👁️ 1648 Views
அத்தியாயம் – 1
காலை ஐந்தரை மணியளவில் கைப்பேசியில் ஒலித்த அலாரச் சத்தத்தில் விழித்துக்கொண்டாள் மஞ்சரி.
மெல்ல புரண்டு எழுந்து அமர்ந்தவள், டீப்பாய் மேலிருந்த கைப்பேசியை எடுத்து அலாரச் சத்தத்தை அமைதியாக்கிவிட்டு, சில நொடிகள் கண்களை மூடி அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவளுக்கான வேலைகள் வரிசையாகக் காத்திருப்பது நினைவில் வர, கண்களைத் திறந்து படுக்கையைப் பார்த்தாள்.
கட்டிலில் ஒருக்களித்துப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள் மூன்று வயதை தொட காத்திருக்கும் மகள் தியா.
இளநகை உதட்டில் நெளிய மகளின் தலையை மிருதுவாக வருடிவிட்ட மஞ்சரியின் பார்வை மகளைத் தாண்டி படுக்கையைப் பார்க்க, அங்கிருந்த வெறுமை அவளைத் தாக்கியது.
திரும்பி குளியலறை கதவை பார்த்தாள். வெளியே தாழ் போடப்பட்டிருந்தது.
“ம்ப்ச்” என்றவளின் முகத்தில் விரக்தியும், சலிப்பும் விரவி கிடந்தது.
தினமும் நடக்கும் ஒன்றுதான் என்றாலும், அந்தத் தொடர் ஏமாற்றம் வலிக்கவே செய்தது.
மனத்தின் கனம் உடலையும் அழுத்தியது. ஆனாலும், அதற்கு மேல் படுக்கையில் இருக்க முடியாது என்பதால் எழுந்து ஓய்வறைக்குச் சென்றுவிட்டு வந்தவள், நேராகச் சமையல் அறைக்குச் சென்று உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
குக்கரில் இரண்டாவது விசில் அடிக்க ஆரம்பித்தபோது, “பால் வந்திருச்சா மஞ்சரி?” என்று சமையலறை வாசலிலிருந்து கேட்டார் அவளின் மாமியார் வனஜா.
“வந்திருக்கும் அத்தை. நான் போய் எடுத்துட்டு வர்றேன்…” அவரைத் தாண்டி சென்று வெளிவாயிலுக்கு விரைந்தாள்.
“சீக்கிரம் காப்பியை போடு. இவ்வளவு நேரம் என்ன செய்த? காப்பிக் குடிக்காம வேலையே ஓடாது எனக்கு. தெரிஞ்சும் இவ்வளவு நேரம் காப்பிப் போடலை நீ…” என்று சிடுசிடுத்துக் கொண்டே நகர்ந்தார் வனஜா.
அனைத்தும் காதில் விழுந்தாலும், எதுவும் திருப்பிப் பேசாமல், வெளியே இருந்த பையில் கிடந்த பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வந்து சமையலறைக்குச் சென்றாள்.
எப்போதும் மாமியார் வந்து கேட்பதற்கு முன்பே காஃபியைப் போட்டு கொடுத்துவிடுவாள். இன்று ஏனோ சற்றுத் தாமதமாகிவிட்டது.
பாலை அவசரமாகக் காய்ச்சியவள், புதிய டிகாஷன் விட்டு காஃபி போட்டு எடுத்துச் சென்று கூடத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த மாமியாரிடம் கொடுத்தாள்.
“உன் மாமா குளிக்கப் போயிருக்கார். இப்ப வந்துருவார். அவருக்காவது லேட் பண்ணாம காப்பியை கொடு…” என்று அதட்டலாகச் சொன்னவர், சூடாக இருந்த காஃபியை பருக ஆரம்பித்தார்.
அவரிடம் தலையை அசைத்துவிட்டு மீண்டும் சமையலறைக்கு ஓடினாள்.
