும் பின்னால் சென்றான்.

பேருந்தில் சில மாணவ மாணவிகள் மட்டும் அமர்ந்திருக்க, மஞ்சரி அருகில் சென்று அமராமல் அவளின் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து அவளின் பக்கம் குனிந்து, “என்னாச்சு மஞ்சு? உன் முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு?” எனக் கேட்டான்.

“ஒன்னுமில்லையே… நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்குத் தூக்கம் வருது!” அவனிடம் ஜீவன் பேசியதை சொன்னால் எங்கே அவனை அடித்துப் பிரச்சினை ஆகிவிடுமோ என மறைத்துவிட்டாள் அவள்.

அதற்கு மேல் பேச முடியாமல் மாணவ மாணவிகள் பேருந்தில் ஏறிக் கொண்டிருக்க, சசிதரனும் அமைதியாகிவிட்டான். மஞ்சரியும் கண்களை மூடிக்கொண்டாள்.

காலையில் ஆலப்புழா சென்று சேர்ந்தனர்.

அங்கே ஒரு நாள் படகு வீட்டில் தங்க கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மதியம் பன்னிரெண்டு மணிக்குத்தான் உள்ளே அனுமதிப்பார்கள் என்பதால் முதலில் வேறொரு இடத்தில் குளித்துக் கிளம்ப ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே குளித்துவிட்டு கிளம்பி ஆலப்புழா கடற்கரைக்குச் சென்றுவிட்டனர்.

அங்கே சிறிது நேரம் கடலலையில் விளையாடினார்கள். குழுவாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சிலர் அவரவர் நண்பர்கள் குழுவாகப் பிரிந்து புகைப்படங்கள் எடுக்க, தன் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு மெல்ல நழுவி மஞ்சரி இருந்த பக்கம் வந்தான் சசிதரன்.

அவள் தோழிகளுடன் இருக்க, சற்று தள்ளி நின்று ஜாடை காட்டி அழைத்தான்.

அவனைக் கண்டுவிட்ட மஞ்சரி, அடுத்த நொடி வேகமாகத் தங்களைச் சுற்றிப் பார்த்தாள். அனைவரும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட்டமாகக் கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித்தான், தானும் மஞ்சரி மட்டுமாக ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி அவளை அழைத்துக் கொண்டிருந்தான் சசிதரன்.

ஆனால், மஞ்சரிக்கோ தங்களை யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம்! ஜீவன் தங்களைப் பேருந்தில் பார்த்துவிட்டதால் தானே அப்படிப் பேசி விட்டுச் சென்றான்.

இப்போதும் அப்படிப் பார்த்துவிட்டால்? என்ற எண்ணத்தில்தான் சுற்றுப்புறத்தை கவனித்தாள்.

அப்படிப் பார்த்ததில் ஓர் இடத்தில் நின்று ஜீவன் தங்களையே குறுகுறுப்பாய் பார்ப்பதை கண்டுவிட்டாள் மஞ்சரி. அவனின் பார்வையில் தெரிந்த கல்மிஷம் மஞ்சரிக்கு ஒவ்வாமையைத் தந்தது.

இப்போது சசிதரன் அருகில் தான் சென்றால், ஜீவன் மீண்டும் தன்னைச் சீண்டுவானோ என்று நினைத்தவள், சசிதரன் தன்னை அழைத்ததைக் கவனிக்காதது போல நகர்ந்து வேறு பக்கம் சென்றுவிட்டாள்.

அவளை அழைக்கச் சசிதரன் முயன்றும் பலன் இல்லாமல் போக, ‘திரும்புறாளா பாரு’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டே அவளின் கைப்பேசிக்கு அழைத்தான்.

கைப்பையில் இருந்த அவளின் கைப்பேசியிலிருந்து வந்த வைப்ரேஷன் மூலம் உணர்ந்தாலும், மஞ்சரி அழைப்பை ஏற்கவில்லை.

கண்டிப்பாகச் சசிதரனாகத்தான் இருக்கும் எனப் புரிந்ததால், எடுத்து பேசுவதைத் தவிர்த்துவிட்டாள்.

அவள் சசிதரன் பக்கம் செல்லாததையும், அதற்கு அவன் கோபப்பட்டதையும் பார்த்துச் சிரித்துக் கொண்டான் ஜீவன்.

அனைவரும் கடற்கரையிலிருந்து கிளம்பி சிறிது நேரத்தில் படகு வீட்டிற்குச் சென்றனர்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அங்கே இருக்கும் அறைகளில் மாணவர்கள் பகிர்ந்து தங்கிக் கொண்டனர்.

படகின் மேல் பகுதியில் நின்று வேடிக்கைப் பார்க்கவும், அமரவும் தாராளமாகவே இடம் இருந்தது.

சிலர் கீழே நின்றும், சிலர் மேலே நின்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் குழுவாகச் சேர்ந்து அந்தாக்ஷரி விளையாட தயாராகினர்.

அதில் கலந்து கொள்ளாமல், தனியாகச் சென்ற மஞ்சரி படகின் ஓரத்திற்குச் சென்று, நின்று கரையோரம் இருந்த கேரள வீடுகளையும், அந்த வீட்டினர் சிலர் தங்கள் சிறிய படகை போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

“ஹோய் மஞ்சுக்குட்டி…” அவளை விட்டு சிறு இடைவெளிவிட்டு வந்து நின்ற சசிதரன் மெல்லிய குரலில் அழைக்க, ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.

“என்னடி பக்கத்திலேயே வராமலே ஆட்டம் காட்டுற?” என்று கேட்டான்.

