Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

17 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 14
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
746
Reaction score
4,462
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் - 17

View attachment 693

பல்வேறு எண்ணங்களின் கலவையோடு கமிஷ்னர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் பிரதாப்.

தொடர் கொலைகளும், அது தரும் அழுத்தமும் என மனம் முழுக்க சோர்ந்து போயிருந்தான் பிரதாப். நைனிகாவும் இதில் வந்து சேர்ந்துக் கொள்ள இன்னமும் தான் பதற்றம் கூடி போனது அவனுக்கு.

கமிஷ்னர் ஜார்ஜ் தான், தன்னை வந்து சந்திக்குமாறு கூறியிருந்தார். அதன் படியே இங்கு வந்திருந்தான் பிரதாப்.

நைனிகாவை விசாரணைக்கு என அழைத்து வந்த மறுநாள் மதியமே மாஜிஸ்ட்ரேட்டிம் அழைத்து சென்றனர். அன்று காலையிலேயே அவள் தாத்தா பாட்டிக்கு உண்மையை கூறி, அவர்களை வர சொல்லியிருந்தான் பிரதாப்.

என்னவோ ஏதோவென பதறியபடி வந்தவர்களை சமாதானம் செய்து நைனிகாவிற்கு பெயில் அப்ளே செய்ய கூறி இருந்தான் பிரதாப்.

நைனிகா தவறுதலாக தான் குற்றம் நடந்த இடத்திற்கு வந்திருக்கிறாள்; ஒரு விதத்தில் அவளுமே பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதால், கூடவே அவள் பிரதாப் திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் பெண் என்பதாலும், கூப்பிடும் பொழுதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டும் என சொல்லி அன்று மாலையே பெயில் கொடுத்து அனுப்பியிருந்தார் மாஜிஸ்ட்ரேட்.

நைனியை அனுப்பி விட்டதும், “சார் நீங்க மேடம்கிட்ட கொஞ்சம் நல்லா நடந்துட்டு இருந்துருக்கலாம். என்ன இருந்தாலும் அவங்க நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு.” என இழுத்தான் திலீப்.

பிரதாப்பிற்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அவன் நிலை இல்லை என்பதால், இழுவையாக சொன்னான் திலீப்.

“யாரா இருந்தாலும் சட்டத்துக்கு முன்னாடி ஒன்னு தான் திலீப். நீங்க அந்த பிரேஸ்லெட் டீட்டெய்ஸில்
நமக்கு கிடைத்த தகவலை என்னன்னு விசாரிங்க." என்றான் பிரதாப்.

“ஓகே சார்‌.” என்ற திலீப், ‘பாவம் அந்தப் பொண்ணு…’ என மனதிற்குள்ளே வருத்தப்பட்டு கொண்டு, தனது வேலையை பார்க்க சென்றான்.

கமிஷ்னர் யாருடனோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்க, நேரத்தை பார்த்து பொறுமையை இழுத்து பிடித்தபடி அமர்ந்திருந்தான் பிரதாப்.

அடுத்து சில நிமிடங்கள் பிரதாப்பின் யோசனை “Too Late” என்ற வாசகத்தை சுற்றியே வந்தது. தான் கண்டுபிடித்த அர்த்தம் சரிதானா என மீண்டும் மனதிற்குள் ஓட்டி பார்த்தான். அத்தனை வழக்குகளிலும் இருந்த ஒரு ஒற்றுமை, அவன் எண்ணத்தை உறுதி செய்ய, கோணலான புன்னகை ஒன்று வந்து அமர்ந்தது பிரதாப்பின் இதழ்களில்.

அதன் பின்பு கமிஷ்னர் அவனை அழைக்க, தன் எண்ணங்களுக்கு தடை போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான் பிரதாப்.

“கம் அன் சிட் பிரதாப்.” என்றார் கமிஷ்னர் ஜார்ஜ் சிரிப்புடனே‌.

பிரதாப் ஏற்கனவே அங்கே அமர்ந்திருந்த நபரை பார்வையால் அளந்துக் கொண்டே வந்து அமர்ந்தான்.

