Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

19 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 14
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
746
Reaction score
4,462
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் - 19
View attachment 696
பிரதாப்பின் உள்ளம் உலைகளமாகக் கொதித்தது. ஒரு மணிநேரமாகத் தன் டீமூடன் சல்லடையாகச் சலித்து விட்டான். அந்த ஏரியா மனோகருக்கு தண்ணிப்பட்டப் பாடாக இருந்திருக்க வேண்டும். நொடியில் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்திருந்தான்.

“எங்க போய்டுவான்? ஆளு யார்னு தெரிஞ்சிடுச்சில்ல தூக்கிடலாம் திவாகர்” என்று அவன் தோள் தட்டியபோதுதான் பிரதாப்பின் அலைபேசி சிணுங்கியது.

கோர்ட் வரை சென்றதால் பிள்ளைகள் முகத்தில் முழிக்க அவமானப்பட்டு, ட்யூசன் சென்டருக்கும் செல்லாமல் அறையிலேயே அடைந்துக் கிடப்பதாய் நைனிகாவின் பாட்டி சொல்லவும் மனம்தாளவில்லை.

பார்த்தியை அழைத்தவன், “பார்த்தி, என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. உனக்கு ஒருநாள்தான் டைம். அந்த மனோகர் என் கண்ணு முன்னாடி இருக்கணும். கண்ல மண்ணைத் தூவி தப்பிச்சிருக்கான் ராஸ்கல்.

எனக்கு ஒரு அரைமணிநேரம் டைம்குடு. திரும்ப ஜாய்ன் பண்ணிக்கிறேன்” என்றவன், கெஞ்சிக் கொஞ்சி மிரட்டி நைனிகாவை கடற்கரை அழைத்து வந்திருந்தான். வேலைக்கிடையே குடும்பமும் முக்கியம் என்று புரிய வைத்திருந்தாளே!

வானம் ஒருபக்கம் அடைமழைக்காக மிரட்டிக்கொண்டிருக்க, “நைனி! ப்ளீஸ்…” என்றான்.

அலைகளுக்கு நிகராய் அவள் கண்களும் பொங்கிக் கொண்டிருந்தது

“அண்ணா… அண்ணா மழைக்கு சுண்டல் செம்மயா இருக்கும் வாங்கிக்கோங்கண்ணா…
“அக்கா நீ சொல்லுக்கா…”

அவனுக்கும் மேலாய் தன்னவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்த சிறுவனிடம்,

“டேய் ஒழுங்கா ஓடிரு இல்ல உள்ள வச்சி முட்டிக்கு முட்டிப் பேர்த்திடுவேன்” என்றான். இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பியாக வேண்டுமே அவன்.

“இப்போ எதுக்கு அவனை உள்ள தூக்கி வைப்பீங்க… என்னைப்போல அவனும் ஒரு இளிச்சவாய். அதானே?

உங்களுக்கு உங்க வேலை முக்கியம் மாதிரிதான் அவனுக்கும்…” தன்னைமீறி சண்டையிட்டாள்.

அவள் வாய் திறந்ததிலேயே உள்ளம் குளிர, “இப்போ என்னடி அவனைக் கூப்பிட்டு மன்னிப்பு கேட்கட்டுமா?”
உரிமைத் தானாக நர்த்தனமிட குரலில் கேலி.

“கேட்டாலும் ஒன்னும் குறைஞ்சிட மாட்டீங்க” முகத்தைத் திருப்பினாள்.

“கிரிமினல்ஸ்க்கு தண்ணி காட்டும் ஏசிபி டி நான்” எழுந்த புன்னகையை இதழுக்குள் அடக்கினான்.

“அதெல்லாம் அப்போ. அதான் இந்தக் கேஸ் உங்களுக்கே தண்ணி காட்டுதுல்ல” என்றாள்.

உண்மைதான் யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல் இந்த வழக்கு கொஞ்சம் சறுக்குகிறதுதான். அதற்காக…

“புருஷன் தப்பு பண்ணினாலும் கண் இருந்தும் குருடு வாய் இருந்தும் ஊமைன்னு, புருஷனோட தப்புக்கு ஆமாம் சாமின்னு தாளம்போட்டு வாயாடுற பொண்டாட்டியாவோ என்னை எதிர்பார்க்காதீங்க ஏசிபி!

அன்னைக்கு பைரவி பேச்சைக் கேட்டு முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன்தான். அதுக்காக, முட்டாளாவே இருக்க மாட்டேன். புருஷன் ஏசிபியாவே இருந்தாலும் தப்புன்னா தப்புதான்” என்றாள் வீராப்பாய்.

“அதே தான எனக்கும். பொண்டாட்டியா வரப்போறவளே குற்றவாளியா சந்தேகப்பட வேண்டிய சிச்சுவேஷன்ல நிறுத்தினா கோபம்வர….” என்றுவன் சட்டென நிறுத்தி,

“நைனி! இப்போ நீ என்ன சொன்ன திரும்பச் சொல்லு” ஆர்வமிகுதியில் இருபக்கமும் அவள் தோள்களைப் பற்றி உலுக்கினான்.

அவள் தடுமாற, “அதான் கண் இருந்தும்னு ஏதோ சொன்னியே…”

“ஆமா, கண் இருந்தும் குருடா வாய் இருந்தும்…” அவள் முடிக்கும் முன்,
“நைனி…” கூச்சலிட்டவனின் கண்களில் மின்னல்.

“அப்படி தப்பு செய்ற புருஷனுக்கு சப்போர்ட் பண்ணும் லேடியால நீ பாதிக்கப் பட்டிருந்தா என்ன பண்ணுவ” என்றான் எதையோ உணர்ந்துகொண்ட உற்சாகத்தில்.

“பிரதாப்…”

“ப்ளீஸ்… ப்ளீஸ் நைனி எனக்காக” என்றவனை முறைத்து, “அவ கண்ணை புடுங்கி காக்காய்க்கு போட்டுட்டு பல்ல உடைச்சி கைல கொடுப்பேன்” என்றாள்.

