9 – நீங்காத பந்தமொன்று

👁️ 250 Views

இந்தச் சந்தர்ப்பத்தையே பயன்படுத்தி அவர்களைப் பிரிக்க முடிவு செய்த ஜீவன், “அந்தச் சசி உன்கிட்ட பேச முடியாம தவிக்கிறதை பார்த்து எனக்கு அப்படியே குளுகுளுன்னு இருக்கு. இனியும் இப்படியே இருந்தால் உனக்கு நல்லது. இல்லைனா… இந்தப் போட்டோவை அப்படியே காலேஜ் மேனேஜ்மெண்டில் கொடுத்துடுவேன். அதுக்குப் பிறகு அவங்க என்ன ஆக்ஷன் எடுப்பாங்கன்னு உனக்கே தெரியும்? காலேஜ் முழுவதும் உங்க பெயர் நாறிப் போயிரும்…” என்று சற்றுமுன் அவளை மிரட்டிவிட்டுச் சென்றிருந்தான்.

அதையே யோசித்துப் பயந்து கொண்டிருந்த மஞ்சரி சசிதரனையும் அவன் அனுப்பிய குறுஞ்செய்தியையும் கவனிக்கவே இல்லை.

பகலில் மூணாரை சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு தாங்கள் தங்கியிருந்த ஹோம்ஸ்டேவுக்கு வந்து சேர்ந்தனர். அங்கேயே இரவு உணவை முடித்தப்பின் மாணவ மாணவிகள் எல்லாம் வெளியில் தீயை மூட்டி, அதைச் சுற்றி அமர்ந்து, பாடலை ஒலிக்க விட்டு ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தனர்.

சசிதரன் எதிலும் கலந்து கொள்ளாமல், சற்று தள்ளி எரிச்சலுடன் அமர்ந்திருந்தான்.

“டேய் சசி, நீயும் வா…” என்று அவனின் நண்பன் வாசன் அழைக்க,

“நான் வரலைடா…” என்றுவிட்டான்.

அவனைத் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்த மஞ்சரிக்கு அவனின் கோபம் புரிந்தாலும், தான் எதுவும் செய்ய முடியாத நிலை அவளைக் கலங்க வைத்தது. ஜீவனின் மிரட்டல், அவனை எதிர்க்க முடியாத இயலாமை வேறு அவளைக் கட்டிப் போட்டது. இந்த விஷயத்தை யாரிடம் சொல்வது? சொன்னாலும் பிரச்சினை! சொல்லாமல் இருந்தாலும் பிரச்சினை! இதை எப்படிக் கையாள்வது என்ற குழப்பம் அவளுள்.

அவளின் நிலையை அறியாத சசிதரனோ அவளின் மீது கோபத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருந்தான்.

கேம்ப் ஃபயர் முன் மாணவர்கள் மகிழ்ந்து ஆடிப் பாட போதுமான நேரம் கொடுத்தப் பேராசிரியர்கள், எல்லாரையும் அறைக்குள் போகச் சொன்னார்கள்.

அப்போது சில மாணவர்கள் மட்டும் பின்தங்கி அவர்களுக்குள் ஏதோ கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டனர்.

“சசி, பசங்க எல்லாம் நம்ம புரொபசர்களுக்குத் தெரியாம ட்ரிங் பண்ண பிளான் போட்டுட்டு இருக்கானுங்கடா. நாமும் போவாமா?” என்று அவனிடம் ரகசியமாகக் கேட்டான் வாசன்.

“ம்ப்ச், நான் வரலை. எனக்குத்தான் அதெல்லாம் பழக்கம் இல்லையே…” என்று மறுத்தான் சசிதரன்.

“எனக்கும்தான் பழக்கமில்லை. ஆனா லைட்டா டேஸ்ட் மட்டுமாவது பண்ணி பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்குடா. நான் போகலாம்னு இருக்கேன். நீயும் வரணும்னா வா. பிடிக்கலைனா விடு!” என்றான்.

முதலில் செல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தான் சசிதரன். ஆனால், அவர்களுக்கு முன்னால் தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் சென்று கொண்டிருக்கும் மஞ்சரியை கண்டவன், கோபத்தில் முகம் சிவக்க, “நானும் வர்றேன்டா…” என்றுவிட்டான்.