“ம்மா… எனக்கும் காஃபி…” என்று தூக்கம் முழுவதும் நீங்காத குரல் ஒன்று சமையலறை வரை கேட்டது.
முதல் நாள் மாலை ஆட்டி வைத்த மாவிலிருந்து சிறிது மட்டும் தனியாக ஒரு கிணத்தில் எடுத்து உப்பு போட்டு கரைத்துக் கொண்டிருந்த மஞ்சரி, அந்த வேலையை அப்படியே நிறுத்தினாள்.
“ஏய் மஞ்சரி… குட்டிக்குக் காப்பிக் கொண்டு வா…” என்று அவளின் மாமியார் வனஜா அதே நேரம் அவள் நினைத்தது போலவே குரல் கொடுக்க, இன்னொரு கப் காஃபியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
அந்த வீட்டின் கடைக்குட்டி கீதா, வனஜாவின் தோளில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
“ஏன்டி, தூக்கம் வந்தா இன்னும் கொஞ்ச நேரம் போய்ப் படுத்து தூங்க வேண்டியது தானே? என் தோளில் வந்து தொங்கிட்டு இருக்க?” வனஜா மகளைக் கடிந்து கொள்வது போலக் கொஞ்சிக்கொண்டிருந்தார்.
“இன்னைக்குக் காலேஜூக்கு சேலை கட்டிட்டு வரச் சொல்லியிருக்காங்கனு சொன்னேமா. இப்பவே போய் ரெடியாக ஆரம்பிச்சாத்தான் சரியா இருக்கும். அதான் இன்னைக்குச் சீக்கிரமே எழுந்துட்டேன். அந்தச் சேலையை என்னன்னு கட்டிக்கப் போறேனோ…” என்று புலம்பிய கீதா, பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் பிரிவில் இரண்டாம் வருடம் முடிக்கப் போகிறாள்.
“கீதா, காஃபி…” என்று மஞ்சரி வந்து நீட்ட, அன்னையின் தோளிலிருந்து நிமிர்ந்து, எதிரே நின்றிருந்தவளின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல், காஃபி டம்ளரை வாங்கிக் கொண்டாள் கீதா.
அவளின் செயல் மஞ்சரிக்கு பழகிப் போனதுதான். கீதா மட்டும் இல்லை, அந்த வீட்டில் வனஜா தவிர, மற்றவர்கள் மஞ்சரியின் முகத்தைக் கூடச் சரியாக நிமிர்ந்து பார்ப்பதில்லை. அதில் மஞ்சரிக்கு தாலிக் கட்டியவனும் கூட அடக்கம்!
அந்தத் தாலி கட்டியவனைத்தான் அப்போது இருந்து மனத்தால் தேடிக் கொண்டிருந்தாள்.
‘காஃபி குடிக்கக் கூட வரலையே. இன்னுமா எழுந்துக்கலை? மாடியில் படுத்திருப்பாரா? இல்லை, வேலையா வெளியே எதுவும் போயிட்டாரா?’ என்று அவனைப் பற்றிதான் அவளின் மனத்தில் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனால், அவள் அவனை நினைப்பது போல, அவன் அவளை நினைத்திருப்பானா? என்ற கேள்விக்குப் பதில் என்னவோ, இப்போதைக்குப் பூஜ்யம் தான்.
அவனே அவளை நினைக்காத போது, அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு மட்டும் எப்படி அவள் பொருட்டாகத் தெரிவாள்?
அந்த எண்ணம் தந்த ஆதங்கம், பெருமூச்சாக அவளிடமிருந்து கிளம்பியது.
மஞ்சரி தொடர்ந்து சமையல் வேலையைக் கவனிக்க, “உன் மாமா குளிச்சிட்டு வந்துட்டார். அவருக்குக் காப்பி எடுத்துட்டு போறேன்…” என்று வந்து எடுத்துக் போனார் வனஜா . அவரின் கணவருக்குக் கொடுக்க வனஜா மருமகளை அழைக்க மாட்டார்.