“அதுவே நீ ஒரு சைக்கோ கில்லரா இருந்தா?” என்றவனை இப்போது உண்மையாக முறைத்தவள், “தமிழில் ஒரு சொலவடை சொன்னது தப்பா” என்று தலையிலடித்துக்கொள்ள,

சத்தமிட்டுச் சிரித்தவன், சிறுவனை அருகில் அழைத்து, “சாரிடா தம்பி!” என்றவன், மொத்த சுண்டலுக்கும் பணத்தைக் கொடுத்து, “ஸ்கூல் முடிச்சிட்டுதான இந்த வேலை பார்க்கிற?” கடமையாய் மிரட்டி, “இரண்டுபேருமா சேர்ந்து இதை வித்துட்டே இருங்க. இதோ வரேன்”
என்றவன் சற்றுத் தள்ளிப் போய் திலீப்புக்கு அழைத்தான்.

“தீலீப்! அன்னைக்கு ரவீந்தர் மெட்டபர் பத்தி சொன்னார் இல்லையா?”

“எஸ் ஸார்!” என்றவன் பிரதாப்பின் உற்சாகத்தில் புரியாமல் தவிக்க,

“அது ஏன்? பார்க்கக் கூடாததை பார்த்ததுக்காக கண்ணையும், அதை தட்டிக் கேட்காத இல்லை சப்போர்ட் பண்ணி பேசுற மனைவியின் வாயை தைக்கிறதா இருக்கக் கூடாது? கில்லர் பர்ப்பஸா நமக்கு எதையோ சொல்றான்” என்றான் துள்ளல் குரலில்.

“இருக்கலாம் சார்”

“அந்த இடத்தைதான் நாம மிஸ் பண்றோம் தீலீப்.

கணவன் மனைவியா கொல்லப்பட்ட எல்லாருமே ஏதோ ஒரு இடத்துல சிங்க் ஆகுறாங்க. ஏதோ பெருசா தப்புப் பண்ணி இருக்கணும்.

இதுல அந்த டாக்டர் தனபால், தண்டபானி மட்டும்தான் வேறுபடுறாங்க.

அந்தக் கடைசியா இசைநகர்ல கொலையானவங்களோட பொண்ணு ஏதோ வெளிநாட்டுல செமினார்ல இருக்கிறதால பாடியகூட இன்னும் இறுதிச்சடங்கு பண்ணாம பாதுகாத்துதானே வச்சிருக்காங்க?”

“நாளைக்கு மார்னிங் வந்துடுவாங்க. எல்லாம் முடிஞ்சதும் விசாரிச்சு உங்ககிட்ட ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடுவேன்” என்ற திலீப்பிடம்,

“இன்னும் என்‌‌ மண்டைக்குள்ள ஏதோ வண்டு குடையுது திலீப்! மனோகரை பிடிக்கப் போன டீம் என்னாச்சு? எனக்கு அப்டேட் பண்ணுங்க?” என்றவன் அலைபேசியை துண்டித்து நைனியிடம் ஓடி வந்தான்.

மழை சடசடவென ஆரம்பித்திருந்தது.

“நைனி வா! ஜாலியா மழைல நனைஞ்சிட்டே வீட்டுக்குப் போகலாம்” என்று இழுத்துக்கொண்டு ஓட,

பிரதாப்பின் செயல்கள் புதிராய் இருந்தாலும், கடலும், மழையும் சில நிமிடங்களேயானாலும் தன்னவனின் அருகாமையும் நைனியை சமாதானப் படுத்த, பிரதாப்பின் இடுப்பை இறுக்கிக்கொண்டாள்.

பிரதாப்பின் உள்ளமோ, குடியிருந்தவர்களிடமும் உருப்படியானத் தகவல் ஒன்றும் கிடைக்காததில், காதலைத் தாண்டி, நினைவடுக்கில் சிக்கிய எதையோ மீண்டும் மீண்டும் தேடிச் சீறியபடி சாலையில் தேங்கி இருந்த நீரைச் சிதறடித்தது.

நைனியை இறக்கிவிட்டு ஓட இருக்க, கூடத்திலேயே முறைத்தபடி காத்திருந்தார் அவனது தந்தை. மருமகளைக் கண்டதும் அணைத்து உச்சி முகர்ந்தார் பிரதாப்பின் அன்னை.

சொல்லாமல் வந்ததோடு நைனியின் வீட்டில் உட்கார்ந்திருந்ததிலேயே தந்தையின் கோபம் புரிந்தது.

“நைனி நீ கிளம்பும்மா. உன்னை உங்க ஊர்ல விட்டுட்டு நாங்களும் அப்படியே ஊருக்கு கிளம்பறோம்” பிரதாப்பை முறைத்தபடி மகாலிங்கம் சொல்லவும்,

“கேஸ் முடியுற வரை அவளை எங்கேயும் அனுப்ப முடியாது” தந்தையை நிமிர்ந்து பாராமலே சொன்னான்.

கூப்பிட்டால் வரவேண்டும் என்ற நிபந்தனையில் அனுப்பலாம்தான். அவனின் ஒரே ஆறுதல் அவளின் சில நிமிட பார்வையோ, பேச்சோ மட்டுமே. அதை இழக்க வேண்டுமே!

“அன்னைக்கு போன்ல என்னடா சொன்ன? போன இடத்துல லேட்டாகிட்டு, கொலை மிரட்டல் இருக்கிறதால, தனியா அனுப்ப முடியாதுன்னு. மறுநாள் குற்றவாளியா கோர்ட்ல நிறுத்தி இருக்க…

உன்னை நம்பிதான பிள்ளைய காணோம்னு கிளம்பின அவ அப்பனை சமாதானப் படுத்தி வச்சேன். என்னை நம்பித்தான் அவன் பொண்ணைத்தர ஒத்துக்கிட்டான். நீ கிளம்பும்மா. கல்யாணம் வரை அங்கன இரு” என்றார்.

