👁️ 1649 Views
“இவ்வளவு நேரம் உள்ளே என்ன செய்த? எல்லோருக்கும் சாப்பாட்டுக்கு நேரமாகிட்டு இருக்கு. சீக்கிரம் வேலையை முடி…” என்று அவளைக் கண்டதும் அதட்டினார் வனஜா.
“இதோ முடிச்சிடுறேன் அத்தை…” என்று முனகி கொண்டே சமையலறையை நோக்கி விரைந்தாள் மஞ்சரி.
“இன்னைக்குக் காப்பியில் சுகர் கூடிப் போச்சு. என்ன எனக்குச் சுகர் வரட்டும்னு நினைக்கிறாளா உன் மருமக? அளவா போட சொல்லு. எனக்குச் சுகர் வர வச்சு அவளோட வஞ்சத்தைக் காட்டுற ஐடியா எதுவும் இருந்தால் கிளம்பி அவ ஆத்தா வீட்டுக்கு போயிட சொல்லு…”
அவளின் முதுகில் வந்து மோதியது சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த மாமனார் குணாளனின் கடுமையாகக் குரல்.
நின்ற இடத்தில் இருந்தே அப்படியே திரும்பி பார்த்தாள் மஞ்சரி.
குணாளன் நிமிர்ந்தே பார்க்கவில்லை. அவரின் பார்வை மொத்தமும் செய்தித்தாளின் மீதே இருந்தது. அவரின் அருகில் அமர்ந்திருந்த வனஜா தான் மருமகளைக் கண்களை உருட்டி முறைத்துக்கொண்டிருந்தார்.
ரவிசங்கரும், கீதாவும் இப்போது அங்கே இல்லை.
“மூனு வருஷமா செய்ற வேலைதானே? உன் மாமாவுக்கு எவ்வளவு சுகர் சேர்க்கணும்னு தெரியாது? என்ன உன் மாமா சொல்ற மாதிரி உனக்கு அப்படி எதுவும் பழிவாங்குற ஐடியா இருக்கா?” என்று கொடூர குரலில் கேட்டார் வனஜா.
மஞ்சரியின் கண்கள் சட்டென்று கலங்கிப் போயிற்று.
“அப்…அப்படி எல்லாம் எதுவும் இல்லை அத்தை. எப்படியோ கவனம் இல்லாம…” என்று தயக்கத்துடன் பதிலுரைத்தாள்.
“அப்படி என்ன ஏதோ கவனம்? பொம்பளைனா அடக்கம் ஒடுக்கம் இருக்கணும். ஒழுக்கம் இருக்கணும். செய்ற வேலையில் கவனம் வைக்காம கண்டதுக்கும் மனசை அலையவிட்டா இப்படித்தான் ஆகும்…” என்று இப்போதும் அவளைப் பார்க்காமல் கூட, கொடுமையான வார்த்தைகளைக் கொட்டினார் குணாளன்.
மஞ்சரியின் உடலோடு, மனதும் தகித்துப் போனது. நிற்க வைத்து சாட்டையால் அடித்தது போலச் சுரீரென வலிக்க, அவ்வலியின் பிரதிபலிப்பாய் அவளின் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது.
“க்கும்… ஒழுக்கத்தைப் பத்தி எல்லாம் உன் மருமககிட்ட பேசுறேன் பாரு…” என்று தொடர்ந்து நக்கலான நஞ்சை கக்கினார் குணாளன்.
மஞ்சரியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் சரசரவென இறங்கி அவள் கன்னத்தை நனைத்தது.
தினமொரு முறையாவது அவளைச் சுடும் வார்த்தைகள்தான். ஆனால், சூட்டின் வடு குறைவதற்கு முன் அதன் மீதே மீண்டும் விழும் சூடு மரத்துப் போவதற்கு பதில் அவளின் இரணத்தை அதிகரிக்கவே செய்தது.
அவளின் இரணத்தில் மயிலிறகால் மருந்திடுவது போல, மகளின் பிஞ்சு விரல்கள் அவளின் கண்களை மிருதுவாகத் துடைத்துவிட்டன.
அப்போதுதான் மகளின் முன் அழுதுவிட்டோம் என்பது உறைக்க, வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மஞ்சரி.
“அம்மா கண்ணுல தூசிடா பாப்பா…” என்று மகளிடம் சமாளிப்பாகச் சொல்லிவைத்தாள். ஆனால், குழந்தையோ தனக்கே காரணம் தெரியும் என்பது போல், தன் குட்டி கண்களை உருட்டி தாத்தாவை முறைத்துக் கொண்டிருந்தது. அவர்தான் அன்னையை திட்டியது என்று புரிந்தது அந்தக் குழந்தைக்கு.