அவள் போட்டு வைக்கும் காஃபியோ, செய்து வைக்கும் உணவோ எதுவாக இருந்தாலும், வனஜா தான் கணவருக்குக் கொடுப்பார்.
அடுத்ததாக அவரின் இன்னொரு மகனான ரவிசங்கரின் குரல் கூடத்தில் கேட்க, மீண்டும் மஞ்சரிக்கு மாமியாரிடமிருந்து அழைப்பு வந்தது.
“இப்ப எதுக்கு அவங்களைக் கூப்பிடுறீங்க? எனக்கு வேணும்னா நானே போய் எடுத்துப்பேன்…” என்ற ரவிசங்கரின் மறுப்பு குரலும் வந்தது. சில நொடிகளில் சமையலறைக்கு வந்த ரவிசங்கர், உள்ளே நின்றிருந்த மஞ்சரியை கண்டுகொள்ளாமல், அவள் போட்டு வைத்திருந்த காஃபியை மட்டும் எடுத்து சென்றுவிட்டான்.
எல்லாமே மஞ்சரி அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தது முதல் நிகழும் நடைமுறைதான் என்பதால், தன் இயல்பு போல வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நொடிகளில் அவர்களின் அறையில் மகள் சிணுங்கும் சத்தம் கேட்க, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு, தங்கள் அறைக்கு விரைந்தாள்.
கூடத்தில் இருந்த அனைவரின் பார்வையும் ஒன்று போல் அவளின் பக்கம் சென்று, அடுத்த நொடியே மீண்டும் திரும்பிக் கொண்டது.
மஞ்சரி அறைக்குச் சென்ற போது கட்டிலில் அமர்ந்து கண்களைக் கையால் கசக்கியபடி சிணுங்கிக் கொண்டிருந்தாள் தியா.
“ஏன்டா தியா பாப்பா அழறீங்க? அம்மா இங்கேதான் இருக்கேன். வாங்க, முகம் கழுவிட்டு வரலாம்…” என்று மகளைத் தூக்கிக் கொண்டாள்.
அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்ட தியா, “அம்மாவ காணோம்… அம்மாவ தேதுனேனே… எங்க போன மா?” என்று அன்னையின் கழுத்தை கைகளால் கட்டிக்கொண்டு அவளின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு சலுகையாய் மழலையில் கேட்டாள்.
மகள் பேசியதை மஞ்சரியால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், வேறு யாரும் கேட்டால், என்ன பேசுகிறாள்? புரியவில்லையே என்றுவிடுவார்கள். இன்னும் மூன்று வயது ஆகவில்லை என்பதால், குழந்தை இப்போதுதான் பேச பழகிக் கொண்டிருந்தாள்.
மகளின் பேச்சை புரிந்துகொண்டு, “அம்மா இந்த நேரம் கிட்சனில் தானே இருப்பேன். தியா பாப்பாவுக்குத் தெரியுமே! அப்புறம் ஏனாம் அழுகை? சும்மா எதுக்கு எடுத்தாலும் அழக்கூடாது தியா பாப்பா. அம்மா ரூமில் இல்லைனா, அழாம சமத்தா நீயே எழுந்து பாத்ரூம் போய்ட்டு அம்மாவை தேடி கிட்சனுக்கு வந்திடணும், சரியா?” என்று மகளுக்குப் பொறுமையாகப் புரிய வைக்க முயன்றாள் மஞ்சரி.
“ம்ம்… ம்ம்…” எனத் தலையை ஆட்டிய மகளைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள் மஞ்சரி.

தினமும் மகளுக்கு இதைச் சொல்லித் தருகிறாள் தான். சொல்லும் போது தலையை ஆட்டி கேட்டு கொண்டுவிட்டு மறுநாளே… அதை மறந்து, எப்போதும்போல் படுக்கையில் அமர்ந்து சிணுங்கிக் கொண்டிருப்பாள் மகள் என நன்றாகவே தெரியும்.