மாமியார் மாமனாரை எளிதாகச் சமாளித்தவன் தந்தையை சமாளிக்க முடியாமல் திணறினான்.‌ என்னதான் ஊரை காக்கும் ஏசிபி என்றாலும் தந்தைக்கு மகன்தானே!

பிரதாப்பின் திணறலை வெகுவாக இரசித்தவள், “என் மடியில் கணம் இல்லாதப்போ, அவர் பொண்டாட்டிய எப்படிப் பத்திரமா பாதுகாக்கணும்னு உங்க புள்ளைக்கு நல்லாவே தெரியும் மாமா. நீங்க தைரியமா போய்ட்டு வாங்க” என்றதும் பிரதாப் உதட்டுக்குள் எழுந்த புன்னகையை மறைத்தான்.

“எனக்கும் போர்ஷன் முடிக்கனும் மாமா. ப்ளீஸ்…” என்று கெஞ்சவும் பிரதாப்பை கண்டிப்பான ஒரு பார்வைப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டார்.

நைனிகாவை அனுப்பாததிற்காக, ஒருநாள் வருந்தும் நிலை வரும் என்று அறியவில்லை அவன்.

அப்பாடா என்ற பெருமூச்சுடன், “எம்மோவ், எப்படியும் வீட்டுக்கு வரமாட்டிங்கன்னு தெரியுது. உங்க புருஷனை சமாதானப்படுத்தி ஊருக்கு கூட்டிட்டுப் போங்க. என் செல்லம்மால்ல” என்று கெஞ்சியவன், “எனக்கு வேலை இருக்கு நான் வர்றேன்” என்று வெளியில் ஓட, நைனியின் அலைபேசி சிணுங்கியது.

பிரதாப்தான் அழைத்திருந்தான். அனைவரும் உள்ளே இருக்க, வெளியில் எட்டிப்பார்த்தவளை இழுத்தணைத்துக் கொண்டான்.

“எனக்காக பேசினதுக்கும் என்னை நம்பினதுக்கும்” பட்டும் படாமல் அவள் உதட்டில் முத்தம் ஒன்றை வைத்து விலக,

சிலையாக நின்றிருந்தவளை கீற்றாக ஒளிர்ந்த மின்னல்தான் கலைத்தது.

வண்டியில் ஏறியவனுக்கும் அதே மின்னலென இதுவரை மண்டையை உடைத்துக்கொண்டிருந்த விசயம் நினைவில் வர, அலைபேசியை எடுத்து திலீப்பிற்கு அழைத்தபடி வாகனத்தை இயக்கியவன், ஒலி வாங்கியில் பேசியபடி, தன்னவளிடம் கண்சிமிட்டி விடைபெற்றான்.

“திலீப்! அந்த இராஜசேகர் சம்பந்தப்பட்ட ஃபைல் வீடு வரைக்கும் கொண்டு வந்து தந்துட்டுப் போக முடியுமா? கூடவே அந்த இரட்டைக் கொலைகளோடதும்” என்று வைத்தவன் பார்த்திக்கு அழைத்தான்.

“பார்த்தி, எனக்கு சில லீட்ஸ் கிடைச்சிருக்கு. இன்னைக்கு நைட்குள்ள அவன் மோட்டிவ் என்னானு எனக்குத் தெரிஞ்சாகணும். அதை நான் பார்த்துக்கிறேன். நீ மனோகரை விட்ராத…” என்றவன் வாகனத்தைச் சீற விட்டான்.

“சஸ்பெக்ட் லிஸ்டில் சேர்த்திடலாம் போலவே அச்சு அசல் சிசிடிவில பார்த்த உருவம் போலவே இருக்கீங்க தீலிப்!”

கருப்பு ரெயின்கோட் சகிதம் தன் வீட்டு வாசலில் தான் கேட்டக் கோப்புகளுடன் நின்றிருந்த திலீப்பை கேலி செய்ய, “சார்…” என்று அலறினான்.

“மனோகரைப் பிடிக்க டீம் கிளம்பியாச்சா?”

“ஒரு டீம் அவன் சொந்த ஊருக்கும். ஒரு டீம் சென்னை முழுசும் ஜல்லடையா சலிச்சிட்டு இருக்காங்க சார். நைனிகா மேடம் அனுப்பின போட்டோவ எல்லா செக் போஸ்ட்க்கும் அனுப்பி அலர்ட் பண்ணியாச்சி” என்றதும், “குட்” என்றான்.

நைனிகாவிடமும் உண்மையைச் சொல்லாமல் கேட்டு வாங்கி இருந்தான் பிரதாப்.

இராஜசேகரின் கோப்பினில் அன்று, தான் வட்டமிட்டு வைத்த வார்த்தைகளைத் தேடினான் பிரதாப்.

“விவேகானந்தா நகர் குடியிருப்பு வாசிகள் சங்கம்” அதை வாய்விட்டுப் படித்த திலீப் கேள்வியாய் ஏறிட, “எஸ் தீலிப்! இந்த சங்கத்துலதான் இராஜசேகர் செயலாளரா இருக்கார்.

“ஏற்கனவே நமக்கு இது ஹவுஸ் ஓனர்களை குறிவச்சி நடத்தப்படுற கொலைகளோன்னு சந்தேகம் இருந்ததில்லையா? அப்பவே இராஜசேகரோட இந்தப் பதவியையும் சங்கத்தையும் நோட் பண்ணி வச்சேன்.” என்ற பிரதாப்,

“இடையில் இந்த தண்டபானி, தனபாலோட கொலைகள் நம்ம கவனத்தை வேற பக்கம் திசை திருப்பிடுச்சி. மே பி இதுவும் கில்லரோட ப்ளானாகூட இருக்கலாம்” என்றான்.