“மீட் டாக்டர் ரவீந்தர். இவரு மிஸ்டர் பிரதாப். இவரை பத்தி தான் நான் உங்ககிட்ட சொன்னது.” என பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தார் கமிஷ்னர்.

இருவரும் கைக்குலுக்கி முகமன் செலுத்திக் கொண்டனர்.

மூன்றாம் நபர் முன்னிலையில் கேஸ் விசயத்தை பற்றி பேச விரும்பாமல் அமர்ந்திருந்தான் பிரதாப்.

“டாக்டர் ரவீந்தர் NICFSல (National Institute of Criminology and Forensic Science) வொர்க் பண்ணுறாரு.” என தகவலாக ஆரம்பித்தார் ஜார்ஜ்.

அவர் எங்கு கொண்டு வந்து நிறுத்துகிறார் என புரிந்தது பிரதாப்பிற்கு. ஆனால், செந்திலதிபன் இருக்கும் பொழுது, ரவீந்தரை எதற்கு சந்திக்க வேண்டும் என்ற கேள்வி அவன் மனதில் எழ செய்தது.

“நம்மளோட சீரியல் மர்டரிங் கேஸ்க்காக ஹெல்ப் பண்ண அவரே வாலன்ட்ரியா வந்துருக்காரு பிரதாப்.” என அர்த்தம் பொதிந்த பார்வையோடு அவனை பார்த்தார் கமிஷ்னர்.

பிரதாப் அதை உள்வாங்கிக் கொண்டான்.

பிரதாப்பை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தார் ரவீந்தர். பிரதாப்பும் புன்னகைத்தான்‌.

“பிரதாப் நீ அவருக்கு உன்னோட எவிடென்ஸ் எல்லாம் காமிச்சினா, நமக்கு ஹெல்ப் பண்ண, அவருக்கும் ஈசியா இருக்கும்.” என்றார் கமிஷ்னர்.

புருவத்தை கீற்றாய் சொறிந்தான் பிரதாப்.

“டென்சனாகாதீங்க மிஸ்டர் பிரதாப். உங்க கேசை நான் எடுத்துக்க மாட்டேன். உங்க கேஸ்ல என்னால என்ன ஹெல்ப் பண்ண முடியுமோ அதை செய்யறேன்.” என்றார் ரவீந்தர்.

“நான் டென்ஷனா இல்லை டாக்டர்.” என புன்னகைத்தான் பிரதாப்.

“நீங்க உள்ள வந்தப்போ என்னை யாருனு தெரியாம உங்க மனசுல சின்ன குழப்பம் இருந்துச்சு. வந்ததுல இருந்து நீங்க அதிகம் பேசாம இருக்க காரணம், கேஸ் பத்தின எந்த விசயத்தையும் என் முன்னிலையில ஷேர் பண்ண உங்களுக்கு விருப்பம் இல்லை. உங்க புருவத்தை கையால கீறினப்போ லேசான பதற்றத்துல இருந்தீங்க. இப்போ என்னை பார்த்து சிரிச்சப்போ உங்க உதடுகள் கீழ் நோக்கி வளைஞ்சிது. விச் மீன்ஸ் நான் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரானு உங்களுக்கு தோணிருக்கும். சரியா சொல்லிருக்கேனா மிஸ்டர் பிரதாப்?” என வாடாத புன்னகையோடு கேட்டார் ரவீந்தர்.

பிரதாப்பின் மனதில் இருந்ததை கண்ணாடியில் பார்த்தது போல சொல்லியிருந்தார் ரவீந்தார். அதை ஒப்புக்கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தான் பிரதாப்.

“ஓகே கைஸ் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என கமிஷ்னர் நாசூக்காக சொல்ல, இருவரும் புரிதலோடு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தனர்.

“டாக்டர் நீங்க எதுவும் வண்டியில வந்துருக்கீங்களா?” எனக் கேட்டான் பிரதாப்.

“எஸ் பிரதாப். நான் என்னோட கார்ல தான் வந்துருக்கேன். நீங்க முன்னாடி போங்க. உங்களை ஃபாலோ பண்ணி நான் வந்திடறேன்‌.” என்றார் ரவீந்தர்.