“அடியேய் குட்டி, என்ன கண்ணை உருட்டுற? என்ன உன் அம்மா சொல்லிக் கொடுத்தாளா? கண்ணு முழியைத் தோண்டிடுவேன்…” குழந்தை தன் கணவரை முறைப்பதை கண்டு, பெயர்த்தி என்றும் பாராமல் பெரிய மனித தோரணையில் வனஜா விரலை நீட்டி மிரட்ட, குழந்தையோ உதட்டை பிதுக்கி அழ தயாரானாள்.
மனைவியின் குரலில் செய்தித்தாளை இறக்கி, பெயர்த்தியை ஒரு பார்வை பார்த்த குணாளன், உடனே அடுத்தப் பக்க தாளை புரட்டுவது போலத் திரும்பிக் கொண்டே, “ஆத்தாளை போலத்தானே பிள்ளை இருக்கும். உருவத்திலும் சரி, குணத்திலும் சரி, அப்படியே ஆத்தா போல வருது பிள்ளை. இரண்டையும் போகச் சொல்லு அந்தப்பக்கம். காலங்காத்தாலேயே ஆத்தாலும், மகளும் அழுது ஒப்பாரி வச்சுக்கிட்டு. ச்சை… இதுங்க முகத்தில் வேற இன்னைக்கு முழிச்சுத் தொலைச்சுட்டேன். இன்னைக்கு நாள் எப்படி இருக்கப் போகுதோ…” என்று கரித்துக் கொட்டினார்.
அதற்கு மேல் அங்கே நிற்காமல் மகளுடன் விரைந்து சமையலறைக்குச் சென்றாள் மஞ்சரி. உள்ளே சென்றவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. ஆனால், மகளின் முன் அழுது விடக்கூடாது என்று தன்னை அடக்கிக் கொண்டாள்.
மாமனார் தன்னைப் பேசியதை கூட அவளால் பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், தன் மகளையும் பேசுவதைத்தான் அவளால் தாள முடியவில்லை.
அதிலும் உருவத்தை வைத்து பேசியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மஞ்சரி சற்று பூசிய தேகமுடையவள். உழைப்புக்கு அஞ்சாதவள்தான் மஞ்சரி. சொல்லப் போனால் அந்த வீட்டில் அத்தனை வேலைகளும் அவள்தான் பார்க்கிறாள். மாமியார், நாத்தனார் என இரண்டு பெண்கள் இருந்தாலும், வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்வதில்லை.
வனஜாவாவது அவ்வப்போது சிறுசிறு வேலைகள் பார்ப்பார். வீட்டை பெருக்கி சுத்தம் செய்வார். துணிகளை மடித்து வைப்பார்.
கீதாவோ சிறு துரும்பை கூட அசைக்க மாட்டாள். குடிக்கும் காஃபியில் இருந்து, சாப்பிடும் சாப்பாடு வரை எல்லாம் அவளின் கையில் கொடுக்க வேண்டும். குடித்த காஃபி டம்ளரையோ, சாப்பிட்ட தட்டையோ கூடக் கழுவ மாட்டாள். அனைத்தும் பாத்திரம் கழுவும் இடத்தில் குவியும். அத்தனையும் மஞ்சரிதான் சுத்தம் செய்வாள். விடிந்ததிலிருந்து அவளுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். அத்தனை வீட்டு வேலைகள் பார்த்தாலும், அவளின் உடலின் எடை குறையாமல் அப்படியேதான் இருந்தது. அதுவும் குழந்தை பிறந்த பிறகு கூடிய எடைதான்.
மஞ்சரி கர்ப்பமாக இருந்த போதே அவளுக்கு ஹைப்போ தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தது. குழந்தை பிறந்த பிறகும் அவளின் உடல் எடை இன்னும் கூடவே செய்தது. சொல்ல போனால் அவளின் சாப்பிடும் அளவு மிகக் குறைவே. ஆனால், தண்ணீரை குடித்தால் கூட உடல் எடை கூடும் என்பது போலத்தான் அவளின் ஹைப்போ தைராய்டு பிரச்சினை அவளைச் சோதித்தது. அது புரியாமல் அவள் ஏதோ வேண்டுமென்றே உடல் எடை கூடியது போலவே அவளின் மாமனார் அவ்வப்போது அவளை வார்த்தையால் குத்திக் கொண்டே இருப்பார்.
