Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
100
Reaction score
97
Points
28
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 15

நடராஜன் தன் கையிலிருந்த சில வீடுகளின் புகைப்படங்களையும் அதன் விபரங்களையும் கொண்டு வந்து தன் இரு மகன்களிடமும் கொடுத்து, "உங்களுக்கு இதில் எந்த வீடு பிடிச்சிருக்கோ பாருங்க, அட்வான்ஸ் கொடுத்திடலாம். அப்புறம் மாசம் மாசம் நீங்களே வாடகை கொடுத்துக்கோங்க" என்றார்.

மித்ரன் அதை வாங்கிப் பார்த்தபடியே, "அப்பா... நான் லோன் போட்டு ஒரு புது வீடே வாங்கலாம்னு இருக்கேன்பா" எனச் சொல்ல,

நடராஜனோ இல்லை என மறுப்பாகத் தலையசைத்து, "இப்ப வேண்டாம்டா. முதல்ல வாடகை வீட்ல தனியா இருந்து பாருங்க. குடும்பம்னு பெருகும் பொழுது ஒத்து வரலைன்னா அடுத்த வீடு பார்க்கலாம். அதுவும் கல்யாணம் கட்டினவுடனே இ.எம்.ஐ இல் புது வீட்டு ஆடம்பர வாழ்க்கை நமக்கு வேண்டாம். சுமை இல்லாத நிம்மதிதான் முக்கியம்" என்றார்.

"சரிப்பா… எனக்கு நீங்களே நம்ம வீட்டுக்குக் பக்கத்துலயே ஒரு அடக்கமான வீடா பாருங்க. நான் தினமும் வந்து அம்மாவைப் பார்த்திட்டுப் போற மாதிரி இருக்கணும்" என்று மித்ரன் பாசத்தோடு சொல்ல,

உலக நடப்பு எதிலுமே ஆர்வம் இல்லாதது போல அக்கடா என அமைதியாக உட்கார்ந்திருந்த பெரிய மகனை ஏறிட்டுப் பார்த்து, "சரி... உனக்குடா சகாயன்?" என்றார்.

ஆனந்தியின் உடம்பு சரியில்லாமல் போன பொழுது, சகாயனிடம் கடுமையான கோபத்தில் சண்டை போட்டுக் கொண்டாலும், பெற்ற மனம் பித்து என்பார்களே... அது நடராஜனுக்கும் விதிவிலக்கல்ல. மகன் என்று வரும் பொழுது சில நாட்களிலேயே அவரது கோபம் எல்லாம் பனி போலக் குறைந்து, பழையபடி மகனோடு சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தார் நடராஜன்.

"நான் இங்கேயே, நம்ம வீட்டிலேயே இருக்கலாம்னு பார்க்கிறேன்ப்பா..." என்று சகாயன் அமைதியாகச் சொல்ல, அந்த நேரம் அனைவருக்கும் தேநீர் கொண்டு வந்த மித்ரா கையில் இருந்த தட்டோடு அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.

"என்னடி?" என்று சகாயன் நமுட்டுச் சிரிப்புடன் கேட்க,

தேநீர் கப்புகளை மேசையில் வைத்த மித்ரா கோபத்துடனும் கடுப்புடனும், "தயவுசெய்து கல்யாணம் ஆன உடனே உன் பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு கண்காணாத இடத்துக்குப் போயிடு அண்ணா! இல்லைன்னா நான் அப்பா, அம்மாவைக் கூட்டிக்கிட்டு காசி, ராமேஸ்வரம்னு போயிடுவேன்!" என்றாள்.

"மித்ரா!" என்று நடராஜன் மகளை அதட்டினாலும், அவள் விடாமல்"இவன் சேத்துக்குள் புரளுறது பத்தாதுன்னு எங்களையும் அதுக்குள்ள தள்ளிவிடப் பார்க்கிறான்ப்பா!" என்றாள் குரல் தேய,

நடராஜன் மகளை அமைதிப்படுத்திவிட்டுச் சகாயனைத் பார்த்து, "இது என் வீடு. இங்கே யார் இருக்கணும், இருக்கக்கூடாதுன்னு நான் மட்டும்தான் முடிவு செய்யணும். நீ அவளைக் காதலிச்சுத் தொலைச்சிட்டன்றதுக்காகத்தான் போனால் போகட்டும்னு கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்.