தான் மனதில் நினைத்த வார்த்தைகளை தனக்கு முன்னே சொல்லிய ரவீந்தரிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கும்படி சொல்லியது பிரதாப்பின் உள்ளுணர்வு.

தங்களது இடத்திற்கு வந்ததும், ரவீந்தருக்கு முன்னால் தாங்கள் சேகரித்து வைத்த ஆவணங்களை எடுத்து வைத்தான் பிரதாப்.

சம்பந்தமே இல்லாத ஆளின் முன்பு ஆதாரங்களை அடுக்கும் பிரதாப்பை கண்டு, திலீப் யோசனையாய் பார்க்க, அவனிடம் கண்ணை மூடி திறந்து தான் பார்த்துக் கொள்வதாய் சொன்னான் பிரதாப். அதை கவனியாதது போல கவனித்தார் ரவீந்தர்.

எல்லா கோப்புகளையும் எடுத்து பார்த்த ரவீந்தர், “இந்த கேஸ்ல முக்கியமான பேட்டர்ன் எதாச்சும் உங்களுக்கு தெரிஞ்சிதா?” என கண்களை மட்டும் உயர்த்தி பிரதாப்பை பார்த்து கேட்டார் ரவீந்தர்.

“இது ஒரு சைக்கோ சீரியல் கில்லர் கேஸ்ங்கறதை தாண்டி பெருசா வேற எதுவும் எங்களால கிராக் பண்ண முடியலை.” என அதிகம் தகவல் வழங்குவதை தவிர்க்க பார்த்தான் பிரதாப். அதோடு அவன் சொன்னதும் பொய் இல்லை.

கொலை செய்யப்பட்டு இறந்தவர்களின் புகைப்படங்களை எடுத்து வரிசையாக அடுக்கி வைத்தார் ரவீந்தர்.

“இன்ட்ரெஸ்ட்டிங்!” என தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டு புன்னகைத்தார் ரவீந்தர்.

ரவீந்தரின் புன்னகையை ஆராய்ச்சியாக பார்த்தான் பிரதாப்.

“இந்த மர்டர்ஸ் எல்லாம் எப்ப? எந்த வருசம் நடந்ததுனு தெரியுமா பிரதாப்?” என்று கேட்டார் ரவீந்தர்.

தங்களுக்கு சந்தேகம் இருக்கும் வழக்குகளின் புகைப்படங்களை, ஆண்டின் படி வரிசையாக அடுக்கி வைத்தான் தீலிப். அவனுக்கும் யாரென்று தெரியாத ஆளிடம் தகவல்களை பகிர விருப்பமில்லை‌. எனவே அவர்கள் சேகரித்த எட்டு வருட ஆவணங்களின் புகைப்படங்களையும் அடுக்கினான் திலீப்.

ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்த ரவீந்தர், அதில் இருந்த சில புகைப்படங்களை நீக்கினார்.

“சார் அதெல்லாம் எதுக்கு எடுக்கறீங்க?” என பதறினான் திலீப்.

“நீங்க டீல் பண்ணுற கேஸ்சுக்கும் இந்த கேஸ்ங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அதான் ரீமூவ் பண்ணுறேன்.” என்றார் ரவீந்தர்.

அதை கேட்ட திலீப் அதிர்ச்சியாய் அவரை பார்த்தான்.

“எப்படி போட்டோவை மட்டுமே வச்சி சொல்லுறீங்க டாக்டர்?” என கேட்டான் பிரதாப். உச்சபட்ச எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

“பேட்டர்ன்ஸ்…” என்றார் ரவீந்தர்.

பிரதாப்பும் திலீபும் புரியாமல் பார்க்க, “பொதுவா ஒரு சைக்கோ சீரியல் கில்லர் கொலை பண்ணுறாங்கனா… அவங்க பண்ணுற க்ரைம்ல ஒரு பேட்டர்ன் விட்டுட்டு போவாங்க. மோஸ்ட்லி அது ஒரே விதமா தான் இருக்கும். ஆனா இந்த சீரியல் மர்டரிங் கேஸ்ல அந்த பேட்டர்ன் தான் வித்தியாசமா இருக்கு.” என்ற ரவீந்தர் புன்னகைத்தார்.

