9 – நீங்காத பந்தமொன்று

👁️ 249 Views

அத்தியாயம் – 9

சந்தோஷமாகக் கல்லூரி சுற்றுலாவிற்கு கிளம்பி வந்த மகிழ்ச்சி மஞ்சரியை விட்டு சுத்தமாக அகன்றிருந்தது.

கைப்பேசியில் இருக்கும் புகைப்படத்தை காட்டி மிரட்டும் ஜீவனும், தன் பார்வைக்காகக் காத்துக்கிடக்கும் சசிதரனும் அவளைப் போட்டு அலைக்கழித்தனர்.

மதியத்திற்குப் பிறகு சுரத்தை இன்றியே தோழிகளுடன் சுற்றிக் கொண்டிருந்தாள்.

“ஏன் மஞ்சு எப்படியோ இருக்க? பசங்க எல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க. நீ என்னன்னா ஏன் இங்கே வந்தோம் போலச் சுத்திட்டு இருக்க? என்னாச்சு உனக்கு?” என்று அவளின் தோழி திவ்யா கூடக் கேட்டுப் பார்த்துவிட்டாள்.

“நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கென்ன?” என்று இலகுவாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாளே தவிர, ஜீவனைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

சொன்னால் திவ்யாவால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? அதைவிட, அவள் அமர்ந்திருந்த இடத்தில் தான் சசிதரன் வந்து அமர்ந்தான் என்பதால், அது திவ்யாவுக்குச் சிக்கலை தந்துவிடக் கூடாது என்ற கவலை மஞ்சரிக்கு இருந்தது.

இப்படி என்று தெரிந்தால் திவ்யாவும் தானே தன்னைப் போல் பயந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று அவளிடம் சொல்லாமல் தவிர்த்துவிட்டாள்.

மாலையளவில் படகை ஒரு கிராமத்துப் பக்கம் ஏரியோரம் நிறுத்தினார்கள். படகிலிருந்து இறங்கி கிராமத்துக்குச் செல்லவும் அனுமதி இருந்தது. பேராசிரியர்கள் மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றனர்.

சூரியன் மறையும் நேரம் என்பதால், ஏரி தண்ணீர் மஞ்சள் நிறத்தில் மின்னியது.

அதன் அழகை ரசித்துக் கொண்டே ஏரியோரம் நின்று மாணவ மாணவிகள் எல்லாம் புகைப்படம் எடுத்தனர். இன்னொரு பக்கம் பேராசிரியர்கள் எல்லாம் நின்று குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

சசிதரனின் பார்வையோ தோழிகளுடன் நின்றிருந்த மஞ்சரியை சுற்றி வந்தது. அவளின் தோழிகள் எல்லாம் வாயை கோணி, விரல்களைத் தங்கள் தோழிகளின் தலையில் கொம்பு போல் வைத்து என்று விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், மஞ்சரி அவர்களுடன் லேசாகச் சிரித்தபடி நின்றிருந்தாளே தவிர, அதில் உயிர்ப்பே இல்லை.

அதை அவனும் உணர்ந்து கொண்டான். ஏன் இப்படி இருக்கிறாள் என்று புரியாமல் யோசனையோடு அவளைப் பார்த்தான். அவனின் பார்வைதான் அவளை வட்டமிட்டதே தவிர, அவள் தவறியும் கூட அவனின் புறம் திரும்பவில்லை.

இப்படி இருக்க மாட்டாளே… கல்லூரியில் அவன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஓர் ஓரப்பார்வையாவது பார்த்துவிடுவாள். இப்போது, அவளின் பார்வைக்கு எட்டும் தூரத்தில்தான் சுற்றி சுற்றியே வருகிறான். ஆனாலும், ஓரப்பார்வை கூட அவள் பார்க்க முயற்சிக்கவில்லை என்பது அவனுக்கு உறுத்தலாக இருந்தது.

புகைப்படம் எடுத்துவிட்டு சிலர் ஏரிக்கரை ஓரமாகவே காலாற நடந்து சென்றனர். தோழிகளுடன் மஞ்சரியும் செல்ல, தன் நண்பன் வாசனையும் இழுத்துக்கொண்டு சிறிது இடைவெளி நடந்தான் சசிதரன்.