“இங்கே நாம மட்டும் இல்லை தரு. எல்லாரும் இருக்காங்க. அது உங்களுக்கு நினைவு இருக்கா இல்லையா?” எனக் கேட்டாள்.

“எல்லாரும் இருந்தா என்ன? அப்பப்ப நமக்கான ஸ்பேஸை உருவாக்கிக்கணும். இனி நான் கூப்பிட்டா நைசா நழுவி என்கிட்ட வரணும் சரியா?”

“உங்களுக்கு எல்லாமே சாதாரணமா தெரியுது தரு. அது எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா? இப்ப கூட யாராவது நம்மைப் பார்த்துட்டு இருக்கலாம். நான் போறேன்…” என்ற மஞ்சரி உடனே அங்கிருந்து நகர்ந்தாள்.

இப்படிச் சட்டென்று செல்வாள் என்பதை எதிர்பாராமல் அவளை அதிர்வுடன் பார்த்து நின்றிருந்தான் சசிதரன்.

மஞ்சரி நினைத்தது சரிதான் என்பது போல இங்கேயும் ஜீவன் அவர்களையேதான் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

மதிய உணவை படகிலே கொடுத்தார்கள். அதைப் பஃபே முறையில் வைத்திருக்க, அந்த உணவை மஞ்சரி எடுக்கச் சென்ற போது தானும் உணவை எடுப்பது போல் அவளின் அருகில் வந்த ஜீவன், “என்ன அந்தச் சசி பையலை சுத்தலில் விடுற போல? அச்சோ! பாவம் மா அவன். போனா போகுதுன்னு இரக்கப்பட்டு அவனுக்கு இறங்கிப் போ. அப்படியே அப்பப்ப என்கிட்டயும். ஏன்னா நானும் உன்னை லவ் பண்றவன்தான்…” என்று சீண்டலாகச் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

மஞ்சரிக்கு சாப்பிடும் எண்ணமே போய்விட்டது. முகம் வெளுத்து வியர்த்து விட்டது.

அப்போது மட்டும் இல்லாமல் தொடர்ந்து மஞ்சரியை சீண்டிக் கொண்டே இருந்தான் ஜீவன்.

ஒரு முறை பொறுக்க முடியாமல், “இதோ பார், நீ இப்படியே பண்ணிட்டு இருந்தால் புரொபசர்கிட்ட சொல்லிடுவேன்…” என்று மிரட்டினாள் மஞ்சரி.

“சொல்லேன். நானும் கூட உன்னைப் பத்தியும், அவனைப் பத்தியும் சொல்வேன். அதுவும் ஆதாரத்தோட!” என்றவன் தன் கைப்பேசியை அவளின் முன் காட்டினான்.

அதில் முதல் நாள் இரவு பேருந்தில் அருகருகே அமர்ந்து சசி அவளின் தோளின் மீது தலையைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருப்பதும், அவனின் தலை மீது தன் தலையைச் சாய்த்து மஞ்சரி உறங்கிக் கொண்டிருப்பதும் அப்படியே புகைப்படமாக அதில் தெரிந்ததைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

“இதைப் புரொபசர்கிட்ட காட்டி, நீங்க எங்களைக் காலேஜ் ட்ரிப் தானே சார் கூட்டிட்டு வந்தீங்க. ஆனால், பாருங்க இவங்க மட்டும் ஹனிமூன் ட்ரிப் வந்திருக்காங்க போலன்னு சொல்லுவேன்…” என்று அவன் திமிராகச் சொல்ல, மஞ்சரிக்கு சகலமும் ஆடிப் போனது.

இதைப் பார்த்தால் கல்லூரியில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். அதிலும் பெற்றோரை வரவைத்து வேறு பேசுவார்கள் என்பதால் நடுங்கிப் போனாள்.

சசிதரனை காதலிப்பதை சொல்வதில் அவளுக்குப் பயம் இல்லைதான். வீட்டினருக்கு இன்னும் அவர்களின் காதல் விஷயம் தெரியாது. படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல வேலையில் அமர்ந்ததும் வீட்டினரிடம் சொல்ல இருவரும் முடிவெடுத்திருந்தனர்.‌

அதன் முன்னர் அவர்களுக்குத் தெரிய வந்தாலும் நல்ல மாதிரியாகத் தெரிய வேண்டுமே தவிர, இப்படி வேண்டாம் என்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால், இந்தப் புகைப்படத்தைக் கண்டால் கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் போது, அது கல்லூரி முழுவதுமே பேசப்படும் என்பதோடு, வீட்டினரும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்றுதான் அவளுக்குப் பயமாக இருந்தது.

சசிதரனிடம் சொன்னால், அவன் கோபத்தில் ஜீவனை என்ன செய்வான் என்றே தெரியாது. அன்றே அவன் அத்துணை ஆங்காரமாக ஜீவனைத் தாக்கியவன். இப்போது கண்மண் தெரியாத கோபத்தில் ஏதாவது செய்துவிட்டால்? என்று பயந்தாள்.

அதனால் சசிதரனிடம் அவள் சொல்லாமல் தவிர்த்தாள். கூடவே மீண்டும் ஜீவன் தங்களைப் புகைப்படம் எடுத்துவிடுவானோ என்று நினைத்து சசிதரன் அருகில் கூடச் செல்லாமல் தவிர்க்க ஆரம்பித்தாள்.

அதில் ஜீவன் கொண்டாட்டமடைய, சசிதரனோ கடும் கோபத்திற்கு உள்ளானான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com