பின்பு, கலிவரதன் புகைப்படத்தை காட்டி, “ஐ திங்க் இவர் தான் முதல் விக்டிம்மா இருக்கனும். கொலை செய்த பின்னாடியும் ஆத்திரம் அடங்காம திரும்ப திரும்ப குத்தியிருக்காங்க. அவங்களோட சாவை பாத்த பின்னாடி மனசுல இருந்த கோபம் அதிகமாகி, அதுவே ஒரு ட்ரிக்கர் பாயின்ட்டா மாறி, அடுத்தடுத்து கொலை செய்ய அந்த நபரை தூண்டி இருக்கு.” என்றார் ரவீந்தர்.

பிரதாப்பும் திலீபும் அமைதியாக இருக்க, ரவீந்தரே மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

“இவ்வளவு க்ரூயலா ஒரு பர்சனை கொன்னுருக்காங்கனா கண்டிப்பா அந்த பர்சன் லாங் டெர்ம் டிப்ரெசன்ல இருந்திருக்கனும். அதுல இருந்து ஏதோ ஒரு பாயின்ட்ல இவங்களை கொலை பண்ணிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணி கொலையை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. அதோட கண்ணை நோண்டறது, வாயை தைக்கிறதுனு செய்யறதுக்கு பின்னாடி ஒரு மெட்டபர் இருக்கு.” என்றார் ரவீந்தர்.

“மெட்டபர்ரா? டாக்டர் இந்த கேஸ்ல மெட்டபர் எங்க வந்துச்சு?” என்று பிரதாப் நன்றாக எழுந்தமர்ந்து கேட்டான்.

பெண்களின் வாய் தைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை காட்டிய ரவீந்தர், “அதிகம் பேசும் வாய்!” என்றார்.

பிரதாப்பும் தீலிப்பும் அவரை ஒரு சேர பார்க்க, “பெண்களுக்கு கொஞ்சம் வாய் நீளம் சொல்லுவாங்க. அதை தான் தைச்சிருக்காங்க. ஆண்களோட கண்கள்! அது அதிகம் பார்க்கும். தனக்கு அநியாயம் நடந்தப்பவும் வெறுமனே பார்த்துட்டு தானே இருந்தது அப்படிங்கற கோபமாகவும் இருக்கலாம்.” என்றார் ரவீந்தர்.

“அப்போ கை நரம்பை அறுத்து விட்டது?” என சந்தேகமாக கேட்டான் பிரதாப்.

“இதை அந்த கல்ப்ரிட்கிட்ட தான் நாம கேக்கனும்.” என்றார் ரவீந்தர்.

“இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாம இருக்க வாய்ப்பிருக்கா டாக்டர்?” என்று திலீப் கேட்க,

“நிச்சயமா சம்பந்தம் இருக்கு. கையை கட் பண்ணிருக்க கட்டோட ஆங்கிலும் கண்ணை நோண்டிருக்க ஆங்கிளோட ஒத்து போகுது. ஐ மீன் அவங்க கத்தியை வச்சிருக்க பொஷிஷனை சொல்லுறேன். கண்டிப்பா இதை ஒரே ஆள் தான் செய்திருக்க வாய்ப்பிருக்கு.” என்றார் ரவீந்தர்.

கண்ணை கட்டி விட்டது போல வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, எது முதல் வழக்கு என்று தெரிந்தது போனது. அதில் கொஞ்சம் ஆசுவாசமானது. அதோட சில வழக்குகளும் களைந்துவிட, இனிமேல் நூல் பிடித்தது போல செல்ல வேண்டும்.

ரவீந்தர் சென்றதும் கமிஷ்னருக்கு அழைத்து தகவல்களை சொன்னான் பிரதாப்.