அவளின் அந்தப் பழக்கத்தை மாற்ற மஞ்சரி எடுத்த முயற்சி வீணாகிக் கொண்டிருந்தது. ஆனாலும், தன் முயற்சியைக் கைவிடாமல் மகளுக்குச் சொல்லித் தருகிறாள் மஞ்சரி.
மகளைக் குளியலறை அழைத்துச் சென்று, காலைக்கடன்களை முடிக்க வைத்து, சுத்தம் செய்து அழைத்து வந்த மஞ்சரி மகளைக் கட்டிலில் அமர வைத்து அவளின் ஈர முகத்தைத் துடைத்துவிட்டு, கண்ணைத் தொட்ட தலைமுடியை ஒதுக்கிவிட்டாள்.
“ம்மா, பவுதர்…” என்று தியா கேட்க,
“பவுடர் அப்புறமா குளிச்சுட்டு அடிப்போம்டா பாப்பா. இப்ப எங்க குட்டிப் பாப்பா வயித்துக்குப் பசிக்குதாம். நாம பால் குடிக்கப் போகலாம், வாங்க!” என்று மகளைக் கொஞ்சி அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ம்மா… நானு… நானு…” என்று குதித்த தியா, அன்னையைக் குனிய சொல்லி அவளின் கன்னத்தில் தன் குட்டி உதடுகளைப் பதித்தாள்.
மகளின் இதமான இதழ் ஒற்றலை ரசித்தபடி, அவளைத் தூக்கி கொண்டு அறையை விட்டு வெளியே செல்ல சென்றபோது, “ஓசூர் பஸ்ஸிலிருந்து வந்த பூவை எல்லாம் எடுத்து வந்து நம்ம ஆபிஸ் ரூமில் வச்சுட்டேன்ங்க அண்ணே. குளிச்சிட்டு கிளம்பி வந்து மண்டபத்துக்கு எடுத்துட்டு போய் வேலையை ஆரம்பிச்சிடுறேன்…” என்று அலைபேசியில் பேசிக்கொண்டே அறைக்குள் வந்தான் அவளின் கணவன் சசிதரன்.
அவனைக் கண்டதும் அவளின் கால்கள் அப்படியே அசையாமல் நின்றன. அவளின் கண்கள் அவனின் முகத்தை மொய்த்தன. தியாவும் கூடத் தந்தையைப் பார்த்து, “ம்மா… ப்பா…” என்று உற்சாகமாகக் கூவினாள்.

ஆனால், தன் மனைவி, மகள் இருவரையும் கண்டுகொள்ளாமல் அலைபேசியில் பேசிக் கொண்டே கடந்து சென்று, அங்கே அறையிலிருந்த கொடியில் தொங்கி கொண்டிருந்த ஒரு துண்டை எடுத்துத் தோளில் போட்டுகொண்டு குளியலறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டான் சசிதரன்.
மூடிய கதவையே இமைக்காமல் பார்த்தாள் மஞ்சரி.
சாற்றப்பட்டது மரக்கதவு மட்டுமல்ல, அவனின் மனக்கதவும்தான் என்ற உண்மையை அவளின் முகத்தில் அறைந்து சொன்னது.
‘ஏற்கெனவே தெரிந்ததை இப்ப எதுக்குடி மஞ்சு நினைச்சு கவலைப்படுற?’ என்று மனசாட்சி கொட்டு வைக்க, இயலாமை கலந்த பெருமூச்சை வெளியே விட்டு, மனத்தின் வெம்மையைத் தணிக்க முயன்றபடி மகளுடன் அறையிலிருந்து வெளியேறினாள் மஞ்சரி.
அவன் பேசியதை வைத்து வேலையாகத்தான் வெளியே சென்றுவிட்டு வந்திருக்கிறான் என அவளாகவே புரிந்துகொண்டாள்.
©nandhavanamnovels.com