Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 372
- Reaction score
- 568
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 1
“ சுமதியையும் உன் கூட கூப்பிட்டுக்கோ ராஜா.அவளும் சேர்ந்து தளிகை போடட்டும்.நம்ம வீட்டு பழக்கத்தை அவளும் தெரிஞ்சுக்கணும் தானே….”என்று மகனிடம் சொன்னார் அன்னை நவநீத மணி.
“அப்பாவும் அண்ணியும் இருக்காங்க.நானும் சேர்ந்தா மூணு பேராச்சு. எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.எதுக்கு இன்னொரு ஆள். நீங்க கொஞ்சம் சும்மா இருங்க….” என்றான் மகன் .
“ஏன்டா உன் அண்ணி இருக்கலாம்.கூட அவ தங்கை சுமதி இருந்தா கசக்குதா என்ன…..?என்று பொடி வைத்து பேசினார் அன்னை.
ஆனால் இவர்கள் பேசும் எதையும் கருத்தில் கொள்ளாமல் வீட்டுக்கு வெளியே நின்ற மாமரத்தின் கீழ் அக்காவின் மூன்று வயது மகன் குமரனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் சுமதி.
அன்று புரட்டாசி கடைசி சனி.பெருமாளுக்கு தளிகை அல்லது தளியல் போட்டு குடும்பமாக சாமி கும்பிடுவது தான் மோகனசுந்தரம்,நவநீத மணி தம்பதிகளின் வழக்கம்.
பூஜைக்கு ஏற்றது போல அவுஸ்ரேலியாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான் வரதராஜன்.கடந்த நான்கு வருடங்களாக அங்கே தான் தங்கி வேலை பார்த்து வந்தான் அவன்.
அப்போது படையலுக்கு வேண்டிய வாழை இலைகளுடன் வந்தான் மூத்த மகன் தியாகராஜன். அவன் மனைவி சுகந்தி தான் பூஜை அறையில் இருக்கிறாள்.
பூஜை அறையில் இருக்கும் பெரிய பெருமாள் படத்தை சுவரோடு அணைவாக வைத்தார் மோகனசுந்தரம்.
முல்லை , ரோஜா,மல்லி என்று பலவகை மலர்களையும் துளசி மாலையும் கொண்டு பெருமாள் படத்தை அலங்கரித்திருந்தாள் சுமதி.
அப்போது தோட்டத்தில் பூத்த மனோரஞ்சித மலர்கள் மூன்றை கொண்டு வந்தான் குமரன்.
அந்த மலரை பார்த்ததும் சட்டென்று ஒரு அழகிய சிறுமியின் உருவம் தான் சோமசுந்தரம் குடும்பத்தை சேர்ந்த எல்லோருக்கும் நினைவு வந்தது.
“இது தான் மனோரஞ்சிதம் .இந்த பூ மகாலட்சுமிக்கு ரொம்ப உகந்தது.
இதோட வாசனை ரொம்ப நல்லா இருக்கும்.இதுல இருந்து பதினெட்டு வகையான வாசம் வருமாம் .பச்சை,மஞ்சள் என்று ரெண்டு நிறத்துல பூக்கும்.இரவு நேரத்தில் அந்த மரம் இருக்கிற பக்கம் போனாலே அவ்வளவு வாசனை அடிக்கும்……” என்று கண்களை அசைத்து தலையை ஆட்டியபடி பாவாடை சட்டையுடன் பூஜைக்கு ஓடிவந்த சிறிய பெண்ணின் உருவம் நினைவில் வரவும் சட்டென்று தன்னை நிலைப் படுத்த முடியாமல் தடுமாறினான் வரதராஜன்.
“ இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும். …? சிறுமியிடம் கேட்டான் பெரியவன் தியாகு.
“எங்க பாட்டிதான் எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. பாவம் உங்களுக்கும் வரதனுக்கும் தான் பாட்டி கூட இல்லையே….”என்று பல்வரிசை தெரிய புன்னகைத்தவள் நினைவு தான் வந்தது தியாகராஜனுக்கும்..
பூஜைக்கு தயாராக மஞ்சளில் பிடித்த விநாயகரை வைத்து
குத்து விளக்கு ஏற்றினாள் சுமதி.
மூணு வாழை இலைகளை போட்டு அதில் வாழைப்பழம்,வெற்றிலை, பாக்கு வைத்தார்கள்.பின்னர் சமைத்த புளி சாதத்தை வைத்து சுவாமியின் கிரீடம் மாதிரி பரப்பினான் ராஜன்.
அடுத்து எலுமிச்சை சாதம். பெருமாளின் திரு முகம் பொன்னிறமாக எலுமிச்சை சாதம் கொண்டு உருவானது.
இனி சுவாமியினுடைய திருச்செவிகள். பெருமாளுக்கு அழகே அவருடைய அந்த இரண்டு குண்டலங்கள் தான்.அதனால் இரண்டு பக்கமும் தேங்காய் சாதத்தினால் குண்டலங்கள் உருவாக்கப்பட்டுவிட்டது.
அப்புறம் தயிர் சாதம் .இந்த தயிர் சாதத்தினால் பெருமாளுக்கு நாமம் போடப்பட்டத்து.அதுக்கப்புறம் ஸ்ரீ சூரணம்.அதன் பின் பெருமாளுக்கு கண்களும் புருவங்களும் சிவப்பு பச்சை மிளகாய்களை கொண்டு தயாரானது.அதன் பின் மூக்கு.
அடுத்து சங்கு , சக்கரம் இரண்டும் போடணும் .
சக்கரத்துக்கு சர்க்கரை பொங்கலும் வடையையும் கையில் எடுத்தான் வரதராஜன்.