“பரவாயில்லை பிரதாப். நான் நினைச்சதை விட ரவீந்தர் நல்லாவே ஹெல்ப் பண்ணியிருக்காரு.” என்றார் கமிஷ்னர்.

“எஸ் சார். அடி எது நுனி எதுன்னு தெரியாம குழம்பிட்டு இருந்தோம். இப்போ நமக்கு முதல் கேஸ் எதுன்னு தெரிஞ்சிடுச்சு. இனிமேல் கில்லரை ஈசியா நெருங்கிடலாம்.” என புது உற்சாகத்தோடு சொன்னான் பிரதாப்.

அதோடு, “சார் நமக்கு செந்திலதிபன் தானே ஆபிஷியலா ஹெல்ப் பண்ணுறாரு… அவரை விட்டுட்டு இவர் கிட்ட ஏன் திடீர் ஹெல்ப்?” மனதில் இருந்ததை கேட்டு விட்டான் பிரதாப்.

“இன்னொரு கிரைம் நடந்தா கேஸ் நம்ம கைய விட்டு போயிடும்னு சொன்னது ஞாபகம் இருக்கா பிரதாப் உனக்கு?” என ஆழ்ந்த குரலில் கேட்டார் கமிஷ்னர்.

கைமுட்டியை இறுக மடக்கினான் பிரதாப்.

“இப்பவும் ஒரு கொலை நடந்த பின்னாடி கேஸ் நம்மகிட்ட இருந்து போகாம இருக்க காரணம் ரவீந்தர் தான்.” என்றார் கமிஷ்னர்.

பிரதாப் அமைதியாகவே இருக்க, கமிஷ்னர் தொடர்ந்தார்.

“ரவீந்தரோட அண்ணா கேபினட் அமைச்சர்கள் குழுவுல இருக்க ஒரு முக்கியமான பொறுப்புல இருக்கார்.” என்றார் கமிஷ்னர்.

இதில் இருந்தே வழக்கின் தீவிரம் எங்கு வரை சென்றுள்ளது என புரிந்துக் கொண்டான் பிரதாப்.

“ரவீந்தருக்கு கிரிமினல் சைக்காலஜில ரொம்பவே ஆர்வம் அதிகம். எல்லா மாநிலத்துலையும் நடக்கற சீரியல் கில்லிங் கேஸ் பத்தி ஆய்வு செஞ்சி புத்தகமா எழுதுவாரு. அப்படி தான் நம்ம கேஸ்ல இருக்க பேட்டர்ன் அவருக்கு பிடிச்சி போயி, அவரே நம்மளை கான்டெக்ட் பண்ணினாரு. இந்த கேஸ் நம்ம கைய விட்டு போகாம இருக்கணும்னா, பதிலுக்கு கேஸ் முடிஞ்சதும் அந்த கல்ப்ரிட்டோட ஒரு இன்டர்வியூ வேணும்னு கேட்டுருக்காரு. நானும் ஓகே சொல்லிட்டேன்.” என்றார் கமிஷ்னர்.

கமிஷ்னர் உடன் உரையாடலை முடித்துக் கொண்டு வந்து அமர்ந்த பொழுது தான் நைனிகாவின் நினைவே வந்தது பிரதாப்பிற்கு.

நேரத்தை பார்த்தான் கடிகாரம் இரவாகிவிட்டது என்றது. இந்நேரத்திற்கு நைனியின் வீட்டிற்கு செல்வது சரியா என்று ஒரு கணம் யோசித்தவன், வெடவெடவென பயத்தில் நடுங்கியபடி சென்ற உருவம் அவன் கண் முன்னே வந்து அவனை இம்சித்தது. அவள் வீடு சென்று சேர்ந்து ஒருநாள் ஆகியிருந்த நிலையில் இன்னும் எக்காரணம் கொண்டும் தள்ளி போடக் கூடாது; அவளை பார்த்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து உடனே கிளம்பினான் பிரதாப்.

நைனிகா தனது அறைக்குள்ளே முடங்கி கிடந்தாள். இன்னமும் அவள் உடல் முழுவதும் இரத்தத்தில் நனைந்திருப்பது போலொரு பிரம்மை!

