17 – காதலின் ரீங்காரம்

👁️ 943 Views

அத்தியாயம் – 17

மறுநாள் காலை எட்டு மணி ஆகியிருக்க, தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையிலேயே குளித்து கிளம்பி வந்த மயூரன், நேராக மனைவியைத் தேடித்தான் சென்றான்.

அவள் இன்னும் அறை கதவை திறக்காமல் இருக்க, கதவை தட்டி அழைத்தான்.

சில நொடிகளுக்கு பின் கதவு திறக்கப்பட்டது. இன்னும் தூக்கம் முழுதாக களையாத முகத்துடன் கதவை திறந்த மதுமதி, “இன்னும் நீ இங்கிருந்து போகலையா?” ஏளனமான அவனை ஏற இறங்க பார்த்தபடி கேட்டாள்.

இரவு மாமனாரின் லுங்கியை கட்டிக் கொண்டு சமாளித்துக் கொண்டவன், காலையில் குளித்து முதல் நாள் உடுத்தியிருந்த உடையையே உடுத்தி வந்திருந்தான்.

“நீ வராம நான் போக மாட்டேன்னு உனக்குத் தெரியுமே? அப்புறம் என்ன கேள்வி இது?” என்று சாதாரணமாக சொல்லிக் கொண்டே அவளின் தோளை தொட்டு அவளை விலக்கிவிட்டு அறைக்குள் நுழைந்தான் மயூரன்.

“நிஜமாவே உனக்கு சூடு சொரணை எல்லாம் இல்லையா?” என்று கடுப்புடன் கேட்டாள் மதுமதி.

இங்கே இப்படி அடிக்கடி அவள் வருவதால், தன்னுடைய உடைகள் சிலதையும் அங்கே வைத்திருந்த மயூரன், அலமாரியைத் திறந்து ஒரு மாற்றுடையை எடுத்துக் கொண்டே, “உன்னை கல்யாணம் பண்ண எப்ப முடிவெடுத்தேனோ அப்பவே என்னோட சூடு, சொரணை, ரோஷம் எல்லாத்தையும் துடைச்சு போட்டுட்டேன். அதெல்லாம் இருந்திருந்தால், என்னைப் பிடிக்கலைன்னு சொன்ன பொண்ணை கல்யாணம்தான் செய்திருக்க முடியுமா? இல்லை, இந்த ஒரு வருஷமா நீ செய்ற பைத்தியக்காரத்தனத்தை தான் சமாளிச்சிருக்க முடியுமா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் முன்பே தன் முந்தைய நாள் உடையை களைய ஆரம்பித்தான்.

“ஏய்… ச்சீ… கருமம்! கருமம்! பாத்ரூமில் போய் ட்ரெஸை மாத்துடா…” திரும்பி நின்றுகொண்டு கத்தினாள்.

அவனோ கண்டுகொள்ளாமல் நிதானமாக உடையை மாற்றிவிட்டு அவளின் அருகில் வந்து, தோளில் கை வைத்து அவளைத் தன் பக்கம் திருப்பினான்.

அவன் உடை மாற்றாமல் நின்று தன்னை சீண்டுகிறானோ என்று நினைத்து அவள் கண்களை இறுக மூடியிருக்க, அவளின் முகத்தை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தவன், அப்படியே குனிந்து நாசியை இழுத்து அவளின் கழுத்தில் வாசம் பிடித்தான்.

“ஏய்… என்ன பண்ற? போ… போ…” என்று துள்ளி விலகியபடி அவனைப் பார்த்து கடுமையாக முறைத்தாள்.

“புதுசா என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்ற நீ? நேத்து இருந்து உன்கிட்ட இருந்து புதுசா ஒரு வாசனை வருது. காலையில் எழுந்து குளிக்காம கூட பெர்ஃப்யூம் போட்டு சும்மா ஜம்முன்னு மணக்குற?” என்று இலகுவாக கேட்டான்.

“அது ஒன்னும் பெர்ஃப்யூம் இல்லை. தலைவலி தைலம். நைட் போட்டது…”

“தலைவலி தைலம் இந்த வாசனை இருக்காதே?”

“இப்ப எதுக்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்கிற? ஒழுங்கா இங்கிருந்து கிளம்பும் வழியைப் பார்!” என்றாள் சிடுசிடுப்புடன்.