“திலீப் நீங்க இந்த சங்கத்தைப் பத்தின தகவல் ஏதாவது நெட்ல இருக்கான்னு பாருங்க. இவங்களை எல்லாம் ஏதோ ஒரு புள்ளி இணைக்குது. அந்த நூல் மட்டும் சிக்கிட்டா கில்லரோட மோட்டிவ் என்னன்னு புடிச்சிடலாம்” என்ற பிரதாப் தன் புருவத்தைத் கீறியபடி,

“எதுலயோ படிச்சிருக்கேன் திலீப். இந்த எழில்நகர், இசை, விவேகானந்தா நகர் எல்லாம் ஏதோ ஊராட்சி கீழ…” என்று அவன் சொல்லி முடிக்கவும், “சார்” என்று கூவி அழைத்தான் திலீப்.

“நீங்க சொன்னது உண்மைதான். இது அன்னனூர் ஊராட்சிதான். இங்க பாருங்க” என்றவன் மடிக்கணினியை பிரதாப்பின் பக்கமாகத் திருப்ப, ‘அன்னனூர் குடியிருப்பு வாசிகள் சங்கம்’ என்று பழைய கட்டிடத்தின் புகைப்படம் ஒன்று அது ஆரம்பிக்கப்பட்ட வருடத்தைத் தாங்கி நின்றது.

உடனே இராஜசேகருக்கு அழைத்தான்.

“இந்த நேரத்துல தொந்தரவு பண்ணதுக்காக சாரி இராஜசேகர். எனக்கு அவசரமா ஒரு தகவல் வேணும். இந்த விவேகானந்தா நகர் குடியிருப்பு வாசிகள் சங்கம் எப்போ ஆரம்பிச்சது? அது டீடெய்ல்ஸ் எதும் உங்களுக்குத் தெரியுமா?” நேரடியாக விசயத்துக்கு வந்தான் பிரதாப்.

“இது இப்போ பெயர் மாற்றினோம் சார். முன்னாடி, அன்னனூர் ஊராட்சிதான். பட்டா இல்லாத பொறம்போக்கு இடமா இருந்தபோது கவர்மெண்ட்ல பட்டா வாங்குறதுக்காக ஹவுஸ் ஓனர்ஸ் கூட்டா சேர்ந்து இந்த சங்கத்தை ஆரம்பிச்சது. எல்லாரும் பட்டா கிடைச்சி ஊராட்சி மாநகராட்சியானதும் தனித்தனியா சங்கமும் பிரிஞ்சிடுச்சி” என்றார்‌ இராஜசேகர்.

“யார் ஆரம்பிச்சதுன்னு தெரியுமா?”

“அப்பா காலத்துல ஆரம்பிச்சது. அப்போ யார் யார் இருந்தாங்கன்னு ஃபைல்ஸ் பார்த்தாதான் தெரியும்.

அப்ப இருந்த தலைவர்கள், சங்கத்துப் பணம் கையாடல், ஊழல், அழிச்சாட்டியம்னு இளைய தலைமுறைக்கு பிடிக்காம தேர்தல் வச்சி புதுசா இப்போ நாங்கல்லாம் இருக்கோம் சார்” என்றார்.

“இந்த சங்கம் மூலமா என்னென்ன பண்ணுவீங்க?

“சில வாடகைக்கு இல்ல லீசுக்கு வரவுங்க காலி பண்ணாம பிரச்சனை பண்ணுவாங்க. இரண்டு பக்கமும் பேசி பிரச்சனையைத் தீர்த்து வைப்போம். சிலது கோர்ட் வரை கூட போகும். அப்படிப்பட்ட வழக்கை ஹவுஸ் ஓனர் சார்பா சங்கமே எடுத்து நடத்தும்” என்றார்.

“இஃப் யூ டோண்ட் மைண்ட், இன்னைக்கே அந்த பழைய ஃபைல்ஸ பார்க்க முடியுமா?” என்றான்.

“சார்! உங்களுக்காக இதைக்கூட பண்ணமாட்டனா? என்‌ முகத்தைக் கூட பார்க்க விரும்பாத என் பொண்ணு இன்னைக்கு என்கிட்ட அன்பா பேசுறதுக்கு காரணமே நீங்க தானே!” என்று நெகிழ்ந்தார்.

தன் அன்னையை இராமலிங்கத்துடன் தொடர்புப் படுத்தியதில், தந்தை சொல்லி செய்வதாக ஸ்டேசனுக்கே வந்து சண்டைப் பிடித்தச் சிறுமிக்கு பக்குவமாகப் பேசிப் புரியவைத்திருந்தான்‌ பிரதாப்.

‘இவர்கூடவேதான சுத்துறேன். இதெல்லாம் எனக்குத் தெரியாம எப்போ நடந்துச்சி!’ திலீப், பிரதாப்பை வியந்துப் பார்க்க,

“உங்க பொண்ணு ரொம்ப புத்திசாலி இராஜசேகர். உங்க எக்ஸ் ஒஃய்ப் கொலைதான் செய்யப்பட்டிருக்காங்கன்னு உறுதியா எனக்குத் தெரிஞ்சாலும், அன்னைக்கு அவ இடதுக்கை பழக்கம் பத்தி சொன்னதுமே ஆச்சரியப்பட்டுதான் தெரியாத மாதிரி அவ வாயைக் கிண்டினேன். ஷீ இஸ் வெரி க்ளவர்” என்றான் புன்னகையுடன்.

“என் பொண்ணு முதல் முதலா போன்‌ பண்ணி சாரிப்பான்னதும் மனசே நிறைஞ்சிடுச்சி சார்.

சாவியோட வரேன். நீங்க வந்துடுங்க” என்றதும் இருவரும் கிளம்பிவிட்டனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, இன்று இந்த வழக்கை இரண்டில் ஒன்று பார்க்காமல் ஓய்வதில்லை என்று நின்ற தன் தலைவனின் தீவிரத்தில் தானும் தோள் கொடுத்து நின்றான் திலீப்.