நேற்று வீட்டிற்கு வந்தது முதலே, வீட்டில் இருந்தவர்கள், “என்ன நடந்துச்சு நைனி? நீ எதுக்காக கொலை நடந்த இடத்துக்கு போன? பிரதாப் தம்பி என்னமோ சொன்னாரு எங்களுக்கு புரியலை?” என கேட்டு தொல்லை செய்ய, “என்னை கொஞ்சம் தனியா விடுங்க?” என்று கத்திவிட்டு தனது அறைக்குள் சென்று நுழைந்துக் கொண்டாள்.

அன்று மட்டுமல்ல அடுத்த நாளும் கூட அவள் கதவை திறக்கவில்லை. உணவு உண்ண கூட அவள் வெளியே வராமல் இருக்க,

“நைனி கதவை திறம்மா…” என அவளின் பாட்டி கதவை தட்டிக் கொண்டிருந்தார்.

“நைனி பாட்டி கூப்பிடறாங்கல்ல… என்ன பிடிவாதம் உனக்கு?” என அவளது தாத்தாவும் நைனிகாவை அழைத்துக் கொண்டிருந்தார். இன்னமுமே பேத்தி கதவை திறக்காததால் அவர்களுக்கு பயம் அதிகமானது.

எதுவும் காதில் வாங்காமல், மனம் வெதும்பி போய் அமர்ந்திருந்தாள் நைனிகா‌.

சரியாக அந்நேரம் தான் பிரதாப் நைனிகாவின் வீட்டிற்குள் நுழைந்தான்.

பிரதாப்பை பார்த்ததும் சற்றே சங்கடத்துடன் தான் இருவரும் வரவேற்றனர். அதிலும் காமாட்சிக்கு, எங்கே தன் பேத்தியை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுவிடுவானோ என்ற பயம் உள்ளே உருண்டது.

“நைனி…” என இவன் இழுக்க, “உள்ள இருக்கா தம்பி.” என்றார் பாட்டி காமாட்சி.

“நைனிமா பிரதாப் தம்பி வந்துருக்காங்க…” என்று கதவை தட்டினார் காமாட்சி.

கோபம் தலைக்கேற கதவை திறக்காமல் பிடிவாதமாக அமர்ந்திருந்தாள் நைனிகா.

“கதவை திற சொல்லுறேன்ல…” என்று காமாட்சி கத்த,

“நான் வேணா பேசறேன் அவகிட்ட…” என்றான் பிரதாப்.

காமாட்சி நகர்ந்து கொள்ள, “நைனி கதவை தொற…” என்றான் பிரதாப்.

கதவை திறக்க அலைபாய்ந்து மனதை நகத்தை கடித்து அமைதி படுத்தினாள்.

“ப்ளீஸ் நைனி…” என்று அவன் சொல்ல, எப்பொழுதும் போல அவனது ப்ளீஸில் சர்க்கரை பாகானது அவள் மனம்.

கதவை திறந்து கொண்டு அவனை முறைத்தபடி வந்து நின்றாள் நைனிகா.

கொஞ்சம் தயக்கமாய் காமாட்சியை பார்த்தவன், “ஒரு இரண்டு நிமிசம் தனியா பேசணும்.” என்றான்.

ஏதோ பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என புரிந்தது பெரியவர்களுக்கு.

“சீக்கிரமே பேசிட்டு வந்துருங்க தம்பி. இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு… ஒரு போலீஸ்காரரா நீங்க வர்றதும்‍, அவ போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்து போறதும் அவ்வளவா நல்லா இருக்காது. ஊர் வாய் ஒரே மாதிரி இருக்காது தம்பி.” என்ற காமாட்சி நாகரீகமாய் வெளிய சென்றார். அவரோடு தாத்தாவும் வெளியே சென்று நின்று கொண்டார்.

நைனிகா இன்னமும் அவனை முறைத்தபடியே இருக்க, அவளை தள்ளிக் கொண்டு, அறைக்குள்ளே நுழைந்தவன், கதவை தாழ்ப்பாள் போட்டான்.