“இப்ப போய்ப் படுக்கிற மாதிரி பாவ்லா காட்டுவோம். புரொபசர்ஸ் எல்லாம் தூங்கியதும், பசங்க எல்லாம் ஜாயின் பண்ணிக்கலாம் முடிவு பண்ணியிருக்காங்க. அவங்ககிட்ட இருந்து மெசேஜ் வந்ததும் போகலாம்…” என்றான் வாசன்.

சம்மதித்துவிட்டுப் போய்ப் படுக்கையில் விழுந்த சசிதரன் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

தினமும் இரவு இருவரும் இரவு வணக்கம் சொல்லிக் கொள்வது வழக்கம். அதைச் சாக்கிட்டு, சிறிது நேரம் வாட்ஸ்அப்பில் சாட் செய்துகொண்டிருப்பார்கள்.

ஆனால், இன்று மஞ்சரி அவனுக்கு எதுவும் அனுப்பவில்லை. அதைவிடப் பகலில் அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை இப்போது வரை கூட அவள் பார்க்கவில்லை. அதுவே அவனை அலைக்கழிக்க ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் வாசன் அவனை அழைக்க, அவனுடன் கிளம்பிச் சென்றுவிட்டான்.

அந்த ஹோம்ஸ்டேவிலிருந்து பக்கவாட்டில் சிறிது தூரம் நடந்து சென்றால் உணவுக் கூடம் இருந்தது. அதன் பின் புறம் ஒரு குடில் போலப் போட்டிருந்தனர்.

அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அங்கே தான் மதுபானம் அருந்த ஏற்பாடு செய்திருந்தனர்.

சசிதரனுக்கு நெருக்கமான ஒரு எட்டு நண்பர்கள் மட்டுமே இருந்தனர். அதில் இரண்டு பேர் குளிர்பான பாட்டில்களை எடுத்து வெளியே வைத்தனர்.

“டேய் என்னடா விஸ்கி, பீர் எல்லாம் வாங்கியிருக்குன்னு சொன்னீங்க? இப்ப வெறும் கூல் ட்ரிங்ஸ் பாட்டலை வெளியே எடுத்து வைக்கிறீங்க? இதைக் குடிக்கவாடா இங்க வந்தோம்?” என ஒருவன் கத்த,

“டேய், கத்தி காட்டிக் கொடுத்துடாதே. சவுண்டை குறை. இது வெறும் கூல் ட்ரிங்ஸ் இல்லை. இதுதான் சரக்கே… யாருக்கும் சந்தேகம் வரக் கூடாதுன்னு இதுல ஊத்தி எடுத்துட்டு வந்தோம்…”

“அப்படியா? நல்ல ஐடியாடா. ஆனா இப்படிக் கூல் ட்ரிங்ஸ் போலக் குடிக்க ஏன்டா பயந்து பதுங்கி இங்க வரணும்? ரூமில் வச்சே குடிச்சிருக்கலாமே?”

“எதுக்கு? யாரும் இதை மாத்தி குடிச்சுட்டு நாம‌ மாட்டிக்கவா? இங்கயே குடிச்சுட்டு பாட்டிலை டிஸ்போஸ் பண்ணிட்டு போகணும்…”

“வளவளன்னு பேசாம ஆரம்பிங்கடா…”

ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டே பாட்டிலை திருந்து குடிக்க ஆரம்பித்தனர்.

அமைதியாக இருந்த சசிதரனிடமும் கொடுத்தனர். அவன் வாங்கி ஒரு நொடி தயங்கி பின் யோசிக்காமல், வாயில் ஊற்றிக் கொண்டான்.

“இவன் என்னடா வாங்கி ஒரே கப்பா அடிச்சிட்டான்…” என்று ஒருவன் சொல்ல,

“என்னன்னு தெரியலைடா, மாப்பிள்ளை கொஞ்சம் சோகமாத்தான் சுத்துறான். அவனுக்கும் அவன் லவ்வருக்கும் ஊடல் போல…” என்றான் வாசன்.