மூவரின் பல மணி நேரத் தேடலுக்குப் பயனாகக் கிடைத்தக் கோப்பில் குறிப்பிட்டத் தாளில், பிரதாப்பின் விரல்கள் நின்று, இரண்டுமுறை ஆட்காட்டி விரலால் தட்டியது.

“சங்கத் தலைவர் கலிவரதன்” பிரதாப்பின் இதழ்கள் உச்சரிக்க, அதிர்ந்த திலீப் அதில் பார்வையை ஓட்டினான்.

“துணைத் தலைவர் ரகுராம், பொருளாளர் செல்வநாயகம், ஒருங்கிணைப்பாளர் மதனகோபால்” என்று வாசித்துக்கொண்டே வர, “கடைசியா இருக்கிறது எங்கப்பாவோட பெயர் சார். சங்க செயலாளர்” என்றார் இராஜசேகர்.

திலீப் அலறினான். “நீங்க சொன்னது போல இரட்டைக் கொலைகள் ஒன்னுக்கொன்னு பெருசா தொடர்பு இருக்கு. இந்தக் குரூர கொலைகளுக்குப் பின்னால இவனுங்க ஏதோ பெரிய தப்பா பண்ணிருக்கானுங்கன்னு சொன்னீங்கல்ல! அது சரியா இருக்கு” என்றவனின் உற்சாகத்தைத் தடுத்த பிரதாப்,

கடைசியா இசைநகர்ல கொலையானவரோட பெயர் ரகுராம். துணைத்தலைவர். அம் ஐ ரைட் திலீப்? என்றான்.

“ரகுராம், அவர் மனைவி வத்சலா. ஆனா சார்” என்று ஏதோ சொல்ல வந்த திலீப் இராஜசேகரைக் கண்டு பாதியோடு நிறுத்தினான்.

“என்ன திலீப்! இராஜசேகரோட அப்பா ஏன் இந்த லிஸ்ட்ல வரலன்னு தானே கேட்க வந்தீங்க. அவங்க இரண்டுபேரும் அல்ரெடி ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க இல்லையா இராஜசேகர்?” என்ற பிரதாப் இராஜசேகரின் இருண்ட முகத்தைக் கண்டு “மே பீ நல்லவராகூட இருந்திருக்கலாம்.” என்று முடித்தான்.

“அந்த பிரேஸ்லெட் கூட சங்கத்தோட பணத்துல ஒரேபோல வாங்கி இருப்பானுங்களோ?” திலீப்பின் கேள்விக்கு, “மே பீ! அப்படி இருந்தா நம்மகிட்ட இருக்க பிரேஸ்லெட் கில்லரோடதா இல்லாம விக்டிமோடதா இருக்கணும். அதுக்கு விடை மனோகரை பிடிச்சாதான் தெரியும்” என்ற பிரதாப் இராஜசேகரிடம் திரும்பினான்.

“ஹவுஸ் ஓனர்களுக்கு ஆதரவா சில வழக்குகளும் நடக்கும்னு சொன்னீங்க இல்லையா? அப்படி எதும் குறிப்பிட்ட வழக்கு அது நடந்த வருடம் இப்படி எதாவது தகவல் கிடைக்குமா?” கேள்வியாய்.

அவ்வப்போது பார்த்தியையும் அழைத்து ஆணையிட்டபடி, அந்த இரவிலும் கொம்புச் சீவிவிட்டக் காளையாய் துடிப்புடன் இருந்தவனை இராஜசேகரும் திலீப்பும் மிரட்சியுடன் பார்க்க,

“சின்ன சின்ன பஞ்சாயத்துக்கெல்லாம் ரெக்கார்ட் இருக்காது. வழக்குன்னா திரும்பவும் தேடணும் சார்” என்று மணி விடியல் மூன்றைத் தொட்டிருக்க இழுத்தார் இராஜசேகர்.

“நான் என் ஆளுங்களை அனுப்பறேன் நாளைக்கே எனக்கு அந்த டீட்டெய்ல்ஸ் வேணும்” என்றவன் கிளம்ப,

“ஹான்…ஒரு கேஸ் கொஞ்சமா ஞாபகம் இருக்கு சார். பாவம் யாரோ ஒரு பையனுக்கு கிடைக்க வேண்டிய பரம்பரைச் சொத்தை வேணும்னே வாய்தா மேல வாய்தாவா போட்டு கிடைக்க விடாம சங்கம் இழுத்தடிக்கிறதா அப்பா அடிக்கடி புலம்புவார்” என்றதும் “நாளைக்கு அது யார்னு பாருங்க” என்றவனைத் தொடர்ந்து இருவரும் வெளியேறினர்.

மறுநாள், நைனி ட்யூசன் சென்டருக்கு கிளம்பினாள். முந்தையநாள் பிரதாப் ப்ளீஸ் பண்ணிய விதத்தில் அவளது கோபம், பயம் எல்லாமே விலகி இருந்தது.

அன்று பிரதாப் பேசாத மன உளைச்சலும் அதேநேரத்தில் திலீப் வழிவந்த கொலைமிரட்டலும், வழிதவறிய இருட்டும் சேர்ந்தே அவளை இன்ஸ்டண்ட் கோழையாக மாற்றி இருந்தது. மற்றபடி அவள் ஒன்றும் பயந்தாங்கொள்ளி இல்லையே! தனக்குத் தானே கண்ணாடியில் மிதப்பாய் உதட்டைச் சுளித்துக் கொண்டாள். எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடு.

வகுப்பு முடிந்து கிளம்ப ஆயத்தமாக, ஒரு மாணவன் மட்டும் கண்கலங்க அமர்ந்திருந்தான்.

“டேய் வீட்டுக்குக் கிளம்பல?” நைனிகா கேட்கவும், “இன்னைக்கு அவனுக்கு பர்த்டே மிஸ். அவுங்க அம்மா இருக்கிற பிரச்சனைல பர்த் டே ஒன்னுதான் கேடுன்னு திட்டிட்டாங்களாம்” மற்றொரு மாணவன் போட்டுக்கொடுத்தான்.