“இப்போ எதுக்கு தாழ்ப்பாள் போடுறீங்க?” என நைனிகா கரகரப்பான குரலில் கேட்க, சட்டென அவளை இழுத்து அணைத்தான் பிரதாப்.

ஒரு முழு நிமிடம் அவளை இறுக்கமாக அணைத்திருந்தான் பிரதாப். அவளுக்கு தேவையோ இல்லையோ… இந்த அணைப்பு அவனுக்கு மிக அவசியமானது!

நைனிகாவை இரத்தத்தில் கண்டது முதல், ரவீந்தர் வந்து அவனது ஈகோவை உரசியது, கடைசியாக கேஸ் விசயத்தில் லீட் எடுத்து கொடுத்தது என அவனுக்கு தன் உணர்வுகளை வடிக்க வேண்டி இருந்தது. அத்தனையையும் இந்த ஒரு அணைப்பு சரி செய்தது.

முதலில் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றவள், பின்பு தடுமாறி, தன்னை சமாளித்து, உச்சபட்ச கோபத்தோடு அவனை தள்ளி விட்டாள்.

ஒரு கையில் ஆயுதமும் மறு கையில் மண்டை ஓடும் இல்லாத காளியாக நின்று கொண்டிருந்தாள் நைனிகா. அவளை எப்படி மலையிறக்க போகிறோம் என யோசனையோடு நின்று கொண்டிருந்தான் பிரதாப்.

எல்லாம் சில விநாடிகள் தான். உணவு உண்ணாமலே இருந்த நைனிகாவின் உடல், பசியால் நடுங்க ஆரம்பித்தது.

“என்னாச்சு நைனி? உடம்புக்கு முடியலையா?” அக்கறையாக கேட்டான் பிரதாப்.

“எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன மிஸ்டர் பிரதாப்? உங்களுக்கு உங்க வேலை தானே முக்கியம் அதை போயி பாருங்க!” என்றாள் நைனிகா முயன்று வரவழைத்த நக்கல் குரலுடன்.

ஏனென்று தெரியாமல் அவன் முன்பு அழுகை வேறு வந்து தொலைத்தது அவளுக்கு. திரும்பி நின்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“ப்ளீஸ் நைனிகா. என்னோட வேலை கொஞ்சமா ப்ரஷரா போகுது. புரிஞ்சிக்கோயேன்.” என்றான் பிரதாப்.

“ஓ ரைட். உங்களுக்கு மட்டும் தான் இந்த உலகத்துல வேலை இருக்குல. நான் எல்லாம் வெட்டியா தானே இருக்கேன். எல்லா கிரைம் ஸ்பாட்டுக்கும் போயி, அங்க இருக்க தடயத்தை எல்லாம் அழிக்கிறது தானே என்னோட ஹாபி.” என கோபத்தில் ஏதேதோ பேசினாள் நைனிகா.

“நைனிகா புரிஞ்சிக்காம பேசாத…” என பல்லைக் கடித்தான் பிரதாப்.

வேலையெல்லாம் விட்டுவிட்டு, இவளை பார்க்க வேண்டும் என மெனக்கெட்டு வந்தவனை கோபமுற செய்கிறாளே என்று இருந்தது பிரதாப்பிற்கு.

“ஒரே ஒரு முறை என் பீலிங்க்சை நீங்க புரிஞ்சிக்க ட்ரை பண்ணிருக்கீங்களா மிஸ்டர் பிரதாப்?” என சுட்டு எரிக்கும் பார்வையோடு, நைந்து போன குரலில் கேட்டாள் அவள்.

பிரதாப்பை அவளின் கேள்வி வெகுவாக தாக்கியது. இதுவரை எத்தனையோ முறை… இதோ, இப்பொழுது கூட, அவனின் வேலையை காரணம் காட்டி, அவளை தான் புரிந்துக் கொள்ளும் படி வற்புறுத்தி இருக்கிறானே தவிர, அவன் ஒரு முறை கூட அவளுக்காக, அவன் யோசனை செய்ததே இல்லை.