“அப்போ போய் குளிச்சு கிளம்பு! போகலாம்…”

“ஐயோ! உன்னோட எனக்கு பெரிய தொல்லையா இருக்குடா பம்பரக்கட்ட மண்டையா. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தியே வராதா? உன் கூட எனக்கு வாழ பிடிக்கலை. நான் இனி என் அப்பன் வீட்டில்தான் இருப்பேன். நாம டிவோர்ஸ் பண்ணிடலாம்னு உன்கிட்ட ஆறு மாசம் முன்னவே சொன்னேன் தானே? ஆனா அதுக்கு சம்மதிக்காம என்னை போட்டு உயிரை வாங்குற. ஏன்டா… ஏன் இப்படி பண்ற?” என்று ஆத்திரம் பொங்க கேட்டாள்.

“நீயே டிவோர்ஸ் நோட்டீஸ் விட்டால்கூட நான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்னு உனக்கு நானும் ஏற்கெனவே சொல்லிட்டேன். திரும்ப அதைப் பற்றி பேசி உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதே!” என்றான் அலட்சியமாக.

அன்று தந்தைதான் விக்ரமை கொன்றார் என்று தெரிந்ததும், சற்றும் யோசிக்காமல் மயூரனையும் குற்றம் சொன்னவள், அதன்பின் சில நாள்களுக்கு பின் மீண்டும் மதுமதி விவாகரத்து பற்றி அவனிடம் பேசியிருந்தாள்.

“இங்கே பார்… என் அப்பா செய்த தப்புக்கு அவருக்கு நான் இப்படி வாழாம வந்து அவர் வீட்டில் உட்கார்ந்துதான் தண்டனை கொடுக்க முடியும். நான் செத்து போனால் கூட, நாலு நாளைக்கு கவலைப்பட்டுட்டு ஐஞ்சாவது நாள் அடுத்த வேலையை பார்க்க போய்டுவார் அந்த மனுஷன். அதனால்தான் சாவு முடிவை எடுக்காமல் இருக்கேன். இல்லைனா, எப்பவோ செத்துப் போயிருப்பேன். ஒரு உயிர் என்னால் போயிருக்கு. அந்த உயிரை எடுத்தவருக்கு நானே தண்டனை கொடுத்தாகணும். நான் வாழாவெட்டியா அவர் கண்முன் நடமாடினால் தான், ஏன்டா… ஒருத்தனை சாகடிச்சோம், இவளுக்கு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி அவன் வாழ்க்கையையும் கெடுத்தோம்னு நினைச்சு தினம் தினம் வெந்து நொந்து போவார். அதுக்காகத்தான் உன்னை பிரிய நினைக்கிறேன். அதுதான் உனக்கும் நல்லது! என்னை என் போக்கில் விட்டுட்டு ஓடிப் போய்டு!” என்று சொல்லியிருந்தாள்.

அனைத்தையும் கேட்டுவிட்டு, விவாகரத்து கொடுக்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டான் மயூரன். அந்தக் கோபம்தான் அவளுக்கு இப்போது வரை அவன் மீது அதிகமாக இருந்தது.

அதிலும் அவளை பெற்றவர் வீட்டில் தங்க விடாமல் அவன் தடுப்பது, அவளின் தந்தைக்கு அவன் ஆதரவாக இருக்கிறான் என அவளை எண்ண வைக்க, அந்த ஆத்திரத்தில் அவனை அவமானப்படுத்துவது போலவும், இழிவாகவும் பேச ஆரம்பித்தாள்.

அதையும் அவன் பொறுத்துப் போக, அதனால் அவளின் கோபம் அதிகரித்ததே தவிர, குறையவே இல்லை.

இப்போதும் தன் கட்டிலில் சென்று அமர்ந்து பிடிவாதமாக அவளை அழைத்துச் செல்ல காத்திருக்கும் அவனை என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“என்னால் உனக்கு எந்தப் பயனுமே இல்லை. அப்புறமும் ஏன் இப்படிப் பண்ற?” என்று ஆயாசமாக கேட்டாள் மதுமதி.