“கேக்தான வெட்டணும். இங்கயே வெட்டிடுவோம். அதான் மனோகர் சார் இல்லையே!” என்ற நைனிகா அஞ்சலியை ஏறிட கௌரியும் பண்ணலாம்கா என்று கெஞ்சவும் மாணவர்களும் கோரஸாய் கத்த “சரி” என்றாள் அஞ்சலி. அவளுக்குதான் பார்த்துக்கொள்ளும்படி கடைசியாக மனோகர் செய்தி அனுப்பியது.

“டேய் ஓடிப்போய் எதிர் பேக்கரில கேக் வாங்கிட்டு வாடா” சில ரூபாய் தாட்களைக் கொடுத்து நைனிகா இரு மாணவர்களை அனுப்பி வைக்க, அந்த இடமே கூச்சலும் கும்மாளமுமானது.

சென்டரில் மேலோட்டமாகத்தான் விசாரிக்கச் சொல்லியிருந்தான் பிரதாப். ஒரு ஆசிரியர் நிலையில் இருப்பவனை உண்மை தெரியும்வரை, மாணவர்கள்முன்
கீழிறக்க அவன் மனம் ஒப்பவில்லை. அதனால்தான் இந்த கும்மாளம் சாத்தியமாயிற்று.

“மனோகர் சார் மட்டும் இப்போ வரணும் தெரியும் சேதி” என்று அஞ்சலி எச்சரிக்க, தொண்டையைக் கணைத்துக் கொண்ட நைனிகா,

“என்ன நடக்குது இங்க? ஹான். இது ட்யூசன் செண்டரா கூத்துப் பட்டறையா? இதுக்குதான் இங்க உங்க பேரண்ட்ஸ் ஃபீஸ் கட்டறாங்களா?” மனோகர் போலவே முன்னும் பின்னும் நடந்தும் காமிக்க மாணவர்கள் “ஹோ” வென கூச்சலிட்டனர். அழுதிருந்த மாணவன்கூட சிரித்துவிட்டான்.

அதைத்தொடர்ந்து கௌரியும்,
மாணவர்களும் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்கள் போல செய்து காண்பிக்க, அதுவரைக் காணாத ஆர்ப்பாட்டத்தில் திளைத்தது அந்த ட்யூசன் சென்டர். மற்ற ஆண் ஆசிரியரையும்கூட விட்டு வைக்கவில்லை.

“அஞ்சலி மிஸ் இப்போ நீங்க…” என்று‌ மாணவர்கள் சத்தமிட, ஓடி ஒளிந்தவளை ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சியே சம்மதிக்க வைத்திருந்தனர்.

மனோகர் போல் நிதான நடையுடன் உள்ளே வந்த அஞ்சலி, “இஸ் திஸ் ப்ளே க்ரவுண்ட்? என்ன சத்தம். வெளில இருக்கவுங்க சென்டர் பத்தி என்ன நினைப்பாங்க. நான் கஷ்டப்பட்டு உருவாக்கின கோவில் இது” என்று பின்னால் கையைக் கட்டியபடி மனோகர் போலவே செய்துகாட்ட, “அஞ்சலி மிஸ், நீங்கதான் டென் அவுட் ஆஃப் டென்” மாணவன் ஒருவன் கத்தினான்.

“ஏன்டா நான் நல்லா பண்ணலையா?”சண்டையிட்டாள் கௌரி.

“நீங்க இரண்டுபேரும் சிரிச்சிட்டீங்க. அஞ்சலி மிஸ் மட்டும்தான் கடைசி வரை முகத்தை சீரியஸா மனோகர் சார் போலவே வச்சிருந்தாங்க, நடக்கறதும் சூப்பர்” என்றான் குறும்புடன்.

அதற்குள் கடைக்குச் சென்ற மாணவர்கள் கையில் கேக்குடனும், அஞ்சலி சொன்னதுபோல் குளிர்பானமும் வாங்கி வர, கூடவே கையில் நான்கைந்து ஊதிய ஹீலியம் பலூன்களை பிடித்தபடி வந்தனர்.

“எங்கிருந்துடா பலூனையெல்லாம் பிடிச்சிங்க?” வியந்த நைனிகாவிடம், “அதான் பக்கத்து பார்க்ல பலூன் விக்கிற அங்கிள், அவர் பொருளை எல்லாம் படிக்கட்டுக்கு கீழ இருக்க ஸ்டோர் ரூம்ல வச்சிக்கச் சொல்லி மனோகர் சார்
அலோவ் பண்ணி இருக்கார்ல” என்றதும், “அடப்பாவி! திறந்து கிடக்குன்னு, சொல்லாம எடுத்துட்டு வந்துட்டிங்களா?” என்று முறைத்தாள்.

“அச்சோ இல்ல மிஸ்! நான் வரவும் பலூன் அங்கிள் வந்தாரா, அவர்கிட்ட கேட்டேன். அங்க ரூம்குள்ள பலூன்ல காற்று ஊதித் தந்தார்” என்றான்.

“டேய் அது காற்று இல்லடா. ஹீலியம். நான் படிச்சிருக்கேன். இல்ல மிஸ்?” மாணவனொருவன் கெமிஸ்ட்ரி மிஸ்ஸான அஞ்சலியிடம் கேட்க, “இப்போ நல்லா சொல்லுடா. ஆனா டெஸ்ட் வச்சா மட்டும் தூங்கிடு” என்று திட்டவும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

கேக் வெட்டி முடிய, “மிஸ் நீங்க அந்த கூல் ட்ரிங்ஸ பேப்பர் கப்புல ஊத்துங்க. கலக்கறது ஊத்தறது எல்லாம் உங்க படிப்புலதான் சேரும்” என்ற நைனிகாவை முறைத்த அஞ்சலி, “உன்னை விட எனக்கு வயசும் ஜாஸ்தி, எக்ஸ்பீரியன்ஸூம்... எங்களுக்கும் பிஸிக்ஸவிட அளவாவே வெட்டத் தெரியும். கேக்க…(cake)” முகத்தைக் கோணி நைனியை வெறுப்பேற்றி குளிர்பானத்தை விநியோகித்தாள்.