ஆனா, எனக்கு என் பொண்டாட்டியோட நிம்மதியும், என் பொண்ணோட நிம்மதியும்தான் ரொம்ப முக்கியம். அதனால, கல்யாணத்துக்குப் பிறகு நீங்க தனிக் குடித்தனம்தான் போகணும். விருப்பமிருந்தா எங்களைப் பார்க்க வந்துட்டு உடனே கிளம்பிடணும். இங்கே தங்கி, உன் அம்மாவின் முகத்தில் ஒரு சின்ன சுணக்கம் வந்தால் கூட, போ வெளியே!ன்னு உன் முகத்துக்கு நேரா சொல்லிடுவேன்" என்று மிக இறுக்கமான குரலில் கூறினார்.

ஆனந்தி கணவனைப் பரிதாபமாகப் பார்க்க, நடராஜனோ, "ஆனந்தி, நீ என்ன சொன்னாலும் இந்த விஷயத்துல நான் கேட்கப் போறதில்லை. இது முதலில் என் வீடு, அப்புறம் உனக்கு, அதுக்கு அப்புறம்தான் பசங்களுக்கு. நீ இரண்டு நாள் ஆஸ்பத்திரியில படுத்துட்டு வந்ததால மட்டும் நான் இந்த முடிவுக்கு வரல, இதுதான் சரி" என்று தன் இறுதித் தீர்ப்பைச் சொன்னார்.

சகாயனுக்கு தந்தை வீட்டை விட்டுப் போகச் சொன்னதோ, தங்கை கோபப்பட்டு கத்தியதோ எதுவுமே அவனது முகத்தில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தப் பேச்சுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல அத்தனை அமைதியாக அமர்ந்திருந்தான்.

அந்தக் சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைப்பது போல நறுமுகை அவளது தந்தை நெடுமாறனையும் தன் கையோடு கூட்டிக்கொண்டு "ஹாய் அங்கிள்!" என்றபடியே கலகலப்பாக உள்ளே நுழைந்தாள்.

அவளைக் கண்டதும் தன் கோப முகத்தைச் சட்டென்று மாற்றிக்கொண்ட நடராஜன், புன்னகையுடன், "வாம்மா நறுமுகை... வாப்பா நெடுமாறா... வாங்க உட்காருங்க" என்று வீட்டின் தலைவராக அவர்களை வரவேற்றார்.

நறுமுகை வீட்டிற்குள் வந்த உடனே, "எல்லாம் ஓகேயா அத்தை? இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்று ஆனந்தியிடம் விசாரித்தாள்.

ஆனந்தி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டாலும், வீட்டில் அவளை ஒரு சின்ன வேலையைக் கூடச் செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துவிட்டு, அம்மாவை பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் தன் செல்ல மகளின் அன்பை எண்ணி அலுத்துக் கொண்ட ஆனந்தி, "உடம்புக்கு இப்போ நல்லாத்தான் இருக்குடா... ஆனா, இந்த மித்ரா ஒரு வேலையும் செய்ய விட மாட்டேங்குறா. சும்மா படுத்துட்டே இருக்க எனக்கே போர் அடிக்குதுடா!" என்று நறுமுகையிடம் செல்லமாகக் குறைபட்டுக் கொண்டார்.

அவர்களின் பேச்சில் இடையிட்ட நடராஜன், "ஆமா நறுமுகை... இன்னைக்கு உனக்கு வைவா பரிட்சை ஆச்சே... என்னாச்சு?" என்று அன்போடு கேட்டார்.

"அதெல்லாம் சூப்பரா பண்ணிட்டேன் அங்கிள்! அங்கே கேம்பஸ் இன்டர்வியூக்காகச் சில கம்பெனி முதலாளிகளும் வந்திருந்தாங்க. அதுல இரண்டு கம்பெனியில என்னோட வேலைக்கு ஓகே சொல்லிட்டாங்க! அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னேன்... அக்கா கல்யாணம் முதல்ல முடியட்டும், அப்புறம் இதைப்பத்திப் பொறுமையா யோசிப்போம்னு சொல்லிட்டார்" என்றாள் உற்சாகமாக.

"ரொம்ப சந்தோஷம்மா... நல்ல புத்திசாலிப் பொண்ணு நீ!" என்று நடராஜன் பாராட்ட, "சரிம்மா... என்ன இந்தப்பக்கம் திடீர்னு?" என்று கேட்டார்.

"அக்கா அங்கே உட்கார்ந்து படிச்சுட்டே இருக்கா அங்கிள், எனக்கு ஒரே போரடிச்சது. அதான் மிது அக்காவைக் கூட்டிட்டு கொஞ்சம் ஊர் சுத்திட்டு வரலாம்னு அப்பாவையும் கூட்டிக்கிட்டு வந்தேன். மிதுக்கா... வாறீங்களா?" என்று மித்ராவை அழைத்தாள்.