“இந்த பெருமாள் படையல்ல எனக்கு பிடிச்சதே இந்த சக்கரம் தான்.அதுவும் அந்த நெய் வடியும் பொங்கலும் வடையும் தான் லஞ்ச் இன்னைக்கு.நீயோ உங்க நொண்ணனோ சக்கரத்தில வகை வைக்க கூடாது சொல்லிட்டேன்…..”சட்டென்று காதில் ஒரு குரல் கேட்டதும் தளிகையை நிறுத்தி விட்டான் வரதராஜன்.
“என்ன ராஜன் சங்கு சக்கரம் போடணும்…..எதுக்கு சர்க்கரை பொங்கலை கையில வச்சிட்டு இருக்க….?
“நீங்களும் அண்ணனும் மீதி வேலையை பாருங்க அண்ணி…..”என்று சொல்லி கொண்டு வேகமாக பூஜை அறையில் இருந்து விலகி வந்தான். மொட்டை மாடியை நோக்கி விரைந்தன அவன் கால்கள்.
மொட்டை மாடிக்கு ஓடி வந்தவன் பார்வை முழுவதும் எதிர் திசையை வெறித்தது. புதிதாக எழும்பி நின்ற மாடி வீட்டை தான் பார்த்துக் கொண்டிருந்தன அவன் கண்கள்.
அந்த வீட்டுக்கு முன்புறம் இருந்த மளிகை கடையில் ஒரு சிலர் பொருட்களை வாங்குவது தெரிந்தது அவனுக்கு. கணவன் சண்முகம் வேண்டியவர்களுக்கு பொருட்களை எடுத்துக் கொடுக்க மனைவி தேனாம்பாள் காசு வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு இருப்பது தெரிந்தது.
“எனக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி வரதா.சண்ட போட்டு நான் உன்கிட்ட பேசாம இருந்தாலும்,சின்ன பிள்ளை என்னை மன்னிச்சு நீ தான் வந்து என் கூட பேசணும் சரியா பிராமிஸ் பண்ணு…”சிரித்தபடி தன் முன்னே கை நீட்டியவளை சுற்றித்தான் அவன் எண்ணமெல்லாம் போனது.
தளிகையை இடையில் விட்டு விட்டு மொட்டை மாடிக்கு வந்து நிற்பது மட்டும் இல்லாமல் , மளிகை கடையை பார்த்துக் கொண்டிருக்கும் தம்பியை யோசனையோடு பார்த்தான் மொட்டை மாடிக்கு ஏறி வந்த அண்ணன்.
“பூஜைக்கு நேரமாச்சு அம்மா தேட போறாங்க வா ராஜன்….”தம்பியை அழைத்தான் அண்ணன்.
“ஆஹ்…..வரேன்……”என்று தடுமாறினான் தம்பி.
“தளிகை போடலாம் என்று சொன்னதும் எனக்கு அன்னத்தின் நினைவு தான் வந்தது. என்ன பண்றாளோ தெரியல…..” என்றபடி தம்பியின் முகத்தை உற்றுப் பார்த்தான் அண்ணன் .
“ஏன் எங்க இருக்கா….. ஊர்ல இல்லையா அவ?
“இல்ல அவ இப்ப பல வருஷமா ஊர்ல இல்ல. அவங்க பாட்டி கூட பெங்களூரில் தான் இருக்கிறாள். அடுத்த மாதம் அவங்க புது வீட்டு பங்க்ஷனுக்கு வருவாள் என்று என்று நினைக்கிறேன்…..”
“பெங்களூருக்கா….. ? என்று ஆச்சரியப்பட்டு போனான் வரதராஜன்.
சேலத்தை விட்டு என் ஆயுசுக்கும் பிரிய மாட்டேன் என்றவள் இப்படி பிறந்த மண்ணையும் பெற்றவர்களையும் விட்டுப் போய் பெங்களூரில் இருக்கிறாள் என்ற யோசனை தான் அவனுக்கு.
“நாம இப்படியே இந்த ஓட்டு வீடோட பக்கத்து பக்கத்திலயே இருந்திருக்கலாம்.நீங்க ஏன்டா இப்படி ஊரிலேயே பெரிய வீடு கட்டி பெரிய காசுக்காரங்களா மாறிட்டீங்க?இப்ப பாரு எல்லாமே மாறிப்போச்சு….” அன்று கண்களில் நீர் நிறைய என்னிடம் சண்டை போட்டவள் எப்படி இருக்கிறாளோ என்று அவளை காண ஏங்கியது அவன் உள்ளம்.
“நீங்க யாரும் சண்முகம் மாமா கிட்ட பேசுறது இல்லையா? அண்ணனிடம் கேட்டான் ராஜன்.
“இல்லடா எங்க அம்மாவ பத்தி தான் உனக்கு தெரியுமே.அவங்க இருக்கிற தெருவுக்கே எங்கள போக விடமாட்டாங்க….”
“ஏன் இந்த கோடீஸ்வரி நவநீத மணியும் அந்த தெருவில தான் பத்து வருஷம் ஓட்டு வீட்டில் குடியிருந்தாங்க என்று மறந்து போச்சா உங்கம்மாக்கு?
“ விடுடா அவங்களை திருத்த முடியாது. நாமதான் காலத்துக்கேற்ற போல மாறனும்.வா கீழே போகலாம்….” என்று தம்பியை அழைத்துக்கொண்டு பூஜைக்குப் போனான் அண்ணன்.
தொடரும்......
Last edited:
Next thread





