“டேய், இப்ப எதுக்கு இந்தப் பக்கம் இழுத்துட்டு வர்ற? நம்ம பசங்க எல்லாம் அந்தப் பக்கம் போறாங்கடா. வா, நாம அந்தப் பக்கம் போகலாம்…” என்று வாசன் அழைக்க,

“கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் நடந்துட்டு அப்புறம் போகலாம்டா…” என்று மஞ்சரியைப் பார்த்துக்கொண்டே சொன்ன நண்பனின் பார்வை சென்ற திசையைக் கண்டுகொண்ட வாசன், “அதுசரி, ஏன்டா உன் ஆளு பின்னாடி நான் எதுக்குக் கொசுறா சுத்தணும்? உனக்கு வேணும்னா நீ சுத்துடா. என்னையும் ஏன் சுத்த வைக்கிற?” என்று தலையில் அடித்துக்கொண்டான்.

“நண்பனுக்காக இது கூடப் பண்ண மாட்டியாடா?” சசிதரன் பாவம் போலக் கேட்க,

“எதுக்குப் பொம்பளை பிள்ளைங்க பின்னாடி சுத்துறான்னு எனக்கு அடிவாங்கிக் கொடுக்கவா?” என்று முறைத்தான் வாசன்.

“ச்சே… ச்சே… அப்படி எல்லாம் உனக்கு அடிவாங்கிக் கொடுத்துடுவேனாடா? நீ வரலைனா நான்தான் தூக்கிப் போட்டு உன்னை மிதிப்பேன்…” என்றான் மீசையை வருடிக்கொண்டே.

“அடப்பாவி! உன் கூடப் பிரண்டா இருக்கும் பாவத்துக்கு… வந்து தொலைக்கிறேன்…” அலுத்துக்கொண்டபடி அவனுடன் நடந்தான் வாசன்.

“ஏய் மஞ்சு… சசி பின்னாலேயே வர்றான்டி…” அவர்களைக் கண்டுவிட்டு திவ்யா மஞ்சரியிடம் சொல்ல,

“ம்ப்ச், அதெல்லாம் கண்டுக்காதே! வா போகலாம்…” என்று அவளுடன் நிற்காமல் நடந்தாள் மஞ்சரி.

சிறிது நேரம் அங்கே சுற்றிவிட்டு மீண்டும் படகில் வந்து ஏறிய பிறகும் மஞ்சரி தன் கடிவாளத்தைக் கட்டிக் காத்தாள்.

“என்னடா உன் ஆளு உன்னைக் கண்டுக்கவே இல்லை. என்ன, இரண்டு பேருக்கும் சண்டையா?” வாசனும் கவனித்துவிட்டு கேட்டுவிட்டான்.

“அதெல்லாம் இல்லைடா. யாரும் பார்த்திடுவாங்கன்னு பயப்படறா போலிருக்கு…” என்றான்.

அன்று இரவு படகு வீட்டில் தான் அனைவரும் தங்கினார்கள். இரவு உணவுக்குப் படகில் மீன் உணவுகள் சமைத்து கொடுத்தனர். அதை உண்டுவிட்டு, மேல் தளத்தில் சில மாணவர்கள் எல்லாம் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கேரம்போர்ட் அங்கே இருக்க, சிலர் அதில் விளையாடினர். சிலர் இரவு நேரத்தை ரசித்தபடி படகின் ஓரத்தில் நின்றிருந்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மஞ்சரியின் அருகில் நின்று பேச ஆசைப்பட்டான் சசிதரன். கைப்பேசியில் அவளை அழைத்தான்.

அவளோ அழைப்பை பார்த்துவிட்டு அவன் அமர்ந்திருக்கும் இடத்தைத் தேடி திரும்பி பார்த்தாள்.

அவன் தன்னிடம் வரச் சொல்லி கண்களால் அழைக்க, அவளோ மறுப்பாகத் தலையை அசைத்தாள். அவன் கோபமாக முறைக்க அவள் கெஞ்சலாகப் பார்த்தாள்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“என்னடி பிரச்சினை உனக்கு? நானும் பார்த்துட்டே இருக்கேன் என்னைக் கண்டுக்கவே மாட்டிங்கிற? உன்கிட்ட பேசிட்டு இருக்கத்தானே ஆசையா கூப்பிடுறேன். அதுக்கு ஏன் இப்படிப் பிகு பண்ற?” என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினான்.