"நான் வாறேன்டா... அம்மாவையும் நம்மகூட வெளியே கொஞ்சம் காற்று வாங்கக் கூட்டிக்கிட்டுப் போகலாம். அவங்களுக்கும் கொஞ்சம் மனசு லேசாகும்" என்று மித்ரா உற்சாகமாகச் சொன்னாள்.

உண்மையில், ஆனந்தியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே கூட்டிச்சென்று அவரது மனதை மாற்ற வேண்டும் என்று மித்ராவும் நறுமுகையும் சேர்ந்து முன்பே போட்ட ரகசியத் திட்டத்தின்படிதான் நறுமுகை இப்போது அங்கே வந்திருந்தாள். ஆனால், வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு அது தெரியக்கூடாது என்பதால், தனக்கு ஏதோ தற்செயலாகப் போர் அடித்து வந்ததைப் போல நறுமுகை சொன்னாள்.

சமையலறையிலிருந்து நெடுமாறனுக்கும், நறுமுகைக்கும் தேநீர் ஊற்றிவந்தமித்ரன், "ஏய்! நீங்க எல்லாரும் போயிட்டா எனக்குப் பசிக்கும்ல? சமைக்க ஆள் இல்லையே!" என்றான்.

நறுமுகை இடுப்பில் கைவைத்து, "அத்தை என்ன உங்களுக்குச் சாப்பாடு செஞ்சு போடவா வீட்ல இருக்காங்க? அதனால நாங்க எல்லாரும் வெளில போறோம். இந்த மூணு ஆம்பளை பிள்ளைகளும் சேர்ந்து சமையல் செய்யுங்க, நாங்க நைட்டு சாப்பிட வாறோம்" என்றவள் நடராஜனிடம் திரும்பி, "அங்கிள்! வயசைக் காரணம் காட்டி தப்பிக்கக் கூடாது. மூணு பேரும் ஆளுக்கு ஒரு டிஷ் செஞ்சு வச்சிருக்கணும். இல்லைன்னா அத்தையைக் கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கே நடையைக் கட்டிடுவேன்!" என்று செல்லமாக நடராஜனையும் மிரட்டிவிட்டு ஆனந்தியையும், யாழினியையும் தன் கையோடு அழைத்துச் சென்றாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த நடராஜன், மெதுவாகச் சகாயனின் பக்கம் திரும்பி, "ஏண்டா சகாயன்... நீ காதலிக்கிறதுக்கு இந்த மாதிரி ஒரு பொண்ணு உனக்குக் கிடைக்காம போச்சே!" என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.

சகாயனோ அவரைத் திடுக்கிட்டுப் போய்ப் பார்க்க, "அப்பா..." என்று மித்ரன் லேசாக இழுக்க, "இல்லைடா மித்ரன்... என்னால முடியலை. அந்தப் பொண்ணைப் பார், இன்னைக்கு அவளுக்கு எவ்வளவு முக்கியமான நாள்? வேலை கிடைச்ச சந்தோஷத்தைக் தன் குடும்பத்தோட தனியே கொண்டாடாம, உன் அம்மா மனசு சரியில்லைன்னு அவங்களை வெளியே கூட்டிட்டுப் போகணும்னு ஓடி வந்திருக்கா. ஆனா இந்தச் சகாயன் தேர்ந்தெடுத்த பெண்ணோ, தன்னால் மாமியார் ஆஸ்பத்திரியில கிடந்தப்ப கூட எட்டிப் பார்க்கலை இதுல கல்யாணத்துக்கு அப்புறம் இங்கேயே இருந்து என் பொண்டாட்டியோட உயிரை எடுக்கப் பார்க்கிறாளா? நான் இருக்குற வரைக்கும் அது நடக்காது" என்று நடராஜன் கோபத்துடன் சொல்ல,

"அப்பா! அவ அடுத்த வீட்டுக்குப் போகப்போற பொண்ணுப்பா... அவளைப் போய் இப்படிப் பேசலாமா?" என்று மித்ரன் தன் தந்தையிடம் பக்குவமாகச் சொன்னான்.

"இல்லைடா மித்ரா... எனக்கு என்னமோ அவ என் வீட்டுக்கே மருமகளா வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு ஓர் அங்கலாய்ப்பா இருக்குடா" என்று நடராஜன் தன் மனக் குமுறலை வெளிப்படுத்தினார்.