“நீ இப்ப செய்துட்டு இருக்கியே ஒரு முட்டாள்தனம்… அதனால் உனக்கும் கூடத்தான் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆனாலும், வீம்பு பிடிச்சு போய் இப்படி வந்து உங்க அப்பா வீட்டில் நீ உட்கார்ந்துக்கலை? அதுபோலத்தான் நான் செய்வதும்…” என்று கட்டிலில் பின்னால் கைகளை ஊன்றி அமர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டே சொன்னான் மயூரன்.

“நான் செய்வது முட்டாள்தனமா?” என்று அவள் சுறுசுறுவென கோபம் ஏற கேட்க,

“பின்ன இல்லையா? உங்கப்பாவுக்கு தண்டனை கொடுக்கணும்னு நினைச்சா… தகுந்த ஆதாரங்களை திரட்டி அவரை ஜெயிலுக்கு அனுப்பி செத்துப் போனவன் இறப்புக்கு நியாயம் செய்திருக்கணும். அதை விட்டு அவரை நீயே பழி வாங்குறதா நினைச்சுக்கிட்டு இங்கே வந்து உட்கார்ந்துக்கிற. உனக்கு பழிவாங்கக் கூட தெரியலை தங்கப்பொண்ணே! பிஞ்சு மனசு உனக்கு! கொடூரமா யோசிக்க கூட தெரியலை. உன்னோட இயலாமையை, கோபத்தை காட்டத் தெரியாம சின்னப் பிள்ளைத்தனமா செய்துட்டு இருக்க…” என்றான் அவளை இரக்கமாக பார்த்து.

“என்ன என்னை நக்கல் செய்றீயா?” என்று அவள் முகம் சிவக்க கேட்க, அவனோ அலட்சியமாக தோளை குலுக்கினான்.

“ஜெயிலில் போய் அவர் உட்கார்ந்துகிட்டார்னா அவர் வேதனைப் படுவதை நான் எப்படி பார்க்க முடியும்? நான் இங்கே வந்தாலே அவர் முகத்தில் ஒரு மாதிரி குற்றவுணர்வு வந்து போகுது. இவள் இங்கேயே இருந்துடுவாளோன்னு தவிக்கிறார். அவர் அப்படி என்னை பார்த்து துடிக்கிறதுதான் நான் கொடுக்கிற சரியான தண்டனையா தெரியுது. ஆனா, அவரை முழுசா அந்தத் தண்டனையை அனுபவிக்க விடாம, நீதான் குறுக்கே புகுந்து தடுக்குற. நீ வந்ததும் எல்லாம் சரியாகிடும்னு அவர் முகத்தில் நிம்மதி வருது. என் பழிவாங்கும் திட்டத்தில் எல்லாம் ஓட்டை இல்லை. அதைத் தடுக்கிற உன்னால்தான் என் திட்டம் எல்லாம் வீணாகுது…” என்று எரிச்சல்பட்டவள், “நீ என் வழியில் குறுக்கே வராமல் இருந்தாலே என்ன திட்டம் நிறைவேறிடும்…” என்றாள் கண்கள் பளபளக்க.

கட்டிலிலிருந்து எழுந்து அவளின் அருகில் வந்தவன், “ஸாரிடி தங்கப்பொண்ணே! உனக்கு உன் அப்பாவை பழிவாங்கணும்! ஆனா, எனக்கு நீ வேணும்! உனக்கு ஒரு விஷயம் நடக்கணும்னு எப்படிப் பிடிவாதமா இருக்கயோ… அப்படித்தான் நானும் இந்த விஷயத்தில் பிடிவாதமா இருக்கேன். அப்படி எல்லாம் உன்னை என்னால் விட்டுக்கொடுத்துட முடியாது!” என்றான் அழுத்தமாக.

“முட்டாள்! முட்டாள்! பைத்தியக்காரா… நீ எனக்கு கட்டிய தாலியை கழட்டி என் அப்பன் முன்னாடியே நான் உன் முகத்தில் வீசி எறிந்தும், இன்னும் உன்னால் எப்படி இப்படி லூசுத்தனமா உளற முடியுது?” என்று வெறுப்புடன் கேட்டாள்.

அன்றைய நாளை நினைத்துப் பார்த்த மயூரனின் உடல் எஃகிரும்பாய் இறுகியது.