பிரதாப்பின் குற்றம் சாட்டும் பார்வை, அவன் மீதான கோபம், தன் மீதிருந்தே இரத்த வாடை வீசுவது போன்ற எண்ணம், நேற்றில் இருந்து சரியாக உண்ணாதது எல்லாம் சேர்ந்து நைனியை மயங்கி விழ செய்தது!

இதுவரை தன் எண்ணங்கள் மட்டுமே பெரிது என நினைத்திருந்தவனை, நைனிகா அன்று மொத்தமாக மாற்றி போட்டாள்.
 
பாவம் தானே அவளும்
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 17)


பின்னே ?இவன் வேணுமின்னா
கடமை கணடணாயிரமா இருக்கட்டும், அவ எதுக்கு அப்படி இருக்கணும்...? செய்யுற தொழில் தான் கடமைன்னா, அப்ப பொண்டாட்டி, பிள்ளைங்க, கட்டிக்கப்போறவ..
இதெல்லாம் உரிமை கலந்த கடமை தானே..? அதை யாரு பார்ப்பாங்களாம்....? இவன் மட்டும் தானே பார்க்கணும்.
அது தெரியாம புரிஞ்சுக்க, புரிஞ்சுக்கன்னா என்னத்தை புரிஞ்சுக்கிறது சொல்லுங்க.


கேஸ்ல இதுக்கு மேல ஒரு இம்ப்ரூவ்மெண்ட்டும் இல்லை.
இன்னொரு கொலை விழுந்தா தான் தெரியுமோ என்னவோ போங்க.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Admin ji, இந்த கலிவரதன் & பொன்னி பத்தி எனக்கு தான் தெரியலையா?????

யார் அவங்க?????

இதுக்கு முன்னாடி detail கொடுத்து இருக்காங்களா.????

நைனி....அவன் வேலை என்ன எப்படின்னு தெரிஞ்சி தானே அவனை கல்யாணம் செய்ய ஒத்துகிட்ட?????

சரி அவன் உன் கூட டூயட் பாடிட்டு இருக்கட்டும்....

இன்னொரு பக்கம் கொலை செய்துட்டு போகட்டும்.....

உன் பிரெண்ட் கூட சேர்ந்து விளையாடவும், நீ கவனம் இல்லாம வழி மாறி போனதுக்கு அவன் தான் காரணம் பாரு?????

இப்ப வரை அதை பத்தி அவன் ஏதும் கேட்கவே இல்ல.....

ஆன உன் கோவம் தான் உனக்கு முக்கியம் இல்ல?????

கொஞ்சமாவது matured ஆ நடந்துக்க பாரு
 
யார் இந்த ரவி?????

Wanted ஆ வந்து உதவி செய்யறார்?????

அவருக்கும் கொலையாளிக்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமா????
 
இந்த ரவீந்திரன் கிட்ட ஏதோ இருக்கு..... எதுக்கு வான்டெடா வந்து ஹெல்ப் பண்ணனும்?? ஒருவேளை கில்லர் யாருன்னு தெரிஞ்சி இருக்குமா?? ஆனா சொல்றத பாத்தா ஹெல்ப் பண்ண வந்த மாதிரி தான் இருக்கு..... பார்க்கலாம்....
 
அருமையான பதிவு
 
ரவீந்தர் எதுக்கு வான்டடா வந்து உதவி பண்ணிக்கிட்டு இருக்கான் அது எப்படி கலிவரதன் முதல் விக்டிமா இருக்குன்னு கரெக்டா கெஸ் பண்ணி அதற்கான காரணத்தையும் சொல்றான்?

டேய் பிரதாப் ஆனாலும் உன்னை பார்த்தா எனக்கு ரொம்ப கோவமா தான் வருது. வேலை முக்கியம் தான் அதுக்காக கட்டிக்க போற பொண்ணோட மனச கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இப்படி இருந்தா எப்படி?
 
பிரதாப் கொஞ்சம் டூ மச் தான். நைனி புரிந்து கொள்ள வேண்டும் போலீஸ் தெரிந்து தானே விரும்பினாள்.
 

Latest threads

Top Bottom