“இந்த லவ்வுனாலே ஒரே தொல்லைடா. பார்க்க அழகா இருக்காளுங்களேன்னு அவளுங்க பின்னாடி சுத்தினா… கடைசி நம்மைக் கிறுக்குப் பிடிச்சு சுத்த வச்சுருவாளுங்க…” என்றான் ஒருவன்.

“நம்ம சசி இன்னும் அந்த ஸ்டேஜூக்கு போகலை. ஆனா கூடிய சீக்கிரம் போயிருவான்னு தான் நினைக்கிறேன். இரண்டு நாளா அந்தப் பிள்ளை மஞ்சரி பின்னாலேயே சுத்துறான். அந்தப் பிள்ளை கொஞ்சம் கூட இவனைக் கண்டுக்க மாட்டிங்குது. இவனைக் கழட்டி விட ஐடியா பண்ணியிருச்சுன்னு நினைக்கிறேன்…” என்று புதிதாகக் குடித்த ஜோரில் வாசன் லேசாக உளற ஆரம்பிக்க,

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“ஏய், என் மஞ்சு அப்படி எல்லாம் கழட்டி விட மாட்டாடா. அவளைப் பத்தி தப்பா சொன்னா நண்பன்னு கூடப் பார்க்க மாட்டேன். அடிச்சிடுவேன்…” என்று கண்கள் போதையில் மிதக்க நண்பனை மிரட்டினான்.

“என்னையே அடிச்சிடுவியாடா நீ? அதுவும் ஒரு பெண்ணுக்காக… என்னையே அடிப்பியா நீ?” என்று வாசன் எகிறிக் கொண்டு சண்டைக்குக் கிளம்ப,

“டேய் போதும் நிறுத்துங்கடா. பிகருக்காக எல்லாம் நாம அடிச்சுக்கக் கூடாதுடா. நாமதான் வேணும்னு அவளுங்க தான் அடிச்சுக்கணும்…” என்றான் இன்னொருன்.

“நீ சொல்றதுதான்டா கரெக்ட்!” என்று நண்பனை பார்த்து சொன்ன வாசன், “சசி, அந்த மஞ்சு உன்னைச் சுத்தலில் விட்டாள் தானேடா? பதிலுக்கு நீ அவளை உன் பின்னால் சுத்த வைடா! அதுதான் ஆம்பிளைக்கு அழகு!” என்று ஏத்திவிட்டான்.

யாரும் கொடுக்காமலே அங்கிருந்த இன்னொரு பாட்டிலை எடுத்து கப்பென்று வாயில் ஊற்றிக் கொண்ட சசிதரன், “சுத்த வைக்கிறேன்…” என்றான் சவால் போல.

“டேய், உனக்கு என்ன பழக்கமே இல்லைன்னு சொன்ன. மொடா குடிகாரன் போலக் குடிக்கிற? போதும்டா!” என்று சற்று தெளிவாக இருந்தவன் சசிதரனை அதட்டினான்.

“ம்ம்…” என்று முனகியவன், தன்னால் சிரித்துக் கொண்டான். ஏதேதோ உளறினான்.

“எல்லாருக்குமே ஓவரா போயிட்டு இருக்கு. இதுக்கு மேல போனா ரூமுக்குப் போகக் கூடத் தெளிவு இல்லாம போகும். அப்புறம் மாட்டிப்போம். எழுந்திருங்கடா…” என்ற ஒருவன் அனைவரையும் கிளப்பினான்.

“டேய் வாசா, நீதானே சசியைக் கூட்டிட்டு வந்த? நீயே கூட்டிட்டு போய்ட்டு…” என்று சொல்லிவிட்டு ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்தனர்.

“வாடா, நாமும் போவோம்…” என்று வாசன் அழைக்க, தன் கைப்பேசியில் எதையோ டைப் செய்து கொண்டிருந்த சசிதரன், “நீ போடா, நான் வர்றேன்…” என்றான்.

“உனக்குப் போதை ரொம்ப ஏறிடுச்சுடா. ரூமுக்கு சரியா வந்து சேருவியான்னு தெரியலை. என் கூடவே வா…” என்றான் வாசன்.

“அதெல்லாம் சரியா வந்திடுவேன். அப்படியே வரலைனாலும், மஞ்சு என்னைப் பத்திரமா கூட்டிட்டு வந்துடுவா…”

“மஞ்சுவா? என்னடா உளர்ற? அவ எங்கே இங்கே இருக்கா?”