விக்ரமை தான்தான் கொன்றதாக ஜெயராமன் ஒப்புக்கொண்ட அன்றே, வெறிவந்தவள் போல ஒரு ஆட்டம் ஆடியிருந்தாள் மதுமதி.

“நான் நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு வாழணும்தானே என் விக்ரமை கொன்னீங்க? ஒருத்தனை கொன்னு அந்த சமாதியில் நடந்த இந்தக் கல்யாணத்தில் நான் வாழவே மாட்டேன். இப்பவரை நான் சுத்தமான உங்க பொண்ணாத்தான் இருக்கேன். இனியும் அப்படித்தான் இருப்பேன். இனி நீங்க எனக்குக் கல்யாணம் செய்து வச்ச இந்த மயூரன் கூட வாழ மாட்டேன்…” என்றவள் அப்போதே, அவரின் கண்ணின் முன்பே மயூரன் கட்டிய தாலியை கழற்றி அவனின் முகத்தில் விட்டெறிந்திருந்தாள் மதுமதி.

ஜெயராமன் அதிர்ந்து ஆடிப்போனார் என்றால், மயூரன் உயிரோடு மரித்தது போல் உயிர்ப்பற்றுதான் போனான்.

ஆனால், அவள் தொடர்ந்து இங்கேயே வாழாவெட்டியாக இருக்கப் போவதாக சொல்ல, அதில் சுதாரித்துக் கொண்டான் மயூரன்.

“தாலியை கழட்டிட்டால் நடந்த கல்யாணம் இல்லைன்னு ஆகிருமா? இல்லை, இனி நீ என் பொண்டாட்டி இல்லைன்னு நான் போயிருவேனா? இப்ப எல்லாம் யார் தாலியை போட்டுட்டு சுத்துறா? நிறைய பேர் கழட்டி வச்சுட்டுதான் வேலைக்கு கூட போறாங்க. அப்படி நினைச்சுக்கிட்டு போறேன். நமக்கு மேரேஜ் நடந்த அன்னைக்கே அதை நான் முறைப்படி ரிஜிஸ்டர் செய்திருக்கேன். நீ சட்டப்படி என் பொண்டாட்டி! தாலியை கழட்டியதற்காக எல்லாம் நான் உன்னை விட்டு போயிருவேன், நீ இங்கேயே இருந்துடலாம்னு கனவு காணாதே!” என்று அதட்டி அவளைத் தன்னுடன் அழைத்தும் சென்றிருந்தான்.

அவனின் அந்தப் பிடிவாதம்தான் அவளின் கோபத்தை இன்னும் இன்னும் கிளறிவிட்டுக் கொண்டிருந்தது.

ஆனால், அவன் சிறிது விட்டுப் பிடிக்க நினைத்தால் கூட, அவள் பிடிக்க முடியாத நிலைக்கு சென்றுவிடுவாள் என்று அவனுக்கு நன்றாக புரிந்தே இருந்தது. அதனாலே இழுத்துப் பிடித்தான்.

“சரியான திமிர்ப் பிடிச்சவன்டா நீ!” என்றாள் மதுமதி.

“அதை நீ சொல்ற பார்த்தியா… அதுதான் பெரிய காமெடி!” என்று அவன் அவளைச் சீண்டிக் கொண்டிருந்த போது, கதவை தட்டி அவர்களை சாப்பிட அழைத்தார் திலகா.

“இதோ வர்றோம் அத்தை…” என்று குரல் கொடுத்தவன், “போடி அழுக்கு மூட்டை பொண்டாட்டி. போய் குளிச்சுட்டு சுத்தபத்தமா வா… நாம நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்…” என்று மனைவியை விரட்டினான்.

“நான் ஆபிஸ் போகணும்…” என்று அவள் வெடுக்கென்று சொல்ல,

“நான் டிராப் பண்றேன்…” என்றான் இலகுவாக.

அவள் எந்தப் பக்கம் சென்றாலும் அணைக்கட்டி தடுப்பவனை பார்த்து அவளால் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.

அவளின் எந்த ஆர்ப்பாட்டமும் மயூரனை அசைப்பதே இல்லை. தொடர் போராட்டத்தால் அவனின் மனம் சற்று தளர்ந்தாலும், அவன் தன் உறுதியை விடாமல் தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com