தன் அண்ணனுக்கு ரிதன்யாவிற்குப் பதிலாக நறுமுகை மனைவியாக வந்தால் குடும்பமே நந்தவனமாக மாறும் என்பது மித்ரனுக்கும் தெரியும். ஆனால், அந்த ரிதன்யாவோ சகாயனை ஒட்டுண்ணி போல ஒட்டிக்கொண்டு, அவனை விடவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறாளே! அது எப்படிச் சாத்தியமாகும் என்ற எண்ணத்தில், "அப்பா... அப்போ நான் வேணும்னா யாழினி, நறுமுகைன்னு அந்த அக்கா தங்கச்சி இரண்டு பேரையுமே கல்யாணம் கட்டிக்கவாப்பா?" என்று பகிடியாகக் கேட்டான்.

"கொன்னுடுவேன் ராஸ்கல்! பேச்சுக்குக் கூட இனி அப்படிச் சொல்லாதே... பாவம் அந்தப் பொண்ணு!" என்று நடராஜன் மித்ரனை அதட்டினார்.

"சரிப்பா, இப்ப வீட்டைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோமே... என்ன பண்ணலாம்?" என்று மித்ரன் ஞாபகப்படுத்த, அதுவரை அமைதியாக இருந்த சகாயன் குறுக்கிட்டான்.

"கல்யாணம் முடியுற வரைக்கும் இந்த வீட்டைப் பத்தின பேச்சை அப்படியே விட்டுட்டு இருங்கப்பா... வீடெல்லாம் அப்புறம் ஆறுதலாப் பார்த்துக்கலாம்" என்றான் சகாயன் மிகச் சாதாரணமாக.

'இவன் தன் மூளையை எந்தக் கடையில அடகு வச்சிருக்கான்?' என்ற ரீதியில் மித்ரன் தன் அண்ணனை விசித்திரமாகப் பார்த்தான். அவனது பார்வையைப் புரிந்துகொண்ட சகாயன், "அண்ணா சொல்றேன்ல... கேள்டா மித்ரா. உங்கள் சந்தோஷத்துக்குக் கேடு விளைவிக்கிற மாதிரி இந்த அண்ணன் எப்பவாவது ஒரு வேலையைப் பார்ப்பேனா?" என்று தம்பியின் தோளைத் தட்டிக் கேட்டான்.

ரிதன்யா போன்ற ஒரு சுயநலவாதியைக் காதலியாக வைத்துக் கொண்டு, இவன் எதை நம்பி இப்படியெல்லாம் பேசுகிறான் என்ற ரீதியில் நடராஜனும் ஒருவித ஆச்சரியத்துடனும் யோசனையுடனும் மகனைப் பார்த்தார்.

அவர்களின் பார்வைகளுக்குப் பதிலளிப்பது போலச் சகாயன், "என் மனைவி எந்நாளுமே இந்தக் குடும்பத்தைப் பிரிக்கும் பாவத்தைச் செய்ய மாட்டாள்.. செய்யவும் விடமாட்டேன்!" என்றான் அசைக்க முடியாத உறுதியோடு.

'நான் கல்யாணம் பண்ணிட்டு வந்த பிற்பாடு, நீங்களா என்னை வீட்டை விட்டுப் போன்னு சொல்ல மாட்டீங்க அப்பா... நீங்களே எங்களை இங்கேயே இருங்கன்னுதான் சொல்லுவீங்க...' என மனதுக்குள் நினைத்துக் கொண்டவனுக்கு தான் செய்யப்போகும் வேலையால் தந்தையின் நிம்மதி குலையாமல் இருக்கவேண்டும் என்று மனதில் ஒடியது.
 
Previous thread
Next thread
ஹாய் நட்புக்களே..

நேற்று எபிசோட்க்காக காத்திருந்த தோழிகளுக்கு மிகப் பெரிய சொறிப்பா.. என்னால் ஒழுங்காகவே எபி போட முடியுறது இல்லை.

என் மகனுக்கு இப்ப ஐந்து வயது தான் ஆகுது அவர் கிண்டர்கார்ட்டனுக்கு போய்க்கிட்டு இருக்கார். அங்கேயிருந்து ஒரு மாதத்துக்கு இரண்டு தடவையாவது ஏதும் ஒரு நோயை இனாமாக வேண்டிட்டு வந்து தான் கஸ்டப்படுறது பாத்தாதுக்கு எங்களுக்கும் வாரிவழக்கிடுவார். பிறகு எப்படி நான் ஒழுங்காக அப்டேட் போடமுடியும். அவர் வீட்ட நின்றால் லப்டொப்பையே கையில் எடுக்கமுடியாது.

புரிந்துகொள்ளுங்கள்... சொறி
 

Latest threads

Top Bottom