“வருவா…”

“வருவாளா? என்னடா சொல்ற?”

“அவ என்னை அவாய்ட் பண்ணிட்டே இருக்கா மாப்பிள்ளை. எதுக்கு அப்படிப் பண்றாள்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். அதான் அவளுக்கு நான் மெசேஜ் அனுப்பியிருக்கேன். இப்ப வருவா. நீ போ மாப்பிள்ளை. நாங்க பேசிட்டு வந்துடுறோம்…” என்று செல்ல யோசித்த வாசனை அங்கிருந்து அனுப்பி வைத்தான் சசிதரன்.

அவன் சென்றதும், தான் மஞ்சரிக்கு அனுப்பி வைத்த குறுஞ்செய்தியை பார்த்தான். அவள் அதைப் பார்த்துவிட்டாலும் பதில் எதுவும் அனுப்பாமல் இருக்க, துணிந்து அவளுக்கு அலைபேசியில் அழைத்துவிட்டான்.

அந்தப் பக்கம் சிறிது நேரத்திற்குப் பிறகே எடுக்கப்பட்டது.

“ஏய்… என்னடி… என்னை அவாய்ட் பண்றீயா? என்ன என்னைக் கழட்டி விடப் போறீயா? அதான் என்னை அவாய்ட் பண்றீயா?” என்று நாக்கை மடித்துக் கடித்துக் கோபத்துடன் கேட்டான் சசிதரன்.

“தரு… தரு… என்ன? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் மஞ்சரி.

“எனக்குப் பதில் சொல்லுடி? என்னைக் கழட்டி விடப் போறீயா?” என்று குழறலாகக் கேட்டான்.

“அய்யோ! அப்படி எல்லாம் இல்லை…”

“அப்புறம் ஏன்டி மூஞ்சை திருப்பிக்கிட்டு போற? அதுவும் அந்த… அந்த நாய் ஜீவன்கிட்ட பேசுற. ஆனா… என்னை அவாய்ட் பண்ற? என்னடி உன் ஐடியா?” என்று கோபமாகக் கேட்டான்.

“சசி… என்ன ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க? எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நீங்க ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க? உங்க குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு?”

“ஹான்… குடிச்சிருக்கேன்…”

“வாட்! குடிச்சிருக்கீங்களா?”

“ஆமா… நீதான்டி என்னைக் குடிக்க வச்சுட்ட. என்னைக் குடிகாரனா மாத்திட்ட. எல்லாம்… எல்லாம் உன்னால்தான்… நீதான்… நீதான்… இப்ப நான் சாகப் போறதுக்குக் காரணமும் நீதான்…”

“சசி… தரு… எ…ன்ன? என்ன சொல்றீங்க?” என்று அதிர்ந்தாள் அவள்.

“ஆமா… இப்ப நீ என்னைப் பார்க்க இங்கே வர்ற. அப்பத்தான் நீ என்னை அவாய்ட் பண்ணலைன்னு நம்புவேன். இல்லைனா இங்கிருந்து குதிச்சிடுவேன்…” என்று மிரட்டினான்.

“சசி!” அந்தப் பக்கம் அதிர்ந்து உறைந்து போனாள் மஞ்சரி.

“பொய் சொல்றேன்னு நினைச்சியா? உன் வாட்ஸ்அப்புக்கு ஒரு போட்டோ அனுப்புறேன் பாரு. இதைப் பார்த்ததும் ஐஞ்சு நிமிஷத்தில் நீ இங்கே வரணும். இல்லைனா… அப்படியே குதிச்சிடுவேன்…” என்றவன், அவளிடம் பேசிக்கொண்டே ஹோம்ஸ்டேவுக்குப் பின்னால் சிறிது தூரம் நடந்து சென்றிருந்தான். அங்கிருந்து சரிவாகப் பள்ளம் இருந்தது. மேட்டின் மீது நின்று ஒரு புகைப்படம் எடுத்து அவளுக்கு அனுப்பினான் சசிதரன்.

அதைப் பார்த்துவிட்டு அடித்துப் பிடித்து ஓடி வந்தாள் மஞ்சரி.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com