அனைவரும் வெளியேறி இருக்க மீண்டும் மழை பிடித்துக் கொண்டது.

“நான் கேப் புக் பண்ணி இருக்கேன். நீ எப்படிப் போவ நைனி? பேசாம வண்டிய சென்டர்லயே விடேன். அதே கேப்லயே உன் வீடு வரைக்கும் போய்டலாம்” என்றாள் அஞ்சலி.

பிரதாப் கொஞ்சநாட்களுக்கு வெளி வாகனங்களில் செல்லக்கூடாதென எச்சரித்திருக்க, “பரவால்ல அஞ்சலி. கொஞ்சநேரம் பார்க்கிறேன். நீ கிளம்பு” என்றாள்.

அதற்குள் பலூன் கொண்டு வந்த மாணவனோ, “மிஸ் நான் அந்த ஸ்டோர்‌ரூம்ல ஒரு பேக்ல ப்ளாக் கலர் ரெயின் கோட் பார்த்தேன். அதை எடுத்துட்டு வரவா? உள்ள க்ளவுஸ் கூட இருந்துச்சி” என்றான்.

“டேய் அது பலூன் அங்கிளோடதா இருக்கும். பாவம் அவர் மழையில நனைஞ்சி வியாபாரம் பார்க்கிறவர்” என்று நைனிகா திட்டவும், “மனோகர் சாரோடதாவும் இருக்கலாம் நைனி. அவருக்குதான் ஓசிடி உண்டு. அவர் ரூமை அவரேதான் க்ளீன்‌ பண்ணுவார். பார்த்திருக்கல்ல? அப்போ க்ளவுஸ் யூஸ் பண்ணுவார்.” என்றாள்.

இருந்த மாணவர்களையும் அவரவர் பேரண்ட்ஸ் வந்து அழைத்துக் கொள்ள,
“ஏன் அஞ்சலி! மனோகர் சார் பத்தி இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்க. ஏதும் ஐடியா இருக்கோ?” பூடகமாக மழையை இரசித்தபடி நைனிகா கேலியாகக் கேட்கவும், “உனக்கு யார் சொன்னா மனோகர் சாருக்கு கல்யாணம் ஆகலைன்னு” என்ற அஞ்சலியை அதிர்ச்சியாக வெறித்தாள் நைனிகா.

இப்போது ஆர்ப்பரிக்கும் மழையைத் தான் வெறித்த அஞ்சலி, “அவரோடது காதல் கல்யாணம். அந்தப் பொண்ணு வீடு வாசல்னு பணக்காரப் பொண்ணு. காதல்வேகம். அவங்க அப்பாம்மா சம்மதமில்லாமலே ஓடி வந்துடுச்சி.

ஆனா காதலிக்கும்போது இருந்த வேகம் கல்யாணத்துக்கு அப்புறம் இல்ல. மனோகர் வாடகை வீட்லதான் குடி இருந்தார். அவரோட குணத்துக்கு அப்பப்போ வீடு வேற மாத்திட்டே இருக்க, சொந்த வீட்ல வாழ்ந்த அந்தப் பொண்ணால சகிச்சிட்டு வாழ முடியல.

மனோகர் பரம்பரை சொத்தான இந்த ட்யூசன் சென்டர் இடமும் அப்போ வாய்தா மேல வாய்தான்னு அவருக்குக் கிடைக்கல. அந்தநேரம்தான் அந்தப் பொண்ணும் நாலுமாசம் கர்ப்பமா இருந்தா.

அதை சாக்கா வச்சி பிறந்த வீட்டுக்கு போக வர இருந்தவளை, சொந்தமா ஒரு வீடுகூட இல்லாதவன்னு கேவலப் படுத்தியே அந்தப் பொண்ணு மனசை மாத்தி அவ கர்ப்பத்தையும் கலைச்சிட்டாங்க அவ பேரண்ட்ஸ்.

மனோகரோட குட்டி நிலவு அவர் கைக்கு வராமலே காடு போய் சேர்ந்துடுச்சி. டைவர்ஸ் ஆகி அந்தப் பொண்ணுக்கு இப்போ வேற ஒரு கல்யாணமும் ஆகி குழந்தையும் இருக்குது” என்றாள்.

நைனிகா “ஆ” என்று வெறித்துப் பார்த்திருக்க, “அன்னைக்கு நீ மயங்கிக் கிடந்தியே அந்த வத்சலா ரகுராம் அவங்கதான் மனோகரோட எக்ஸ் மாமனார் மாமியார்” என்றதும் நைனிகா இன்னமும் அதிர்ந்து விழித்தாள்.

“அப்புறம் இதெல்லாம் உன்‌ ஆளுகிட்ட தெரிஞ்சாமாதிரி காட்டிக்காத. மே பி அவளைப் பார்த்தா கொலை வெறியாகிடுவோம்னுதான் எங்கேயும் போயிருப்பார் மனோகர். சோ சொல்லாத.” என்ற அஞ்சலியை பாவமாகப் பார்த்தவள், “எப்படி நான் தெரிஞ்சும் சொல்லா…” என்று முடிக்கும் முன், “ஏன் உன் ஆளுதான் சூரப்புலின்னுவியே. இதைக்கூட கண்டு பிடிக்க மாட்டாரா என்ன? என்றாள் கேலியாக நைனிகாவின் மண்டையில் இலேசாகத் தட்டி.

அதில் வீராவேசமாக, “நான் சொல்லாமலே பிரதாப் கண்டு பிடிச்சிட்டா!” என்றாள் சவாலாக.

“உனக்கு ஒரு நல்ல காலேஜ்ல இண்டர்வியூ வந்திருக்குன்னியே. அன்னைக்கு உன் க்ளாஸையும் சேர்த்து மனோகர்கிட்ட திட்டு வாங்காம நான் எடுக்கிறேன். போதுமா?”