“எல்லாரும் இப்படிச் சுத்தி இருக்கும் போது கூப்பிட்டா எப்படி வர தரு? நாம சாட்டில் பேசுவோம்…” என்று பதில் அனுப்பினாள்.

“அது எனக்குத் தெரியாதா? வழக்கமா அதைத்தானே செய்வோம்? இப்படி நைட் நேரம், போட் ஹவுசில், நிலா வெளிச்சத்தில், குளுகுளு காற்றில் உன் பக்கத்தில் உட்கார்ந்து பேசுற சுகம் இப்படிச் சாட்டில் பேசுவதில் கிடைச்சிருமா?”

“உங்க ஆசை புரியுதுதான் தரு. ஆனால், யாராவது நம்மைப் பார்த்துட்டால்? எதுக்குப் பிரச்சினை?”

“பிரச்சினை எதுவும் வராமல் நான் பார்த்துக்கிறேன்…” என்று அவன் சொல்லியும் அவள் தன் மறுப்பில் உறுதியாக இருந்தாள்.

ஜீவனின் அலைபேசியில் பார்த்த தங்களின் புகைப்படம் அவளை இன்னுமல்லவா பயமுறுத்திக் கொண்டிருந்தது.

தான் அழைத்தும் அவள் வரவில்லை என்று சசிதரன் மிகுந்த கோபத்தில் இருந்தான். அப்போது மட்டும் இல்லாமல், மறுநாள் பகல் பொழுதில் ஆலப்புழாவில் இருந்த சுற்றுலாத் தலங்களைச் சுற்றி பார்த்துவிட்டு மூணார் கிளம்பி சென்றனர்.

அங்கே ஒரு ஹோம் ஸ்டேவில் தங்கினார்கள்.

பகல் பொழுது எல்லாம் மூணாரை சுற்றிப் பார்த்தார்கள். அன்றும் மஞ்சரி அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. அந்தக் கோபம் சசிதரனுள் உஷ்ணமாய்த் தகித்துக் கொண்டிருந்தது.

அதிலும் அன்று மூணாரை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு தேயிலை தோட்டத்தில் வைத்துப் புகைப்படம் எடுக்க நின்றிருந்தனர். அங்கே, ஜீவன் மஞ்சரியிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான் சசிதரன்.

வேகமாக அவர்களைச் சசிதரன் நெருங்கிய போது, ஜீவன் அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான்.

கூடவே மஞ்சரியை நெருங்கி அவளின் தோழிகள் வந்துவிட அதற்கு மேல் சசிதரனால் அவள் அருகில் செல்ல முடியவில்லை.

“ஏய் மஞ்சு… அந்த ஜீவன் உன்கிட்ட என்னடி பேசினான்? அவன் ஏன் உன்கிட்ட பேசுறான்?” உடனே கோபமாக மஞ்சரிக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கேட்டான்.

ஆனால், மஞ்சரி அவளின் கைப்பேசியை எடுத்துப் பார்க்கவே இல்லை. அது இன்னும் அவனின் கோபத்தை உச்சத்தில் ஏற்றியிருந்தது.

அவன் நிதானமாக யோசித்திருந்தால் ஜீவன் அவளை எதுவும் தொந்தரவு செய்கிறானோ என்று யோசித்திருப்பான். ஆனால், தன்னிடம் பேசாமல் விலகி செல்பவள், அவனிடம் பேசியிருக்கிறாளே என்று கோபத்தில் குதர்க்கமாக அவனின் யோசனை சென்றது.

சுற்றுலா செல்ல பெயர் கொடுத்ததில் இருந்தே சசிதரனுக்கு உள்ளூர நிறைய ஆசைகள் இருந்தன. மஞ்சரியுடன் தனியாகச் சுற்ற முடியாது என்றாலும், அவ்வப்போது சில தருணங்களை மட்டுமாவது அமைத்துக் கொள்ள நினைத்திருந்தான்.