ஆனால், குழந்தையையும் சேர்த்து அவர் பேசுவது தான் உயிர் வதையைக் கொடுத்தது. இரண்டே முக்கால் வயதான தியா ஆரோக்கியமான குழந்தை. தனக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும், மஞ்சரி குழந்தையின் வயிற்றைக் குறைவில்லாமல் நிறைத்துவிடுவாள். அதனால் குழந்தை புசுபுசுவென்று இருக்க, அதையும் கேலி செய்யும் மனிதராக இருந்தார் குணாளன்.
தியா தன் தலைமகனின் மகள் என்ற எண்ணம் கூட அவரிடம் கிஞ்சித்தும் இல்லை. அவரைப் பொறுத்தவரை தியா மஞ்சரியின் குழந்தை. ஆகாத மருமகளின் குழந்தையும் ஆகாதவளாகிப் போனாள்.
வேதனை நெஞ்சை அடைக்க, அதற்குள் உழன்று கொண்டிருக்க முடியாமல் அவளுக்கான வேலைகள் வரிசைகட்டி காத்திருக்க, முதலில் மகளுக்குப் பாலை ஆற்றி குடிக்க வைத்து வயிற்றை நிரப்பிவிட்டு, அவளைச் சமையலறையிலேயே விளையாட விட்டு, மீதி சமையல் வேலையைக் கடகடவெனச் செய்ய ஆரம்பித்தாள்.
காலைக்கும் சமைத்து, மதியத்திற்குக் கீதா கல்லூரிக்கு எடுத்துச் செல்லவும், ரவிசங்கர் அலுவலகத்திற்கு எடுத்து செல்லவும் கூட அப்போதே சமைக்க வேண்டும் என்பதால், இரண்டையும் அவசர அவசரமாகச் செய்து கொண்டிருந்தாள்.
வெந்த இட்லியை எடுத்து அவள் ஹாட்பாக்ஸில் வைத்துக் கொண்டிருந்த போது, “சாப்பாடு ரெடியா? எனக்கு நேரமாச்சு…” என்ற கணவனின் குரல் காதில் விழ, அவளின் கை கணப்பொழுது அசையாமல் நின்றது. அவன் அவளிடம் பேசும் ஒருசில வார்த்தைகளில், இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும். அதுவும் அவளிடம்தான் பேசினானா என்ன? யாரிடமோ கேட்பது போல வந்து சேர்ந்த செய்தி அது. அதை அவளிடம்தான் கேட்கிறான் என அவளே புரிந்து கொண்டு, துரிதமாக அவனுக்கான உணவை எடுத்துக் கொண்டு வெளியே விரைந்தாள்.
அந்த வீட்டில் தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவார்கள். அவள் வருவதைக் கண்டு, அதுவரை கைப்பேசியைப் பார்ப்பது போலக் கூடத்தில் நின்றிருந்த சசிதரன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தான்.

அவனின் முன் தட்டை வைத்து, சுடசுட இட்லியை வைத்து, சாம்பார் சட்னியை மஞ்சரி ஊற்ற, வேகமாக உண்ண ஆரம்பித்தான்.
“எதுக்குடா இவ்வளவு அவசரம்? கொஞ்சம் மெதுவாத்தான் சாப்பிடேன்…” என்று கடிந்து கொண்டார் வனஜா.
“நாளைக்கு ஒரு விஷேசம். அதுக்கு வேலை இருக்கு…” என்று சொல்லிக்கொண்டே நிறுத்தாமல் சாப்பிட்டான்.
“ஆமா… அய்யா அப்படியே கலெக்டர் வேலை பார்க்க போறார். பார்க்கிறது எடுபிடி வேலை. அதுக்கு முதல் ஆளா ஓடித் தானே ஆகணும்…” என்று இன்னும் செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்த குணாளன் தன் குணமான வாயால் மகனின் வேலையை நக்கலடிக்க, சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் கை அப்படியே நின்றது.
எங்கே கணவன் சரியாகச் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிடுவானோ? எனப் பதறி போனாள் மஞ்சரி.
ஆனால், முகம் இறுக, மீண்டும் சாப்பிடுவதைத் தொடர்ந்தான் சசிதரன்.
நிம்மதியுடன் அவனுக்கு மேலும் இரண்டு இட்லியை மஞ்சரி வைக்கப் போக, கையசைவிலேயே ‘வேண்டாம்’ என்று தடுத்துவிட்டான்.
தளிர்நடை போட்டுத் தன்னை நோக்கி நடந்து வந்த மகளையும், தன்னை இன்னும் சாப்பிட வைக்க முயன்ற மனைவியையும் ஏறெடுத்துப் பார்க்காமல், வேகமாக உண்டு எழுந்து, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலே தன் வேலையைப் பார்க்க வெளியேறினான் சசிதரன்.
©nandhavanamnovels.com