“டன்” என்று நைனிகாவும் கட்டை விரலை உயர்த்த ட்யூசன் சென்டரின் வாசலில் புயலாய் வந்து நின்றது பிரதாப்பின் ஜீப்.

“உன் ஆளுக்கு நூறு வயசு. நினைச்சதும் வந்துட்டார். எனக்கும் கேப் வந்திடுச்சி” என்று இருவரும் குடையைப் பிடித்தபடி இறங்கிவர, அவர்களைப் பார்த்தபடியே அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் பிரதாப்.

“சார், ரகுராம் வத்சலா பொண்ணுகிட்ட விசாரிச்சிட்டேன். அந்தப்பொண்ணுக்கு இது இரண்டாவது கல்யாணமாம். முதல் ஹஸ்பண்ட் மனோகர்” திலீப் அதிர்ச்சியாய் சொல்லவும் நெருஞ்சிட்டது பிரதாப்பின்‌ புருவம்.

அன்று மனோகரின் முகத்திலிருந்த அலட்சியம் மின்னலென ஓடி மறைய, “இராஜசேகர் கால் பண்றார். வைங்க தீலீப் நான் திரும்ப கூப்பிடுறேன்” என்றவன் அந்த அழைப்பை ஏற்றான்.

“சார் அந்த வழக்கு யாரோடதுன்னு தெரிஞ்சிட்டு” என்று அவர் முடிக்கும் முன், “மனோகர். இப்போ ட்யூசன் சென்டரா இருக்க இடம் சரியா?” என்றான் புன்னகையுடன்.

“ஆமா சார்” என்ற இராஜசேகர் வியக்க, “அந்த ஃபைலை திலீப் வருவார் குடுத்தனுப்புங்க” என்ற பிரதாப் தன் வருங்காலத்தை மென்னகையுடன் ஏறிட்டான். எல்லாத்தையும் கிட்டத்தில் நெருங்கிவிட்ட மகிழ்ச்சி. பொறி வைத்தாயிற்று மனோகரையும் இன்று இரவுக்குள் நெருங்கி விடுவான்.

நைனிகா அஞ்சலிக்கு தலையசைத்து ஜீப்பில் ஏற, “என்ன அஞ்சலி மேடம்! உங்க தலைவர் தன் எக்ஸ் மாமனாரோட இறுதிச் சடங்குக்கு வராம ஓடி ஒளிஞ்சி இருக்கார். கண்டா வரச் சொல்லுங்க…” என்றான் அதேப் புன்னகை மாறாமல்.

இதைக்கேட்டு அஞ்சலியின் முகம் போன போக்கில் நைனிகா சிரித்து விட, “என் க்ளாஸ் என்ன எடுக்கணும்னு வாட்சப்பில் அனுப்பி வைக்கிறேன் அஞ்சலி” என்ற நைனிகாவின் புன்னகைப் பெரிதானது.
 
Very super kalakal
 
வாவ் பிரதாப் கலக்கல் 👌👌👌👌
 
உறையுள் உறையும் உதிரம்...!
(அத்தியாயம் - 19)


பரவாயில்லையே..! இது வரைக்கும் சிக்காம பல தகிடுத்தத்தம் பண்ண மனோகர் இப்ப எல்லா விஷயத்துலயும் ஒரு துருப்பு சீட்டை விடறானே அது ஏன் ? இந்த துருப்பு சீட்டை எல்லாம் தெரிஞ்சே விடறானா ?
இல்லை அவனுக்கு தெரியாமலே லூஸ்ல விட்டதா ?


இப்ப பிரதாப் கிட்ட கிடைச்சு இருக்கிறது தான் உடைஞ்ச நிலவோட பாதியா ? இப்ப அதை திரும்ப அடையறதுக்காத்தான் மனோகர் மறுபடியும் நைனிகாவை தூக்கப் போறானோ..?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
ஓகே, இப்ப எல்லாம் சேர்ந்து மனோகரை கை காட்டினாலும்....

ஏனோ மனோகரா இருக்க வாய்பில்லைனு நினைக்கறேன்.....

மனோகர் ஓட குட்டி நிலா வரை தெரிஞ்சி இருக்கற அஞ்சலி ஏன் இப்படி செய்து இருக்க கூடாது????

அவ மேல தான் இப்ப டவுட்டா இருக்கு.....

ராஜசேகர் கிட்ட அவங்க அப்பா, அம்மா பத்தி கேட்டதும் ஏன் இருண்டு போனது அவர் முகம்????

அப்ப கொலையாளி ஒருத்தர் இல்லையோ?????

வெரி interesting epi
 
எனக்கு மனோகர் கொலைகாரனாக இருக்க மாட்டான்னு தான் தோனுது
 
மனோகர் கில்லரா இருக்க வாய்ப்பு இல்லன்னு தான் தோணுது... க்ளீனா பதறாம கொலை பண்ண தெரிஞ்சவன் இப்படி பதறி ஓடி ஒழிய மாட்டான்...... ஆனா மனோகர் விஷயத்துல ஏதோ இருக்கு......

எனக்கென்னமோ கொலைகாரனை பக்கத்துல வெச்சுக்கிட்டு தேடுற மாதிரி தான் தோணுது......

மனோகர் அன்னைக்கு கொலைய பாத்துட்டு எந்த உணர்வையும் காட்டாம இருந்ததற்க்கான ரீசன் அவனோட பாஸ்ட் லைஃ ஆ இருக்கலாம்...
 
அஞ்சலி கிட்ட ஏதோ மர்மம் இருக்க மாதிரி தெரியுது மனைவி உற்பத்தி எப்படி அஞ்சலிக்கு இவ்வளவு விவரம் தெரிஞ்சிருக்கு.
 
சஸ்பென்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவது செம. துமி.
 

Latest threads

Top Bottom