அந்த வயதுக்கே உரிய ஆர்வம்! தன்னுடையவளாக ஒருத்தி இருக்கும் போது வரும் கிளுகிளுப்பு! சின்னச் சின்னக் காதல் சேட்டைகள்! மற்றவர்கள் பார்வையில் படாமல் தங்கள் காதலை வளர்த்த தருணங்கள்! எனத் தங்கள் கல்லூரி காலக் காதலுக்கு நினைவுகளைச் சேகரிக்க விரும்பினான்.

அப்படி ஒரு ஆசையில்தான் பேருந்து பயணத்தில் அவளின் அருகில் அமர்ந்து வந்தான்.

ஆனால், அவனின் சின்னச் சின்ன ஆசையில் சிறியதாக ஓர் ஓட்டை விழுந்தால் கூட, தங்கள் இருவரின் பெயருக்குமே களங்கம் வருமே என்பதை யோசிக்க மறந்து போனான். இது வாலிப வயது என்பதுபோல் என்று தெனாவட்டாகச் சொல்வது போல், அவனின் வாலிப வயதின் ஹார்மோன்கள் அவனை எதையும் யோசிக்கவிடவில்லை.

மஞ்சரியோ தன்னை மீண்டும் சீண்டிவிட்டு சென்ற ஜீவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் சசிதரனை கண்டுகொள்ளாமல் செல்வதைப் பார்த்து பார்த்து ஜீவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான். ஒரு வருடத்தைக் கடந்து விட்டாலும், ஜீவன் இன்னும் சசிதரன் தன்னை அடித்ததை மறக்கவில்லை.

மஞ்சரியை சசிதரனும் காதலிப்பான் என்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதைவிட, மஞ்சரியும் சசிதரனை காதலிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால், கல்லூரியில் வைத்து இனி தான் என்ன செய்தாலும், தனக்குத்தான் பாதிப்பு வரும் என்று நினைத்த ஜீவன் அடக்கியே வாசித்தான்.

ஆனாலும், அவர்கள் இருவரும், கண்களால் பேசிக் கொள்வதும், கல்லூரிக்கு வெளியே ஒன்றாகச் சுற்றுவதும், பைக்கில் செல்வதையும் கவனித்த ஜீவனுக்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தது.

தான் விரும்பியவள் இன்னொருவனுடன் சுற்றுவதா என்ற தகிப்பு அவனுள் இருந்து கொண்டே இருந்தது.

அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த அந்தத் தகிப்பை அணைப்பது போல, சுற்றுலாவிற்குக் கிளம்பிய தருணம் அமைந்து போனது.

அன்று தற்செயலாகத் தான் உறக்கம் கலைந்து எழுந்தான். அப்போதுதான் சசிதரன் மஞ்சரியின் அருகில் சென்று அமர்ந்ததைக் கண்டான். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ஜீவனுக்கு, இருவரின் தலையை மட்டுமே பார்க்க முடிந்தது. நேரம் ஆனப் பிறகும் சசிதரன் எழுந்து வரவில்லை. அதோடு, அவனின் தலையும் தெரியவில்லை என்றதும், அவன் குனிந்து ஏதோ செய்கிறான் என்று நினைத்து அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துப் புரொபஷர்களிடம் மாட்டி விட வேண்டும் என்று நினைத்தே, மெல்ல எழுந்து சென்று பார்த்தான்.

அருகில் சென்றபின்தான் மஞ்சரியின் தோளில் தலையைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த சசிதரனையும், அவனின் தலை மீது தலையைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த மஞ்சரியையும் கண்டான்.

அவர்களை மாட்டி விடச் சென்றவனுக்கு யோசனை மாற, உடனே அவர்களைப் புகைப்படம் எடுத்திருந்தான்.

அதைக் காட்டி மிரட்டியதுமே மஞ்சரி பயந்துவிட்டதுடன், சசிதரனை விட்டு அவள் விலகிச் சென்றது, அதைவிடச் சசிதரனிடம் இன்னும் அந்தப் புகைப்படத்தைப் பற்றிச் சொல்லாமல் இருப்பது எல்லாம் ஜீவனுக்கு இன்னும் தைரியத்தைக் கொடுத்தது.

சசிதரனுக்குத் தெரிந்தால், எங்கே அடித்தடியில் சென்று முடிந்து விடுவோமோ என்று மஞ்சரி பயந்ததையே தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டான் ஜீவன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com